Editorial
Editorial
சிறப்புப்பக்கங்கள்

மயக்கம் என்ன: நவீன கற்புக்கரசி யாமினி

அராத்து

யாமினியைப் பிடிக்காத தமிழ் ஆண்களே இல்லை எனச் சொல்லி விடலாம். தமிழக ஆண்களின் கனவு மனைவி கற்பனை மனைவி யாமினிதான். கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன் என்பதன் நவீன வடிவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் யாமினி. வெளியில் ஆங்கிலம் பேச வேண்டும் , நவீன உடைகள் உடுத்த வேண்டும், அழகாக வடிவாக இருக்க வேண்டும் . ஆனால் உள்ளுக்குள்ளே பழைய உத்தம பத்தினியாக வாழ வேண்டும். இதுதான் நம் ஆட்களின் எதிர்பார்ப்பு. அதைக் கனக் கச்சிதமாகத் திரையில் செய்து காண்பித்து டேமோ கொடுக்கிறார் யாமினி.

யாமினிக்கென்று தனிப்பட்ட முறையில் என்ன கேரக்டர்? என்ன ஆளுமை?

பிடிக்காத ஒரு காதலில் இருந்து வெளியேறும் அளவுக்கு துணிச்சலான பெண்ணான யாமினியால் டார்ச்சரான திருமண உறவில் இருந்து வெளியேற முடியவில்லை. ஏனென்றால் தமிழ் கலாச்சாரத்தில் காதல் உறவை விட திருமண உறவுக்கே மதிப்பு அதிகம். இன்னும் கேட்டால் திருமண உறவில் முடிந்தால்தான் அந்த காதலுக்கு மரியாதை. இல்லையெனில் அந்தக் காதல் சமூகத்தில் ஒரு டாபூ!

யாமினி குடிகார, சைக்கோவாக மாறி விட்ட கணவனிடம் காட்டும் அதிகபட்ச எதிர்ப்பு அவனிடம் பேசாமல் இருப்பது, அவனுடன் உடலுறவைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மட்டுமே!

மற்றபடி, கணவன் வாழ்வு, அவன் முன்னேற்றம் என அவன் வாழ்வையே தன் வாழ்வாக்கிக்கொண்டு, கணவனுக்காகத் தன் ஒட்டு மொத்த வாழ்வையும் அர்ப்பணித்தாள்.

தமிழ் ஆண்களின் அடி மன ஆழத்தில் உழன்று

கொண்டிருக்கும் நளாயனி, கண்ணகிகளின் ஏக்கத்தை மீட்டுருவாக்கம் செய்து, அதில் ரம்பா , மேனகை போன்ற கிளுகிளுப்பும் சேர்த்து, நவீன கவர்ச்சிக் கற்புக்கரசியாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதில் வெற்றி பெறுகிறார் யாமினி.

மார்ச், 2023