சிறப்புப்பக்கங்கள்

பிரியத்தை அதிகரிக்கும் கனவுகளைக் காண்போம்!

கோபிநாத், ஊடக ஆளுமை

நாம் விழித்துக் கொண்டே காணும் கனவுகள் நம்மை உற்சாகப்படுத்தும் அல்லது சோகத்தை ஏற்படுத்தும். இதில் முதலாவது. தூங்காமல், அப்படியே அசமந்தமாக  யோசித்துக் கொண்டிருக்கையில் உறவினர்கள் நம்மை அசிங்கப்படுத்துவது மாதிரியும் அவமானப்படுத்துவது மாதிரியும் சில கனவுகள் காண்போம்.

நிஜத்தில் நம்முடைய உறவினர்களோ, நெருக்கமானவர்களோ நம்மை அசிங்கப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் நம்மை அசிங்கப்படுத்திவிட்டது மாதிரியும், அந்த கஷ்டத்திலிருந்து மீண்டு, வெற்றி பெறுவது மாதிரியும் கனவு காண்கிறோம். இந்த வகையான கனவுகள் நம்மை உற்சாகப்படுத்தும். ஏனெனில், நாம் பார்த்த சினிமாக்கள் வலி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை நம்முள் விதைத்திருக்கின்றன. இதனால் இதுபோன்ற கனவுகளை ரசிக்கிறோம்.

இப்போது எல்லோருக்கும் வலி தேவைப்படுகிறது. அதனால் தான் துரோகம் பற்றி, வெறுமையைப் பற்றிப் பேசுகின்றனர். வலியிலிருந்து மீண்டு தான் வெற்றி பெற முடியும் என நம்புகிறோம். இது இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்ட ஒன்றா என்று தெரியவில்லை. வலி இல்லாமல் வெற்றி பெற முடியும் என்பதை இப்போது யாரும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.

அதேபோல், ஒருவிதமான உற்சாகத்திற்கு வில்லன் தேவைப்படுகிறான். உண்மையை  சொல்ல வேண்டும் என்றால் இப்போது வில்லன் என்பவனே கிடையாது. நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நிறைய வில்லன்கள் இருப்பதாக.

இரண்டாவது வகையான கனவு ரொம்பவும் ஏகாந்தமான கனவு. நாம் சிறிய வயதிலிருந்து பார்த்திருப்போம். ஒரு அநீதியைத் தட்டிக் கேட்க கூடிய இடத்தில் சினிமா ஹீரோ இருக்கிறார் என்றால், அந்த இடத்தில் நாம் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். இதுபோன்ற ஏகாந்தமான கனவுகள் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. ஏனெனில், அது சூழலை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது. மனிதர்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டவில்லை.

மனிதர்களை நிந்திக்காமல் நம்முடைய பகல் கனவு இருக்க வேண்டும். இரவுக் கனவுகளும் வலி இல்லாத, துயரம் இல்லாததாகவும் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதாகவும் இருக்க வேண்டும். நம் வெற்றியில் வலியும், அவமானமும், துயரமும் நிறைய இருப்பது போல, உறவுகளும், தட்டிக்கொடுத்தவர்களும், உற்சாகப்படுத்தியவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்?  வெறும் அவமானத்தை கடப்பதால் வெற்றி பெற முடியாது. அதைக் கடப்பதற்கு உதவி செய்தவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களின் கனவு மனிதர்கள் மீதான, சமூகத்தின் மீதான பிரியத்தை அதிகரிக்க வேண்டும். அப்படியான கனவுகளை தேர்வு செய்து காணுங்கள்.

அக்டோபர், 2022