சிறப்புப்பக்கங்கள்

காயத்ரி

ரஞ்சன்

‘ஏன் உங்க கதைல வர ஹீரோஸ் எல்லோரும் ஒரே மாதிரியா இருக்காங்க, இண்டலக்சுவல் டைப்பா?’ சுஜாதாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவர் நடிகை லட்சுமி.

‘என் கேரக்டர்ஸ் இண்டலிஜெண்ட்டா இருக்காங்கனா...ஓரளவுக்கு நான் இண்டலிஜெண்ட். என்னுடைய எழுத்தில என்னுடைய ஒரு பார்ட் இருக்கத்தானே செய்யும்?’ - இது சுஜாதா சொன்ன பதில்

‘உங்க கதைல வரப் போற ஹீரோயின் ரொம்ப இண்டலிஜெண்டா இருப்பாளா?’ - லட்சுமி யின் இன்னொரு கேள்வி இது.

‘ஆமாம். என் கதாநாயகி கதாநாயகனையே மிஞ்சப் போறா. ஷி வில் ஓவர் டேக் ஹிம்’

ஆனந்த விகடனில் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை தொடரைத் துவக்குவதற்கு முன் சுஜாதா, இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமியை வைத்து ஒரு விவாதம் நடத்தினார்கள். அந்த விவாததத்தில்தான் இந்த உரையாடல்.

சுஜாதாவின் கதைகளில் ஆணாதிக்க வார்த்தைகள் (உபயம்:வசந்த்) அதிகம், பெண்களுக்கு வளைவுகள் அளவில்தான் பங்கு என்று ஜோல்னா பை கோஷ்டிகள் விமர்சித்தாலும் பெண்களுக்கும் அவரது கதைகளில் சமமான இடமுண்டு என்பதுதான் உண்மை. தலைப்புகளிலேயே அவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். புத்திசாலிப் பெண்களாய், ஆண்களின் குறைகளை ஈடு செய்பவர்களாக பல கதைகளில் இருக்கிறார்கள்.

காயத்ரியும் அப்படிதான், புத்திசாலி. டைரி மூலமாகவே தன்னைக் காப்பாற்றிக் கொண்டவள்.

அனிதா இளம் மனைவி, ப்ரியா போன்ற பெண் பெயர் நாவல் வரிசையில் 70களின் துவக்கத்தில் தினமணி கதிரில் வந்த தொடர் காயத்ரி.

ஒரு புத்தம் புது மனைவி, கணவன் வீட்டில் சந்திக்கும் நிர்வாண மர்மங்கள். அதனைச் சொல்லும் அவளின் அதி அந்தரங்க டைரி வரிகள் என கதை சுஜாதாவின் இளமை நடையுடன் விரிய தமிழ் வாசகர்களிடம் பரபரப்பு பற்றியது.

அந்த இளம் மனைவியின் பெயர் காயத்ரி

(சினிமாவாக வந்த போது காயத்ரியாக ஸ்ரீதேவி ’காலைப் பனியில் ஆடும் மலர்கள்’ என்று கறுப்பு வெள்ளையில் வீட்டைச் சுற்றிப் பாடினார். ஸ்ரீதேவி ப்ரியர்கள் யூடியூபில் காணலாம்).

கனவுகளுடனும் காதலுடனும் கணவன் வீட்டுக்கு வரும் காயத்ரிக்கு அங்கு நடக்கும் சம்பவங்கள் திகிலூட்டுகின்றன. கணவனின் அக்கா என்ற பிரமாண்ட பெண், குணம் மாறும்

சமையல்காரர், வேலைக்கார பருவப் பெண் என அந்த வீட்டில் இருக்கும் நபர்கள் விபரீதமான செயல்களை செய்கிறார்கள். பாத்ரூமில் மறைவாய் ஓட்டை இருக்கிறது. அதில் கண்கள் தெரிகிறது. வேலைக்காரப் பெண் உடைகளுக்குப் பதில் நகைகளை மட்டும் அணிந்து காட்சியளிக்கிறாள், அந்தரங்கமாய் குளிக்க வேண்டிய அக்கா அருவருப்பாய் குளிக்கிறாள். காயத்ரிக்கு எல்லாமே அதிர்ச்சி கொடுக்கிறது. கணவனும் எதிரி என்று தெரிந்ததும் அதிர்ச்சி பயமாய் மாறி அங்கிருந்த தப்ப  முயல்கிறாள். முடியவில்லை. இறுதியில் கணேஷ் - வசந்த் சாக

சங்களுடன் தப்பிக்கிறாள்.

சுஜாதாவின் பல கதைகளில் டைரிகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கதையிலும் அப்படியே. ஒரு இளம் மனைவியின் ஆசைகள், அந்தரங்கங்கள், ஆர்வங்கள், அச்சங்கள் அத்தனையையும் அப்பட்டமாய் சொல்லுகிறது அந்த டைரி. அழகான இளம் பெண்கள் கருநீலப் புடவைகளில் அபாயகரமான வளைவுகளுடன் மெலிதாய் சிரிப்பது சுஜாதா கதைகளின் பொது அம்சம். இந்தக் கதையிலும் வளைவுகள் இருக்கிறது, கருநீலப் புடவை இருக்கிறது. கூடவே காயத்ரி என்ற பெண்ணின் ஆழ்மனமும் இருக்கிறது.காயத்ரி இன்றும் பேசப்படுவதற்கு அதுதான் காரணம்.

(ரஞ்சன், மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்)

நவம்பர், 2014.