சிறப்புப்பக்கங்கள்

போராடக் கற்றுக்கொடுத்தன எமது பள்ளிகள்!

இரா.செல்வம். ஐ.ஏ.எஸ்

எத்தனை முறை நினைத்தாலும் என் இளமையையும் இனிமையையும் கண்முன்னே நிறுத்துகின்றன நான் பயின்ற பள்ளிகள். ஆறாம் வகுப்பு வரை அய்யப்ப நாயக்கன் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் பின்பு பனிரெண்டாம் வகுப்பு வரை அரசின் உதவி பெற்ற பள்ளிகளிலும் தமிழ் வழியில் படித்தேன்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அப்பொழுது அதிகம் கிடையாது. மண்சுவரும் மண் தரையும் கூரை கொட்டகையும் எம் பள்ளியின் அடையாளங்கள். பகலில் சூரிய ஒளியும் மழைக் காலங்களில் தூறலும் பள்ளியின் உள்ளே விழும். மஞ்சள் பையில் சிலேட்டும் புத்தகங்களும் சில நாட்களில் அலுமினியப் பாத்திரமும் இருக்கும். மஞ்சள் பை இல்லாத வீடுகளில், யூரியா சாக்கில் தைத்த பைகளும் எங்கள் முதுகில் ஊஞ்சலாடும்.

அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பூவரசு இலையில் வாங்கி தின்ற கோதுமை சோறும் அலுமினிய பாத்திரத்தில் வாங்கி குடித்த அரிசிக் கஞ்சியும் எங்கள் வறுமையை போக்கி வாழ்க்கையையும் வளமாக்கியது. மண்பானையில் குடிக்கத் தண்ணீர் இருக்கும். தும்பைச் செடிகளைச் சுற்றி சிறுநீர் கழித்தது நினைவில் உள்ளது. ஆனால் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். கழிப்பறை வசதிகள் இல்லாத காலம்.

இருப்பினும் எம் பள்ளியின் நினைவுகள் இனிமையானவை, உணர்வுபூர்வமானவை உயிரோட்டமானவை.

பள்ளி திறப்பது இரண்டு வகையில் இனிமையானது. புதிய கால் சட்டையும் மேல் சட்டையும் கிடைக்கும். அன்று தான் எங்களுக்கு தீபாவளியும் பொங்கலும். அடுத்து புத்தகத்திற்கு அப்பாவுடன் சேர்ந்து அட்டை போடுவது பிடிக்கும். மேலும் சில நாட்களுக்கு விவசாய வேலைகளில் இருந்து விடுதலையும் கிடைக்கும்.

கனவுகளும் கவலைகளும் இல்லாத வாழ்க்கை பருவம். மாடுகளுடன் விளையாடியும் மழையில் நனைந்தும் வெயிலில் உலர்ந்தும் குளம் குட்டைகளில் குதித்தும் மரம் ஏறித் திரிந்தும் கோட்டிபுள்ளும் கோலிக்குண்டும் விளையாடியும் நண்பர்களுடன் சண்டையிட்டும் சமாதானப்படுத்தியும் வாழ்ந்த காலம். இலக்குகள் இல்லாத இளமைக் காலங்கள்.

எம் கிராமத்தின் விடிவெள்ளிகள் ஆசிரியர்கள். எங்களைப் படிக்க வைப்பதற்காகத் துரத்தி பிடித்தார் டேவிட் ஆசிரியர். அடுத்த நாள் பெற்றோர் ஆசிரியர் கூட்டம். நீங்கள் உங்கள் பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றார் டேவிட் ஆசிரியர். ஆமாம் ‘இவனோ படிச்சு நாளைக்கு கலெக்டராக போறானோ' என்றார் கூழ் பானை. ஆடு யார் மேய்ப்பார்? என்றார் செல்வராசு. ‘இவர் சம்பளம் வாங்குவதற்கு என் பிள்ளையை பள்ளிக்கூடம் அனுப்பணுமா?' என்றார் சாந்தப்பா. அனைத்தையும் கேட்டுக் கொண்ட டேவிட் ஆசிரியர் கூறினார், ‘பசங்கள படிக்க வைத்தால்தான் இந்த கிராமத்தை காப்பாத்த முடியும்'. கல்வியின் பயனறியாத காலகட்டம் அது.

