சிறப்புப்பக்கங்கள்

படைப்பாளியும் பணமும்

அந்திமழை இளங்கோவன்

ஒரு  விடுதியில் தங்கியிருந்த ஓவியர் அவர், காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு வழக்கமாக தான் ஓவியங்கள் வரையும் கோதுமை வயல்வெளி நோக்கிச் சென்றார். மாலையில் ஓவியர் திரும்ப வரும் நேரம் கடந்துவிட்டது. ஆளைக் காணவில்லையே என விடுதி உரிமையாளர் கவலை கொண்டார். இரவு ஒன்பது மணியளவில் அவர் திரும்பினார். உடலின் முன் பகுதியைப் பிடித்துக் கொண்டு வந்த ஓவியர், நேராக தன் அறைக்குச் சென்றார். அவரது வினோத நடவடிக்கையைக் கண்ட உரிமையாளர் மனைவி எதாவது பிரச்னையா எனக் கேட்க, ஒன்றுமில்லை என ஓவியர் மழுப்பினார்.

சிறிது நேரத்தில் முனகல் சத்தம் கேட்டு உரிமையாளர் ஓவியர் அறைக்குச் சென்றார். சுருண்டு படுத்திருந்த அவரை விசாரித்தபோது, உடலின் மேல் பகுதியைக் காட்டினார். துப்பாக்கியால் சுட்ட காயம்.

கோதுமை வயல்வெளியில் தன்னைத் தானே  சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ஓவியர். அருகிலிருக்கும் மருத்துவர் அந்நேரம் இல்லாமல் போக, வேறொருவரை அழைத்து  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அன்றிரவு முழுவதும் ஓவியரின் அருகே விடுதியின் உரிமையாளர் விழித்திருந்தார். ஓவியர் சில நேரங்களில் புகைத்துக்கொண்டும் வலியால் துடித்துக்கொண்டும் இருந்தவர், இடையிடையே கொஞ்சம் தூங்கவும் செய்தார்.

காலையில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் விடுதிக்கு வந்து அவரை விசாரித்தனர். ‘ என் உடல் என்னுடையது. அதை வைத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. யாரையும் குற்றம்சாட்ட வேண்டாம். நான் தான் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்‘ என்றார்.

27, ஜூலை 1890 அன்று தன்னைத் தானே சுட்டுக் கொண்ட அவர் 29 ஜூலை 1890 அன்று அதிகாலை ஒன்றரை  மணிக்கு இறந்துபோனார்.

அப்போது அவருக்கு வயது 37.

27 வயதில் தனக்கு ஓவியத் திறமை இருக்கிறது என உணர்ந்தவர் பத்து ஆண்டுகளில் 2100 படங்கள் வரைந்துள்ளார். அதில் 800 கான்வாஸ் ஓவியங்களும் அடங்கும்.

ஓவியர் பெயர் வின்சென்ட் வான்கா. இன்று இவரது ஓவியங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

தன் இளம் வயதில் ஓவியக் கூடம் ஒன்றில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் பணி நீக்கம் செய்யப்பட்டு பின் சிறுசிறு வேலைகள் செய்து ஒப்பேறாமல், மதகுரு ஆவதற்கான படிப்பை படித்து அதுவும் ஆகமுடியாமல் 27 ஆம் வயதில் தன்னுள் ஒளிந்திருந்த ஓவியத் திறமையைக் கண்டுணர்கிறார்.

தன் சகோதரர் தியோ வான்கா பொருளுதவி செய்ய, தொடர்ந்து வரைகிறார். இடையிடையே மனநல பாதிப்பும் உண்டு.

அவரது மரணத்துக்குப் பின் கோடிகளில்  விற்பனையாகின்றன அவரது ஓவியங்கள். ஓர் ஓவியம் அதிகபட்சமாக இந்திய மதிப்பில் 688 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

உயிரோடு இருக்கையில் வான்கா ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே விற்க முடிந்தது. அதுவும் இன்றைய மதிப்பில் ரூபாய் 9047க்கு(109 டாலர்).

