இசையமைப்பாளர் சந்திரபோஸ் 
சிறப்புக்கட்டுரைகள்

மாம்பூவே சிறு மைனாவே... இந்த பாட்டு உங்களுக்குப் பிடிக்குமா?

வைகறை வாசகன்

“நண்பா , செப்டம்பர் 30 என்ன விசேஷம்?’’ அலைபேசியின் மறுமுனையில் நண்பனின் குரல்.

‘’பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் நண்பா!  புனித ஜெரோம் பைபிளை லத்தின் மொழியில் Vulgate  என்ற பெயரில் மொழி பெயர்த்தவர்.. அவர் நோன்பு நாளை பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாகக் கடைபிடிக்கிறாங்க " என்றேன். அது பற்றி ஒரு கட்டுரை எழுதேன் என்றான் நண்பன்.

’’இப்பதான் நண்பா,  வேற ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதி  அனுப்பினேன்’’ என்றேன். "அப்படின்னா.. செப்டம்பர் 30 சந்திரபோஸ் நினைவு நாள் அவரைப் பத்தி எழுது " என்றான் . சுபாஷ் சந்திர போஸ் நினைவுநாள் உறுதியாகவே தெரியாதே.. ஆகஸ்ட் 18 அவர் இறந்ததாக நம்பப்படும் நாள் என்று தானே சொல்லப்படும்.. அதைப்பற்றி ஏன் செப்டம்பரில் எழுத வேண்டும்.. என்று நான் என் வழக்கமான GK புத்தியைக்காட்ட, ஏம்ப்பா... சந்திரபோஸ் என்றால் உனக்கு சுபாஷ் சந்திரபோஸ் தானா! சந்திரபோஸ்னு ஒரு இசையமைப்பாளர் இருந்தார் அல்லவா  அவரைப் பற்றி எழுதிக்கொடு என்றான்.

 என்னடா இது வைகறை வாசகனுக்கு வந்த சோதனை.... கரூர் சம்பவத்தை ஒட்டி.. தமிழ்நாடே சினிமா மோகத்தில் கெட்டழிந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஊரகம் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஊடகம் தோறும் அறிவுஜீவிகள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நான் சந்திரபோஸ் பற்றி என்ன எழுத என்று சற்று யோசித்துபடி விட்டு விட்டேன்.

 அடுத்தடுத்த நாள்களில் பயணம் மேற்கொண்ட போது, நான் அவ்வப்போது முணுமுணுக்கும் ஒரு திரைப்படப்பாடல் நினைவுக்கு வந்தது.. அந்தப் பாடல் தான் "மாம்பூவே சிறு மைனாவே" என்ற பாடல். அந்தப் பாடல் வெளியான காலத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு பிரபலம் அடைந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். நடிகர் சிவக்குமார் அண்ணன் அந்த பாடலைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். 1978-இல் சிவக்குமார்- ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த மச்சானை பாத்திங்களா? என்ற படத்தில் ஜேசுதாஸ் - சுசிலா பாடியது இந்தப் பாடல். நீங்கள் இப்போது youtube ல் போய் கேட்டாலும் உங்களுக்கு உடனே பிடித்துப் போகும். கவிஞர் வாலி எழுதிய பல பாடல்களை கண்ணதாசன் பாடல்கள் என்று நினைத்து பலர் மயங்குவது போல.. சந்திரபோஸ் இசை அமைத்த இந்தப் பாடலையும் பலர் இளையராஜா இசையமைத்த பாடல் என்றே கருதி மயங்குவார்கள். இதை சந்திரபோஸ் தனது நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். அந்தப் பேட்டி கூட இணையத்தில் காணொளியாக கிடைக்கவில்லை, வானொலி பேட்டியாகத்தான் உள்ளது.

350 படங்களுக்கு மேல் இசையமைத்தவராக பிலிம் நியூஸ் ஆனந்தனால் குறிப்பிடப்படும் சந்திர போஸ் பற்றி சில தகவல்களை பெறலாம் என்று மாம்பூவே சிறு மைனாவே பாடலின் கதாநாயகன் அன்பு சகோதரர் கலையுலக மார்க்கண்டேயர் சிவக்குமார் அவர்களை தொடர்பு கொண்ட பொழுது, " ஆமாடா! மாம்பூவே சிறு மைனாவே ரொம்ப நல்ல பாட்டு..  நானும் ஸ்ரீதேவியும் நடிச்சது... நானும் ஸ்ரீதேவி நடித்த பாட்டுல ரெண்டு பாட்டு ரொம்ப பிரபலம் .. ஒண்ணு இந்தப் பாட்டு.. இன்னொண்ணு கவிக்குயில் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடின சின்ன கண்ணன் அழைக்கிறான் என்கிற பாட்டு" என்று சொல்லி இரண்டு பாடல்களில் youtube - link ஐயும் உடனே அனுப்பி வைத்தார்.

