சிறப்புப்பக்கங்கள்

பிழையின்றி பேசுக; எழுதுக

கவிக்கோ ஞானச்செல்வன்

தமிழ் மொழியை ஆங்கிலம் போல் ஒலித்திடும் ஊடகத்தார் பலர் உளர். நுனி நாக்குப் பேச்சு, முக்கால் ஆங்கிலம் கால் தமிழ் எனக் கலந்து பேசுகின்றனர். ஒற்றல் லகரம், சிறப்பு ழகரம், வருடல் ளகரம், இடையின் ரகறம், வல்லின றகரம், த - பின்வரும் ‘ந’ கரம், ட - பின் வரும் ‘ண’ - கரம், ற - பின்வரும் ‘ன’ - கரம் இவற்றின் நுட்பமான வேறுபாடு உணராமல் ஒரே தன்மையில் உச்சரிப்பது மிகக் கொடுமை. ஆய்த எழுத்தையும் சரியாக ஒலிப்பதில்லை. தமிழின் சிறப்பெழுத்தாகிய “ழ” கரம் பலருக்கு வாயில் வருவதேயில்லை. “ஞ” எனும் எழுத்தொலியும் அவர்களுக்குத் தெரியவில்லை.

எடுத்துக்காடாக - பொங்கள் திருநாள் வாள்த்துக்கல், தமிலர் திருநால் கொண்டாடி மகிள்வோம் வெவ்வேறு சமயங்களில் இரண்டு திரைப்படபெயர்கள் இப்படி எழுதிக்காட்டப்பட்டன. 1. பெருமைக்குறியவள் - (வல்லினம் போட்டு), 2.கொம்பேரி மூக்கன் - (இடையினம் போட்டு) பொருள் எவ்வளவு மாறுபடுகிறது பார்த்தீர்களா? உரி - உரித்தாதல் - குறியாகிவிட்டது. ஏறி - ஏறுதல், ஏரியெனும் நீர் நிலையாகி விட்டது. இப்படிப் பல உண்டு; சில காண்போம்: உளமாற வாழ்த்துக்கள் (ர) உள்ளம் மாறிவிட என்று பொருள். அன்புக்குறிய என்றெழுதுகிறார்கள். உரிய என்பது குறிய (குறுகிய) என்றாகி விடுகிறது.

அளப்பறியனவாகும் (அளப்பரிய) அரிய - அரிதான என்பது, அறிய - அறிந்து கொள்ள என்றாகிவிட்டது.

கறுப்பினத் தலைவரை - கருப்பினத் தலைவர் என்றும் வறண்டபகுதியை வரண்ட பகுதி என்றும் எழுதுகிறார்கள். கறுப்பு - நிறம், கருப்பு - பஞ்சம், கருமை, கரிய நிறம் என இடையினம் வரினும் கறுப்பு என்று எழுதும் போது வல்லினமே வர வேண்டும். வறட்சி மிகுந்ததை வறண்ட எனல் வேண்டும். வறண்ட (வறள்) என்பதை வரண்ட (வர) வருகைதர எனல் பிழை.

அவர் நன்கு கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் கைகோர்த்துக் கொண்டனர் என்றும் சொல்லுகிறார்கள். கோர்வை என்று ஒரு சொல் இல்லை. கோக்கப்படுவது கோவை: ஆசாரக் கோவை, தஞ்சைவாணன் கோவை எனக் காண்க. கோத்தல் அன்றி கோர்த்தல் அன்று. “எடுக்கவோ கோக்கவோ என்றான்” வில்லி பாரதத் தொடர். மலரைக் கையிலெடுத்து முகர்ந்து பார்த்தான் என்று எழுதுகிறார்கள். முகர்ந்து என்ற சொல்லும் தமிழில் இல்லை மோந்து என்பது சரியான சொல்.  தொலைக்காட்சியில், இந்நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டது என்று கீழ்வரியில் போடுகிறார்கள். சித்தரிக்க என்பது பிழை; சித்திரிக்க என்று எழுத வேண்டும்.

