சிறப்புப்பக்கங்கள்

திரைக் கலையும் நானும்!

பேரா. மு.இராமசாமி

கலை இலக்கியச் சூழலில், எனக்குப் பிடிமானமாயிருந்த பொழுதுகள், எழுத்து/ நாடகம் என்கிற படைப்புக் கணங்களுக்கு நேரம் ஒதுக்கி, நான் செயல்பட்ட நாழிகைகள்தான் என்று இப்பொழுது  சொல்ல முடிகிறது.

என் நேரம், எனக்குப் பிடித்த நாடகத்துறையிலேயே என்னைப் பேராசிரியராக அமர்த்தி, நாடகத்தில் செயல்பட, கூடுதல் வாய்ப்பை எனக்குத் தந்திருந்தது. ஓடுகிற ஆற்றில் எத்தனைமுறை முங்கி முங்கிக் குளித்தாலும், சிறுவர்களின் தீராத ஆசையைப் போலவே, நடிப்பு என் பதும், நாடகம் என்பதும், நெறியாளுகை என்பதும், இந்த வயதிலும், தீராது மனசைப் பிடித்துத் துரத்திக் கொண்டேதானிருக்கிறது. அதில் நடிப்பு, நடிப்பவரிடமும் பார்ப்பவரிடமும், களத்தில் பிரசவிக்கிற அதே கணத்தில், பட்டாம்பூச்சியாய் மனசிற்குள் மத்தாப்புப் பூக்க வைக்கிற மாயத்தைச் செய்யக் கூடியது. அதுவே எனக்கான உலகமாகவும் ஆகியிருந்தது. ஆசிரியர் பணியிலிருந்ததா லும், கலை இலக்கியத்தைத் தத்துவக் கருத்தியல் தளமாகவே பார்க்கும் பார்வை எனக்குள் இருந்த தாலும், கும்பி கழுவுவதற்கோ, குடித்தனம் பண்ணுவதற்கோ, கலை இலக்கியத்தைக் கையாள வேண்டிய தொழில்முறைத் தேவை எனக்கில்லாதிருந்தது. அதுவே, என் வாழ்க்கையை அழகியல் உவப்புடன் நகர்த்த, எனக்குப் போதுமானதாகவுமிருந்தது. படித்த படிப்பிற்கும் பார்க்கிற வேலைக்கும் அதனூடான சமூகப் பங்களிப்பிற்கும் ஒருவகையான படைப்பாக்கத் தொடுப்பு இருந்தால், அது கொடுக்கிற மகிழ்ச்சி, அலாதியானதுதானே! எனக்கு அது, இயல்பாக அமைந்திருந்தது. இப்ப டியான ஒரு சூழலில்தான், சின்னத் திரையும் பெரியதிரையும் என் கதவைத் தட்டி, என்னையும் தம்முடன் அணைத்துக் கொண்டன. அது இன்னொரு உலகம்!

சின்னத் திரையோ, பெரிய திரையோ -அவை, என்றைக்கும் என் கனவாகவே இருந்ததில்லை. தமிழகத்தின் தென் பகுதி, என் வளர்ப்பிற்கான நிலமாயிருந்ததால், அதற்குரிய பிடிவாதங்களுடன், எழு த்தும் நாடகமும் எனக்குள் வசப்பட்டுக் கிடந்தன. திரை ரசிகனாய் அலைந்திருக்கிறேனே ஒழிய, திரை உலகத்திற்குள் கால் வைக்கிற சிந்தனை எனக்குள் எப்பொழுதும் அரும்பியதே இல்லை. பொதுவுடைமைச் சிந்தனையில் ஈர்ப்பு இருந்தமையால், எழுத்தையும் நாடகத்தையும் விற்பனைக்கு உரியதாக்கும் சிந்தனையே எனக்குள் எழுந்திருக்கவில்லை. என் எழுத்திற்கும் நாடகத்திற்கும், என் பல்கலைக்கழக ஆசிரியர் ஊதியமே போதும் என்பதாகவே இருந்தது. என் எழுத்தையும் நாடகத்தையும், சமூகத்திற்குக் கற்றுத்தந்து அதனிடமிருந்து கற்றுக்கொள்ளும் இன்னொரு கல்வியாகவே கருதினேன்.