இருப்பினும் இனிமையாக தமிழை ஊட்டினார், பிச்சை முத்து ஆசிரியர். கடன் வாங்கி கணக்குப் போடுவது எப்படி என்று கற்றுத் தந்தார் சுப்பர வேல் ஆசிரியர். ஆங்கிலத்தை திணிக்க முயன்றார், நாராயணசாமி ஆசிரியர். சிலர் பிரம்பை பயன்படுத்தினர். சிலர் முட்டி இடச்செய்தனர். சிலர் பலமுறை எழுதிவரச் செய்தனர். அனைத்தையும் நான் செய்தேன்.

ஏழாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் கிறித்துவ பள்ளிகளில் படித்தேன். வரதராஜன் பேட்டை டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். வயிறார உணவு வழங்கப்பட்டது வயிறு புடைக்க அல்ல. விளையாட்டுப் போட்டிகளிலும் நாடகப் போட்டிகளிலும் பங்கேற்க செய்தார்கள். என் தமிழ்க் காதலை வளர்த்த பழனிவேல் ஐயாவையும் ஆங்கில ஆசிரியர் ஜெகநாதன் ஐயாவையும் மறக்க முடியவில்லை. ரோவர் உயர்நிலைப் பள்ளி பெரம்பலூரில் ஆங்கிலத்தையும் கணிதத்தையும் அழகாக கற்பித்தார் ஆசிரியர் பிளவேந்திரன்.

என் பதின் பருவத்தில் வழிகாட்டியாக இருந்த அறிவொளி ஆசிரியரும் இராசவேல் ஆசிரியரும் இலட்சுமணன் ஆசிரியரும் இன்றும் நினைவில் உள்ளார்கள். பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி திருச்சியில் பதினோறாம் வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் வாங்குவதற்கு வரிசையில்  நின்றிருந்தேன். எனது தோளினை ஒரு கை அழுத்தியது. திரும்பிப் பார்த்தேன். யாருடா நீ? கையின் அழுத்தத்தை விட வார்த்தையின் அழுத்தம் அதிகமாக இருந்தது. ‘சார் டாக்டருக்கு படிக்க விண்ணப்பம் வாங்க வந்துள்ளேன்' என்றேன். வெளியே வாடா என்று அழைத்து

சென்றார். ‘பள்ளிக்கு இப்படியெல்லாம் வரக்கூடாது. பேண்ட் சட்டை போட்டு கிட்டு வரணும். கைலி கட்டிக்கிட்டு வரக்கூடாது,' எனச்சொல்லி 50 ரூபாய் கொடுத்து வேட்டி வாங்கி கட்டிக்கொண்டு வந்து விண்ணப்பம் வாங்கிச் செல்ல கூறினார் இராசவேல் ஆசிரியர். பண்பாட்டினையும் போதித்தார் அவர். என்னை மருத்துவராக்க வேண்டுமென்று பெற்றோரும் என் கிராமத்து மக்களும் கனவு கண்டது உண்டு. இருப்பினும் கனவு மெய்ப்பட வில்லை.

இப்படி எல்லாம் பள்ளிகள் இருக்குமா என்று இந்தத் தலைமுறை வியக்கலாம். நாங்கள் கற்றது ஏட்டு சுரைக்காய் அல்ல. வாழ்க்கைப் போராட்டம்.

வாழ்க்கையில் எங்களுக்கு போராட கற்றுக் கொடுத்தது எம்பள்ளிகள். உழைப்பதற்கு கற்றுக் கொடுத்தார்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களும். பாடங்களில் தோல்வியுற்ற போதும் தட்டிக் கொடுத்துத்  தூக்கி விட்டவர்கள்.  ஒவ்வொரு மாணவனின் திறமையும் கண்டறிய அயராது உழைத்தவர்கள். எம் ஆசிரியர்கள் பாடப்படாத தேனீக்கள். அடிப்படை வசதிகள் இல்லையெனினும் எம் வாழ்க்கையின் அடிப்படையை வளமாக அமைத்தவை எம் பள்ளிகள்.

இரா.செல்வம், ஐ.ஏ.எஸ், நிர்வாக இயக்குநர், தோல் ஏற்றுமதிக்கழகம்

நவம்பர், 2022