ஓர் உணவு இடைவேளையில்...
ஓர் உணவு இடைவேளையில்... 
சிறப்புப்பக்கங்கள்

ஷூட்டிங் சாப்பாடு!

கற்பக விநாயகம்

அ பூர்வ சகோதரர்கள்  படப்பிடிப்பின்போது ஒரு சம்பவம்.  ஒரு வாரமாகவே சைவ உணவை மட்டும் தான் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். இது கமலஹாசனுக்கு தெரியாது. ஆனால் அந்த செட் டிபார்ட்மெண்டில் பணியாற்றிய முல்லை என்கிறவர் கேலியாக கமல் காதில் விழுமாறு,''பாவம் கம்பெனி ரொம்ப கஷ்டப்படுது அதனால்தான் தயிர்
சாதம் போடுகிறார்கள்'' என்று ஒருநாள் சொல்லி விட்டார்.

வீட்டிற்கு சாப்பிடச் செல்ல வேண்டிய கமல்ஹாசன் திரும்பிவந்தார். ''எனக்கும் இன்று இங்கே தான் சாப்பாடு''என்று அடம் பிடித்து அமர்ந்து விட்டார்.

தயாரிப்பு நிர்வாகிகளுக்குத் தகவல் பறக்கிறது. என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்தார்கள். வேறு வழி இல்லாமல் சாப்பாடு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சைவ உணவு - சாம்பார், ரசம், ஒரு பொரியல், தயிர், மோர், என்று தான் இருந்தது.

உடனே கோபப்பட்ட கமல்ஹாசன், ''என்ன சாப்பாடு இது? என்னை யாரும் காப்பாற்ற முயல வேண்டாம். ஒழுங்கா சாப்பாடு போடுங்க,'' என்று  சத்தம் போட்டார். ''யாரும் சாப்பிடாதீர்கள்,'' என்று சொல்லி விட்டார். பக்கத்தில் இருக்கிற நட்சத்திர ஓட்டலில் எல்லாருக்கும் சிக்கன் மட்டன் வாங்கிட்டு வாங்க என்று சொல்லி, அது வந்து, எல்லோரும்
சாப்பிட்ட பின்தான்  அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

ஒரு நாள் மாலை எல்லோருக்கும் வடை  தரும் போது அதில் ஒன்றை  எடுத்து  சாப்பிட்டார். ஒரு வடையை எடுத்து பிழிந்தார். ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் இருந்தது. ''இதை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?'' என சீறியவர் எல்லோரும்
சாப்பிடுவதை நிறுத்த சொல்லி அதற்கு பதிலாக உடனே பழங்களை வெட்டி எல்லாருக்கும்
கொடுக்கச் சொல்லி முறையை மாற்றிவிட்டார். அபூர்வ சகோதரர்கள் தான் நான் முதல்முதலாக உதவி இயக்குநர் ஆன படம்.

சினிமாகாரங்களுக்கு சாப்பாடு என்றால் சும்மாவா? அவர்கள் எப்போதும் விலையுயர்ந்த, சத்துள்ள உணவுவகைகளைத்தான் சாப்பிடுவார்கள் என்கிற  கண்ணோட்டம் எல்லாருக்கும் இருக்கும்.

ஆனால் உண்மையிலேயே அப்படித்தானா?

படமும் எடுத்து, அதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, அவர்களுக்கு சாப்பாடும் போடுகிற பழக்கம் என்பது ஆரம்ப காலகட்டத்தில் மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார், பிரசாத் இவர்களெல்லாம் இருக்கிறபோது ஆரம்பித்து வைக்கப்பட்டது .

ஏன் அப்படி?

பொழுது விடிவதற்கு முன்பாகவே கிளம்பி இரவு வந்த பிற்பாடும் வேலை செய்கிற தொழிலாளர்கள் இருக்கிற உலகம்தான் சினிமா உலகம். அதனால்
சினிமா உலகத்தில் இருக்கிற நடிகர்களில் ஆரம்பித்து கடைக்கோடியில் இருக்கிற தொழிலாளர்கள் வரைக்கும் உணவு  என்பது வழக்கமாகிவிட்டது.

காலையில் டிபன், மதிய உணவு, மாலையில் ஒரு வடை போண்டா தேநீர், மறுபடியும் இரவு உணவு என்று பகுத்து கொடுப்பது சினிமா உலகத்தில் வழக்கம். எல்லோருக்கும் உணவு பொதுவாக கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பல கம்பெனிகளில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சில டைரக்டர்களும் தனியாக ஒரு உணவு. அவர்களுக்கு என்ன பிடிக்குமோ காடை, கவுதாரி அல்லது நார்த் இண்டியன் உணவு எங்கே இருக்கிறதோ அதை தேடிப்பிடித்து வாங்கி கொண்டு வருவதற்கு ஒரு தனிநபரும் அதற்காக ஒரு காரும் தனியாக வைத்து விடுவார்கள்.

அவர்கள் தனியாக சாப்பிடுவார்கள். மற்ற தொழிலாளர்கள் எல்லாம் தனியாக சாப்பிடுவது என்பது ஒரு வழக்கம்.

