மார்க் டேவிதாருடன் ரிவால்டோ (பழைய படம்) 
சிறப்புக்கட்டுரைகள்

அஞ்சலி: ரிவால்டோ- காட்டுக்குள் ஒரு வீட்டுயானை!

மதிமலர்

முதுமலை அருகே சமீபத்தில் மரணமடைந்த 50 வயதான ஆண் காட்டு யானை ரிவால்டோ பலருக்கும் மறக்கமுடியாத நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. ஊட்டியிலிருந்து கீழே இறங்கும் சிகூர் ஆற்றங்கரையோரம் கல்லடி, பைசன் பள்ளத்தாக்கு, மசினகுடி அருகே வாழைத்தோட்டம், பொக்காபுரம் போன்ற பகுதிகளில் இருக்கும் மக்களால் ரிவால்டோவை மறக்க முடியாது. ஏனெனில் ரிவால்டோ யாருக்கும் ஆபத்தானவன் அல்ல. மனிதர்களுடன் நட்பாகப் பழகக்கூடியவன். இறந்த ரிவால்டோவின் உடலை பிணக்கூராய்வு செய்த கால்நடை மருத்துவர் குழுவைச் சேர்ந்த டாக்டர் கலைவாணனிடம் ரிவால்டோ பற்றிக் கேட்டோம். அவர் கூறியதிலிருந்து:


காட்டுயானைகளில் ஆண் யானைகள் சுமார் 15 வயது இருக்கும்போது தங்கள் கூட்டத்தைவிட்டு பிரிந்து வந்துவிடும். அதுதான் அவை வயதுக்கு வரும் நேரம். அவை வெளியேறி, தன் வயதையொத்த ஆண் யானைகளுடன் சேர்ந்து திரியும். அப்படித்தான் ரிவால்டோவும் தன் கூட்டத்தைவிட்டு வெளியேறி வாலிப வயசு யானைகளுடன் திரிந்துள்ளான். 

அவனுக்கு ரிவால்டோ எனப் பெயர் வைத்தது யார்?

அது ஒரு சுவாரசியமான கதை.

நீலகிரி மலையில் ஈ ஆர் சி டேவிதார் என்பவர் பிரபல இயற்கை ஆர்வலரும் ஆய்வாளரும் ஆவார். நிலகிரி தார் எனப்படும் வரையாடுகளைப் பற்றிய இவரது ஆய்வு நூல் மிகமுக்கியமானது. இவர் மசினகுடி அருகே ஒரு கிராமத்தில் ஆற்றோரமாக ஒரு இடம் வாங்கி சிறிய வீடு கட்டினார். அவரது தோட்டத்தில் வேலிகளே இல்லாமல் இயற்கையான காடுபோல் விட்டிருப்பார். தாராளமாக  விலங்குகள் வரலாம் அவற்றை ஏன் தடை செய்யவேண்டும் என்பது அவரது எண்ணம்.  அவரது மகன் மார்க் டேவிதார் அந்த இடத்தில் வசித்தார். மார்க்கும் தந்தையைப்போலவே மிக முக்கியமான விலங்கின ஆர்வலர். அவரை பலமுறை நான் காணச் சென்றதுண்டு. கோடைகளில் ஆறு வற்றிவிடும். விலங்குகள் நீர் அருந்துவதற்காக தன் தோட்டத்தில் தண்ணீர்த் தொட்டி ஒன்றை இவர் அமைத்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் காட்டு யானை ஒன்று தன் சக யானைகள் இரண்டுடன் அங்கே வருவதைக் கண்டுள்ளேன். அவை நீர் அருந்தும். வாங்க, நாம் வீட்டுக்குள் சென்றுவிடுவோம் என அவர் எங்களை அழைத்துச் சென்றுவிடுவார். அதில் ஒரு யானை மட்டும் வீட்டு வாசலுக்கு வந்து இவர் கொடுப்பதை வாங்கிச் சாப்பிடுவதும் இவர் பேச்சுக்கு தலையாட்டுவதுமாக இருக்கும். அதற்கு இவர் வைத்த பெயர்தான் ரிவால்டோ. மற்ற யானைகளுக்கும் பிரேசில் கால்பந்து வீரர்களான ரொனால்டோ, ரொமாரியோ என கால்பந்து வீரர்களின் பெயரை வைத்திருந்தார். ரிவால்டோ மட்டும் இப்பகுதியில் சுற்றித் திரிந்தது.

காட்டுயானையாக இருந்தாலும் டேவிதார் போன்ற நல்ல இயற்கை ஆர்வலர்களுடன் மனிதத் தொடர்பு அதற்கு ஏற்பட்டிருந்ததால் பிற மனிதர்களுடன் அது நட்பாகவே பழகி வந்தது. 

2013-இல் மார்க் டேவிதார் இறந்த பின்னும் கூட  அவரது இல்லத்தின் முன்னர் அது வந்து அவரைக் காண காத்திருக்கும் காட்சியை பலரும் நினைவுகூர்வார்கள்.

சுற்றிலும் இருக்கும் ரிசார்ட் காரர்களும் தங்கள் விருந்தினர்களுக்குக் காண்பிக்க ஒரு காட்டு யானையாக ரிவால்டோவை கருதி, அதற்கு உணவு அளிக்க ஆரம்பித்தனர். எனவே ரிவால்டோ இந்த பகுதிகளிலேயே படுத்து உறங்கவும் ஆரம்பித்தது.