ஆசிரியர் பணியிலிருந்ததால்,  தொடக்கத்தில், மாணவர்களைக் கொண்டு, சமூக, அரசியல் பிரச்சனைகளை, மக்களைத் தேடிச் சென்று நாடகங்களாய்ப் போட்டுக் கொண்டிருந்ததால், அடிப்படைச் செலவினங்களுக்கான சொற்பப் பணத் தேவை மட்டுமே எனக்கிருந்தது. என் நாடகச் செயல்பாடுகளின்மீது பார்வையை ஓடவிட்டிருந்த சில நண்பர்களின் அழைப்பின் பேரிலேயே, நான், சின்னத் திரையையும் பெரிய திரையையும் என் அனுபவத்திற்குள் கொண்டுவர முடிந்திருந்தது. நான் யார் வீட்டுக் கதவையும் தட்டி வாய்ப்புகள் கேட்டதில்லை; தேடிவந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நடிப்பைப் புடம் போட, அதன் அனுபவத்தைக் கொண்டு என்னைப் பட்டை தீட்டிக் கொள்ள, அந்த அனுபவங்கள் எனக்கு உதவியிருக்கின்றன.

செலவில்லாமல் ஒன்றைக் கற்றுக் கொள்கிற வாய்ப்பு என்பதாகவே அவற்றைக் கருதிக் கொண்டி ருந்தேன். அப்பொழுதெல்லாம் அதன்மூலம் சம்பாதிக்க நினைத்ததில்லை. ஆசிரியர் பணியிலிருந்த வரையிலும், இன்னொரு சம்பாத்தியமாக நான் பெரிய திரையைக் கருதியதே இல்லை. அவர்களாகவே தருவதையும், பல்வேறு சமூக அமைப்புகளுக்கு அப்படியே மடைமாற்றம் செய்திருக்கிறேன்; பல்கலைக்கழகத்திற்கேகூட அப்படியே கொடுத்துமிருக்கிறேன்.

பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளிவந்த பிறகே, ஓய்வூதியத்தில் வாழ்க்கை பயணப்படத் தொடங்குகையிலேயே, வியாபாரமான திரையையும், எனக்கான ஒரு சம்பாத்தியமாகப் பார்க்க முடிந்தது. அதுவும், கவுரவுமான ஓர் இடத்தில் என்னை இருத்திக் கொள்வதற்காக மட்டுமே இரு ந்தது. மற்றபடி கார், பங்களா, இத்யாதிகள் வாங்குவதற்காக அல்ல. இப்பவும், மார்ச் 14 ஐ முன்னிட்டு என்  செண்பகம் பெயரில் சமூக உதவிகள் செய்வதற்குத் தான்! ஊதியம் வாங்காமலும் நடித்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால், எல்லாவற்றிற்கும் செலவு செய்ய முன்வரும் அவர்களால், என்னி டம் மட்டும் ஏன் இந்தப் பிசிநாறித்தனம் என்பதாகவும் குழம்பிப் போயிருக்கிறேன். ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் கவனமாக இருக்கிறேன். எனக்கு  உதவியாளர் இல்லை; மானேஜர் என்பதைக்கூட, மார்ச் 15 க்குப் பிறகே என் வாய்ப்புகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். அதற்காக விளம்பரப் படங்களில் தலைகாட்டுவதில் எனக்குத் தயக்கங்கள் இருந்ததால், பலவற்றை மறுத்திருக்கிறேன். ஒன்றை ஒப்புக் கொள்வதற்கு, முதலில் எனக்கு அது பிடித்திருக்கவேண்டும் என்பதே என் முதல் தேர்வாக இருக்கிறது. நான் அதற்குள் வாழ வேண்டும்! என்னைத் தங்கள் தேர்வாக அணுகுகிறவர்களும், என் பின்புலம் அறிந்தவர்களாகவும், சமூக அக்கறையில் மிதப்பவர்களாகவுமே இருக்கின்றனர். அவர்களின் விரலுக்கேற்ற எளிய மோதிரமாகவே நான் இருந்து வந்திருப்பதாக நினைக்கிறேன். அதுவே எனக்கு  வசதியாகவும் இருக்கிறது. இப்பொழுதும் நாடகம் செய்வதற்காகவே மார்ச் 15 வரையும் எந்தப் படங்களையும் ஒப்புக் கொள்ளாமல்தான் இருக்கிறேன். நாடகம், எழுத்து எனக்கான தவமாகவே இருந்து வருகின்றது. நான், அந்தவகையில், எனக்குப் பிடித்த மாதிரியான, மனதிற்கு இதமான, சமூகத்திற்குப் பொறுப்பான எழுத்து மற்றும் கலைப் பணிகளிலேயே இப்பொழுதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். நினைவு தப்பும் காலம் வரைக்கும், இந்தப் படியாகவே இருப்பேன்; இருக்க வேண்டும் என்றே, கலைகளினூடாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

பிப்ரவரி, 2023.