சிறப்புப்பக்கங்கள்

கால் நூற்றாண்டு தமிழகம்

Staff Writer

‘காலமும் பொறுமையும் மிகவும்

சக்திவாய்ந்த இரண்டு போர்வீரர்கள்’

- லியோ டாஸ்டாய்

புத்தாயிரத்தின் முதல் இருபத்து ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்யப் போகிறோம். கால்நூற்றாண்டு என்பது சிறு கால அளவு அல்ல. இதில் உலகமே அதிரும் வகையில் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்பு என்ற அதிர்ச்சியில் தொடங்கி, ஏராளமான நிகழ்வுகளைக் இந்த கால்நூற்றாண்டில் உலகம் கண்டு வந்திருக்கிறது. உலகமே அதிர்ந்து நடுங்கி, செயல்பாட்டை நிறுத்திய கொரோனா தாக்குதலை மிக முக்கியமான நிகழ்வெனச் சொல்லலாம்.

இவை எல்லாவற்றையும் கடந்து காலம் தன் பாட்டுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் கடந்த 25 ஆண்டுகளை அசைபோடப் புகுந்தால் எவ்வளவு மைல்கற்களைக் கடந்திருக்கிறோம் என்று உணரமுடியும். தனிப்பட்ட முறையில் யோசித்தால் எத்தனை பேரை இழந்திருக்கிறோம்; எத்தனை பேரைப் புதிதாகப் பெற்றிருக்கிறோம் என்கிற சமநிலையை அறியமுடியும்.

25 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட அரசுத் திட்டங்கள், கொள்கை முடிவுகள், நாட்டின் பொருளாதார நிலை போன்றவை எம்மாதிரி மாறுதல்களை அடைந்துள்ளன என்பவை குறித்த அலசல்கள் எல்லாம் இனி வரும் ஆண்டுமுழுக்க ஊடகங்களால் முன்வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் திருப்பங்களை ஏற்படுத்திய முக்கியமான நிகழ்வுகளையும், போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்களையும் இந்த இதழில் தொகுத்துச் சொல்ல முயன்றுள்ளோம். எதை விட்டிருக்கிறோம் என்பதுபற்றி வாசகர்கள் எழுதலாம்.

யோசித்துப் பார்க்கையில் 2001க்கும் 2025க்கும் இடையில்தான் எவ்வளவு மாறுதல்கள்? சமூக ஊடகத்தின் வளர்ச்சி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவோ அதையும் தாண்டி பிரமாண்டமானது என்று எழுகிற தருவாயில் இந்த 25ஆம் ஆண்டு விடிந்துள்ளது.

காலம் யாருக்காகவும் காத்திருக்காது. அது கருணையற்றது; கருணை மிகுந்தது! அடுத்த 25 ஆண்டுகள் மேலும் அமர்க்களமாக அமைய வாழ்த்துகள்!

-ஆசிரியர்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram