சென்னை 49ஆவது புத்தகக் காட்சி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. எழுத்தாளர்களும் வாசகர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். இந்தப் புத்தகத் திருவிழா பல எழுத்தாளர்கள், வாசகர்களிடம் கருத்துகளைக் கேட்டோம்.
எழுத்தாளர் விட்டல்ராவ்
சென்னையில் புத்தகக்காட்சி தொடங்கிய இரண்டாவது ஆண்டிலிருந்து நான் பார்த்து வருகிறேன். முன்னர் மெட்ராஸ் புக் எக்ஸிபிஷன், பிறகு மெட்ராஸ் புக் ஃபேர் என்று ஆனது. அது மெல்ல மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சென்னையில் இருந்தபோது ஒவ்வோராண்டும் வருவேன். பெங்களூர் சென்ற பிறகு இடையிடையே சில ஆண்டுகள் வரவில்லை.
ஆரம்பித்த புதிதில் அப்போது சில புத்தகக் கடைகளே இருந்தன. புத்தகக் கடைகளில் புத்தகங்கள் இருக்கும்.தரையில் புழுதி மண் பறக்கும். வருபவர்கள் காலில் மணல் ஒட்டிக் கொள்ளும். இந்தப் புழுதி மண் கடையில் இருக்கும் புத்தகங்கள் மீது எல்லாம் பரவும்.
அதன் பிறகு எவ்வளவு மாற்றங்கள் எவ்வளவு வசதிகள் எவ்வளவு கடைகள் இப்போது பட்டுக் கம்பளம் விரித்தது போல் சிவப்புக் கம்பளம் வித்திருக்கிறார்கள். வரும் வாசகர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்பது போல் அவ்வளவு அழகாகத் தரைவிரிப்புகள் உள்ளன. அடிப்படை வசதிகள் முதல் எத்தனை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். முதலில் இந்த ஏற்பாடுகள் செய்திருக்கும் நிர்வாகஅமைப்பைப் பாராட்டத்தான் வேண்டும்.
கலை விமர்சகர் இந்திரன்
புத்தகத் திருவிழா என்பது வாசகன் எழுத்தாளருடன் உரையாடும் ஓர் இலக்கிய ஜனநாயகத்தின் கொண்டாட்டம். காசு கொடுத்துப் புத்தகங்கள் வாங்கப்படுவதில்லை; சிந்தனைகள் வாங்கப்படுகின்றன. கவிஞர்கள் -வரலாற்று ஆசிரியர்கள், பெண்ணியவாதிகள் -மார்க்சியர்கள், தலித் எழுத்தாளர்கள் - தேசியவாதிகள் என்று நேரடி சிந்தனை பரிவர்த்தனைகள் காபி டிபன் பன் பட்டர் ஜாம் உடன் நடந்தேறுகிறது. இது ஒரு நிகழ்வு அல்ல, சிந்தனைரீதியாகத் தொடரும் அறிவுபூர்வமான ஒரு விவாதம்.
கவிஞர் மீரா 1983இல் என்னுடைய ‘காற்றுக்கு திசை இல்லை', ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்தார். எனக்கு ஆரம்ப காலத்தில் ஊக்கம் கொடுத்தவர் அவர். அதுமுதல் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன்.
மூத்தவர்களுக்கு இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது. எங்கிருந்தோ உள் கிராமங்களில் இருந்து எழுத வருகிறார்கள். அவர்களை நாம் நிச்சயமாக தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். ஆதரவு கொடுத்தால் தான் அவர்கள் வளர்வார்கள்.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
1976 இல் பம்பாய் தமிழ்ச் சங்கம் மூலம் எம்ஜிஆரை வைத்து ஒரு பெரிய விழா செய்தோம். அதற்காக முதல்வர் எம்ஜிஆர் வந்தபோது பம்பாய் தமிழ் சங்கத்தின் கட்டடத்திற்காக அரசாங்கம் பணம் கொடுக்கும் என்றார். அவர் வரும்போது தமிழ் சங்கத்தின் அரங்கில் சங்க உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது என்று கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். ஏனென்றால் அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் மேல் தட்டுக்காரர்கள். எம்ஜிஆர் வருகிறார் என்று அறிந்து தாராவி பகுதியில் இருந்து ஏராளமான ஏழை மக்கள் அங்கு கூடி விட்டார்கள். பெருந்திரளான கூட்டம் அரங்கத்துக்கு வெளியே அலை மோதியது.
ஆனால் அவர்களை உள்ளே விடவில்லை. அங்கே எம்ஜிஆர் வந்து மேடையில் நின்றார். நானும் அப்போது மேடையில் இருக்கிறேன். இதயம் பேசுகிறது மணியன் எம்ஜிஆர் உடன் வந்திருந்தார். எம்ஜிஆர், மணியனை அழைத்து அனைத்துக் கதவுகளையும் திறந்து விடச் சொன்னார். கதவைத் திறந்து விட்டதும் தாராவியில் இருந்து வந்து இருந்த ஏழை எளிய மக்கள் உள்ளே திரளாகப் புகுந்து விட்டார்கள்.
எம்ஜிஆர் பத்து அடி உயரமான மேடையிலிருந்து மக்கள் மத்தியில் அப்படியே குதித்தார். எனக்குப் பதற்றமாகிவிட்டது. கைகால் என்னவாகும் என்று சற்று யோசிக்காமல் அப்படியே குதித்தது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
இந்த தமிழ்ச் சங்கம் எல்லோருக்கும் கதவு திறந்து விடப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தால் தான் அரசாங்கம் பணம் கொடுக்கும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பிறகு நிதி உதவி செய்தார் என்று நினைக்கிறேன். அதன் பிறகு கட்டடம் கட்டினார்கள். அங்கே நாங்கள் புத்தகக் காட்சி நடத்தினோம். பல நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
எழுத்தாளர் பாவண்ணன்
ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களையும் மதிப்புரைகளையும் பார்த்துப் பார்த்து வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பது என் வழக்கம். அந்தப் பட்டியலோடுதான் கண்காட்சிக்குச் செல்வேன். எனினும் திட்டமிட்ட புத்தகங்களோடு திட்டமிடாமல் சட்டென பார்வையில் தென்படும் புத்தகங்களில் சிலவற்றையும் சேர்த்து வாங்குவது வழக்கம். அதைத் தவிர்க்கவே முடியாது. அவற்றையெல்லாம் பெட்டி நிறைய சுமந்துகொண்டு ஊருக்குத் திரும்பும்போது ஏதோ தெரிந்தவர்கள் திருமணத்துக்குச் சென்று வந்ததுபோல மனமெல்லாம் நிறைந்திருக்கும்.
மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி
நான் முதலில் கல்லூரியில் சேர்ந்திருந்த காலகட்டத்தில் 1978 ஆம் ஆண்டு என் தந்தையுடன் முதன் முதலில் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். அது சென்னை புத்தகக்காட்சி ஆரம்பித்த இரண்டாம் ஆண்டு. அப்பா திராவிட இயக்கப் பற்று உடையவர். அவர் அரசியல், வரலாறு சார்ந்த புத்தகங்களையே வாங்கினார். ஆனால் என் கவனம் இலக்கியம் பக்கம்தான் சென்றது. நான் எனக்குப் பிடித்த ஜே.டி.சாலிங்கரின் ‘ தி கேச்சர் இன் த ரை ' (The Catcher in the Rye) ‘நாளை மற்றும் ஒரு நாளே' புத்தகங்கள் வாங்கினேன். இது எனது முதல் புத்தகக் காட்சி அனுபவம். பிறகு 1982 க்குப் பிறகு நடந்த ஏறக்குறைய அனைத்துப் புத்தகக் காட்சிகளுக்கும் சென்றிருக்கிறேன்.புத்தகங்கள் வாங்குவதைவிட இத்தனை புத்தகங்கள் சூழ்ந்து இருக்கிற இடத்தில் நடந்து போகிற உணர்வு இருக்கிறது அல்லவா, அது அலாதியான அனுபவம்.
