சிறப்புப்பக்கங்கள்

திரை உலகின் மகத்தான திருப்புமுனைகள்

Staff Writer

தமிழ் சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக, உள்ளடக்க ரீதியாக, வணிக ரீதியாக என பல விதங்களில் மாற்றத்திற்கான திருப்புமுனைகள் நடந்துள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.

பேசத் தொடங்கிய திரை

பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த லுமிரி சகோதரர்களின் கண்டுபிடிப்பான ‘சினிமாட்டோ கிராபி' மூலம் பம்பாய் வாட்லன்ஸ் ஓட்டலில் முதல் முறையாக இந்தியாவில் மௌன சலனப்படம் பொதுமக்கள் பார்வைக்கு 7.7.1896ல் காட்டப்பட்டது. பின் 1901ம் ஆண்டு ‘லைஃப் ஆப் கிரைஸ்ட்‘என்றபடம் Framji Cowasji institute ல் திரையிடப்பட்டது. இந்தப்படமே இந்திய சினிமாவின் தந்தை என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட தாதா சஹேப் பால்கேவை கவர்ந்துள்ளது. திரைப்பட தயாரிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 1912ம் ஆண்டில் ‘புண்டலிக்' என்ற முதல் இந்தியத் திரைப்படம் R.M.Torney தயாரிக்கப்பட்டு பம்பாய் காரனேஷனில் 18.5.1912இல் வெளியிடப்பட்டது. 1913ம் ஆண்டு தாதா சாஹேப் பால்கே முற்றிலும் இந்தியத்தயாரிப்பாக ‘ராஜா ஹரிச்சந்திரா' என்ற படத்தை எடுத்து 3.5.1913இல் காரனேஷனில் வெளியிட்டு மகத்தான வெற்றிகண்டார். 1917இல் பால்கேயின் தயாரிப்பான 'லங்காதகனம்' தான் இந்தியாவின் மௌன திரைப்படயுகத்தின் முதல் ‘ஹிட்' திரைப்படமாகும். இதனைத்தொடர்ந்து பல்வேறு தயாரிப்பாளர்கள் ‘லைட் ஆப் ஒழியா' ‘கபிலகுண்டலா', ‘ உதயகல்' போன்ற படங்களை உருவாக்கி வெளியிட்டனர். பின் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒளியுடன் ஒலி இணைக்கப்பட்டு பேசும் படம் உருவானது. உலகில் முதன்முதலாக அமெரிக்காவில் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ‘தி ஜாஸ் சிங்கர்' என்ற பேசும் படம் தயாரிக்கப்பட்டு 1927 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்தியாவை பொருத்தமட்டில் இம்பீரியல் ஃபிலிம் கம்பெனிசார்பில் சுர்தேஷ் ஒரானி ‘ஆலம் ஆரா' என்ற பேசும் படத்தை இந்தியில் எடுத்து 14.3.1931 இல் பம்பாயில் திரையிட்டு இந்தியாவின் முதல் பேசும் படத் தயாரிப்பாளர் என்ற பெருமை பெற்றார். பேசும் பட சகாப்தம் உருவானாலும் மௌனப் படங்கள் 1935 ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருந்தது. தென்னிந்தியாவை பொருத்தமட்டில் 1897 ஆம் ஆண்டில் மதராஸ் ‘விக்டோரியா பப்ளிக் ஹாலில்' துண்டு சலன படங்கள் மக்களுக்கு காட்டப்பட்டது. இதில் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து மதராஸ் மவுன்ட் ரோட்டில் ‘எலக்ட்ரிக் தியேட்டர்' உருவாக்கப்பட்டு வணிகரீதியில் படங்கள் காட்டப்பட்டன. 1914 ஆம் ஆண்டில் R.வெங்கையா என்பவர் மதராசில் ‘கெயிட்டி' என்ற திரை அரங்கை உருவாக்கினார். 1916 ஆம் ஆண்டில் சவுத் இந்தியன் ஃபிலிம் கம்பெனி என்ற பட நிறுவனத்தை நிறுவி, அதன் உரிமையாளர்கீ நடராஜ முதலியார் ‘கீசக வதம்' என்ற மௌனப் படத்தை தயாரித்து 1917 இல் வெளியிட்டார். இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பின் ‘பீஷ்ம பிரதிக்ஷா' ‘வள்ளி திருமணம்' போன்ற மௌன திரைப்படங்கள் வெளிவந்தன. இங்கும் 1931 ஆம் ஆண்டில் தான் பேசும் படக்காலம் உதயமாயிற்று. 1931 ஆம் ஆண்டில் அந்தேஷ் இரானி தயாரிப்பில் H M ரெட்டி இயக்கத்தில் ‘காளிதாஸ்' என்ற பேசும் படம் உருவானது. காளிதாஸ் திரைப்படம் சனிக்கிழமை அக்டோபர் 1931ம் ஆண்டு சுமார் மாலை 6:00 மணி அளவில் மதராஸ் சினிமா சென்ட்ரலில் முதன்முதலாக திரையிடப்பட்டது. இது தமிழ் தெலுங்கு பேசும் இரு மொழி படமாக விலங்கியது. கதாநாயகி TP ராஜலக்ஷ்மி தமிழிலும் தெலுங்கு கதாநாயகர் கங்காலி ராவ் தெலுங்கிலும் பேசினர். படம் அமோக வரவேற்பு பெற்றது. 1932 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘காலவா' என்ற திரைப்படம் தான் முற்றிலும் தமிழ் பேசும் படமாகும். இப்படி சாதாரணமாக தொடங்கிய பேசும் படங்கள் அசாதாரமான வளர்ச்சி பெற்று ஆலமரமாக தழைத்து நிற்கிறது. இன்று ஒலியற்ற திரைப்படத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒளியுடன் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக ஐக்கியமாகியுள்ளது. ஒலியும் ஒளியும் இரு கண்களாக திகழ்கின்றன. ஒலியை பொருத்தமட்டில் 5.1 டால்பி டிஜிட்டல் என்று பல பரிமாணங்களாக வளர்ந்து ஒளிர்விடுகிறது. கருத்து மிக்க வசனங்கள், இனிய பாடல்கள், காட்சிகளை வருடும் பின்னணி ஒலி ஆகியவை இல்லாவிட்டால் சினிமா உப்பில்லா பண்டமாகிவிடும். ஒளியுடன் ஒலிச்சேர்க்கை திரைப்பட வளர்ச்சியின் மகத்தான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

-திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்,

திரை ஆய்வாளர்

வசனகர்த்தாக்களின் வருகை

அதிகாரப்பூர்வமாக தமிழின் முதல் ‘பேசும் படம்', ‘காளிதாஸ்' தான். 1931 அக்டோபர் 31 ல் வெளிவந்த படத்தில், பி.ஜி. வெங்கடேசன், டி பி ராஜலட்சுமி, எல்.வி. பிரசாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதற்கு முந்தைய நாள் ‘சுதேசமித்திரன்'ல் வெளிவந்த விளம்பரம் தமிழ்- தெலுங்கு மொழிப் ‘ பேசும் படம்' என்றது. பெரும்பாலும் தமிழில்‘ பேஷினாலும்', பலர் தெலுங்கிலும், சிலர் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் உரையாடினார்கள். பாத்திரங்களுக்கும், பார்த்தவர்களுக்கும் எந்த மொழிச் சிக்கலும் இல்லை. ஐம்பது பாடல்கள் நிறைந்த படத்தில் ‘ பேச்சின்' பங்கு அப்படி. அதைத் தொடர்ந்த‘அசலான' தமிழ் பேசும் படங்களும் ‘அவாதட்டுனா இவா வருவா' என பேஷியது. இத்தனைக்கும் ‘மணிக்கொடி' எழுத்தாளர்கள் வா.ரா., பி.எஸ். ராமையாயும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும் அங்கே கோலோச்சினர். வா ரா அழைப்பின் பேரில் ‘ இராமநுஜர்' படத்தில் வசனம் எழுதிய பாரதிதாசனாராலும் ‘மொழியைத்' திருத்த முடியவில்லை. பாடலோடு ஒதுங்கிக் கொண்டார். பி.கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் டிகேஎஸ் சகோதரர்களின் ‘மேனகா‘ தான் முதல் சமூகப்படம். ஆனால் நாடகப் பிரதியை படமாக்கிய போதும் ‘மொழிமாறி' விடவில்லை. கல்கியின் தியாகபூமி (1939) அநேகமாக திரைப்பட இலக்கணத்திற்கு வெளியே இயங்கியது. எழுபது-எண்பது பாடல்களை பாபநாசம் சிவன், அவரே கதாநாயகனாக ‘நடித்து/ பாடிக் கலக்கிய' படம். கல்கி கதையோடு காணமல் போனார். தமிழ்த் திரைப்படங்களின் பொக்கிஷமென ‘பேசப்பட்ட‘ பி எஸ் ராமையா பங்களிப்பு துருவித் தேடினாலும் அவர் பி.எஸ். மணியுடன் இணைந்து எழுதி இயக்கிய குபேரகுசேலா (1943)வும், பி.யூ சின்னப்பாவும், பாபநாசம் சிவனும் இணைந்து கலக்கியது. கதை வழங்கிய ரத்னகுமார் (1949) என்ற அளவில்தான். இவை தவிர அவரது கதைகளுக்கு பிறர் திரைக்கதை-வசனம் எழுதிய படங்களே பல. இவரை தமிழ் சினிமாவின் மூத்த முன்னோடி என்ற அபத்தத்தை உருவாக்கியது சிறுபத்திரிகை கற்பனை மட்டுமே. இவர்களோடு ஒப்பிடும் போது சுந்தரம் பிள்ளையின் நாடகம் ‘மனோன்மணியம்' (1942) திரைப்படமாக்கப்பட்ட போது இன்னும் சிறப்பாக, ‘இந்த முனிவர் வர்க்கமே இப்படித்தான் மன்னா. வஷிட்டர் முதல் அகத்தியன் வரை' என மொழியும், அரசியலும் பேசியது.    தமிழ்த் திரைப்படத்தை முறையாகப் பேச வைத்தது இளங்கோவன் துவங்கி அண்ணா, கலைஞர் போன்றோரே. கண்ணகி (1942) ‘இன்பவள்ளி (1949)' இளங்கோவனின் மொழிநடைக்கான மாதிரி எனலாம். அண்ணாவின் ‘வேலைக்காரி', ‘நல்லதம்பி' (1949) ஆகிய படங்களில் அவரது ஆழமான சிந்தனைகளின் வெளிப்பாட்டைக் காணலாம். வேலைக்காரியில், ஆனந்தன் (கே.ஆர். ராமசாமி) ஆதிபராசக்தியை கேள்விகளால் துளைப்பான்.‘ஏழையை பணக்காரன் அடித்துத் துன்புறுத்தும் போது வாய்திறவாமல் இருப்பது போல்தான் நீயும் இருக்கிறாய், உனக்கு தர்மதேவதை என்ற பெயரா?'. நண்பன் சொல்கிறான், ‘கர்மம் கர்மம் என்பதையெல்லாம் தலைமுழுகி வெகுநாள் ஆகிவிட்டது. ‘நீதிமன்றத்தில் ஆனந்தன் வாதிடுகிறான்,‘சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு. ஏழையால் எளிதாக அந்த விளக்கைப் பெற்றுவிட முடியாது' நல்லதம்பி என்.எஸ்.கே. அவர்களின் மொழியால் எளிமையாக கருத்துகளை முன் வைக்கும். ஒருவகையில் தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவைப் பகுதிகளே, முப்பதுகள் துவங்கி என்.எஸ்.கே., காளி. என். ரத்னம் போன்றோரே தமிழை ‘மக்கள் மொழியாகப்' பேசினர். கலைஞர் தமிழ்த் திரைப்படங்களின் வசனங்களுக்காகக் கொண்டாடப்பட்ட பேராளுமை. தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் போன்றோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, கலைஞருக்குக் கிடைத்த மாபெரும் ரசிகர் வரவேற்பு. அவரது பெயர் நாயகர்களை விஞ்சி நின்றது. ‘பராசக்தி', ‘மனோகரா' படங்களில் அவர் பெயர் திரையில் ஒளிர்ந்தவுடன் எழுந்த ஆரவாரக் கூச்சலும், விசிலொலியும் ஒரு வசனகர்த்தாவுக்கு எப்படிசாத்தியமானது என எழுதினார் டி.எஸ். சொக்கலிங்கம். 

