சிறப்புப்பக்கங்கள்

புலிவால்

சரவணன் சந்திரன்

சின்ன வயதில் இருந்தே எனக்குக் கனவுகளை கூர்ந்து பார்க்கிற பழக்கமுண்டு. கனவுகளையும் சகுனங்களையும் சடங்காய்ப் பார்க்கிற கூட்டத்தோடுதான் வளர்ந்தேன். ஊரில் கனா கண்டதைப் பற்றிக் கூடிப் பேசிக் கொள்வார்கள்.

வளத்தம்மாவின் தங்கை அதற்கு முந்தைய வாரம்தான் செத்திருந்தாள். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ‘அவ கனவில வந்து வா வான்னு கூப்டா‘ என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். கூப்பிட்ட மாதிரி தங்கை செத்த அடுத்த வாரமே வளத்தம்மாவுக்கும் நல்ல சாவு. பூப்பல்லக்குக் கட்டித் தூக்கிப் போட்டார்கள். லாட்டரியில் பரிசு விழுவதைப் போலக் கனவு கண்டார் சித்தப்பா ஒருத்தர். அதே மாதிரி அவர் வாழ்நாளிலேயே முதன் முறையாக அவருக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு விழுந்தது.

கனவில் கண்ட பரிசை அவர் ஊர் முழுக்க அறிவித்தார். அந்தத் தொகையைவிடத் தன் கனவு பலித்ததே அவருக்குக் கூடுதல் சந்தோஷம். இப்படிக் கனவுகளை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளும் கூட்டத்தின் நடுவில் இருந்து முளைத்து வந்தவன். சும்மா இருப்பேனா?

எனக்குக் கனவுகளைக் கூர்ந்து பார்க்கும் பழக்கம் நாள்பட, நாள்படக் கூராகியது. கவனித்துப் பார்த்ததில், வானில் ஒரு பறவையைப் போல எல்லோரும் பார்க்கும் போதே எழும்பிப் பறக்கிற கனவு சின்ன வயதில் இருந்தே அடிக்கடி வருகிறது. அந்தக் கனவுக்கு இத்தனை கால இடைவெளியில் வயதாவதே இல்லை.

நுணுக்கமாகக் கவனித்தேன். பறக்கிறேன், கீழே பார்க்கிறேன். மனிதர்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். ஆனால் அதில் நான் தெரியவில்லை. அப்புறம்தான் யோசித்துப் பார்த்ததில் நானாகவே இருந்திருக்கிறேன் அதில்.

அதைத் தவிர எழுத்தாளன் என்பவனுக்குக் கனவு என்பது சுரங்கத்தினுள் நுழைவதைப் போல. கொஞ்சம் அதிர்ஷ்டமும் கூர்கவனமும் இருந்தால், அது வைரத்தைக் கூட மேலே கொண்டு வந்து விடும். எனக்குமே அது ஒருதடவை அப்படி ஒரு காட்சியைக் காட்டியும் தந்தது.

பழநி தோட்டத்தில் வெட்ட வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த போது, நேரடியாக வந்திறங்கியது அந்தக் கனவுத் தொடர் நிகழ்வு. அதில் நான் இருக்கிறேன். ஆனால் நான் தெரியவில்லை. என்னையும் ஒரு பெண்ணையும் புலி துரத்துகிறது.

அந்த அச்சத்தை உள்ளுக்குள் உணர்கிறேன். இருவரும் தப்பி ஓடுகிறோம். அவள் என் உடலோடு ஒட்டுவதைக்கூட உணர்கிறேன். விடாமல் துரத்துகிறது புலி. இது ஒரு நீள் கனவு. கடைசியில் அந்தப் பெண்ணின் முகமே புலியாகி முடிந்தது. அதைக் கூர்ந்து பார்த்தேன். சட்டென எழுந்து அமர்ந்தேன். அதிகாலை மூன்று மணி.

அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொன்ன பசுபதி அத்தை உடனடியாக நினைவிற்கு வந்தாள். நான் என் கனவை நுணுக்கி நுணுக்கிப் பின் தொடர்ந்து போனேன். புலியின் வாலைப் பிடித்தேன்.

அது இழுத்துக் கொண்டு போய் நிறுத்திய இடம் அத்தாரோ நாவல். என்னளவில் அது வைரம்தான்!

அக்டோபர், 2022