நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்தை நான் 78-ஆம் ஆண்டுமுதலே அறிவேன். அவருடைய மேடைப் பேச்சுகளை தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பு ஒரு கைத்தறிக் கண்காட்சியில் வழக்காடுமன்றம். வரவர சமுதாயம் சீரழிந்து வருகிறதா சீரடைந்து வருகிறதா என்ற தலைப்பு. நான் ஒரு அணியில் பேசினேன்.
சம்பத் தான் அதற்கு நடுவர். நாங்கள் சேர்ந்தேதான் நிகழ்ச்சிக்குச் சென்றோம். போகும் வழியில் நான் தான் வழக்காடுமன்றத்துக்கான தலைப்பைச் சொன்னேன். என் கையில் கவிஞர் வைரமுத்துவின் கவிராஜன் கதை இருந்தது. அதைப் புரட்டிப் பார்த்தவர், அதிலிருந்து பல வரிகளைச் சுட்டிக்காட்டி மிக அருமையானதொரு உரையை அன்று நிகழ்த்தினார். தயாரிப்புகள் இன்றி நிகழ்த்தப் பட்ட உரை அது. ஆனாலும் அது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது சம்பத்தின் பேச்சுத் திறனைக் காட்டியது.
சம்பத் திமுக மேடைகளில் ஆரம்ப கட்டத்தில் சிறப்புப்பேச்சாளர் வருவதற்குத் தாமதம் ஆகும்போது பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டவர். போகப்போக சிறப்புப் பேச்சாளரை விடவும் உள்ளூர்ப் பேச்சாள ரான சம்பத் சிறப்பாகப் பேசி புகழ்பெற்றார். எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட சிறப்பு என்னவெனில் நிறைய இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். தேவாலயங்களிலும் கோயில்களிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவர்.
இங்கெல்லாம் சம்பத் குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவார். இப்படிப் பேசப் பேச சம்பத்துக்கு என்று கன்னியாகுமரியில் தனி ரசிகர் வட்டம் உருவானது. அவர் தமிழ்நாடு முழுக்க பட்டிதொட்டியெங்கும் சென்று பேசக்கூடிய பெரும் பேச்சாளராக உருவெடுத்தார். அவர் தன் சமகாலப் பேச்சாளர்கள் பலர் கம்பனுடன் பாரதியுடனும் தேங்கி நின்றபோது, நவீன கால படைப்புகள், கவிதைகள், ஆங்கிலக் கூற்றுகள் என்று சமகாலத்தில் நிகழ்வதையும் கூர்ந்து கவனிப்பவர். புதிய சொற்களை, கருத்துக்களைப் பயன்படுத்திப் பேசுவார். வீட்டில் மலைபோல் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். வலம்புரி ஜான், காளிமுத்து, குமரிஅனந்தன் போன்ற சிறந்த பேச்சாளர்கள் அரசியல் மேடைகளில் நன்றாகப் பேசக்கூடியவர்கள். சம்பத் எந்த மேடையில் பேசினாலும் அதில் இலக்கியமே தூக்கி நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.
திராவிட இயக்க பேச்சாளர்கள் பொதுவாகப் புராணத் தலைப்புகளில் பட்டிமன்றம் பேசமாட்டார்கள். சம்பத் பேசுவார். இராமாயணத்தில் கும்பகர்ணனா, வீபீடணனா என்றெல்லாம் தலைப்பு வரும்போது அவர் தயங்காமல் பேசுவார். அவரைப் பொருத்தவரையில் அங்கு இலக்கியம்தான் பேசுவார். ஆழமாகப் பேசுவார்.
இங்கே மயிலாடி ஆராட்டுவிழா இலக்கியப் பேரவையில் எல்லா பேச்சாளர்களையும் அழைத்துப் பேச வைப்பார்கள். ஓர் ஆண்டு பேசியவரை மறு ஆண்டு பேசவைக்க மாட்டார்கள். ஆனால் சம்பத்தைத்தான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அழைத்தார்கள். அது அவருடைய மேடை ஆளுமைக்குக் கிடைத்த அங்கீகாரம்.
சமீபத்தில் வேலூரில் ஒரு பள்ளியில் பேசுவதற்கு அவரது தேதி வாங்கிக் கொடுத்தேன். வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்கிற தன்னம்பிக்கைத் தலைப்பு கொடுத்தார். அவர் பேசிவிட்டு வந்தபின்னர் அந்த பள்ளியிலிருந்து அழைத்துச் சொன்னார்கள்: “பத்தாண்டுகளாக பலரையும் அழைத்துப் பேச வைத்துள்ளோம்.இந்த ஆண்டுபோல எப்போதும் அமையவில்லை”.
சம்பத் அரசியல் சார்புகளைக் கடந்து கல்லூரிகள், பள்ளிகள், பட்டிமன்றங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள் என்று தினந்தோறும் பேசிக்கொண்டேயிருக்கிறார். ஒரு பெரும் பேச்சாளராக அவர் வளர்ந்திருக்கிறார். இன்னும் உயரங்களைத் தொடுவார்.
(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)
ஆகஸ்ட், 2013.