-சுபகுணராஜன்,  எழுத்தாளர்

வண்ணப்படங்கள்

தமிழ்ப்படங்களில் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்‘ (1956) என்பது அனைவருக்கும் தெரியும். கேவா கலர் என்ற நாற்பதுகளில் உருவான சல்லிசான ப்ராசசிங் முறையில் உருவாக்கப்பட்ட முழுநீள முதல் வண்ணப்படம் அது. ஆனால் அதற்கு முன்னரே தமிழில் ஆங்காங்கே கொஞ்சம் கேவா கலர் ப்ராசசிங் செய்யப்பட்ட படங்கள் உண்டு. ‘கல்யாணம் பண்ணிப் பார்‘ (1952), ‘கணவனே கண்கண்ட தெய்வம்‘ (1955) ஆகிய படங்களில் தலா ஒவ்வொரு பாடல் கேவா கலரில் வெளியானது. கேவா கலரில் பல ஐரோப்பியப் படங்களும் வந்தன. 1952இல் தொடங்கிய கேவா கலரின் வளர்ச்சி, 1962இல் முடிந்தது.

தமிழில் வெளியான முதல் டெக்னிகலர் படம், ‘கொஞ்சும் சலங்கை' (1962). அடிப்படையான கேவா கலரை விடவும் டெக்னிகலரில் வண்ணங்கள் இன்னும் நன்றாக இருக்கும். ஆனால் இதில்ப்ராசசிங் மிகவும் செலவு வைக்கும். இந்த முறையில் உருவான ஒரே தமிழ்ப்படம் கொஞ்சும் சலங்கைதான்.

இதன்பின் ஈஸ்ட்மேன் கலர் தமிழில் பிரபலமானது. ஈஸ்ட்மேன் கொடாக் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகைப் படங்களே தமிழில் மிகவும் பிரபலம். தமிழில் முழுநீள முதல் ஈஸ்ட்மேன் கலர்ப்படம் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை' (1964). இதற்கு முன் எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த ‘பரமபிதா‘ படமே முதல் ஈஸ்ட்மேன் கலர்ப்படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு, படம் நின்றுபோனது. இதனாலேயே, காதலிக்க நேரமில்லை சமயத்திலேயே எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் எடுக்க ஆரம்பித்த ‘அன்று சிந்திய ரத்தம்' எம்.ஜி.ஆரால் நிறுத்தப்பட்டது என்ற வதந்தியும் உண்டு. நாளிதழ்களில் இரண்டு படங்களின் முழுப்பக்க விளம்பரங்களும் ஸ்ரீதரால் வெளியிடப்பட, அதில் காதலிக்க நேரமில்லை மட்டும் வண்ணப்படம் என்று சொல்லப்பட்டதால் வந்த வினை. இதன் பின் ஈஸ்ட்மேன் கலர் தமிழில் புகுந்து விளையாடியது. அறுபதுகளில் நம்மால் நினைவு கூரத்தக்க அத்தனை வண்ணப்படங்களும் ஈஸ்ட்மேன் கலர்ப்படங்களே.

