சிறப்புப்பக்கங்கள்

ஒரே இரவில் திரண்ட பத்து லட்சம் நிதி!

Staff Writer

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருக்கிறது புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அப்பள்ளி ஆசிரியரான செல்வ சிதம்பரம் சமூக ஊடகமான ட்விட்டரில் அரசுப்பள்ளி ஆசிரியர் என்ற அடைமொழியை பெருமையுடன் சூடிக்கொண்டு இயங்குகிறார்.

சுமார் நாற்பதாயிரம் பேர் அவரைப் பின் தொடர்கிறார்கள். இந்த ஊடகத்தின் மூலமாகவே தன் பள்ளி  வளர்ச்சிக்காகவும் மாணவர்கள் நலனுக்காகவும் நிதி திரட்டி உதவியிருக்கிறார் செல்வ சிதம்பரம். ‘கஜா புயலின் போதுதான் மரங்களையும் கூரைகளையும் பிரித்துப்போட்ட காற்று பலரை ஏழைகள் ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டது. அப்போது ஏழை எளிய பின்னணி கொண்ட எங்கள் பள்ளியில் உள்ள மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். ஐந்து மாணவர்கள் தங்கள் வீடுகளை இழந்திருந்தனர். நிவாரணத்துக்காக நண்பர்களிடம் கோரிக்கை வைத்து அந்த ஐந்துபேருக்கும் வீடுகளை கட்டி அளித்தோம். 25 வீடுகளுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை வாங்கி அளித்தோம்.

புயல் டெல்டா மாவட்டங்களைத் தான் தாக்கப்போகிறது என்ற எச்சரிக்கை வந்தவுடன் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி பள்ளியில்  முதல்நாளே இருப்பு வைத்து, மறுநாள் முதல் சுமார் 2000 பேருக்கு தினமும் ஒருவேளை உணவை வழங்கியது பெரும் பணியாக அமைந்தது. சுமார் ஐம்பது கிராமங்களுக்கு நிவாரண உதவிகளை நண்பர்கள் மூலமாக ஒருங்கிணைக்க முடிந்தது' என்று சொல்கிறார் இந்த ஆசிரியர்.

‘வெளிநாடுகளில் வாழும் முகமறியாத பலர் மூலமாக எந்த நிதி உதவி கேட்டாலும் கிடைக்கிறது. அதை பொறுப்புடன் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தவேண்டும். எந்த நிதி உதவியையும் சம்பந்தப் பட்டவர்களுக்கே நேரடியாக அனுப்பச் சொல்லிவிடுவேன்,' என்கிற இவர் கொரோனா காலத்திலும் விரிவான நிவாரண உதவிகளை அளித்துள்ளார்.

 சமீபத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவனுக்காக நிதி கோரியபோது ஒரே இரவில் பத்து லட்ச ரூபாய் குவிந்ததைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார். ‘இவ்வளவு நல்ல உள்ளங்களின் நம்பிக்கையை கவனத்துடன் கையாளவேண்டும் என்ற பொறுப்புணர்வே எனக்கு அதிகரித்துள்ளது. அந்த சிறுவனுக்கு கோவை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனது சிதைந்த கையை மருத்துவர்கள் மீட்டெடுத்தனர். மருத்துவமனையில் இருந்து  மீண்டவுடன் நேரே பெற்றோருடன் என்னைக் காணவந்தான். நானொரு கருவிதான், அவனை மீட்டது, கருணை கொண்ட சமூக ஊடக நெஞ்சங்களே..' என்றவர் ‘அரசுப்பள்ளிகள் தான் பெரும்பாலும் ஏழை எளிய  மக்களுக்கு வரபிரசாதங்களாக இருக்கின்றன. காலை உணவுக்கு வழியில்லாத, மின் இணைப்பே இல்லாத குடிசைகளில் வசிக்கின்ற மாணவர்களை  இந்த பள்ளிகளில்தான் காண முடிகிறது. அவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நம் அனைவரின் கடமை,' என்கிறார் அடக்கமாக.

2015லேயே ஸ்மார்ட் கிளாஸ் ரூம், அறிவியல் போட்டிகளில் மாவட்ட மாநில அளவுகளில் மாணவர்கள் பங்கேற்பு என்று சிறந்த செயல்பாடுகளால் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை  தொடர்ச்சியாகக்  கொண்டிருக்கும் நடுநிலைப்பள்ளியாக இவர் பணியாற்றும் பள்ளி விளங்குவது குறிப்பிடத்தக்கது.

செல்வ சிதம்பரம், ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முத்துப்பேட்டை

நவம்பர், 2022