சிறப்புப்பக்கங்கள்

எப்படி சம்பதிக்கலாம் பணத்தை?

டாக்டர் சோம வள்ளியப்பன்

படித்து, வேலைக்குப் போய்க் கூட மிகப் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று செய்து காட்டிக்கொண்டிருப்பவர், 49 வயதாகும் நம்  தமிழர், சுந்தர் பிச்சை.

உலகின் பெரும் நிறுவனங்களுள் ஒன்றான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் ஆகிய இரண்டுக்கும் தலைவராகப் பணியாற்றும் அவருக்கு அந்நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஊதியம் மற்றும் பிற வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ஐம்பத்திரண்டு கோடி ரூபாய். அதையே ஒவ்வொரு வாரமும் ஒரு கோடி ரூபாய் எனலாம். அல்லது நாள் ஒன்றுக்கு, சுமார் 14 லட்ச ரூபாய் என்றும் கணக்கிட்டுச் சொல்லலாம். பல ஆண்டுகளாக இப்படிச் சம்பாதிக்கும் அவருடைய மொத்த

சொத்து மதிப்பு ரூ. 1000 கோடிகள் கூட இருக்கலாம். சென்னை அசோக் நகரில் பள்ளிப்படிப்பும், கரக்பூரில் இருக்கும் ஐ.ஐ.டியில் பொறியியல் பட்டப்படிப்பும் படித்தவர், சுந்தர் பிச்சை.

படித்து வேலைக்குப் போயே பெரும் பணம் சம்பாதிக்கமுடியும் என்பதற்கு சுந்தர் பிச்சை வலுவான எடுத்துக்காட்டு.

இரண்டாவதாக பார்க்க இருப்பவரும் பொறியியல் படிப்பு படித்தவர்தான். முதலில் NIE மைசூரிலும் பின்பு IIT கான்பூரிலும் படித்தவர். பட்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த நாராயண-மூர்த்திக்கு

சொந்தமாக நிறுவனம் தொடங்க ஆசை வந்தது. 1981ஆம் ஆண்டு துணிச்சலாக வேலையை விட்டுவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து சின்னதாக நிறுவனம் தொடங்கினார். அதன் பெயர், இப்போது மிகவும் பிரபலம். இன்ஃபோசிஸ்தான் அவர் தொடங்கிய தகவல்தொழில்நுட்ப நிறுவனம். ஒரு பள்ளி ஆசிரியரின் பிள்ளையான நாராயண மூர்த்தியின் தற்போதைய

சொத்து மதிப்பு, 25,000 கோடி ரூபாய்.

படித்து முடித்து வேலையில் சேர்ந்து, அனுபவம் பெற்று, அதன்பின் நிறுவனம் தொடங்கி பிரமாதமாகச் சம்பாதிக்கலாம் என்று காட்டுகிறது, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் வெற்றிக்கதை.

10 வயது முதல் தற்போதைய 90& வது வயது வரை தொடர்ந்து பிரமாதமாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர், வாரன் பஃபெட், சம்பாதித்திருப்பது, 75,00,00,00,00,000 ரூபாய். (ஏழரை லட்சம் கோடி ரூபாய்). அவரது ஏழாவது வயதில் அவர் இரவல் வாங்கிப் படித்தது, ஃபிரான்சிஸ் மினாகர் என்பவர் எழுதிய ‘1000 டாலர்கள் சம்பாதிக்க ஓர் ஆயிரம் வழிகள்' (One Thousand Ways to make $1000) என்ற புத்தகம். உலகின் மிகப்பெரும் பணக்காரரான வாரன் பஃபெட்டும் 19 ஆண்டுகள் சில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு அதன் பிறகு சிலருடன் சேர்ந்து நிறுவனம் ஆரம்பிக்கிறார். பிறகு பங்குகளில் முதலீடு செய்கிறார், பெரும் பணம் சம்பாதிக்கிறார்.

அடுத்து சொல்வதென்றால், படித்த சி.ஏ. படிப்பை விட்டுவிட்டு, தன்னால் பங்குகளில் முதலீடு என்பதை சரியாகச் செய்ய முடிகிறதென்று கண்டுபிடித்து, அதில் இறங்கி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும், இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன் வாலாவைப்பற்றிச் சொல்லலாம். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து லாபம் பார்த்து தற்சமயம், 470 கோடி ரூபாய் சொத்துகள் வைத்திருக்கிறார், இந்த முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியின் மகன்.

நல்ல படிப்புதான். நல்ல வேலைகள் கிடைத்திருக்கும். ஆடிட்டராகவும் நன்றாக சம்பாதித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தவிர்த்துவிட்டு, ரிஸ்க் எடுத்து பங்குகளில் முதலீடு செய்து, பெரும் பணம் சம்பாதித்துக் காட்டிக்கொண்டிருப்பவர், ராகேஷ் ஜுன் ஜுன் வாலா.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். என்ன காரணத்தாலோ அதிகம் படிக்கவில்லை. ஆனால் திறமை இருக்கிறது. அதை வைத்து புகழ் மட்டுமல்ல, கணிசமான பணமும் சம்பாதிக்க முடியும் என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர், நடிகர் கமல்ஹாசன். அவரே 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது தெரிவித்திருந்த தகவல்கள்படி அவரது சொத்து மதிப்பு, 172 கோடி ருபாய். கொடுக்கவேண்டியது 50 கோடி.