கருந்தேள் ராஜேஷ், திரைவிமர்சகர்

ஸ்டுடியோவிலிருந்து வெளிப்புறப் படப்பிடிப்புக்கு நகர்தல்

மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி போன்ற வலிமையான ஸ்டூடியோ அதிபர்களைத்தொடர்ந்து ஏபிநாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற நான்கைந்து வலிமையான இயக்குநர்கள் தமிழ்சினிமாவில் கோலோச்சினார்கள். பேனாவின் வலிமையினால் நின்றவர்கள் இவர்கள். அந்த காலகட்டத்தில் பெரிய நாயகர்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டினால்கூட ஸ்டூடியோவில் திரையில் பின்னணியில் சாலைக் காட்சிகள் ஓட, அவர்கள் அதன் முன் நின்றுஓட்டுவதுபோல் பாவனை செய்வார்கள். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் தேர் ஓடிக் கொண்டிருக்கும்; பின்னணியில் காட்சிகள் ஓடிக் கொண்டிருப்பது ஓர் உதாரணம். சர்வர் சுந்தரம் படத்தில் படங்கள் எப்படி எடுக்கிறார்கள் என்பதை திரையில் காட்டி, அந்த காலத்தில் திரை ரகசியங்களை உடைத்துவிட்டார்கள். இந்த ஸ்டூடியோ காலகட்டத்தில் இதிலிருந்து வெளியே வந்து முழுக்க முழுக்க அவுட்டோரில்  ஒரு படம் பண்ணினால் என்ன என யோசித்து பஞ்சு அருணாசலம், தேவராஜ் மோகன், நான் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவான படம்தான் அன்னக்கிளி. அந்த கட்டத்தில் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாம் ஒரே குடும்பமாகத்தான் இயங்குவது வழக்கம். அப்போது இளையராஜாவின் அசத்தலான வருகையும் நிகழ்ந்தது. பொள்ளாச்சி பக்கமாக இந்த படத்துக்காக லொகேஷன் தேடி இவர்களைக் கூட்டிக்கொண்டு அலைந்தேன். தேடியது எதுவும் கிடைக்கவில்லை என சலித்தபோது தெங்குமரஹடா என்ற ஒரு ஊர்கிடைத்தது. அங்கே எடுக்கமுடியாத சில காட்சிகளை சேலம் பக்கத்தில் எடுத்தோம். எனக்குத் தெரிந்து 95 சதவீத காட்சிகளை முதன்முதலில் அவுட்டோரில் எடுத்த படம் அன்னக்கிளிதான். இதைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, இளையராஜா இசை கூட்டணியில் வண்ணப்படமாக 16 வயதினிலேயும் வந்தது, முழுக்கமுழுக்க அவுட்டோர் படம் என அதற்குப் பெயர் வந்தது. அன்னக்கிளி கறுப்புவெள்ளைப் படம்தான்!

அன்னக்கிளி அதிரிபுதிரியாக ஓடி பெரு வசூலைச் செய்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்!

-சிவகுமார், திரைக்கலைஞர்.

ராஜா வந்தார்!

இளையராஜா அன்னக்கிளியில் வரும் போது எனக்கு வயது பதினான்கு. எந்த சினிமாக்களையும் துரத்திப் பார்த்தவாறு இருந்தேன். எம்.எஸ்.வி. மீது இருந்த அளவு கடந்த ஆசையால், புதிதாக வந்தவருக்கு சரியாக இசை போட வரவில்லை என்று முடிவு செய்து, வசை பாடிக் கொண்டிருந்தோம். அவர் சப்ஜெக்ட்டுக்கு வேலை செய்யாமல் எங்கேயோ சுற்றுகிறார் என்றேன் நான். நல்ல சினிமாக்கள் மேல் இருக்கிற தாகம் வளர்ந்து ரசனை விரிவடையும் தோறும் அந்த சந்தேகம் அரித்துக் கொண்டே வந்து மனசினுள் அசூயை சுற்றி சுழன்றது. ஏதோ ஒரு படத்தைப் பார்த்தவாறு இருக்கையில், பாத்திரத்தின் அடிப்பாகம் கழண்டது போல ஞானம் வந்து தொட்டது, இதுதான் இதுதான் இதுதான் !

