கிருஷ்ணம்மாள் ஜகந்நாதனிடம் ஆசி பெறும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 
சிறப்புக்கட்டுரைகள்

பதப்பட்ட மனதுக்கு சாதி மத பேதங்கள் எப்படி இருக்க முடியும்? நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் மறுபக்கம்

ரவிசுப்பிரமணியன்

”இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், அல்லது நாளைக்கு ஆட்சிக்கு வரக்கூடியவர்களில் குறிப்பாக ஒருவரை குறை கூறினால், நமக்கு வரக்கூடிய நன்மைகள் வராமல் போய்விடும் என்றோ அல்லது அவர்களால் தீங்கு நேரிடும் என்றோ அஞ்சி ஊமையாய் காலம் கழிக்கும் அறிஞர்களே மிகுதி. ஏற்கனவே ஆட்சியாளர்களால் நன்மை பெற்றுவிட்டதனால், நன்றிக் கடனாக ஆட்சியாளர்கள் என்ன செய்தாலும் கண்களை மூடிக்கொள்ளும் தமிழறிஞர்களும் உண்டு.  ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் எதற்கும் அஞ்சாமல் மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் கேடு செய்பவர்கள் யாராக இருந்தாலும், பூசி மெழுகாமல் தயவு தாட்சண்யம் பாராமல் வெளிப்படையாக பெயர் சொல்லி இடித்துரைக்கும் வியக்கத்தக்க துணிச்சல் கொண்ட பேராண்மை  வேண்டும்”.

-   பெரியார்  ஈ. வெ. ராமசாமி.

அபிபுல்லாவின்(கவிஞர் அபி) கால்களில் அவர் அப்படி சாஷ்ட்டாங்கமாக விழுந்து அவரது பாதங்களைத்தொட்டு, என்னை ஆசீர்வதியுங்கள் என்று கேட்பார் என நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது நடந்தது. அபி அண்ணன் அவருக்கு மிகவும் பிடித்த கவிஞர். இப்போதும் அவரது கவிதைகளில் பிடித்தவற்றைத் தன் நினைவிலிருந்து சொல்லுபவர் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்.

”அந்தக் கவிதைகளோட இருண்மை வந்து, என்னை எங்கெங்கயோ அழைச்சிண்டு பொயிடறது ஜி. அந்தக் கவிதைகள் அப்படி இருக்கதாலதான், அவா அவாளுக்கான பாதைகளை அவை திறந்துவிட்டுடறதுன்னு நினைக்கிறேன், அற்புதம் ஜி.” என்று ஒருமுறை சொன்னார்.

சென்ற ஆண்டின் (2024) அதே நாளில், அதே மாலை, அபி வசித்து வரும் மதுரை கிருஷ்ணாபுரம் காலனி, தாமரைத் தெருவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும், தமிழ் இசை அறிஞர் மம்மது வீட்டுக்கும் சென்றோம். அபி அண்ணனும் உடன் வந்திருந்தார். அங்கும் இதே நடந்தது, அபியைப் போல மம்மதுவும் பதறிவிட்டார். சற்றே பின்வாங்கி நகர்ந்து போனார். ஒரு நீதியரசர் இப்படி என்னை வணங்கலாமா என மம்மது கேட்க, ”முதலில் மூத்தோரை வணங்குதல் நம் பாரம்பரிய மரபு, நீங்கள் எவ்வளவு மூத்தவர்கள், நீங்கள் செய்த தமிழ்ப்பணிகள் எவ்வளவு? உங்களை வணங்குவதன் மூலம் நான் தமிழையும் இசையையும் அல்லவா சேர்த்து வணங்குகிறேன்” என்றார். மிகவும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த என் நெருங்கிய நண்பர்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கையில், அவர் பூஜையறையின் முன் நின்று அவர்கள் வணங்குவதில் அவருக்கு சிறு சுணக்கமும் இருந்ததில்லை. அவர் மேன்மை மிகு வழக்கறிஞராக இருந்த காலத்திலயே, என் மதுரை நண்பர்கள் சொன்ன நற்செய்திகள் வழியே அவரை நான் அறிந்திருந்தேன், முதல் முதலில் நான் அவரை சந்தித்ததே ஒரு இலக்கிய நிமித்தமாகத்தான்.

என் தந்தைக்கு நிகரான எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்த சில நாட்களில், அப்போது வழக்கறிஞராக இருந்த ஜி.ஆர்.சுவாமிநாதன், அவருக்காக மதுரை பார் கவுன்சிலில் ஒரு இரங்கல் கூட்டத்தினைப் பொறுப்பேற்று நடத்தினார். அதில் என்னைப் பேசுமாறும் அரங்கநாதனின் ஆவணப்படத்தை அங்கு திரையிடுமாறும் கேட்டுக்கொண்டார். அன்றும் சிந்தாந்த ரீதியில் எனக்கும் அவருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தபோதும் அவரது அன்பை, எளிமையை, பண்பை உணர்ந்து நான் நெகிழ்ந்துபோனேன். அந்த ஒரு சந்திப்பின் இரு நாட்களிலேயே, ”மாறிப்புக்கு இதமெய்தினர்” என்று கம்பன் சொன்னது போல், ஒருவரது  இதயத்துள் ஒருவரை ஏந்தி நாங்கள் நண்பர்களானோம். அவரது கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை அவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவை அவரது பரிபூரண சுதந்திரம். அவற்றை அவர் யார் மீதும் திணித்ததில்லை. தன் கருத்தை ஏற்காதவரைப் பகைவரெனப்  பிரகடனம் செய்ததுபோல் வேறுபட்டு அவர் நடந்ததில்லை. எதிர் தரப்பு நியாயங்களை ஏற்க மறுத்தவரும் இல்லை.  அவர் கருத்துகளோடு முரண்பட, ஆக்கப்பூர்வமான எதிர்வாதம் செய்ய, இன்றும் அவர் எல்லோரையும் அனுமதிக்கவே செய்கிறார். யாரோடும் எது குறித்தும் மென்மையாய் விவாதிக்க அவர் தயாராகவே இருக்கிறார். விவாத முடிவில் நாம் சொல்லும் கருத்து அவருக்கு ஏற்றுக்கொள்ளுகிற மனநிலையை  (convincing) உருவாக்கினால், எந்தவிதச் சிறுதான்மையுமின்றி ஒரு சாதாரண மனிதனாக உடனே, தன்னிரு கைகளை மேல தூக்கவும் அவர் தயங்கியதில்லை. அதே சமயம் இது உண்மை, இது சத்தியம் என்று தெரிந்துவிட்டால், ஆதாரங்களும் இருந்துவிட்டால், அதன் பின் யாருக்காகவும் எதற்காகவும் ஒரு அங்குலம்கூட அவர் பின்வாங்கமாட்டார். அவர் ஒரு சத்திய நெருப்பு. உங்கள் பிராதில் நியாயமிருக்கிறதென்றால், எதற்கு என் நண்பரைப் போய்ப்பார்த்து, சிபாரிசு செய்யச் சொல்லியெல்லாம் நீங்கள்  கேட்கிறீர்கள்? என்று ஒரு வழக்கில் நேரிடையாக ஒப்பன் கோர்ட்டில் கேட்டுவிட்டார். யாரும் எந்த அனுகூலத்துக்காகவும் அவரை அணுகிவிடமுடியாது என்பதற்கான நீதிமன்ற சாட்சி அது. அவரது குடும்பத்தார் உட்பட, எந்த மனிதரும், அவரது பணியில் குறுக்கிட்டுவிட, அவர் ஒருநாளும் அனுமதித்ததில்லை.

பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த ஏழைப்பெண் ஒருவர், குரூப் நான்கில் தேர்ச்சி பெற்று, மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். அவரது தந்தையார் சாலையில் மரவள்ளிக்கிழங்கும் காய்கறிகளும் விற்று பிழைப்பு நடத்தியவர். தாயாருக்கு தன்வீட்டு வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டிய நிலை. அந்த பெண்ணுக்கு இரு தங்கைகளும் உண்டு. இத்தனை கஷ்ட்டமான ஜீவனத்தில் தந்தையார் திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அந்த கடினமான சூழலிலும் குடும்ப பாரத்தை சுமக்க, அந்த பெண் குரூப் இரண்டு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். ஆனால், அவருக்கு புதிய பணிக்கு செல்ல, தடையில்லா சான்று கிடைக்கவில்லை. நான் மிகுந்த தயக்கத்துடன் ஜி.ஆர். சுவாமிநாதனை நாடினேன்.

