சிறப்புப்பக்கங்கள்

எழுத்தை நம்பி தொழிலை விட்டேன்!

ராஜேஷ்குமார்

என்னுடைய முதல் சிறுகதை 1969 இல் மாலைமுரசுவில் வெளியானது. அதற்கு மணிஆர்டரில் கிடைத்த  சன்மானம் ரூபாய் பத்து. இந்த பத்துரூபாய் இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு சமம். மிகுந்த மகிழ்வாக இருந்தது.

அன்றைக்கு பாக்கெட் மணியாக 25 பைசாதான் கிடைக்கும்! பிறகு தினத்தந்தி, தினமணி போன்ற பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பித்தேன். அங்கே  சன்மானத்தொகை 50 ரூபாய், 40 ரூபாய் என கொடுத் தார்கள். சிறிது சிறிதாக என் கதைகளுக்கான  சன்மானத்தொகை வளர்ந்து, ஒரு கட்டத்தில் குமுதத்தில் என் கதை வெளி வந்தபோது(1977) எண்பது ரூபாய் ஆக இருந்தது. அதுவே 1980 இல் 100 ரூபாய் ஆக உயர்ந்தது. எல்லா பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் நான், பி எஸ் சி பிஎட் படிப்பை முடித்திருந்ததால் ஆசிரியர் தொழிலை மேற்கொண்டேன். அந்த தொழிலில் அவ்வளவாக திருப்தி இல்லை. அப்பாவுடன் இணைந்து கைத்தறி விற்பனைத் தொழிலில் ஈடுபட்டேன். அதன்காரணமாக நாடு முழுக்க  சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த சூழலில் நிறைய கதைக் கருக்கள் கிடைத்து எழுத ஆரம்பித்தேன். ரயில் பயணங்களில் சூட்கேஸை மடியில் வைத்து அதன்மேல் பேப்பரை வைத்து கதைகளை எழுதி, மறு ஸ்டேஷனில் கவரில் வைத்து அஞ்சலில் சேர்த்த அனுபவஙள் நிறைய உண்டு. அது செல்போன்கள் டிவி இல்லாத காலம். புத்தகங்கள் மட்டுமே பொழுதுபோக்கு. எனவே என் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது  சென்னையை மட்டும் மையமாக வைத்து கதைகள் எழுதாமல் இந்தியாவின் பிற நகரங்களையும் பின்னணியாக வைத்து கதைகள் எழுதினேன் இந்த கதைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கவே, தொடர்ந்து எழுதினேன். 1980 -இல் முதல்முதலாக மாலைமதியில் நாவல் கேட்டார்கள். வாடகைக்கு ஒரு உயிர் என்ற நாவலை எழுதினேன். அதற்கு கிடைத்த சன்மானம் 2000. இந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 20,000 ருபாய் எனலாம். இதைத் தொடர்ந்து எனக்கு எழுத்தை மட்டும் நம்பி வாழலாம் என்ற நம்பிக்கை உருவானது. மாலைமதி, ராணிமுத்து தவிர 49 மாத நாவல்கள் வெளிவந்துகொண்டிருந்த காலம் அது. என் கதைகளைக் கேட்டு எல்லோரும் என்னிடம் வந்தார்கள்.

மாத நாவல்கள் தவிர விகடன் குமுதம், குங்குமம், கல்கி, சாவி, கலைமகள் போன்ற பெரிய பத்திரிகைகளிலும் என்னுடைய தொடர்கதைகள் வெளிவர ஆரம்பித்தன. ஒரே சமயத்தில் எட்டு பத்திரிகைகளுக்கு தொடர்கதைகள் எழுதிய காலமும் உண்டு. இதனால் என்னுடைய நிதிநிலைமை கணிசமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து நானும் என் மனைவியும் யோசித்து கோவை புறநகரில் ஒரு செண்ட், இரு செண்ட் என்று நிலத்தில் பணத்தை முதலீடுசெய்தோம். வாடகை வீட்டில்தான் குடியிருந்தேன். எனவே மருத மலை அருகே வடவள்ளி என்ற புறநகர் பகுதில் வெறும் பொட்டல் வெளியாக இருந்த பகுதியில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டினோம். இன்று அது ஒரு நகரமாக மாறிவிட்டது.

தொழிலைக் கைவிட்டு முழு நேர எழுத்தாளராக 1988 இல் மாறினேன். அன்றிலிருந்து இன்று வரை நிறுத்தாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த 53 ஆண்டுகள் காலகட்டத்தில் நாவல்களை எழுதிக் குவித்ததான் காரணமாக என் நிதிநிலைமை கணிசமாக உயர்ந்தது. இதை சரியாகப் பராமரித்து சேமித்து, நானும் என் துணைவியாரும் வங்கிகளில் வைப்புத் தொகையாக முதலீடு செய்து அதிலிருந்து வரும் வட்டித் தொகையை வைத்து மற்ற செலவுகளைச் செய்தோம்.

அதே போல் வீடு கட்டும்போதும் தவணையாகத் தான் கொடுத்துக் கட்டினேன். எல்லாமே சிறுக  சிறுக செய்ததுதான். முதலில் சைக்கிள், பிறகு ஸ்வேஹா மொபெட், கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டர் என்று பயணித்து 2000 ஆமாவது ஆண்டில்தான் மாருதி கார் வாங்கினேன். என் வளர்ச்சி ஒவ்வொரு அடியாக நிகழ்ந்தது. இன்றும் எழுதுகிறேன். மின்னூல்களாக, ஒலிப்புத்தகங்களாகவும் என் எழுத்துகள் மாறி, ராயல்டி வந்துகொண்டுள்ளது.

ஒரு திரைப்பட நடிகர் போல பெரிய வருமானம் இல்லை. ஆனால் செலவுகளைக் கவனித்துக் கொள்ள போதுமான நிதி ஆதாரம் உண்டு. எந்த ஒரு காலகட்டத்திலும் மிகுதியாக பணம் வந்தது இல்லை; அளவோடு வந்து நிறைவாக இருக்கிறோம். இது போதும் என்றே நினைக்கிறேன்.

(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

பிப்ரவரி, 2023.