பணப்பற்றாக்குறையால் அவர் ஓவியம் தீட்ட பொருட்களை வாங்க முடியாமல் தவித்திருக்கிறார். கட்டணம் கொடுத்து மாடல்களை அமர்த்த முடியவில்லை. அதனாலேயே நிறைய நிலக்காட்சிகளை வரைந்துள்ளார்.

தனக்கு பொருளுதவி செய்த சகோதரனுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தபின்னர் தன்னால் சிரமம் வரக்கூடாது என வருத்தப்பட்டிருக்கிறார். எனவே தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். “வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களை ஆறுதல் படுத்துவதே கலை‘‘ என்கிற வான்காவின் வார்த்தைகள் அவரது வாழ்க்கையை சுருக்கமாகச் சொல்வதாகக் கொள்ளலாம்.

பண நெருக்கடிக்கு தன்னை பலியிட்ட வான்கா, தன்னைச் சுட்டுக் கொண்ட துப்பாக்கி 19, ஜூன் 2019 இல் ஏலம் விடப்பட்டபோது, இந்திய மதிப்பில் ஒரு கோடியே 82  லட்சத்துக்கு விலை போனது.

 உலகெங்கும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், சினிமா துறை  சார்ந்தவர்கள், இசை சார்ந்து இயங்குபவர்கள் என்று பலவிதமான கலைஞர்களுக்கும்  செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது.

கலைஞனின் கர்வமும் மனமும் பணத்தைப் பொருட்படுத்துவது இல்லை. பல நேரங்களில் கலைஞனின் படைப்புகள் அவனது காலத்துக்குப் பின்னரே புகழ்பெறுகின்றன. மூன்றாவது வகை, கலைஞன் சம்பாதித்த பணத்தைக் கவனக்குறைவால் தொலைத்துவிடுவதுண்டு.

இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் எப்படியாவது ஜெயித்துவிடுவோம் என சினிமாவை நோக்கிப் படை எடுக்கிறார்கள். பலரது கதையைக் கேட்கும்போது அவர்களின் உறுதி வியக்க வைக்கிறது. பணக்கஷ்டத்தால் பந்தாடப்படும் வளரும் கலைஞர்களின் வாழ்வு கண்களைப் பனிக்க வைக்கிறது.

அரசு வேலையை விட்டுவிட்டு வந்த சிவாஜிராவ் போல ரிஸ்க் எடுத்து ரஜினிகாந்த் ஆகலாம். அது கடினமான பாதை.

மாறாக ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு நாடகங்கள் நடத்திய பாலசந்தர், துணிக்கடை நடத்திக்கொண்டு இலக்கியம் படைத்த சுந்தரராமசாமி, பிஎஸ் என்எல்லில் பணிபுரிந்துகொண்டு கலையில் வென்ற ஜெயமோகன், வங்கியில் பணிபுரிந்துகொண்டு கதை மற்றும் சினிமாவில் கொடிகட்டிய சுபா, வங்கிப்பணியில் இருந்துகொண்டே கவிதை, கதைகளில் மனங்களை வென்றிருக்கும் வண்ணதாசன், கலாப்ரியா, மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்துகொண்டே எழுத்துலகில் கொடி நாட்டிய நாஞ்சில் நாடன் போன்றோரைப் பற்றி நேர் சந்திப்புகளில் பலரிடம் பகிர்ந்தது உண்டு. இது ஆரம்ப காலம். ஆனால் வெற்றி பெற்ற பின் பணத்தை சரியாகக் கையாளாமல் மோசமான சறுக்கல்களை சந்திப்பவர்களும் கலையுலகில் உண்டு.

இந்த மாத அந்திமழையின் சிறப்புப் பக்கங்கள் படைப்பாளிகள் எப்படி பணத்தைக் கையாளுகிறார்கள் என்று விரிவாகப் பேசுகிறது. எல்லா படைப்பாளிகளும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய இதழ் இது.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

பிப்ரவரி, 2023 அந்திமழை இதழ்