சிறப்புப்பக்கங்கள்

முதல் நாள், முதல் ஷோ!

Staff Writer

நிழல் திருநாவுக்கரசு

ஐந்தாம் வகுப்பு படித்த போது கும்ப கோணத்தில் உள்ள டைமண்ட் தியேட்டரில் ரிக்‌ஷாக்காரன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக அண்ணனுடன் சென்றிருக்கிறேன். நூறு பேருக்கு மேல் டிக்கெட் வாங்க நின்று கொண்டிருக்கின்றனர். திடீரென்று ஒருவன், நின்றுக் கொண்டிருந்தவர்களின் தலைக்கு மேல் ஏறி, எல்லோருடைய தோள் மீதும் கால் வைத்து படிக்கட்டில் நடந்து செல்வது போல் நடந்து

செல்கிறான். எல்லோரும் கத்துகிறார்கள், அவன் கண்டுகொள்ளவே இல்லை. டிக்கெட் வாங்கியவன் பெரிய வெற்றி வீரன் போல் வந்தான். அவனை அங்கிருந்த மக்கள் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தனர்.

அந்த தியேட்டரில் டிக்கெட் வாங்கும் இடம் குகை மாதிரி இருந்ததால் நிறையப் பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதாக பெரியவனானதும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிருந்தா சாரதி

மலேசியாவில் அஞ்சான் திரைப்படத்திற்கான ரசிகர்கள் காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னையிலிருந்து படக்குழுவினருடன் நானும் சென்றிருந்தேன். சூர்யாவும் வந்திருந்தார். அங்குள்ள ரசிகர்களுடன் முதல் காட்சிப் பார்த்தது கொண்டாட்டமாக இருந்தது. படக்குழுவினர் எல்லோரும் கிளம்பும் போது, நான் கூட்டத்தில் மத்தியில் மாட்டிக் கொண்டதால், அவர்களுடன் செல்ல முடியவில்லை. நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு எப்படி போவதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். படத்தின் வசனகர்த்தா நான் தான் என்பதை ரசிகர் ஒருவர் அடையாளம் கண்டு கொண்டார். அவர் தான் என்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவர் பெயர் கூட எனக்குத் தெரியவில்லை. அவருக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மே, 2022