சிறப்புப்பக்கங்கள்

கார்கி: மனம் சொல்வதை செய்தவள்!

ஜா.தீபா

நடுத்தர வர்க்கத்து பெண். திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. அந்தக் கனவில் வாழ்கிற ஒருத்தி. டீச்சராக வேலை பார்த்துக் கொண்டே மாலை வேளைகளில் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்கும் பெண். இரவு சமையலுக்கு அம்மாவுக்கு உதவி செய்து அப்பா வந்தவுடன் தங்கை மற்றும் குடும்பத்துடன் சேர்த்து டிவி பார்த்துக் கொண்டே இரவு உணவை சாப்பிடுகிற பெண். இவ்வளவு தான் வாழ்க்கை என்கிற ஒருத்திக்கு கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஒரு துர்சம்பவம் நடக்கிறது. அப்பாவை போலீஸ் பிடித்துப் போகிறது. அதில் இருந்து உலகமே அவளுக்கு மாறுகிறது. உலகம் அவளை மாற்றுகிறது. அப்பாவை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அதற்காக போராடுகிறாள். போராட்டத்தில் வெற்றி பெற்று அப்பாவை விடுதலை செய்து அழைத்துக்கொண்டு வரும் சமயம் அவளுக்குப் பேரிடியாக அமைகிறது உண்மை. இந்தக் கதை தான் கார்கி. கார்கி மிகச் சாதாரணமாக சாலைகளில் நம்மைக் கடக்கிற ஒருத்திதான். அவளைப் போல நாம் அனுதினமும் நூற்றுக்கணக்கான பெண்களைக் கடக்கிறோம். இந்த வாழ்க்கை முறையில் வாழ்கிற ஒரு பெண்ணுக்கு ஒரு பொதுப் பெயர் என்றால் கார்கி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவள் எங்கு மாறி நிற்கிறாள் என்பதுதான் முக்கியம். ‘எனக்கென்ன தெரியும்..நான் என்ன செய்வேன்‘ என்று நிற்காமல் அப்பாவுக்காக போராடுகிறாள். திரும்பத் திரும்ப அதில் அவமானப்படுகிறாள். தன உள் மன ஆற்றலால் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கிறாள். அவளை அதுவரை வழிநடத்துவது அவள் மனம் சொல்லும் உண்மை. ஆனால் அது பிசகுகிறது. தன் அப்பா தான் நினைத்தது போல குற்றமற்றவர் அல்ல, என்று தெரியவரும்போது அவள் மீண்டும் தனது மனதின் உண்மையையே நம்புகிறாள். அது சொன்னபடி கேட்கிறாள். இப்படி மனம் சொல்வதை செய்த பெண்கள் தமிழ் சினிமாவின் கதாபாத்திரத்தில் மிகக்குறைவு. யதார்த்தத்திலும் மனம் சொல்லும் உண்மையை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் தனித்தே நிற்கிறார்கள், கார்கியைப் போல. இந்தப் படம் சொல்கிற கருத்து எச்சரிக்கையைத் தருவதற்கு பதில் அச்சுணர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடியது. அப்பாவின் கதாபாத்திரத்தை இப்படி வடிவமைப்பது மூலமாக பார்வையாளர்களுக்கு ‘ட்விஸ்ட்' தர வேண்டி நம்பகமின்மையை ஏற்படுத்தி குப்புறக் கவிழ்த்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் கார்கி என்கிற ஒரு கதாபாத்திரத்தை மட்டும் முன்வைத்தால், அது தமிழ்சினிமா இதுவரை கண்டிராத கதாபாத்திரம் என்று சொல்ல முடியும்.

மார்ச், 2023