எழுத்தாளர் ராஜேஷ்குமார்
நான் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிகள் எந்த ஊரில் நடந்தாலும் அங்கே போவதற்காக முயற்சிகளை எடுத்துக் கொள்வேன். சென்னையில் பெரிய அளவில் ஒரு கூட்டம் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். புத்தகங்களை அவர்கள் வாங்குகிறார்களோ இல்லையோ எழுத்தாளர்களை அவர்கள் பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எழுத்தாளர் பெருமாள் முருகன்
முன்னாடியெல்லாம் எனக்குள் ஒரு சோர்வு இருக்கும் .தமிழில் யாரும் புத்தகங்கள் படிப்பதில்லை, எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்கிற சலிப்பு நிலை இருந்தது. ஆனால் இந்தக் கண்காட்சிக்கு வரும்போது இவ்வளவு பேர் வாங்குவதையும் படித்து விட்டு வந்து கருத்துகள் சொல்வதையும் பார்க்கும்போது உண்மையிலேயே நாம் இன்னும் எழுத நினைத்திருக்கக்கூடிய விஷயங்களை எல்லாம் எழுதவேண்டும் என்கிற உற்சாகம் கலந்த உணர்வெழுச்சி வந்து விடுகிறது.
மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி
சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வரும் அனுபவம் தனித்துவமானது. எந்தப் புத்தகத்தை வாங்குவது என்று தீர்மானிக்காமல் உள்ளே நுழைந்து, எதிர்பாராத ஒரு நூலைக் கண்டு அதில் சிக்கிக் கொள்வது இனிமையானது. சுமை அதிகமான பைகளோடு வெளியே வரும்போது, உடல் சோர்ந்திருந்தாலும் மனம் இதமாக நிறைவில் இருக்கும்.
பேராசிரியர் கு.பத்மநாபன்
(பார்வை மாற்றுத்திறனாளி)
என் வாசிப்பு ஆர்வத்தை புத்தகங்கள் மீதான ஆர்வத்தை தோன்றியதில் என் அம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு. என்னால் படிக்க முடியாத நிலையிலும் அம்மா புதிய புத்தகங்களை வாங்கி என் பெயரை அதில் எழுதி இருப்பார். நான் அதை தொட்டுப் தடவிப் பார்த்து பரவசம் அடைவேன். நான் வீட்டுக்கு யார் வந்தாலும் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டி அதைப் படிக்க வைத்துக் கேட்பேன். புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்காக என் அப்பா ஆர்.டி. போட்டு பணம் சேமிப்பார். அந்த வைப்புத் தொகைப் பணத்தை வைத்துத் தான் புதிய புத்தகத்தை வாங்குவோம். புத்தகங்களால்தான் நாங்கள் வளர்ந்தோம்; மலர்ந்தோம்.
காலம் செல்வம், கனடா
நான் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது இந்த புத்தகக் கண்காட்சிக்கு கனடாவிலிருந்து வருவேன். எழுதித் தீரா பக்கங்கள், சொற்களில் சுழலும் உலகம், பனி விழும் பனைவனம் என்கிற என் மூன்று புத்தகங்களைத் தமிழில் காலச்சுவடு பதிப்பித்திருந்தது. இப்போது அந்த மூன்று புத்தகங்களையும் ஆங்கிலத்தில் ஒரு பதிப்பகம் வெளியிட்டு வெளிவந்துள்ளன. அவை சர்வதேச புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டன. அதைப் பார்ப்பதை முன்னிட்டும் எனது பயணம் இருந்தது என்று கூறலாம்.
ரம்யா, நீலி இதழாசிரியர்
எழுத்தாளராகவும், ஒரு பதிப்பாளராகவும் நான் எழுதிய, தொகுத்த புத்தகங்களைப் புத்தகக்கடையில் அத்தனை புத்தகங்களுக்கு மத்தியில் பார்க்கும் போது அடையும் பரவசத்தை நுகர்வதும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்புத்தகங்களை நம் கண்முன்னே ஒருவர் கேட்டு வாங்கிச் செல்கையில் ஒரு வட்டம் முழுமை-யடையும் நிறைவு வருவதை உணர்ந்திருக்கிறேன்.
புதுவை இளவேனில்
இந்த ஆண்டு கவிஞர் கல்யாண்ஜி அவர்களின் கவிதைகளுடன் எனது புகைப்படங்களும் இணைந்து ‘ஒளியில் மிதக்கும் சொற்கள்' என்கிற புத்தகம் வெளிவந்து இருக்கிறது. புத்தகம் தயாராகிவிட்டதும் அதைப் பார்த்த கல்யாண்ஜி எனக்கு தொலைபேசியில் ‘எனக்கு என் கை நீள முடியும் என்றால் இங்கிருந்தே உனது கன்னத்தைத் தடவுவேன்' என்றார். அது எனக்கு ஒரு சிறந்த பரிசாக இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு புத்தகக் காட்சி எனக்கு சிறப்பான ஒன்று.