பரிமாறும் நாயகன்...

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களில் முறையாக உணவு எல்லோருக்கும் போய் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிற வழக்கம் உண்டு. நடிகர் பிரபு அவர்கள் தன்னுடன் பணியாற்றிய முக்கியமான நபர்களுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் பரிமாறிப் பார்த்து ரசிப்பது வழக்கம். உழைப்பவர்களுக்கு சரியாக உணவு போய் சேருகிறதா என்று பார்த்து உடன் இருப்பது எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது. இதுதான் உண்மை. ஆனால் இது எல்லா இடத்திலும் நடக்கிறதா என்று பார்த்தால் முடியாது. சிறிய பட தயாரிப்பாளர்கள் தன்னால் முடிந்த அளவுக்கு உணவை தருவார்கள் அதையும் ஏற்றுக்கொண்டு இந்த சினிமா உலகம் நடைபெறுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

உணவு பரிமாறுவது என்பது ஒரு பெரிய கலை. இந்த திரைப்பட உலகத்தில் 26 சங்கங்கள் இருக்கின்றன.அதில் உணவு சமைப்பதற்கு நள பாகம் என்ற ஓர் அமைப்பு, அதை பரிமாறுவதற்கு என்று  ஒரு அமைப்பு, பரிமாறிய பின் சுத்தம் செய்வதற்கு என்று ஒரு அமைப்பு. இவை மூன்றும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

குணா படப்பிடிப்பு...

காலை உணவு என்று சொன்னால் இட்லி, பொங்கல், தோசை, வடை, உப்புமா, ரவா தோசை என்று  இருக்கும். மதிய உணவு என்றால் சைவ உணவு
 சாப்பாடு -  இரண்டு பொரியல், சாம்பார், ரசம், மோர், அப்பளம் என்றிருக்கும். அசைவ உணவு என்றால் இதனோடு மட்டன், சிக்கன், நண்டு என்று சேர்த்துக் கொள்வார்கள். இரவு உணவு என்றால் இடியாப்பம், பரோட்டா, கொஞ்சம் ரவா உப்புமா என்று வேண்டியது கேட்டு கொடுப்பார்கள் .

அதிகாலை 4 மணிக்கே சூரியன் உதிக்கிற போது படப்பிடிப்பு எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி என்றால் இந்த உணவு பரிமாற  இரவில் ஒரு மணியிலிருந்து பணி செய்ய வேண்டும். அதனால்தான் அவர்கள் பணியாற்றும் போது அவர்களுக்கு இரண்டு மடங்கு மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து வேலை செய்ய சொல்வார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக சுடச்சுட தோசை அங்கேயே படப்பிடிப்பில் சுட்டு கொடுக்கிற வழக்கம் இருந்தது, ஆனால் அதை தவறு என்று சிலர் சுட்டிக் காட்டியதால் அது நிறுத்தப்பட்டு எல்லாம் 3 மணி நேரத்துக்கு முன்பாக செய்கிற உணவு வகைகளைத்தான் இன்று பரிமாறிக் கொண்டு இருக்கிறார்கள். சினிமாவுக்கு சாப்பாடு செய்வதற்கென்றே பல  மெஸ்கள் உண்டு.

அபூர்வசகோதரர்கள் படப்பிடிப்பில்...

வெளியூர்களில் படப்பிடிப்பு என்றால் இங்கிருந்தே ஆட்களை அழைத்துக்கொண்டு போய் அங்கே கூடாரம் போட்டு வேண்டிய உணவுகளை சமைப்பார்கள் அல்லது அருகில் இருக்கும் உணவகங்களில் இவ்வளவு நாட்கள் தேவை என்று சொல்லி ஏற்பாடு செய்து கொள்வார்கள். பொதுவாகவே வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் சமைப்பது என்பது வழக்கமாகி இருக்கிறது. வீட்டுச் சாப்பாடு போல் இருக்க வேண்டும் என்கிற எண்ணம்.

குணா பட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. 80 அடி ஆழக் குகை. ரசம், சாம்பார்,
சோறு எல்லாம் சாப்பிட இயலாது. உள்ளே எடுத்து போகவும் முடியாது. பரிமாற முடியாது. எனவே ஒரு பக்கெட்டில் வெறும் டிரை சிக்கன் களை போட்டு கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு விட்டு இன்னொரு பக்கெட்டில் எலும்புகளை போட்டுவிட்டு அனுப்பி விடுவோம். குடிக்க ஒரு வாளியில் தண்ணீர் வரும். இப்படித்தான் பல நாட்கள் கொடைக்கானல் குகையில் படப்பிடிப்பு நடந்தது.

திரைப்படத் துறையில் உணவு பரிமாறுதல் என்பதே ஒரு மிகப்பெரிய கலாச்சாரம்தான். அங்கே அளவு சாப்பாடெல்லாம் நிச்சயமாக கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் சாப்பிடுவதற்கு நேரம் பல சமயங்களில் இருக்காது என்பதுதான் துரதிர்ஷ்டம்.

அக்டோபர், 2019.