சிறப்புப்பக்கங்கள்

மீனும் மிதிவண்டியும்

அந்திமழை இளங்கோவன்

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த எழுத்தாளரும் சினிமாக்காரருமான  ஐரினா டன் (Irina Dunn) கூறியிருக்கும் வாசகம் ஒன்று என்னுள் பல்வேறு சிந்தனை-களை உருவாக்கியது.

''A Women without a man is like a fish without a bicycle" என்பது தான் அது. ஆண் இல்லாமல் பெண் வாழ்வது, மிதிவண்டி இல்லாமல் மீன் வாழ்வது போன்றது!

1967இல் தனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நடத்தி வந்தார் ரோகிண்டன். பல்வேறு வழிகளில் விரிவுப்படுத்தப்பட்ட தொழிலில் ரோகிண்டன் மகனும் சேர்ந்து கொண்டார். பிரபலமாக முன்னிலையில் தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் போது 1996 இல் ரோகிண்டன் அகால மரணமடைகிறார். அப்பாவிற்கு பின் மகன் குருஷ் தலைமைப் பதவிக்கு வருகிறார்.

1997இல் குருஷ்  சாலை விபத்து ஒன்றில் இறந்துபோக, நிறுவனம் நம்பிக்கையை தொலைத்துவிட்டு நின்றது.

அடுத்தடுத்து கணவரையும், மகனையும் இழந்த பின், வெறுமையில் நின்றார் அனு அகா. ஆனால் கடமை அவரை சோகத்தை தள்ளிவைத்துவிட்டு தொழிலில் ஈடுபட சொன்னது.

சொந்த ஆசாபாசங்களைத் தள்ளி வைத்துவிட்டு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நிறுவனத்தின் கனவை ஊழியர்களின் கனவாக மாற்றினார். கணவர் மற்றும் மகன் செய்யாத சாதனைகளைச் செய்து,  மிகுயரத்திற்கு நிறுவனத்தை அழைத்துச் சென்றார் அனு அகா. நிறுவனம் தெர்மாக்ஸ் (Thermax)

சாட்சி:2

அப்பாவின் அறிவுரைப்படி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ப்ரூவர் படித்த கிரணுக்கு, இந்தியாவிற்கு திரும்பிய போது நிராகரிப்பும் நிச்சயமற்ற தன்மையும் தான் காத்திருந்தது. Brew மாஸ்டராக ஆசைப்பட்டு படித்த கிரண் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு breweries ஆக ஏறி இறங்கினார். எல்லோருமே சொன்ன பதில், நோ. நிராகரிப்புக்கான காரணம், “பெண்ணான உன்னால் உடன் வேலை செய்யும் தடித்தடியான ஆண்களைக் கட்டுப்படுத்த முடியாது,' என்பது தான். அப்போது இந்தியாவில் brew மாஸ்டராக ஒரு பெண் கூட கிடையாது. தொடர் நிராகரிப்பிற்கு பின் கிரண் மசும்தார் (Kiran Mazumdar Shaw) ஆரம்பித்த Biocon நிறுவனத்தின் இப்போதைய சந்தை மதிப்பு 26,179 கோடி ரூபாய்.

இது போன்ற எண்ணற்ற வெற்றிப் பெண்களின் கதைகள் நிஜ உலகில் காணக்கிடைக்கும் போது சினிமாவில் வரும் பெண் பாத்திரங்கள் பல ஆணாதிக்க மனோபாவத்தின் நீட்சியாக இருக்கின்றன.

‘முதல்ல பொம்பள பொம்பளையா இருக்கணும்,' என்று கிருஷ்ணன் கதாபாத்திரம் பேசும் போது தியேட்டர்களில் விசிலும், கைத்தட்டலும் பிய்த்துக் கொண்டு போனது.