முயற்சிக்கிறேன் என்று சொல்லுகிறார்கள். முயற்சி என்பது தொழிற்பெயர். முயலுதல் என்று பொருள். முயல் என்பது வினைப்பகுதி, முயற்சி செய்கிறேன் என்று சொல்லலாம். அல்லது முயல்கிறேன் என்று சொல்லலாம். பதட்டம் என்று பேசுகிறார்கள். அது பதட்டம் அன்று; பதற்றம் ஆகும். மேதகு ஆளுநர், மாண்புமிகு முதல்வர் என மரியாதை அடைமொழிகளை பதவிப் பெயரோடு மட்டுமே இணைத்திட வேண்டும். அவர்தம் இயல்புப் பெயரோடு சேர்த்தல் பிழையாகும்.

வீடு அருகாமையில் உள்ளது என்று எழுதுகிறார்கள். அருகு எனில் பக்கம். அருகில் உள்ளது என்று சொல்ல வேண்டியதை அருகு+ஆ+மை (ஆ-எதிர்மறை இடைநிலை) அருகில் இல்லாமை என்று கூறுவது தொலைவில் இருப்பதாகப் பொருள் தாராதோ? நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன் என்று றன்னகரம் இட்டு எழுதுகிறார்கள். நான் உனக்கு முன், நூறு ரூபா கொடுத்தேன் என்று இதற்குப் பொருள். மூன்று நூறு எனில் முந்நூறு - தந்நகரம் இட்டு எழுத வேண்டும். மூன்றும் நூறும் புணரும் போது ஏற்படும் விதிகளின்படி முந்நூறு என்று இலக்கணத்துள் காண்க. இவ்வாறே முன்னர் நாள்களில் தலைவராக இருந்தவரை முன்னாள் தலைவர் என்று எழுத வேண்டும். முந்நாள் என்று மாற்றிப்போட்டு விட்டால், மூன்று நாள் தலைவர் என்று பொருள் ஆகிவிடும்.  முன்னாள் என்று எழுதியது போல் இன்றைய தலைவருக்கு இன்னாள் தலைவர் என்று றன்னகரம் இட்டுச் சிலர் எழுதிவிடுவார்கள். இல்லாத நாள் அல்லது கொடிய நாள் தலைவர் இவர் ஆகிவிடுவார். இந்நாள் என்று தந்நகரம் இட்டு எழுதுவோர் சிலரே உளர்.

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மிகப் பழமையானது - ஒரு பத்திரிகைச் செய்தி. பழமையானவை எனப் பன்மையில் முடிதல் வேண்டும். பேரவையில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்று செய்தி படிக்கிறார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று பன்மையில் முடிக்கவேண்டும். காலையிலும், மாலையிலும் வழிபாடு செய்யப்பட்டன - வானொலிச்செய்தி - காலை, மாலை இருவேளை என்பதால் செய்யப்பட்டன எனப் பன்மையில் முடித்தாரோ? வழிபாடு என்ற ஒருமைச் சொல்லுக்கேற்ப செய்யப்பட்டது என்றே முடித்தல் வேண்டும்.

தொலைக்காட்சிகளில் படிப்பவர் பலரும் - செய்தி ஆசிரியர்கள் பலரும் ஒருமை பன்மை பற்றிக் கவலைப்படுவதே இல்லை. ஆங்கிலத்தில் இப்படிச் செய்வார்களா? இப்படி பிழைகளை விரிக்கின் பெருகும்.

சமற்கிருதம், ஆங்கிலம் போன்ற வேற்று மொழிச்சொற்கள் கலக்காமல் தமிழ்ச்சொற்களை மட்டுமே நம் எழுத்திலும் பேச்சிலும் கைக்கொள்ளுதலே தனித்தமிழ்.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களிலும் வடமொழிச்சொற்கள் மிகச்சிற்றளவில் கலந்துள்ளன.கம்பராமாயணம்,பெரியபுராணம், வில்லிபாரதம் போன்றவற்றிலும் வடசொற்கலப்பு உண்டு. ஆயினும் அவற்றை தமிழ் ஒலிப்படுத்தியே வழங்கியுள்ளனர்.

இக்கால நம் தமிழில் வடமொழி,ஆங்கிலம்,அரபி,உருது, இந்தி, பாரசீகம், தெலுங்கு ,கன்னடம் என இன்னும் பலமொழிகள் கலந்து  குப்பையாகத் தமிழ் ஆகிவருகிறது. இந்நாளில் ஆங்கிலக்கலப்பு மிகுந்து தமிங்கிலம் பேசுகிறார்கள் நம் தமிழர்கள். தமிழர் தமிழே பேச வேண்டும். அதுவும் பிழையின்றி பேசவும் எழுதவும் வேண்டும்.

செப்டெம்பர், 2016.