ராஜாவின் விளைவு என்ன என்று கேட்டால், ஹிந்தி போச்சு தமிழ் நின்னுச்சு என்பார்கள். பலர் தங்களுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களுடன் அவருடைய இசையை இணைத்து கண்ணீர் மல்குவார்கள். அவை யாவும் சரியே. ஆனால் எனக்கு நிகழ்ந்தது வேறு. பலருக்கும் அது நேர்ந்திருக்கும். ராஜாவின் இசையினால் மட்டுமே நான் தமிழ் சினிமாவின் போதாமையை அறிந்தேன்.

இதில் விதி விலக்காக இருந்த ஜாம்பவான்களை விட்டு விடுவோம்.

இன்னும், இன்னும் என்கிற தூரத்துப் பார்வையை எனக்கு கொடுத்தார் ராஜா. உலகமெங்கும் அறிந்த தரமான சினிமா சம்பவங்களில், எந்த இசை மேதைக்கும் குறையாமல் இருந்தார் அவர். அவருடைய பார்வை பட்டு ஒரு படத்தின் நாடகங்கள் மண்ணை விட்டு எழுந்த அதிசயங்களை இன்னும் பல காலத்துக்கு நிரூபிக்க முடியும். திரையில் நிகழ்கிற ஒரு நிகழ்வுக்கு அவர் கொடுக்கிற பரிமாணம் வேறு. சப்ஜெக்டில் நின்று தேங்காமல் அவர் அதை உலகப் பொதுவாக்குகிறார். தளபதி படத்தில் ரஜனிக்காக ஸ்ரீவித்யா அழுவது இருக்கட்டும், அது உலகமெங்கும் தனது பிள்ளைகளைப் பிரிந்த தாய்களின் ஓலம்!

பாலும் பழமும் படத்தில் கதாநாயகன் மனைவியை இழந்ததும், முத்தை இழந்தேனே, என் சொத்தை இழந்தேனே என்பதாக அந்தப் பாட்டு இருந்திருந்தால் அது ஒரு சினிமா பாட்டு. அவ்வளவு தான். போனால் போகட்டும் போடா என்பது என்றும் உள்ள மனிதனுக்காக பாடப்பட்டது. அதுபோல் ராஜா மனித குலத்துக்காக இசைத்திருக்கிறார்.

எம்.கே.மணி, எழுத்தாளர்.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வருகை!

திரைப்படக் கல்லூரியில் இருந்து அவ்வப்போது தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியவர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்துகொண்டுதான் இருந்தார்கள். கே.எஸ். பிரசாத், அசோக் குமார், நிவாஸ் முதலிய ஒளிப்பதிவாளர்கள் தொட்டு, ருத்ரைய்யா முதலிய இயக்குநர்கள் என்று அவ்வப்போது வெளிவருவார்கள். ஆனால் ஒரு பட்டாளமே மொத்தமாகத் தமிழ் சினிமாவுக்குள் திரைப்படக் கல்லூரியில் இருந்து குதித்து, திரைப்படக் கல்லூரிக்கென்றே மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த ஆபாவாணனின் ‘ஊமை விழிகள்' (1985), தமிழ் சினிமாவின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்று. அந்தப் படத்தில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர்கள் என்று அனைவரும் புதிது. இவர்களையெல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பில் இருந்த ஆபாவாணனுமே புதியவர்தான் (ஏற்கெனவே சில படங்களை விநியோகம் செய்த அனுபவம் மட்டுமே).  ஆபாவாணனின் டிப்ளமோ படமாக அவர் இயக்கிய படமே பின்னாளில் ஊமை விழிகள் ஆனது.

ஊமை விழிகள் அளித்த பிரமாண்ட வெற்றியால் ஆபாவாணனும் பிற திரைப்படக் கல்லூரி மாணவர்களும் அதன்பின் பல படங்கள் அளித்தனர். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் திரைப்படக் கல்லூரியில் இருந்தே வந்தனர். அவர்களில் முக்கியமான ஒருவர் ரஜினிகாந்த் (என்பதையும் தெரிந்து வைத்திருப்பீர்கள்).

-கருந்தேள் ராஜேஷ், திரை விமர்சகர்.

