சிறப்புப்பக்கங்கள்

தொடரும் நையாண்டி

வண்ணநிலவன்

துக்ளக் பத்திரிகையில் 1976-ல் நான் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டிருந்தது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப் பட்டிருந்தது. பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. தமிழில் துக்ளக் பத்திரிகையும் தணிக்கைக்குள்ளானது.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும். 1977 ஜனவரி 14-ம் தேதி அவசர நிலை அமலில் இருந்த காலத்திலும் துக்ளக்கின் ஆண்டுவிழா சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் நடந்தது. நான் கலந்துகொண்ட முதல் துக்ளக் ஆண்டுவிழா அது. பெருங்கூட்டம். மண்டபம் கொள்ளாமல் சாலையிலேயே ஆசிரியர் சோ பேசுவதைக் கேட்கக் திரண்டிருந்தனர். தனது வழக்கமான குத்தல் நையாண்டியை சோ கைவிடவில்லை. இந்திராகாந்தியின் போக்கை தனக்கே உரிய நகைச்சுவை எள்ளலுடன் பேச அவர் தவறவில்லை. அவரது துணிச்சலான மேடைப்பேச்சைப் பாராட்டாதவர்கள் இல்லை.

1976 ஆகஸ்ட் வாக்கில் என்றுநினைவு. காஞ்சிபுரத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் கூட்டம். அக்கூட்டத்துக்கு எடிட்டருடன் நானும் சென்றிருந்தேன். அவருடன் ஜெயகாந்தனும் பேசினார். அந்தக் கூட்டத்திலும் எடிட்டர் அவசர நிலைக்கு எதிராகத் தான் பேசினார். தான் கைது செய்யப் படலாம் என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது, குறிப்பாக கருத்துச் சுதந்திரம் கட்டுப் படுத்தப் படும்போதெல்லாம் வெகுண்டு எழுவது அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. 1977-ல் ஜனவரி இறுதிவாக்கில் அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் சீரணி அரங்கில் துக்ளக் பத்திரிகை சார்பில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நான் மிகையாகச் சொல்லவில்லை. நேரு, காமராஜ், அண்ணாதுரை போன்றவர்களுக்குக் கூடும் கூட்டம் போல எடிட்டர் பேச்சைக் கேட்கப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. போக்குவரத்தைச் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். இத்தனைக்கு அவர் அரசியல்வாதி இல்லை; ஒரு பத்திரிகை ஆசிரியர் அவ்வளவுதாம். இந்தியாவிலேயே எந்த பத்திரிகை ஆசிரியரது பொதுக் கூட்டமும் சென்னையில் நடத்தப் பட்டதில்லை.

துக்ளக் ஆண்டுவிழாக்கள் ஒவ்வொன்றையும் அந்நாட்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறும் பெரிய பெரிய மைதானங்களில்தான் நடத்தவேண்டி இருந்தது. ஏனென்றால் துக்ளக் ஆண்டுவிழாக்களுக்கு வந்த கூட்டம் அவளவு பெரியது. சாதாரண பத்திரிகை ஆசிரியர் பேச்சைக் கேட்க இவ்வளவு பெரிய கூட்டம் திரள்வது சோவுக்கு மட்டும்தான்.

சாதாரணப் பேச்சிலேயே அவருக்குக் கிண்டல் சரளமாக வந்துவிழும். அவரது நாடகங்கள், துக்ளக் கட்டுரைகள் ஆகியவற்றைப் போலவே அவரது மேடைப்பேச்சும் கேலி கிண்டலுமாக இருக்கும். கேலி கிண்டல் என்றால் நாலாந்தரமான கேலி அல்ல. தரமான உயர்வான நகைச்சுவை.

தன் மேடைப் பேச்சுகளுக்காக அவர் எந்த முன் தயாரிப்புகளிலும் ஈடுபடுவதில்லை. மடை திறந்த வெள்ளம் போல் அவரது நையாண்டி  பேச்சில் வந்துவிழும். அவரது கேலிக்கு ஆளாகாத அரசியல் தலைவர்கள் வெகு சொற்பம். துக்ளக் ஆண்டுவிழாக்களில் வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது முக்கியமான நிகழ்ச்சி. வாசகர்கள் பேசும்போது செல்லமாக அவர்களையும் கேலி செய்வார். பொதுவாக எந்த மனிதரும் கேலி செய்தால் அதில் விரோதமும் வன்மமும் கலந்துவிடுவதுதான் உலக வழக்கம். ஆனால் எடிட்டரின் கேலியில் துளிக்கூட வன்மமோ விரோதமோ இராது. கேலிக்காளாகிறவர்களே அதை ரசிக்கும் அளவுக்கு கேலி இருக்கும். காரணம் அவரது வன்மமற்ற விசாலமான மனம்தான்.

அவரது கேலியை அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை அவரது லட்சக்கணக்கான வாசகர்கள் ரசிகர்கள் போல் நானும் ரசித்துவருகிறேன்.

ஆகஸ்ட், 2013.