சிறப்புப்பக்கங்கள்

திட்டமிட்டதால் சிக்கல் இல்லை!

ராஜேஷ்குமார்

எப்போதுமே முன்கூட்டியே திட்டமிடும் பழக்கம் எனக்கு உண்டு. வார, மாத இதழ்கள் நன்றாக விற்பனை ஆகிக்கொண்டிருந்த காலங்களில் அவற்றில் எழுதிவந்த எனக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அவற்றை எல்லாம் வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகையாகப் போட்டு அவற்றில் இருந்து மாதந்தோறும் வட்டித்தொகை வரும்படியாக செய்து வைத்துவிட்டேன். இதன் மூலம் வீட்டுச் செலவுகளை சமாளிக்க வழிவகை செய்தாகிவிட்டது. தற்போதைய கொரோனா சூழலில் அச்சு இதழ்கள் விற்பனை வீழ்ந்துவிட்டதால், அவற்றில் இருந்து வரும் வருமானம் இப்போது இல்லை.. இந்த சூழலில் ஒருகதவு மூடினால் இன்னொன்று திறக்கும் என்பார்களே அதுபோல் எனக்கு இணைய இதழ்களில் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒன் இந்தியா, பிஞ்ச் செயலி போன்ற பல இணையங்களில் தொடர்கள் எழுதிவருகின்றேன்.

இது தவிர இன்னொரு பயனுள்ள பணியையும் செய்து வைத்துள்ளேன். அது என்னவென்றால் என்னுடைய 1000 நாவல்களில் 900 நாவல்களாவது மின்னூல்களாக பல தளங்களில் விற்பனைக்கு இருக்கின்றன. அவற்றின்மூலம் வருமானம் கிட்டுகிறது. அது மட்டுமல்லாமல்  ஆர்.கே.பப்ளிகேஷன் என்ற பெயரில் பதிப்பகத்தை என்னுடைய இரண்டு மகன்களும் உருவாக்கி அவற்றின் மூலமாக என் நாவல்களை பதிப்பித்ததும் வருவாய்க்கு உதவிகரமாக இருக்கிறது.

கோவையில் நானும் என் துணைவியாரும் மட்டுமே வசிக்கிறோம். என் மகன்கள் இருவரும் சென்னையில் உள்ளனர். ஆகவே எங்கள் குடும்பச் செலவும் குறைவே.

வெப் சீரீஸ்களுக்கு எழுதச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களின் அணுகுமுறையும் விதிகளும் எனக்கு உகந்ததாக இல்லை என்பதால் அந்தப் பக்கம் போகாமல் இருக்கிறேன்!

ஜூலை, 2021