சிறப்புப்பக்கங்கள்

நஞ்சை விதைக்காதீர்கள்!

மரு.சிவபாலன் இளங்கோவன்

சஞ்சீவ் அந்த இருளில் மலங்க மலங்க விழித்தான். "சம் ஒன் காலிங் மை நேம் மாம்'' அப்படி
 சொல்லும்போது அவன் தனது அம்மாவின் கையை இறுக்க பிடித்துக்கொண்டான். அவனது உடல் வியர்த்து போய் இருந்தது. அதன் பிறகு சஞ்சீவ் தினமும் அது போல சொல்லத்தொடங்கினான். சோர்ந்து போன சஞ்சீவின் பெற்றோர்கள் இறுதியாக என்னிடம் அழைத்து வந்தனர். நம்பிக்கையின்மை அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

நீண்ட உரையாடலுக்குப் பின் பிடி கிடைத்தது. அவன் கடைசியாகப் பார்த்த படத்தின் பெயர். அது  'சிக்ஸ்த் சென்ஸ்'. அது ஒரு ஆங்கில பேய் படம். அதில் சஞ்சீவ் வயதுடைய ஒரு
சிறுவன், அவனுக்கு ஆவிகளின் உருவங்கள் தெரிய தொடங்கும், அவற்றின் குரல்களும் கேட்கும். அந்த ஆவிகள் அந்த சிறுவனுடன் தொடந்து உரையாட தொடங்குவார்கள்; அவன் வழியாக தங்களது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றி கொள்வார்கள் என படத்தின் கதை செல்லும்.

சஞ்சீவின் நடவடிக்கைகளும் அந்தப் படத்தைப் பார்த்த பின்னால் தான் மாறத் தொடங்கியிருக்கிறது. "அந்த படம் மட்டும் தான் காரணமா? பேய் படம் பார்க்கும் எல்லா சிறுவர்களுக்கும் சஞ்சீவிற்குள் ஏற்பட்டது போல தாக்கம் ஏற்படுமா?'' என
நீங்கள் கேட்கலாம். ஆனால் சிறுவர்களின் நடவடிக் கைகளை எப்போதும் நாம் ஒற்றை பரிமாணத்தில் இருந்து மட்டும் பார்க்க முடியாது. பல்வேறு வகையான சூழல்கள், காரணிகள் குழந்தைகளின் நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றன. ஆனால் எல்லா காரணங்களுக்கும் அப்பாற்பட்டு குழந்தைகளின் மனநிலை சில விஷயங்களில் தனித்துவமானது.

குழந்தைகளின் சிந்தனைகளில் பெரும்பாலும் ஃபேண்டஸிக்களே நிறைந்திருக்கும். கற்பனைகள் என்பதையும் தாண்டி ஃபேண்டஸிக்கள் என்பவை யதார்த்தத்தை மீறியும், அற்புதங்கள் செய்யக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கும்.  ஒரு குழந்தையின் முதிர்ச்சி என்பது அதன் மூளையின் வளர்ச்சியை பொறுத்தது. பொதுவாகவே குழந்தை பருவங்களில் மூளையானது தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் முழு வளர்ச்சி என்பது பதினெட்டில் இருந்து இருபது வயதுக்குள்ளாக முடிவடையும். மூளையின் வளர்ச்சி முழுமையடையும்போது குழந்தை பருவமும் முடிவடையும்.

மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்கென்றே நிறைய ஜானரில் படம் எடுக்கப்படுகின்றன.  அந்த படங்கள் மட்டுமே குழந்தைகளுக்கான படமாக இருக்கிறது. ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை; அப்படி எந்த வித்தியாசமும் இல்லை. எல்லா படங்களும் குழந்தைகளுக்கு காட்டப்படுகிறது. அது ஏற்படுத்தும் மனவெழுச்சி, கிளர்ச்சி, அதிர்ச்சி, ஆச்சர்யங்கள் என அத்தனையும் அந்த குழந்தையை பாதிக்கின்றன.

சஞ்சீவிற்கு நடந்ததும் அது தான். அவனது மூளையின் வளர்ச்சியையும் மீறி அவனுக்கு நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. கடைசியாக பார்த்த ஒரு படத்தின் கதாபாத்திரங்கள் அவனது இந்த மாய உலகத்தில் நிரம்பும் போது, அவன் அந்த கதாபாத்திரங்களுடன் உரையாட தொடங்குகிறான்.

ஃபேண்டசி கதைகள் என்பவை குழந்தைகளை மையமாக வைத்தே இங்கு எடுக்கப்படுகின்றன. கற்பனைகளை விரிவடைய செய்வதன் மூலமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியை துரிதப்படுத்தலாம் என்ற அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. ஆனால் பேய் படங்களையும், திகில் படங்களையும் நாம் இந்த ஃபேண்டசி வகைமையில் சேர்க்க முடியாது அதற்கு காரணம் அவை அறிவை விரிவடைய செய்வதில்லை என்பது மட்டுமல்ல. இது போன்ற படங்கள் குழந்தைகளின் உணர்வுகளின் மீதும், மனநிலையின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் சிறு தாக்கம் கூட அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய வல்லமை கொண்டது.

இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு எந்த கதைகள் சொல்லும் போதும் ‘‘இது கற்பனைக் கதை, நிஜ உலகில் இது சாத்தியமில்லாதது'' எனச் சொல்லித் துவங்க வேண்டும். நிஜத்திற்கும், கற்பனைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை வேறுபடுத்தி பார்க்கக்கூடிய முதிர்ச்சி அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு அந்த முதிர்ச்சி இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பிப்ரவரி, 2019.