சென்னையில் தேவி தொழில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாந்திதேவி இந்தியாவின் நம்பர் ஒன் இளம் தொழில் அதிபர். ஆனால் திமிரானவர். அடங்காபிடாரி அந்த நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலைக்கு வரும் கிருஷ்ணனுக்கும் சாந்திதேவிக்கும் திருமணம். பல்வேறு சிக்கல்களுக்கு பின் சாந்திதேவி மனம் மாறி குடும்பத்தை கவனிக்க முடிவெடுக்கிறார். இறுதியில் தலைமை செயல் அதிகாரியான சாந்தி சமையல் செய்து டிபன் கேரியரை வெட்கத்துடன் கொடுக்க, மெக்கானிக் நிறுவனத்திற்கு போகிறார். படம் வெள்ளி விழா கொண்டாடியது.

தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் போது, ரோபட் ஒன்று  இளம் பெண் ஒருத்தியை நிர்வாண கோலத்தில் காப்பாற்றுகிறது. எல்லாரும் தன்னை நிர்வாணமாக பார்த்து விட்டதால் தற்கொலை செய்து கொள்கிறாள் அந்தப் பெண். இதுபோல மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனையை மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் பதிய வைப்பது சரியா என்ற கேள்வி எழுந்தது.

மாஸ் ஹீரோக்களின் படங்களின் கதாநாயகிகள் உருவாக்கத்தில் இயக்குநர்கள் கவனம் செலுத்துவது அவசியம். மாஸ்ஹீரோக்களின் படங்கள் எனக்கு பிடித்தாலும், அதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பற்றிய மாறுபட்ட கருத்துகள் எனக்கு உண்டு. ‘அவள் அப்படித்தான்' மஞ்சு, கபாலியின் குமுதவல்லி (கணவனை தப்பை சுட்டிக் காட்டுபவளாக) , யோகி (அப்பாவான கதாநாயகனை காப்பாற்றுபவளாக), காலாவின் செல்வி போன்ற பாத்திரங்கள் நிறைய வரவேண்டும்.

காலா திரைப்படத்தில் ரஜினியின் மகனை நேசிக்கும் புயலின் (அஞ்சலி பாட்டில்) பாத்திரப் படைப்பு அருமை. ரௌடிகள் போலீஸ் துணையுடன் அவள் உடையை கிழித்து சல்வாரைத் தூக்கி எறிந்துவிட, வீழ்ந்து கிடக்கும் அவள் தன் ஆடையை எடுக்க போகிறாள் என்று எதிர்பார்ப்புடன் இருக்க, ‘புயல்‘ அருகில் கிடைக்கும் தடியை எடுத்து போலீஸை தாக்க போகிறாள்.

2018 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் திருமணத்தை தாண்டிய உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பை வழங்கியது. ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தின் வேம்பு கதாபாத்திரம் திருமணமான பெண் ஒருத்தி, முன்னாள் நண்பனுடன் உறவு கொள்ளும் போது, அவன் இறந்துவிட, அதன் தொடர்ச்சி பற்றி, ஒழுக்கம் ஒழுங்கின்மை என்ற வாதத்தை தவிர்த்து பேசுகிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியப் பெண்கள் குறிப்பாக தமிழக பெண்கள், படித்து, வேலைக்கு போய் சாதனைப் பெண்களாக மாறும் கதைகள் குடும்பம்தோறும் பெருகி வரும் சூழலில் கலைப்படைப்புகளில் குறிப்பாக சினிமாவில் அவை பிரதிபலிக்க வேண்டும் என்பது தான் அந்திமழையின் இம்மாத சிறப்பு பக்கங்களின் நோக்கம்.

 ‘நிறையபேர் தங்களுக்கு என்ன வேண்டும் எனச்சொல்ல அச்சப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் பெறுவதில்லை,' என்றார் மடோனா.

 இந்த வார்த்தைகளைக் கனவைத்துரத்தும் பெண்கள் ஞாபகம் வைத்துக் கொள்வது நல்லது. திரைப்படங்கள்/ ஊடகங்கள் பெண்களை எப்படி காட்சிப்படுத்தினாலும் அதைத்தாண்டி எழுவது பெண்களின் பொறுப்பு.

இது உங்களுக்கான நேரம். கைப்பற்றுங்கள் அதை.

- அந்திமழை இளங்கோவன்

மார்ச், 2023 அந்திமழை இதழ்