ஆனால் அதற்கு மதம் பிடிக்கும் சமயத்தில் மட்டும் காட்டுக்குள் சென்றுவிடும். சில மாதங்கள் கழித்தே திரும்பிவரும்.

மனிதர்களுடன் நெருங்கிப் பழகியதாலோ என்னவோ காட்டுயானைகளுடன் இதற்கு உறவு சிக்கலாகவே இருந்திருக்கவேண்டும். ஆதிக்கம் மிகுந்த பிற ஆண்யானைகளால் இது தாக்கப்பட்டிருக்கிறது. காயத்துடன் நானே இதை பலமுறை கண்டுள்ளேன். தன்னாலே சரியாகி விட்டிருக்கிறது.

ரிவால்டோவின் கம்பீரத் தோற்றம்!

2015 ஆம் ஆண்டை ஒட்டி, இதற்கு துதிக்கையின் முனையில் ஏதோஒரு விதத்தில் காயம் ஏற்பட்டு புழுக்கள் உருவாகி விட்டன. அப்போது உள்ளூர் மக்களும் தன்னார்வ அமைப்புகளும் இந்த யானையை மருந்து, உணவு கொடுத்து கவனித்துக் கொண்டனர். காட்டு யானையாக இருந்தாலும் நேரடியாக மனிதர்கள் இதன் வாயிலேயே புல், பிற உணவுகளை அளிக்க இது அனுமதித்தது பெரும் ஆச்சரியம். ஒருவழியாக இந்த புண்ணிலிருந்து இது மீண்டாலும் தும்பிக்கையின் முனைப்பகுதி சுருங்கிவிட்டதால் உணவை எடுத்து சாப்பிடுவதில் சற்று சிரமம் இருந்தது. 

இந்நிலையில் மனிதர்கள் இருக்கும் பகுதியில் இந்த யானை சுற்றித் திரிவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் இதை ஆராய வல்லுநர் குழு அமைத்தது. இதற்கிடையில் இந்த யானையைப் பிடித்து பழக்கப்படுத்துமாறு இடைக்கால உத்தரவு வரவே, இதை வனத்துறை எளிதாக மயக்க மருந்துகள் இன்றியே பிடித்து, அதன் வாழிடத்திலேயே கிரால் அமைத்து பயிற்சிகள் அளித்தனர். அதன் புண்களும் ஆற்றப்பட்டன. இந்நிலையில் யானைகள் தங்கள் வாழிடமான காட்டில்தான் இருக்கவேண்டும். அவற்றைப் பிடிக்கத் தேவையில்லை என உயர் அதிகாரிகளால் வழிகாட்டப்பட்ட நிலையில் ரிவால்டோ காட்டிலேயே விடச் மீண்டும் விடப்பட்டது.

ஆனாலும் ஒரே இரவில் பழையபடி, அது வாழைத் தோட்டம் பகுதிக்கே வந்துவிட்டது!

பின்னர் அதற்கு உணவு வைக்கவேண்டாம் என்று அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. காட்டுயானையை காட்டு யானையாக நடத்துங்கள் என்ற பிரச்சாரத்துக்குப் பின்னர் ரிவால்டோவுக்கு அப்பகுதியில் எளிதாக மனிதர்களிடம் இருந்து உணவு கிடைப்பது குறைந்தது. அது மீண்டும் காட்டைச் சார்ந்து வாழத்தொடங்கியது.

ரிவால்டோ என பெயர் வைத்து அடையாளம் காணப்பட்ட இந்த காட்டுயானை இவ்வாறாக சுற்றுப்புறங்களிலும் வன ஆர்வலர்களிடமும் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது.

சமீபத்தில் சில மாதங்கள் ரிவால்டோவைக் காணவில்லை. காட்டுக்குள் போயிருக்க வேண்டும். அதன் இருப்பிடத்தைக் கண்டறிய வேண்டும் என கோரிக்கை எழுப்ப்ப்பட்டது. அதன் நடவடிக்கை காமிராக்களில் பதிவானதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் காட்டுக்குள்ளிருந்து காயங்களுடன் ரிவால்டோ தன் வழக்கமான உலாவிடத்துக்கு வந்ததைக் கண்டனர். காட்டுக்குள் மற்ற யானைகளால் கடுமையாக அது தாக்கப்பட்டிருக்கவேண்டும். மனிதர்களிடம் அன்பாக இருந்தாலும் சக யானைகளிடம் அது பணிந்தே போகும்  குணத்தைக்கொண்டிருந்தது. பலவீனமாக இருக்கும் ரிவால்டோவால் மூர்க்கமான ஏதோ ஒரு யானையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. அந்த காயங்களில் இருந்து மீளமுடியாமல் ரிவால்டோ மரணம் அடைந்தது! இறக்கும்போது தனக்குப் பழக்கமான இடத்துக்கு வந்தே இறக்கவேண்டும் என அது  உணர்ந்திருக்கிறது!,” என முடித்தார் கலைவாணன்.

இதற்கிடையில் காட்டு யானைகள் மனிதர்களால் பெயர் வைக்கப்பட்டு புகழ் அடைவது வனவிலங்கு பாதுகாப்புக்கு உகந்ததா என்ற விவாதம் தொடர்கிறது!



அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram