தன்னுடைய காதல் மனைவி யாழ்மொழி மறைவுக்கு எழுத்தாளர் பாமரன் ஆற்றிய இறுதி வணக்க உரை சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் பாமரன் அவர்களின் மனைவி யாழ்மொழி நேற்று முன்தினம் (டிச.26) கோவையில் மாரடைப்பால் காலமானார். அவரின் இறப்புக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், யாழ்மொழியின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், எழுத்தாளர் பாமரன் தனது மனைவியின் உடலுக்கு முன்னால் நிகழ்த்திய இறுதி வணக்க உரை:
“நான் இன்றைக்கு சமூகத்தில் தலைநிமிர்ந்து மனிதனாக நடக்கிறேன் என்றால், அது இவளின் ஒத்துழைப்பால் தான். 1988இல், என்னுடைய அம்மா, அவருடைய அம்மாவிடம் போய், “அவன் கிறிஸ்துவகாரிய தான் கட்டிக்கப்போறானாம்” சொல்ல, பாட்டியும் என்னைக் கூப்பிட்டு கேட்டது. “ஏன் டா அழாக… நீ அவளதான் கட்டிக்கோணூமா”. என்று கேட்டார். ”ஆமா மா… அவளைத்தான் கட்டிக்கோணும்” என்றேன்.
பாட்டி உடனே என்னுடைய அம்மாவை கூப்பிட்டு,”அவ என்ன ஆம்பளயவா கட்டிக்கிறேணு சொன்னான். பொம்பளையத்தானே.” என்று சொன்னார். படிப்பறிவு இல்லாத ஒரு கிழவி, “மனுசர மனுசர் காதலிக்கிறபோது சாதி என்னடா, மதம் என்னடா.” என்று கேட்டார். இங்குள்ள அத்தனை என் பேரும் உறவுகள்.
அன்னைக்கு இந்த புள்ள என்னை பைத்தியக்காரத்தனமாக லவ் பண்ணுச்சு. எங்கள் கல்யாணத்தில் அறிவிக்கிறாள்,”எங்களுக்கும் எந்த ஒரு சாதிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறுதியிட்டு கூறுகிறோம். உழைக்கும் மக்கள் உலகில் எங்கெங்கெல்லாம் உள்ளனரோ, அவர்களே எமது உறவினர்கள், நண்பர்கள்.” என்றதும் அவ்வளவு பேர் கை தட்டினார்கள். நான் பேசியபோது யாரும் கை தட்டவில்லை. என்னுடைய மற்றொரு அப்பன் நெடுஞ்செழியனிடம் கேட்டேன்,”என்ன செழியன் இவ்வளவு பேர் கை தட்றாங்க..?” என்றேன். “டேய்… நம்ம பேசுறது வேற டா… இந்த சமூகத்திலிருந்து, ஒரு பெண் துணிச்சலா பேசினா பாரு அதான்டா முக்கியம்” என்றார். ”கல்யாணத்தை எங்க முறைப்படியாவது பண்ணுங்க” என இரண்டு தரப்பும் கேட்டார்கள். “யாழ் மொழிக்கும் எனக்குமான சுதந்திரத்தில் யாரும் தலையிடாதீர்கள். மோதிரம் மாற்றுவதோ, பொட்டு வைப்பதோ, சடங்குகள் பண்றதோ என எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டோம்.
1988இல் இந்த மனுஷி துணிந்து வந்து என்னுடன் நின்றாள். அவள் பைத்தியக்காரி. ”டேய் தங்கம் இந்த உணவு நல்லா இருக்குடா” என்று சொன்னால், அதிலேயே 12 வகைகள் செய்து வைப்பாள். அவள் ஒரு குழந்தை. என் கூடவே வந்தாள், இருந்தாள், இப்போது சென்றுவிட்டாள். மனிதர்களாக மட்டும் வாழ்வோம் என யாழ் மொழி சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்.” என உருக்கமாகப் பேசினார்.