”இதுல என்ன இருக்கு ஜி? என்ன போங்க. இதை என்கிட்ட சொல்ல ஏன் நீங்க தயங்குனிங்க? இது ஒரு ஏழை குடும்பத்தோட வாழ்வாதாரப் பிரச்சனைன்னா? எந்த கெளரவமும் பாக்காத  நான் யார்கிட்ட வேணாலும் போய் நின்னு இதுக்காக ரிக்வெஸ்ட் பண்ணுவேன்” என்றார். சொன்னபடியே செய்தார்.

”இது போன்ற விஷயங்களுக்காக எப்பவும் நீங்க என்னை தாராளமா தொந்தரவு பண்ணலாம் ஜி?” என்று சொன்னார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

சமீபத்தில் 17. 8. 2025 ஞாயிறன்று நான் காந்திகிராமத்தில் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் குறித்த ஆவணப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தேன். அன்று ஜி. ஆர். எஸ்ஸிடம் இந்த விஷயத்தை சொன்னேன்.  “அய்யோ எவ்ளோ காரியங்கள் செஞ்சவர். யப்பா. நூறு வயசு கடந்த மனுஷி இல்ல. சே. காமாட்சி (திருமதி. ஜி.ஆர்.எஸ்.) அவங்கள பாத்திருக்காங்க. ஆனா, அம்மா எனக்கு அறிமுகமில்ல. அவங்களை நான் பாக்க வரலாமா ஜி” என்று குழந்தை போல கேட்டார்.  “ப்ளீஸ் வாங்க” என்று சொன்னேன். அவர் தன் மகள் மற்றும் மகனோடு அங்கு வந்து அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அம்மா அவரை வள்ளலார் படம் முன் நிறுத்தி அவருக்கு விபூதி இட முனைய அவர்  ‘எல்’ போல குனிந்து வாய்பொத்தி பவ்வியமாய் நிற்க, அம்மா அவர் உச்சந் தலையை இடது கையால் பிடித்தபடி தனது வலது கையின் நடுங்கும் விரல்களால் விபூதி பூசிவிட்டார். பிறகு அம்மா அவரை அழைத்து சென்று அமர வைத்துக்கொண்டு தனக்கு வித்யாசமாக திருமணம் ஆன கதைபற்றியெல்லாம் அரைமணி நேரத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார். அவர் சென்றதும் அம்மா “எவ்வளவு பெரிய மனுஷன். என்னா பதவி, இவ்ளவுக்கு சிம்பிளா இருக்குறாரு. அடக்கம் அமரருள் உய்க்கும் இல்லியா சாமி” என்றார் என்னிடம். இன்னும் அவரைப் பற்றியும் அவர் செய்த நல்லகாரியங்கள் பற்றியும் விரிவாய் சொன்னால் கட்டுரை நீண்டு செல்லும்.

ஆசி அளிக்கிறார் கிருஷ்ணம்மாள்

எழுத்தாளர். பெருமாள் முருகனுக்காக அவர் வாதிட்டு வென்றது,  கரிசல் இலக்கிய பீஷ்மர். கி. ராஜநாராயணன் எழுத்திற்காக அவர் மீது வழக்கு வந்தபோது, இலக்கியத்தின்பால் நின்றும் பரிவோடு அவர் தீர்ப்பு வழங்கியது, எழுத்தாளர்களைத் தேடித் தேடிப் போய் பார்ப்பது, ஒரு வழக்கின் உண்மைத் தன்மையை அறிய, நேரே சென்று பார்த்தும், கேட்டும், துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்தைப் பெற்றும் உண்மையை அறிவது போன்ற இவையெல்லாம் அவரிடம் நான் நேரில் கண்ட காண்கிற அபூர்வங்கள். எழுத்தாளர்களிடம் மட்டுமல்ல, இலக்கியத்தின் மேல் ஓவியத்தின் மேல் இசையின் மேல் அவர்கொண்ட பற்று அபாரமானது. நாதஸ்வர வித்வான் பில்லப்பன் அவர்களைப் பணிந்து வணங்கி அவரைப் பாராட்டியது, டிராஸ்கி மருது, கேசவ் போன்றோரது ஓவியங்கள் இன்றும் அவர் வீட்டு வரவேற்பறையை அலங்கரித்துக்கொண்டிருப்பது, இப்படி அவரது இன்னபிற கலை நாட்டத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். கலைஞர்களை மட்டுமல்ல, எளிய மனிதர்களை மட்டுமல்ல, காலொடிந்த, கண் தெரியாத, விபத்தில் அடிபட்டு கைவிடப்பட்ட நாய், மாடு போன்ற சில மிருகங்களையும் அவர் வீட்டில் வளர்த்து வருகிறார். பிற உயிர்களின் மீதான அவரது இவ்வித நேசத்தையும் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

