சிறப்புப்பக்கங்கள்

மூவாயிரம் மரங்கள் கொண்ட பள்ளி!

கந்தன்

எங்களுடைய பள்ளியில் எட்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அது முழுக்கவே வேளாண்மையில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் செய்முறைக்கானது. மாணவர்களை ஐந்து பேர் கொண்ட குழுவாகப் பிரித்து, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக கூறிவிடுவேன். அவர்களே செடிகளை நடுவது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது போன்றவற்றை செய்வார்கள். நான் மேற்பார்வையிடுவதோடு சரி.

பள்ளியில் மூலிகைத் தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதில் எல்லாவகையான மூலிகைச் செடிகளும் உண்டு. அதேபோல், 2500 சதுர அடியில் 1000 ஆயிரம் மரங்களை வளர்த்து அடர் வனம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதில் மகிழ மரங்கள் அதிகம். பள்ளி வளாகத்தை சுற்றி ஆறு அடிக்கு ஒரு மரம் என்ற விதத்தில் வளர்த்துள்ளோம். நான் இந்த பள்ளியில் சேரும் போது 200 மரங்கள் மட்டுமே இருந்தன. இப்போது மூவாயிரம் மரங்கள் உள்ளன.

ஈஷா யோக மையத்துடன் இணைந்து வருடந்தோறும் ஐந்தாயிரம் மரங்கள் வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக தந்துக் கொண்டிருக்கிறோம். ஈஷா மையம் அதற்கு தேவையான விதையையும், பைகளையும் கொடுத்து உதவுகிறது.

நிறையப் பூக்கள் கொண்ட ஒரு பூஞ்சோலையும், தெய்வீகத் தன்மை கொண்ட மரங்கள் நிறைந்த நந்தவனமும் உண்டு. அல்லிக்குளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்த குளத்தில் மீன்களும் உள்ளன. மன அமைதியைத் தரும் அற்புதமான இடம் அது.

ஆக்சிஜனை அதிகமாக வெளியிடும் 26 வகையான செடிகளை வளர்த்து வருகிறோம். ஒவ்வொருசெடியும் எவ்வளவு ஆக்சிஜனை வெளியிடும் என்பதை அந்த செடியிலேயே எழுதியிருக்கிறோம்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் மண் பானையில் தண்ணீர் வைத்துள்ளோம். வகுப்பறைக்குள் மாணவர்கள் தாவரங்களை வளர்க்க வேண்டும். அந்த தாவரங்கள் அசுத்த காற்றை உள்வாங்கிக் கொண்டு தூய்மையான ஆக்சிஜனை வெளியிடும். இது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

இங்கு பள்ளிக்கு வெளியே வெப்பம் அதிகமாகவும் உள்ளே குறைவாகவும் இருக்கும். சென்ற வருடம் இரண்டு முறை எங்கள் பள்ளி உள்ள சுற்றுவட்டாரத்தில் மட்டுமே மழை பெய்திருக்கிறது. அந்தளவுக்கு எங்கள் பள்ளி பசுமைப் பள்ளி. பள்ளியை சுற்றி சிப்காட் இருந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 79 பேருக்கு பசுமை முதன்மையாளர் விருது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்டது. அதில் ஐந்துபேருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது கொடுத்தார். அதில் முதலாவது விருதை எங்களுடைய பள்ளி பெற்றது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அந்த தொகையை வைத்து தொங்கும் தோட்டம், பூந்தோட்ட வளைவுகள், ரோஜாப் பூ தோட்டம் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த வருடம் செங்குத்து தோட்டம் உருவாக்க உள்ளோம்.

பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க, ‘பத்து பிளாஸ்டிக் கவர் எடுத்து வரும் மாணவர்களுக்கு ஒரு பொரி உருண்டை தருவோம்' என்றோம். அதன் மூலம் எங்கள் பள்ளி வளாகத்திற்குள் பிளாஸ்டிக் கவர்களை பார்க்கவே முடியாது.

எங்கள் பள்ளியில் இருப்பது போன்று சென்னையில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அடர் வனம், பூஞ்சோலை, நந்தவனம், மூலிகைத் தோட்டம் போன்ற-வற்றை உருவாக்க என்னை பயிற்சி கொடுப்பதற்கு அழைத்தார்கள். மற்ற பள்ளிகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை இதை முன்னெடுத்துள்ளது.

கந்தன், வேளாண் ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை

நவம்பர், 2022