சிறப்புப்பக்கங்கள்

பெளத்தம்: படைப்புக் கடவுள் இல்லை!

பேரா. க. ஜெயபாலன்

பெளத்தம் என்ற சமயத்தில் படைப்புக் கடவுள் (Theory of creator God) என்ற கோட்பாடு இல்லை. உலகம் பரிணாமத்தால் உருவாகியது என்கிறது பௌத்தம். படைப்புக் கடவுள் என்ற கோட்பாடு ஊகமானது என்றும் அது பல்வேறு தவறான நம்பிக்கைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அழைத்துச் செல்கிறது என்றும் அது சரியான தருக்க அணுகுமுறைக்கு வழியாக அமையவில்லை என்றும் பல்வேறு காரணங்களால் இக்கோட்பாட்டை பௌத்தம் நிராகரிக்கிறது.

நிரீச்சுரவாதம் என்று கூட பௌத்த, ஜைன சமயங்களைப் பண்டைய காலத்தில் வழங்கினர்.ஈஸ்வரவாதம் என்பது இறைக் கோட்பாடு, கடவுள் கோட்பாடு என்றும் அதை நிராகரிக்கிற சமயங்கள் இவை நிரீச்சுரவாதங்கள் என்றும் முன்னோர்கள் கருதினர்.

மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி உள்ளிட்ட காப்பிய ஏடுகள் தமிழில் மிக விரிவாக பௌத்த, ஜைன கருத்துக்களைப் பேசுகின்ற நூல்களாகும்.

புத்தரைப் பற்றிய கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் குண்டலகேசி பின்வருமாறு கூறுகிறது:

‘முன்றான் பெருமைக்க ணின்றான்முடி

வெய்து காறு

நன்றே நினைந்தான் குணமேமொழிந்

தான்ற னக்கென்

றொன்றானு முள்ளான் பிறர்க்கேயுறு

திக்கு ழந்தான்

அன்றே யிறைவ னவன்றாள்சர

ணாங்க ளன்றே'.

இதன் பொருள்: முன் தான் பெருமைக்கண் நின்றான்& - உலகின்கண் பிறர் யாரும் மெய்யுணர்ந்து வீடுபெற்று நெறியின் கண் நிற்றற்கு முன்பே, தான் அம்மெய்யுணர்வினை யெய்தித் துறவின்கண் நிலைபெற்று நின்றானாகி; முடிவு எய்துகாறும் - தான் பரிநிருவாணம் என்னும் அவ் வீடுபேற்றினை எய்துமளவும்: நன்றே நினைந்தான் - பிறவுயிர்கட்கெல்லாம் நன்மையுண்டாகும் நெறியினையே ஆராய்ந்துணர்ந்தான் ; அன்றே அந்நாளே - குணமே மொழிந்தான் - அங்ஙனம் தான் ஆராய்ந்துணர்ந்த நல்லறங்களையே மக்கட்குச் செவியறிவுறுத்தினான் : தனக்கு என்று ஒன்றானும் உள்ளான் - தான் தனக்கென்று யாதொரு நன்மையையும் வேண்டுகிலனாய் ; பிறர்க்கே உறுதிக்கு உழந்தான் - பிறருடைய நன்மையின் பொருட்டே முயன்றனன் ; அவன் இறைவன் - அத்தகைய சான்றோனாகிய புத்த பெருமானே எமக்குக் கடவுள் ஆவன் : நாங்கள் சரண் - ஆதலால் அவ்விறைவன் திருவடிகளுக்கே அடைக்கலமாகி வணங்குவோம் என்பதாம். (குண்டலகேசி, கடவுள் வாழ்த்துப் பாடலும் பொருளும்)

இதே வகையில் மணிமேகலையும்

‘மாரனை வெல்லும் வீர நின்அடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி

பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி

எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி

கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி

தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்அடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்அடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்அடி

வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு

அடங்காது‘

(மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை 6172)

என்று புத்த பகவனின் மேன்மைகளை மிக அழகாக விளக்குகிறது.