கமல்ஹாசன் மட்டுமா? அவரைப்போல நூற்றுக்-கணக்கான நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமல்ல. உலகெங்கும் பல்வேறு விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் பல்வேறு துறைகளில் திறமைகாட்டி பெரும் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜே.கே.ரவுலிங் என்ற பெண்மணி, ஹாரி பாட்டர் புத்தகங்கள் எழுதியே 5000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார். ரோஜர் பெடரர் என்ற புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் வைத்திருப்பதும் சில நூறு கோடி ரூபாய்கள்.

படித்து வேலைக்குப் போய், சம்பாதித்து, அதைச் சேர்த்து வைத்து முதலீடு செய்து; தொழில், வியாபாரம் தொடங்கி; லாபம் ஈட்டி, சேர்த்து முதலீடு செய்து, வியாபாரத்தின் செல்வத்தையும் பெருக்கி; தன் திறமையைக் காட்டியே உலக, தேச அளவுகளில் இல்லாவிட்டாலும் ஓரளவு தொகைகள் பெற்று பணம், என மெல்ல மெல்ல ஆனால் பொருளாதாரப் படிகளில் உறுதியாய் மேலே ஏறிக்கொண்டிருப்பவர்கள் உலககெங்கிலுமே பல கோடிப்பேர் இருக்கிறார்கள்.

படிப்பு, திறன்கள் போன்றவை சுலபமாக வெளித்தெரியும் பணம் சம்பாதிக்கும் நிச்சய வழிகள் தவிர சரியான தொடர்புகள், சரியான சந்தர்ப்பங்கள் மற்றும் சரியான தேர்வுகள் ஆகியவையும் பெரும் பணம் சம்பாதிக்கக் காரணிகளாக அமைகின்றன.

ஆக, பணம் சம்பாதிக்க இதுதான் என்று ஒரே ஒரு வழி அல்ல. பல வழிகள் இருக்கின்றன. பணம் மட்டுமே குறிக்கொள் என்றில்லாமல் பிரியமானதைச் செய்வதோடு, அதை முழு ஈடுபாட்டுடன் செய்கிறவர்கள் பக்கமும் பணம் கொட்டுகிறது.

பணம் முக்கியமானதுதான். அது இன்றி வாழ்தல் இயலாது. அதன் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதெல்லாம் எவ்வளவு தூரம் உணரபட்டிருக்கிறதோ, அதே அளவு உணரப்பட வேண்டிய மற்ற சிலவும் இருக்கின்றன.

ஒரு பிரபலமான எழுத்தாளர் அவர். கார் ஓட்டிக் கொண்டு போகிறார். விபத்து நேர்கிறது. அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார்கள். காயங்கள் அதிகமில்லை என்றாலும் அடிபட்டிருந்த அவர், பேசும் நிலையில் இல்லை. மயக்கம். அவருடைய குடும்பத்தார் விவரத்தை, மருத்துவமனையினரால் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

அதனால் அவர் வசதியானவர்தானா? செலவு செய்து தேவைப்படும் எல்லா சிகிச்சைகளும் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கட்டக் கூடியவர்தானா? என்பன உறுதியாகத் தெரியாததால் அவருக்குத் தேவைப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. அடுத்த நாள் அவர் இறந்துபோகிறார்.

விபத்து நடந்த உடனே அவர் அழைத்து வரப்பட்டும், அவர் நல்ல வசதியானவராக இருந்தும் அவர் உயிரிழந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு நடுத்தர வயது பெண்மணி தனியாக வாழ்ந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் சொல்ல, போலீசார் வந்து கதவை உடைத்துப் பார்த்தார்கள். நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே, செத்துப்போயிருந்தார், அவர். பணத்திற்குக் குறைவில்லை. பிள்ளைகள், வேறு நாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். பார்த்துக்கொள்ள ‘கேர்' செய்ய பணம் கட்டி ஏற்பாடும் செய்திருந்தார்கள். தினமும் ஆறு மணிநேரம் வந்து உதவிகள் செய்துவிட்டுப் போகவேண்டிய 'கேர் டேக்கர்' சில மாதங்களாகவே வரவில்லை. அது எவருக்கும் தெரியவில்லை. இதுபோல அவ்வபோது வரும் செய்திகள் அரிதல்ல.