தினமும்  ஆங்கிலத்திலோ, தமிழிலோ பாதி புத்தகமேனும் படிக்காமல் அவர் உறங்கச் சென்றதில்லை. அவர் தீர்ப்புகளில் தமிழ் இலக்கியத்தின், உலக இலக்கியத்தின் எத்தனை விஷயங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதை அறிந்தவர் அறிவார். இலக்கியத்தை வாசித்து வாசித்து, இசையைக் கேட்டுக் கேட்டு, சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்துப்பார்த்து, அதன் சாரங்களைச் சரியான அர்த்தத்தில் செரித்துக்கொண்டு, பதப்பட்ட மனதுடன் இயங்குகிற ஒருவருக்கு, சாதி மத பேதங்கள் எப்படி இருக்க முடியும்? அறமும் கலையும் அவரது நீதித் தேரின் இரு சக்கரங்களாக இருக்கிறபோது பயணம் ஒருபோதும் திசை மாறாது.

அவரது பணியில் கால நேரம் பாராது, அவர் அர்ப்பணிப்பாய் ஈடுபடுவதை அறிவதற்கு, அவர் விசாரித்த வழக்குகளின் எண்ணிக்கைகளும், வழங்கிய தீர்ப்புகளுமே சாட்சி. இன்றைய அமைச்சர்களை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பொது இடத்தில், கூட்டங்களில், விமானப்பயணத்தில் அவர் சந்திக்கும் போது நடந்துகொள்கிற பண்பின் மேன்மை அவரவர் மனசாட்சிக்குத் தெரியும்.  கலையும், இலக்கியமும், பரந்துபட்ட வாசிப்பும் உண்மையில் மனிதர்களை விசாலப்படுத்தாமல், குறுகிய மனம் கொண்டவர்களாக மாற்றினால், கோளாறு கலையிலோ இலக்கியத்திலோ இல்லை. மாறுபட்ட கொள்கைகளை கோட்பாடுகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். தனிமனித வாழ்க்கையை அல்ல. எதிர் கருத்து கொண்டவர்கள் மேல் தனிப்பட்ட வகையில் வன்மத்துடன் நிகழ்த்தப்படும்  தந்திர நாடங்கள்  தற்காலிக வெற்றிகளைத் தரலாம். போலியான சலசலப்பைத் தரலாம். ஆனால் அவை,  நிரந்தரமல்ல.

2004ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காவும், மனித உரிமைக்கான பங்களிப்புக்குமாக சேர்த்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் “மரங்களின் தாய்”யென அழைக்கப்பட்ட வங்காரி முட்டா மாத்தாய் (Wangari Muta Maathai). கென்யாவின் கிராமப் பெண்களுடன் இணைந்து  பசுமைப் படிவ இயக்கம் (Green Belt Movement)  வழியாக பனிரண்டு ஆப்பிரிக்க நாடுகளில் மில்லியன் கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தவர்.  பொறுப்பான அரசியல்வாதியாகவும் பணியாற்றிய அவர், தனது நோபல் அமைதிப்பரிசு உரையில் இப்படிச் சில வரிகளையும் சொன்னார்.

“நான் ஒவ்வொன்றையும் சரிசெய்ய முடியும் என்ற எண்ணத்தால் அல்ல, ஆனால் எதையும் செய்யாமல் இருப்பதற்குப் பதிலாக, என்னால் முடிந்ததை நான் செய்தேன்.”

பூனைக்கு மணிகட்டும் இதுபோன்ற ஒரு நேர்மையாளரின் செயல்கள் மிக சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அந்தச் சிறிய முயற்சிகள் பலவாக ஆகும்போது, பெரிய மாற்றங்களாய் அவை உருவெடுக்கும். சுயநலத்துக்காக அவதூறுகளை பரப்புபவர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவதோ பெறாததோ முக்கியமல்ல, ஆனால், நற்செயல்களின் துவக்கமே முக்கியம்.