நான் சிவக்குமார் அண்ணனிடம் எப்போதும் வேடிக்கையாகப் பேசுவது வழக்கம்..." அண்ணே, சந்திரபோஸ் பத்தி கேட்டா... நீங்க ஸ்ரீதேவியுடன் நடிச்ச கதையை எல்லாம் சொல்றீங்களே" என்றேன்.

 " சந்திரபோஸ் எனக்கு  ரொம்ப பழக்கம் இல்ல தம்பி , சுருட்ட முடி வச்சிருப்பார்  ; 'ஆறு புஷ்பங்கள்' படத்தில்  சந்திரபோஸ் பாடிய  ' ஏண்டி முத்தம்மா ' என்ற பாடல் மிகவும் பிரபலம்" என்று சொல்லிப் பாடலில் இரண்டு வரிகளைப் பாடிக் காட்டினார். 

"அண்ணே இதைவச்சு... நான் எப்படி ஒரு கட்டுரை எழுதுறது.. சந்திரபோஸ் 1980 களில் ஏவிஎம் நிறுவனத்தோட ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்து இருக்கிறார்.. சூப்பர் ஸ்டாருக்கு அவர் போட்ட பல பாடல்கள் ரொம்ப ஹிட் ஆயிருக்கு... குறிப்பாக, மனிதன், ராஜா சின்ன ரோஜா, போன்ற படங்களில்" என்றேன். "அப்ப... அத பத்தி நீ எஸ்பி முத்துராமன் கிட்டதான் பேசணும் " என்று சொல்லிவிட்டார்.

  சந்திர போஸ் பற்றி இயக்குநர் எஸ் பி முத்துராமன் தரும் விவரங்களைப் பார்ப்பதற்கு முன் சந்திர போஸ் குறித்து ஓர் எளிய அறிமுகம்..

 சந்திர போஸ் சீர்காழியில்  இசை நாடக பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர். தேவர் பிலிம்ஸ் தயாரித்த 'தாயும் மகளும்' என்ற திரைப்படத்தில் 1960 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். வி.சி. குகநாதனின் இயக்கத்தில் 1977-ஆம் ஆண்டு வெளிவந்த 'மதுரகீதம்'  படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்திரபோஸ் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டது போல, எம். எஸ். விஸ்வநாதன் இசையில் 'ஆறு புஷ்பங்கள்' படத்தில் சந்திரபோஸ் பாடிய "ஏண்டி முத்தம்மா" என்ற பாடல் அவரை மிக பிரபலமாக்கியுள்ளது. பின் 'மாங்குடி மைனர்', 'மச்சானை பாத்தீங்களா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமாகி இருக்கிறார்.

  இதைத் தொடர்ந்து, சங்கர் குரு ( காக்கி சட்டை போட்ட மச்சான், சின்னச் சின்ன பூவே கண்ணால் பாரு போதும் போன்ற பாடல்கள்) 'மனிதன்' ( மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்?,  வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுசனை இன்னும் பாக்கலையே! போன்ற பாடல்கள்) 'அண்ணா நகர் முதல் தெரு' ( மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு) ,  விடுதலை ( நீலக்குயில்கள் இரண்டு..), மாநகர காவல் ( வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை..), 'ராஜா சின்ன ரோஜா' ( சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..), 'மக்கள் என் பக்கம்' ( "ஆண்டவனைப் பார்க்கணும்"..) போன்றவை இவர் பெயர் சொல்லும் படங்களும் பாடல்களும்.

வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த 'நான் பெத்த மகனே' திரைப்படத்தில் இவர் கடைசியாக இசையமைத்திருந்தார்.

பிற்காலத்தில்  தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார் சந்திரபோஸ்.

திரைத்துறை பிரபலங்கள் பலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் புகழின் உச்சியிலிருந்து இறங்க நேர்ந்ததை பிரபலத் திரைப்பட ஆய்வாளர் அறந்தை நாராயணன் ' 'குடியினால் குடை சாய்ந்த கோபுரங்கள்' என்ற நூலில் விளக்கி இருப்பார். அந்த மதுப்பழக்கத்திற்கு இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களும் தப்பவில்லை.

திரைத்துறையில் தனது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது தனது மதுப்பழக்கம் தான் என்று அவரே தனக்கு நெருக்கமான நண்பரிடம் கூறியுள்ளார் . அதுபோல் அவருக்கு இருந்த இன்னொரு பழக்கமான புகைப்பழக்கம் அவர் ஆயுளை கணிசமாகக் குறைத்து விட்டது என்றும் இவருக்கு நெருக்கமான இன்னொருவர் கூறுகிறார்.

இவர் தந்து விட்டு சென்றுள்ள அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் பற்றி திரைபிரபலங்கள் மற்றும் திரை இசை ரசிகர்களின் சுவையான நினைவுகளை இன்னொரு கட்டுரையில் எழுதுவேன்.