வாரன் பஃபெட் அவரது மொத்த சொத்தில் தர்மத்திற்கு எழுதி வைத்திருப்பது 99%. கிட்டத்தட்ட தற்போதைய மதிப்பில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய். மீதமிருக்கும் 1 சதவீதம் மட்டுமே அவருடைய குடும்பத்தார்க்கு! இதற்கு அவருடைய மூன்று பிள்ளைகளும் மனைவியும் சம்மதித்து இருக்கிறார்கள். அதைப்பற்றி அவர் குறிப்பிடும் போது, ''அதை வைத்து அவர்கள் எதுவும் செய்யலாம் எனும் விதத்தில் என் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு பணம் கொடுப்பேன். நிச்சயமாக அதை வைத்து எதுவும் செய்யாமல் இருக்கலாம் என்கிற அளவில் அல்ல'' என்றார்.

மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர், அனந்தகிருஷ்ணன். சுமார் 43,500 கோடி ரூபாய்க்கு அதிபதி. அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். அந்த ஒரே மகன், பணத்தைக் கையில் கூடத் தொடாத புத்தபிட்சுவாக மாறிவிட்டார். புத்த பிட்சுக் களுடனேயே இரந்துண்டு வாழ்கிறார்.

படித்து, திறன்காட்டி, உழைத்து, முதலீடுகள் செய்து என பல வழிகளில் பணம் சம்பாதிக்கலாம். அதே சமயம், பணம் & சம்பாதித்தல் மட்டுமல்ல & கொடுத்தாலும் மகிழ்ச்சி தரும் என்பதை வாரன் பஃபட் போன்ற பலர் காட்டுகிறார்கள். பணம் மட்டுமே போதாது& மனிதர்களும் வேண்டும் என்பதை சிலர் வாழ்க்கை நிகழ்வுகள் காட்டுகின்றன.

கொரோனா பெருந்தொற்று என்பது, இந்தத் தலைமுறை கண்டிராத பெரும் நெருக்கடி. அதனால் பெரும் வீழ்ச்சி. நம் மக்கள் தொகை அதிகம் என்பதால், பாதிப்பும் அதிகம். அடுத்து, நம் நாட்டின் ஜிடிபி மதிப்பு சென்ற 20&21 ஆம் ஆண்டில் சரித்திரம் காணாத வகையில் &7.6 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. இத்துடன் முடிந்ததே பெரும் ஆறுதல்தான். இந்த ஆண்டு 2021&22 இல் 12 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது அலையின் காரணமாக இது 8 சதவீதமாகக் குறையும் என்கிறார்கள். இதுவும் கூட கணிசமான வளர்ச்சி, இந்தக் காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது.

நாம் தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு அச்சத்தில் உள்ளோம். எல்லா நேரமும் எல்லாமும் நின்றுவிடுவதில்லை. இந்த கொரோனா சமயத்தில் விவசாயம் பாதிக்கப்படவில்லை. பருவமழை பொய்க்கவில்லை. கிராமப்புறத்தில் மாற்றங்கள் இல்லை. அரசு ஊழியர்கள், ஐடிதுறை ஆகியவற்றில் சம்பளங்கள் பாதிப்பில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் வீட்டிலிருந்தே வேலை என்கிறபடியால் பாதிப்பு இல்லை. சம்பள உயர்வு கூட நன்றாக வழங்கப்பட்டது. தொலைதொடர்புத் துறையிலும் பாதிப்பு இல்லை. அறுபது எழுபது சதவீத துறைகள் பாதிக்கப்படாமல் இயங்க, மீதி நாற்பது துறைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஏழெட்டு மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி வசூலாகிக் கொண்டுதான் உள்ளது. இது நல்ல அறிகுறி. ஆகவே, எல்லாம் கெட்டுவிட்டது என்று தலையில் கைவைக்க வேண்டியது இல்லை!

தனிநபர்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்குச் செய்யப்படும் உதவிகள் போதாதுதான். புயலால் பாதிக்கப்படும்போது கப்பலில் இருப்பவர்களுக்கும் கடலில் தத்தளிப்பவர்களுக்கும் இருக்கும் வித்தியாசமே இது. தண்ணீரில் இருப்பவர்களுக்கு கயிறுபோட்டுக் காப்பாற்றும் பணிதான் நடக்கிறது. மீண்டுவிடுவோம், கவலைவேண்டாம். இப்போதைக்கு கண்ணுக்குத் தெரியாத, புரியாத விஷயங்களில் இறங்காதீர்கள். கையில் பணம் வைத்திருப்பவர்கள் பிட்காயின், ஷேர் ட்ரேடிங், கமாடிட்டி ட்ரேடிங் போன்றவற்றில் இறங்கலாமா என்றெல்லாம் கேட்கிறார்கள். கையில் இருக்கும் பணமே தேவன். அதை விட்டுவிடாதீர்கள்! குறைவாகச் செலவு செய்யுங்கள். வீட்டுக்குள் இருப்பதே ஆனந்தம் என்று உணர்ந்து, இப்போது நம்மைக் காப்பாற்றிக்கொள்வதே நம் வேலையாக இருக்கவேண்டும்.

(டாக்டர் சோம வள்ளியப்பன், பிரபல முதலீட்டு ஆலோசகர்)

ஜூலை, 2021