சீடி கேசட்

குறுந்தகடுகள் என்ற செல்லப் பெயர் கொண்ட சீடிக்கள் வந்த பின் படைப்புத் துறையில் பெரிய புரட்சி ஏற்பட்டது. வடிவமைப்புகள், எழுத்துருக்கள், புகைப்படங்கள் என இலட்சக்கணக்கில் சீடிக்களில் சேமித்து வைக்கப்பட்டு பயன்படுத்தவும் பட்டன. இப்படி சீடிக்கு சீடி வருடி பதிவு செய்து வைத்துக் கொள்ளப்பட்டவைகள் யார் அப்பன் வீட்டுச்சொத்தாகவும் இருக்கலாம்.

சீடி/டிவிடிக்கள் திரைத்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தன. உலகத் திரைப்பட விழாக்களுக்குப் போகும் உள்ளூர் அறிவுஜீவிகள் மட்டும் கதைகளையும் காட்சிகளையும் திருடிக் கொண்டிருந்தார்கள். சீடி/டிவிடிக்கள் பரவலான பின் சின்னச் சின்ன காட்சித் துணுக்குகள் ஆடை/அரங்க வடிவமைப்புகள் என மிகத் துல்லியமாக பார்த்து செய்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

ஷாட் பை ஷாட்டாக பார்த்துச் செய்து கொண்டவர்கள் அனேகம். பிரபலமான பெரிய நடிகர்களும் இயக்குனர்களும் ஒரே படத்திலிருந்து எடுத்துக் கொண்டு பிடிபட்டுக் கொள்ளாமல் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். ஒரே கதைக்கான காட்சிகளை அல்லது பல கதைகளை துண்டு துண்டாக எடுத்து ஒட்டு ஒரே திரைப்படமாக ஆக்கிக் கொள்ள இந்த அட்சயக் குறுந்தகடுகள் பெரிதும் உதவின.

சீடி/டிவிடிகள் அடுக்கி வைக்கப் பட்ட அலமாரிகளுக்கு பூசையைப் போட்டுவிட்டுத்தான் திரைப்படங்களை உருவாக்கினார்கள் என்பதை நியாயமான திரைப்பட மேதைகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஐடியாவை லவட்டிக் கொண்டு நாகரீகமாகச் சொன்னால் எடுத்துக் கொண்டு திரைப்படைப்புகளை இயக்கி வெற்றி கண்டவர்கள் உண்டு.  ஜப்பானின் ‘ரஷோமான்‘ படத்தின் திரைக்கதை வடிவமைப்பில் ‘அந்த நாள்' என்று உருவானது பாராட்டத்தக்கது. இப்படி ஒருமுறையோ இருமுறையோ படச்சுருளில் மட்டும் பார்த்து  வியந்த திரைக்கதைகளை வைத்துக் கொண்டு இந்திய அளவில் உருவாக்கியப் படங்கள் ‘ஆஹா‘ ரகம். மேலும் ‘ஷோலே‘ போன்ற இந்திய பிரமாண்டங்களைச் சொல்லலாம்.

படச்சுருள்களில் மட்டும் வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கையில் திரைப்படைப்பாளர்கள் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்களாம். சர்வதேசிய திரைப்பட விழா முடிந்த சில மாதங்களில் வெளியாகும் படங்களில் திரைப்பட விழாவின் திரைப்படங்களின் சாயல்கள் இருந்தே தீரும்.

ஆனால் சீடி/டிவிடிகளில் பார்த்து ரசித்தப் படங்களை அடிக்கடி பார்த்துக் கொள்ளும் வசதி இருக்கும் நிலையில் மடிக்கணிணியில் காட்சிகளை பார்த்துப் பார்த்து படமெடுக்கும் ஆகச் சிறந்த சௌகரிய நிலையை உண்டாக்கித் தந்துள்ளது. சீடி/டிவிடிகளில் தொடர்ந்து பார்க்கும் உலகப் படங்களில் சரியான படத்தை தேர்வு செய்து கொண்டால் மட்டும் போது. அப்படித் தேர்வு செய்ய வாங்கிக் கொள்ளும் சீடிகளின் எண்ணிக்கையை எண்ணிச் சொல்ல முடியாது தான்.