ஒரு நாட்டின் சுதந்திரமான தன்னாட்சி பெற்ற அமைப்புகளின் நேர்மையை சுயநலத்துகாகக் கேள்விக்குள்ளாக்கி, அவற்றின் மீது அவதூறு பரப்புதல் கோழைத்தனம். ஒரு விஷயத்தின் மேல் தளத்தில் பேசப்படுவதின் உண்மையான ஆதார வேர்கள் பரவியிருக்கிற தூரம் சாமானியர்களுப் புரியாது.

 “மனதில் பயமில்லாத ஒரு நாட்டை உருவாக்க வேண்டும்” என்று 1912ல் ரபீந்திரநாத தாகூர் சொன்னார். என்ன கொடுமையென்றால்,  குற்றவாளிகள் எந்த குற்ற உணர்ச்சியுமற்று சுதந்திரமாகவும் மிடுக்கோடும் உலாவந்து சகலர்க்கும் உபதேசம் செய்ய, நேர்மையாளர்கள் பயப்படுகின்ற கேவலம் நடக்கிறது. ஆடையற்று இருப்பது மட்டுமல்ல. இதுவும் ஆபாசம்தான்.

அடிப்படைக் கட்டமைப்புகளின் சூழலையும் நஞ்சாக்கி நிலைகுலைய வைப்பவர்கள், அநீதிகளைப் புரிபவர்கள், அதையே பொதுமைப்படுத்தி சகஜமாக்க முயல்பவர்கள், பலகாலம் பதுங்கு குழிகளுக்குள் இருந்துவிட்டு, திடீரென குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் மறைமுக நிரல்களோடு குரல் எழுப்பிவிட்டு, மறுபடி பங்கர்களுக்குள் மறைந்துகொள்பவர்கள், சொல்ல வேண்டிய உண்மையை மறைத்து, அதன் இடைவெளியில் புகுந்துகொண்டு தப்பித அர்த்தம் கற்பிப்பவர்கள், மாய்மால வசீகர அடுக்குத் தொடர்களை உருவாக்குபவர்கள், மேல் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் ஒன்றிற்கு மினுக்கும் முலாம் பூசி, பாவத்தைப் பரப்புபவர்கள் நீல நெடுவான் கூரையின்கீழிருந்து எங்கு ஒளிந்துகொள்ள முடியும். சுற்றிச் சுழலும் செற்கைக்கோள்கள் ஒரு நாள் உண்மைகளை கண்டு சொல்லும். அவர்களை முகுதுக்குப் பின்னிருந்து பார்த்துக்கொண்டே இருக்கும் பார்வைக்கு வராத அந்த அறத்தின் கண்கள், ஒரு நாள் மன்றத்தின் முன்வந்து தான்கண்ட செய்திகளையெல்லாம் செந்நிறப்பிழம்பாய்க் கக்கும். அதனால் தானே “சூதும் வாதும் வேதனை செய்யும்” என்று ஒளவையும்  “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான், ஐயோ என்று போவான் என்று பாரதியும்  “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்,” என்று இளங்கோவும் சொன்னார்கள். உண்மையில் எந்த  நீதியையும் சொல்லத் தமிழனுக்கு தனிமன்றங்கள் வேண்டாம், தமிழ் ஒன்றே போதும். ”அன்பிலார் நெஞ்சில் தமிழில் பாடி நீ ஆடிக்காட்ட மாட்டாயா” எனக்கேட்டு, தமிழில் பாடினால், அன்பில்லாத நெஞ்சிலும் அன்பு சுரக்கும் என்றெல்லாம் விண்டுரைக்க முடியாத பல பலப் பொருள்களைத் தன்னுள்ளே கொண்ட தமிழை ஆழ்ந்து கற்றால் அது நமக்குச் சொல்லும் ஆயிரம் ஆயிரம் அறங்களை.

31. 7. 2025 சென்னை – 10. 

(செப்டம்பர் 2025  பேசும் புதிய சக்தி மாத இதழில் வெளியாகி
பின் 11. 9. 2025 அந்திமழை இணைய இதழுக்காக
சற்றே விரிவாக்கப்பட்ட கட்டுரை - கவிஞர் ரவிசுப்பிரமணியன்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram