சைபோர்க் என்று கேள்விப்பட்டிருப்போம். அறிவியல் புனைகதைகளில், திரைப்படங்களில் வரும். மனித உடலில் மின்னணு எந்திரபாகங்கள் பொருத்தப்பட்டு அதிதீவிர செயல்களைச் செய்வார்கள். இன்று உண்மையில் கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே சைபோர்க்குகள் தான். உடலுடன் பிணைக்கப்பட்டால் என்ன கையில் வைத்திருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். மனிதன் இயற்கையில் செய்யமுடியாத பல வேலைகளை ஸ்மார்போன் கையிலிருக்கும்போது செய்யமுடிகிறது அல்லவா?
வசதி என்றவுடன் கூடவே ஆபத்தும் வந்துவிடுகிறது. அதுதான் சைபர் கிரைம். பணமோசடி செய்யும் இணையவழிக் குற்றங்கள். வளர்ச்சியை முடக்கிப்போடும் இணையவழி ஆயுதங்கள்.
இன்று தகவல்தொடர்புக் கருவிகள் மூலம் ஒரு முறையேனும் ஏமாற்றப்படாத அல்லது ஏமாற்றும் முயற்சியை ஒரு முறையேனும் சந்தித்திராத ஆட்கள் யாரையும் பார்க்க முடியாது. அப்படி ஒருவர் இருந்தால் அவர் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்பவர் என்று சொல்லிவிடலாம்.
சென்னையில் ஒரு சைபர் குற்றக் காவல்நிலையத்தில் அமர்ந்திருந்தோம். வேறெதற்கு? பணம் இழந்த ஒருவரை அழைத்துக்கொண்டு புகார் அளிக்கத்தான். அருகில் த்லையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவரிடம் கேட்டபோது முதலீட்டு மோசடியில் பணம் இழந்ததாகச் சொன்னார். நானொரு சீனியர் சிட்டிசன் என்று சீறிக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி ஓடிபி போசடியில் பணம் இழந்திருந்தார். காவல்நிலையத்தின் ஓர் அறையில் குற்றவாளி ஒருவரைத் தூக்க லொகேஷன் ட்ராக் செய்து ஒரு காவலர் குழு பரப்பாகப் பேசிக் கொண்டிருந்தது. ஒரு குற்றம் சாட்டப்பட்ட இளைஞன், தன் அம்மாவைக் கூட்டி வந்திருந்தான். சாதாரண உடையில் இருந்த ஆய்வாளரிடம் அந்த அம்மா ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தார். உங்கள் பணம் எங்கெங்கே போய் இருக்கிறது பாருங்கள் என்று கணினியில் ஒரு கோப்பைக் காட்டி புகார்தாரருக்கு இன்னொரு அலுவலர் விவரித்துக்கொண்டிருந்தார்.
‘நாம் நினைத்திராத அளவில் இணையவழிக் குற்றங்கள் பெருகி இருக்கின்றன. புகார்களாகப் பதிவாகின்றவை மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்,’என தனிப்பட்ட முறையில் கூறினார் காவல் அதிகாரி ஒருவர்.
கடந்த ஆண்டு(2024) ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரைக்குமான நான்கு மாதங்களில் 7,40,000 புகார்கள் தேசிய சைபர்கிரைம் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டன. 1,750 கோடி ரூபாய் மக்களுக்கு இதனால் இழப்பு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஏழாயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. மூன்றாண்டுகளுக்கு முந்தைய இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 113 சதவீதம் அதிகம் என்று எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் வந்த ஒரு அறிக்கை கூறுகிறது. பெரும்பாலான புகார்கள் பொருளாதார மோசடி தொடர்பானவை.
2024- இன் முதல் நான்கு மாதங்களில் 4599 டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் மோசடிகள் நடந்தன. இதில் சுமார் 120 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. போனில் நம்பரைப் போட்டு டயல் செயதவுடன் கேட்கும் உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கை வாசகம் சும்மா இல்லை. அதிகரிக்கும் குற்றங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குத்தான்.
உங்கள் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. ஆகவே உங்கள் இணைப்புத் துண்டிக்கப்படலாம். இந்த எண்ணுக்கு அழையுங்கள் என எஸ்.எம்.எஸ்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. உங்கள் போன் மூலம் குற்றச்செயல் நடந்துள்ளது. எண் ஒன்பதை அழுத்துங்கள் என தானியங்கி குரல் அழைப்பு தேசிய டேட்டா செண்டர் எனக்க்காட்டும் பெயரில் இருந்து வந்துகொண்டே இருக்கிறது.
‘கார்டு மேலே இருக்கும் நம்பர் சொல்லு’ என சதா வந்துகொண்டிருக்கும் வட இந்திய அழைப்புகள் இப்போது குறைந்துவிட்டன. ஆனால் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மூலம் வரும் அடையாளம் தெரியாத லிங்குகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தொட்டால் தரவிறங்கும் செயலிகள் உங்கள் கணிப்பொறி/ போன்களை தங்கள் கைவசப்படுத்திவிடும் என்கிறார்கள்.
பாஸ்வேர்டுகளை ஸ்ட்ராங்காகப் போடுங்கள் என்பவர்களைப் பார்த்தால் எல்லாவற்றையும் மறந்துவிடும் எம்மைப் போன்றவர்களுக்குச் சிரிப்பு மட்டும்தான் வருகிறது. மின்னஞ்சல்கள், வங்கிப் பரிவர்த்தனைகளில் இரட்டை அடுக்கு ஓடிபி கண்காணிப்பு அறிமுகப்படுத்தப் பட்டிராவிட்டால் நம்மில் பலர் பெரும் இழப்புகளைச் சந்தித்திருப்போம்.
நண்பர் ஒருவர் மிக எச்சரிக்கையானவர். உங்கள் கேஒய்சி அப்டேட் செய்யவேண்டும், இல்லாவிட்டால் கணக்கை முடக்கிவிடுவோம் என வங்கியிலிருந்து வந்த குறுந்தகவல்களை புன்னகையுடன் புறந்தள்ளிக் கொண்டிருந்தார். ஒருநாள் நிஜமாகவே டெபிட்கார்டு வேலை செய்யவில்லை. வங்கிக்கு ஓடினால், அந்த குறுந்தகவல்கள் உண்மையானவை என்றுட் தெரிந்தது!
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாகி இருக்கும் இந்நிலையில் இணையக் குற்றங்களும் பெருகி இருக்கின்றன. இந்த இதழில் அவற்றைப் பற்றி ஓரளவு முழுமையாகப் பேச முயற்சி செய்துள்ளோம். பேசவேண்டிய தேவையும் அவசியமாகித் தான் இருக்கிறது!