அற்புதமான குரல் வளம், அபாரமான நினைவாற்றல், தங்குதடையின்றி காட்டாறு போல வந்து விழும் வார்த்தைகள், தர்க்கரீதியான பேச்சு என்று எல்லா சிறப்புகளும் வாய்க்கப்பெற்றவர் என் அபிமானப் பேச்சாளர் புலவர் கீரன். அவர் டொரண்டோவில் நிகழ்த்திய ராமாயணப் பேருரை நான் அடிக்கடி கேட்கும் சொற்பொழிவு.
பரவலான விஷய ஞானத்தால் குறுக்குக் குறிப்புகள் தருவது அவரின் தனித்தன்மை. கம்பராமாயணம் பற்றிய உரையில் பாரதம், திருக்குறள், பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருவாசகம், திருப்புகழ் என்று எல்லை தாண்டி மேற்கோள் காட்டிப் பேசுவது அவரை, வியக்கவைக்கும் நம்பகத்தன்மை மிக்க பேச்சாளராக்குகிறது.
காப்பியங்கள் குறித்த பிரசங்கங்களில் ரத்தினச் சுருக்கமான வரிகளுக்கும், வார்த்தைகளுக்கும் கற்பனை வளம் கூடிய வியாக்கியானங்களும், விளக்கங்களும் தேவைப் படுகிறது. அது கீரனின் பலம்.
“சொல்லொக்கும் கடியவேகச் சுடு சரம்” என்கிற தாடகை வதம் குறித்த பாடல், அகலிகை விமோசனம், ராமன் கானகம் போதல், வாலி வதம், போன்ற பகுதிகள் மிகச் சிறப்பானவை.
முழுமனதாய் யாருமே ஏற்றுக்கொள்ளாத வாலி வதத்திற்கு அவர் அளித்த விளக்கம் தனித்தன்மை வாய்ந்தது. வாலி வதத்திற்கான காரணத்தை இராமாயணத்துக்கு வெளியே தேடவேண்டும் என்று சொல்கிறார் கீரன். ராவண வதம் தேவர்கள் பங்கு பெற்ற ஒரு நாடகம். அதில் வாலியாக நடிக்கச்சென்ற இந்திரன், தன் பாத்திரத்தின் குறிக்கோள் மறந்து தர்ம சாட்சியாய் ராவணணுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதால் அவனை தன் பாத்திரப்படைப்பை மறந்து குற்றம் செய்த ஒரு பாத்திரம் என்று விவரிக்கிறார் கீரன். பாத்திரம் குற்றம் செய்தால் அது படைத்தவனைப் போய் சேரும். அதனால் தன் வசனத்தை மறந்து உளறும் ஒரு நாடக நடிகனை இயக்குனர் திரைமறைவிலிருந்து குறுக்கிட்டு காட்சியிலிருந்து விலக்கி விடுவது போல, விஷ்ணுவான இயக்குனர் தன் பாத்திர நோக்கத்தை மறந்த வாலியை மறைந்து நின்று கொன்றுவிட்டார் என்று வாதிடும் அவர் கோணம் மாறுபட்டது.
ஒரு தேர்ந்த நடிகரின் திறன் கொண்டவர். அவரின் குரல் தழைவு (வாய்ஸ் மாடுலேஷன்), காலக் கூருணர்ச்சி (டைமிங் சென்ஸ்) போன்ற வித்தைகளை மொக்கையாகப் பேசும் நம் தமிழ் நடிகர்கள் கேட்டுப் பழக வேண்டும். கம்பராமாயணத்தில் கோசலைக்கும் புத்திர சோகத்திலிருக்கும் தசரதனுக்கும் இடையே நடக்கும் உரையாடல், ராவணுக்கும் கும்பகர்ணனுக்கும் இடையே நிகழ்கிற வாக்குவாதம், பெரிய புராணத்தில் பிள்ளைக் கறி சமைத்துப் போட்ட சிறுத்தொண்டர் வரலாறு போன்ற விவரிப்புகளில் அவர் அழுதும் அரற்றியும், வெகுண்டும், அவமானப்பட்டும் விதவிதமான குரல்களில் பேசுவது கேட்டால் அந்தக் காட்சிகள் மறக்கவே மறக்காது.
அவரின் வேகமும் நகைச்சுவை உணர்வும் இணையற்றது. இதிகாசக் காட்சிகளை விவரிக்கும்போது சமகால நாட்டு நடப்புகளோடு தொடர்புறுத்தி அவர் செய்யும் ஹாஸ்யங்கள் மறக்க முடியாதவை. நகைச்சுவை என்று அவர் தனியாக ஏதும் செய்ய வேண்டாம், ஏற்றி இறக்கி பேசும் அவர் குரல் தழைவே நம்மை சிரிக்க வைக்கும். காட்சிகளையும் உரையாடல்களையும் நாடகக்காட்சியாக ஆக்குதல் அவர் கையாண்ட ஒரு உத்தி. “நான் உங்க மனசுல நிக்கணும்னு இதெல்லாம் செய்யறேன். சொல்ல வந்த சேதியை மனசில வாங்கிகிட்டு சொன்ன முறைய மறந்துடணும்” என்று கூடவே சொல்லுவார்.
புலவர் கீரன் “ கூறியது கூறல்” என்கிற குற்றத்தைச் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆன்மீகத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் வேண்டுமென்றே கையாண்ட உத்திகள் தான் அவை என்று தோன்றுகிறது.
விறுவிறுப்பு, வேகம், நாடகத் தன்மை, ஹாஸ்யம் என்று ஒரு சுறுசுறுப்பான கிரிக்கெட் பந்தயத்துக்கு இணையானது அவர் பாணி. சமய சொற்பாழிவாளர்களில் சச்சின் தெண்டுல்கர் அவர்.
ஆகஸ்ட், 2013.