பூமியில் பிறந்து உயர் பண்புகளால் சிறந்து தன்னுயிர் பெருக்கம் மட்டும் கருதாமல் அனைத்து உயிர்களின் நலனையும் நாடி உயர்ந்த நிலை பெற்றவர்கள் தெய்வங்கள் ஆகின்றனர். அவர்களே இறைவனாக மாறுகின்றனர் என்பது பௌத்தத்தின் பார்வை. என்பதை இந்தப் பாடல்கள் காட்டுகின்றன.

தமிழ் மற்றும் திராவிட மரபுகளிலும் பண்டைய இனக்குழு சமுதாயங்களிலும் கூட இவ்வாறு தங்களோடு வாழ்ந்து மறைந்து, தங்களது மாண்பான பண்புகளினால் மேன்மை பெற்றவர்களே தெய்வங்களாகப் பண்டைய காலத்தில் வழங்கினர். இறந்தபின் நடுகின்ற கல் அந்த நடு கல் என்பதே பின்னர் தெய்வமாக மாறியது; பின் பெரும் கோயில்களாகுருவானது என்பதை ஆசிய நாட்டின் மற்றும் ஐரோப்பிய நாட்டின் பல்வேறு பண்பாடுகளும் விரிவாக காட்டுகின்றன. இன்றும் குலதெய்வங்களாக, பல்வேறு அம்மன்களாக, காக்கும் கடவுள்களாக மக்களுடன் இருந்த மனிதர்களே தெய்வமாய், கடவுளாய்க் கருதப்பட்டு வணங்கப்படுகின்றனர்.

கண்ணகி தொட்டு பல்வேறு வழிபாட்டு முறைகள் இவ்வாறு உள்ளன. இதைவிட மேலான எடுத்துக் காட்டு புத்த பகவன் வழிபாடு ஆகும். உலகம் முழுவதும் புத்த பகவன் கடவுள் நிலையில் வைத்து வணங்கப்படுகிறார். அதனால் தான் பௌத்தத்தை மீட்டு உருவாக்கம் செய்த ஐரோப்பிய பேரறிஞரில் ஒருவரான, ரைஸ் டேவிட்ஸ்‘புத்தர் போன்று கடவுளை மறுத்தவரும்இல்லை. புத்தரைப் போன்று கடவுளாகக் கொண்டாடப்பட்டவரும் இல்லை‘ என்று கூறுகிறார்.

ஏராளமான புனைந்துரைகள் கடவுளைப் பற்றி கூறப்படுகின்றன. இதைப் பற்றி புத்தர் ஒரு முறை ‘தான் இதுவரை கண்டிராத ஒரு பெண்ணை ஒரு இளைஞன் அவள் அப்படிப்பட்டவள் இப்படிப்பட்டவள் என்று வர்ணிப்பதைப் போன்றதாகும்' என்று கூறியிருக்கிறார்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்' என்ற திருவள்ளுவர் கூட மானுட சமூகத்திலிருந்து மகத்தான தெய்வக் கோட்பாடுகள் மேலிருந்து செல்கின்றன என்பதை வலியுறுத்துகின்றார். இந்த கடவுள் கோட்பாடு அப்படியே தமிழ் மரபிலும் திராவிட மரபிலும் அரசியல் கோட்பாடாகவும் ஆகி விடுகிறது. பெரும்பான்மை மக்களிடமிருந்து அதிகாரம் உருவாகி அது மக்களை ஆளும் அரசுகளாக, அதிகாரங்களாக மாறுகின்றன என்று தமிழ் மரபும் பௌத்த மரபும் நம்புகின்றன.

இதற்கு மாறான மரபுகள் அதிகாரம் என்பது கடவுளிடமிருந்து வருவதாகக் கூறுகின்றன. இவை யாவும் இன்னும் விரிவாக ஆராயத்தக்கவை.

ஜூன், 2023