மகாநடிகர்களாக தங்களை  நிரூவிக் கொண்டவர்கள் திரைப்படக் காட்சியில் தலையைச் சொரிய வேண்டும் என்றால் கூட சீடி/டிவிடிகளில் படம் பார்த்துதான் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள் என்பது கண்கூடு.

சீடி/டிவிடிகளில் திரைப்படங்களை பொது மக்கள் பார்க்கத் துவங்கிய பின்னர், மகாக் கலைஞர்களின் கலையறிவும் படைப்பூக்கத் திறமைகளும் பல் இளிக்கத் துவங்கி விட்டன.

இன்றும், ஒரு படம் பண்ணுறேன் ‘ரெஃபரன்ஸ்‘ பார்க்குறேன் என்ற பெயரில் உலகப் படங்களிலிருந்து எடுத்து எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிக சீடி/டிவிடிகள் பார்த்தவன் ஆகச் சிறந்த படைப்பாளி என்னும் நிலைதான் இன்று.

சீடி/டிவிடிக்கள் இன்று ‘லிங்க்‘ என்று ஆகிப் போனது. எதற்கெடுத்தாலும் ‘லிங்க்‘ கொடுங்க என்று கேட்டு விடுகிறார்கள். தங்களுக்கு தேவையானவற்றை இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ளத் தெரிந்தவர்கள் ஆகச் சிறந்த படைப்பாளிகள் என்பது அறிவுலகின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு.

-மதியழகன் சுப்பையா,  எழுத்தாளர்

ஓடிடி வருகை

கோவிட் சூழலுக்கு முந்தைய காலகட்டம் வரை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஓடிடி என்பது எங்கோ தொலைவில்தான் இருந்தது. அதன் எழுச்சி லாக்டவுன் காலகட்டங்களில் யாரும் நினைத்து பார்த்திடாத வண்ணம் அதிகமானது. இது படைப்புகளின் தரம் அதன் வியாபாரம் என்கிற இருவேறு தளங்களில் திருப்புமுனையாக மாற்றம் கொண்டது. இதுவரை மிகச்சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே பார்க்கவைத்த ரசிகர்களுக்கு கொரியா ஸ்பெயின் ஜப்பான் என எல்லைகளற்ற படைப்புலகை அது அறிமுகப்படுத்தியது. வேற்றுமொழி திரைப்படங்கள் பார்ப்பவர் எண்ணிக்கை அதிகமானது. இதன் தாக்கத்தால் தமிழிலும் தரமான அல்லது புதுமையான திரைப்படங்களே ஓடும் என்கிற நிலை வந்திருக்கிறது. இது தயாரிப்பாளர்களை இயக்குநர்களை எழுத்தாளர் களை நோக்கியும் படைப்புகள் நோக்கியும் புதுமையான கதைக்களங்களை நோக்கியும் நகர்த்த ஆரம்பித்துள்ளது. இன்னொருபுறம் சிறிய அளவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை வெளியிடுவதற்காகதியேட்டர்களுக்கு காத்திருந்த நிலைமாறி நேரடியாக ஓடிடிகளின் வழி வெளியிடுகிற நிலை உண்டாகியுள்ளது. இது தரமான சிறிய திரைப்படங்கள் அதிகமாக உருவாகவும் வாய்ப்பளித்துள்ளது. திரையரங்கிற்கே வராத முதியவர்கள் பெண்களுக்கு திரைப்படங்களை வீட்டுக்கே கொண்டு சென்றதும் அவர்களுக்கும் எல்லா படைப்புகளையும் உடனுக்குடன் காணுகிற வாய்ப்பையும் அது தந்துள்ளது. முக்கியமாகதிருட்டுத்தனமாக படம் பார்ப்பது குறைந்திருப்பதால் தயாரிப்பாளர்களுக்கும் லாபகரமான ஒன்றாக உள்ளது.

 அதிஷா, எழுத்தாளர்

டிசம்பர், 2022