வைரமுத்து 
சிறப்புப்பக்கங்கள்

ஞானபீடம்: விருதா, விவாதங்களின் வரலாறா?

Staff Writer

இந்திய இலக்கியத்தின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஞானபீட விருது, அதன் ஆரம்ப காலத்திலிருந்தே பெருமையையும், அதே நேரத்தில் விவாதங்களையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது. இன்று இந்த விருதைச் சுற்றி எழும் சர்ச்சை கள் புதிதல்ல; அவை அதன் வரலாற்றின் ஒரு இயல்பான தொடர்ச்சியே. வைரமுத்துவுக்கு இந்த விருது தற்போது வழங்கப்பட்டதையொட்டி மிகக் கடுமையானதொரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஜெயமோகன். இதையொட்டி தமிழ் இலக்கிய உலகமே பல கூறுகளாக மாறி விவாதித்துக் கொண்டுள்ளது.

இது 1961- இல் நிறுவப்பட்டாலும் முதல் விருது 1965இல் தான் வழங்கப்பட்டது. அதற்கு முன்னரே வழங்கப்பட்டிருந்தால் முதல் விருதே பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடும். 1964 -இல் பாவேந்தர் காலமாகிவிட்டார் என்கிறார் மூத்த தமிழ் பேராசிரியர் ஒருவர். தொடங்கிய முதல் சில ஆண்டுகளில், சில மொழிகள் அடிக்கடி அங்கீகரிக்கப்பட்டன; சில மொழிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்ற உணர்வு உருவானது. குறிப்பாக, அகிலன் 1975-ல் விருது பெற்றது வரை தமிழ் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. அவருக்குக் கொடுத்தபோதே தரம் பற்றிய விமர்சனம் எழுந்தது.

கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்திக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது, அவரை ”தன் எழுத்தின் மூலம் குதிரையை கழுதையாக்கவும், கழுதையை குதிரையாக்கவும் வல்லவர்” என்றும், “தற்கொலை பற்றி இவர் பேசினால் கேட்பவர்களில் 25% பேர் தற்கொலை செய்து கொள்வார்கள்” என அவரது பேச்சாற்றலை கேலி செய்து விமர்சித்தாராம் கன்னட எழுத்தாளர் கும்வீ என்பவர்.

தமிழில் ஜெயகாந்தன் விருது பெற்றபோது. காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட காலப்பின்னணியில் அவர் எழுதிய ஹர ஹர சங்கரா நாவலை முன்னிறுத்தி, பேச்சாளர் நெல்லை கண்ணன், “ஞானத்தை பீடத்திடம் அடகு வைத்து பெற்ற விருது” என்று கடுமையாக விமர்சித்தார். இதன் மையக் கேள்வி: இலக்கிய மதிப்பீடு முழுமையாக கலை சார்ந்ததா? அல்லது காலச்சூழலும் தாக்கம் செலுத்துகிறதா?

ஞானபீட விருதுகளில் சமூக மாற்றம், அரசியல் சிந்தனை போன்றவற்றை பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் அதிகம் அங்கீகரிக்கப்படுகின்றனர் என்ற கருத்து பல காலங்களாக உள்ளது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிஷ்ணு டே

(1971), மகாஸ்வேதா தேவி (1996), அசாமை சேர்ந்த பிரேந்திரகுமார் பட்டாச்சாரியா(1979), கேரளாவை சேர்ந்த ஓ.என்.வி.குரூப் (2007) ஆகியோர் தீவிரமான மார்க்சியவாதிகள், அதேபோல் எம்.டி வாசுதேவன் நாயர்(1995), ஒடிசாவின் கோபிநாத் மொகந்தி(1973) கர்நாடகத்தைச் சேர்ந்த யூ.ஆர்.அனந்த மூர்த்தி (1994) ஆகியோரும் இடதுசாரி ஆதரவாளர்களே. ஞானபீட விருது பெற்றவர்களில் விசுவநாத சத்தியநாராயணா (தெலுங்கு, 1970), ராம்தாரி சிங் திங்கர் (இந்தி, 1972) வி. எஸ். காண்டேகர் (மராத்தி, 1974) மற்றும் நரேஷ் மேத்தா (இந்தி, 1992) ஆகியோரை வலதுசாரி சித்தாந்த தாக்கம் மிக்கவர்கள் என வகைப்படுத்துகின்றனர். 1998இல் விருது பெற்ற க்ரிஷ் கர்னாட் தாராளவாத (liberal) சிந்தனையாளர்கள் அடங்குவார். இடதுசாரி, வலதுசாரி, லிபரல் என்ற வரிசையில் இந்த வருடம் திராவிட சித்தாந்தம் சார் எழுத்தாளரான வைரமுத்து வருகிறார் எனலாமா?

சித்தாந்தம் சார்ந்து இயங்கும் இலக்கியவாதிகளே முன்னுரிமை பெறுகிறார்களா? அல்லது சித்தாந்தம் சார்ந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்குத்தான் இதைப் பெறக்கூடிய ‘வலு’ இருக்கிறதா?

இதுவரை விருது பெற்றவர்களில் கிரிஷ் கர்னாட், ஜெயகாந்தன், எம்.டி. வாசுதேவன் நாயர், மகா ஸ்வேதா தேவி, யூஆர் அனந்த மூர்த்தி, குல்சார், ஒ.என்.வி,குரூப், வைரமுத்து ஆகியோர் நேரடியாக திரைப்படத்துறையில் பங்களிப்பு செய்துள்ளவர்கள். குல்சார்( இந்தி), ஓஎன்விகுரூப் (மலையாளம்) ஆகியோர் வைரமுத்துவுக்கு முன்னரே ஞானபீட விருது பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியர்கள் ஆவர்.

விருது பெற்றவர்களில் பலர் சமூக செயற்பாட்டாளர்களாகவும் இருந்துள்ளனர். இதன் மூலம் எழும் சிக்கல்: ஓர் எழுத்தாளரை மதிப்பிடும்போது, அவரது சமூகப் பங்களிப்பை சேர்க்க வேண்டுமா என்பது. மகா ஸ்வேதா தேவி, க்ரிஷ் கர்னாட், யூ.ஆர்.ஆனந்த மூர்த்தி, அம்ரிதா பிரிதம், கேதார்நாத் சிங், இந்திரா கோஸ்வாமி ஆகியோர் எழுத்தாளராக மட்டுமின்றி சமூக செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளனர்.

ஆரம்பகாலம் தொட்டே விருது பெறும் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை விருது பெற்ற 66 பேர்களில் ( சில ஆண்டுகளில் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது) எட்டு பேர் மட்டுமே பெண்கள். இது விருது வாய்ப்பில் நிலவும் பாலின சமநிலை இன்மையைக் காட்டுகிறது.

விருதுத் தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பது பல வதந்திகளுக்கும் வழிவகுக்கிறது. ஆனால், இது போன்ற விருதுத் தேர்வு குறித்த ரகசிய காப்பு நோபல் பரிசு உட்பட பல உயரிய விருதுகளுக்குப் பின்பற்றப்படும் நடைமுறையே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கியம் என்பது ஒரே கோட்டில் அளவிட முடியாத துறை. அங்கு ஒவ்வொரு தீர்ப்பும், ஒரே நேரத்தில் ஏற்பும் மறுப்பும் ஆகிறது. தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் நினைவில் கொள்ள வேண்டியது: இன்று நாம் காணும் விவாதங்கள் புதிதல்ல. அவை இந்திய இலக்கியத்தின் இயல்பான இயக்கத்தின் ஒரு பகுதியாகும். விருதை மட்டும் பார்க்காமல் அதன் பின்னாலுள்ள மனித மனங்களையும், இலக்கிய அரசியலையும் வாசிக்க வேண்டும்.

இந்த விருதையொட்டிய விவாதங்கள் இலக்கியவாசகன் தன்னை மேலும் கூர்தீட்டிக்கொள்ள அவன் தேர்வு செய்து வாசிக்கவேண்டிய நூல்களைப் பற்றி மேலும் வெளிச்சம் பாய்ச்சுமானால் அதுவே சிறந்தது. வாசிப்பின் மூலமே தரமான எழுத்தைப் பற்றிய திறப்புகள் உருவாகும்.