கார்த்திகைத் திருவிழா தொல்தமிழர் விழா- முனைவர் ஆறு.இராமநாதன் 
சிறப்புக்கட்டுரைகள்

கார்த்திகைத் தீபம்... விழா வரலாறு!

- ஆய்வு நூல் சொல்வது என்ன?

இரா. தமிழ்க்கனல்

தீபாவளியைப் போல இன்றைக்கும் ஊர்ப்புறத்தில் கோலாகலத்தோடு கொண்டாடப்பட்டுவரும் கார்த்திகை தீபத் திருநாள், இப்போது பரபரப்புக்கும் உள்ளாகிவிட்டது.

சிறு குழந்தைகள்கூடக் கைப்பேசிகளின் விளையாட்டுகளுக்குள் மூழ்கிப்போய்விட்ட வேதனையான பண்பாட்டுச் சூழலில், இன்னும் மிச்சமீதி இருக்கும் பண்பாட்டுத் திருவிழாக்கள் மனிதர்களின் கூட்டு உணர்வுக்கு எச்சச் சான்றுகளாக இருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழா என்றால், கார்த்திகைத் திருவிழாதான் எனப் பெருமையோடு சொல்கிறார்கள், தமிழறிஞர்கள்.

தீபாவளி, பொங்கலைப் போல அல்லாமல், இந்தக் கார்த்திகைத் திருவிழாவில், அந்தந்த ஊருக்கு ஏற்றபடியும் சில சமயங்களுக்கு ஏற்றபடியும் பல்வேறு விதங்களில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் மட்டுமன்று; உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் மக்களும் இந்தக் கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கார்த்திகைத் திருவிழாவைப் பற்றிய வரலாற்றுரீதியான ஒரு புத்தகத்தைப் படைத்திருக்கிறார், தமிழியலாளர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பல துறைகளின் முன்னாள் தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன்.

பழங்கால விழா என்பதால் அந்தப் பழைய மரபுகளோடு கார்த்திகைத் திருவிழாக்களை நடத்தவேண்டும் என்பதோ புதிய மரபுகளைப் பின்பற்ற வேண்டாம் என்பதோ நோக்கம் இல்லை; மரபுகள் மறைந்துபோகும்முன் அவற்றை ஆவணப்படுத்தி உண்மையான வரலாற்றைக் கண்டறிய வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்கிறார், அவர்.

உண்மையிலேயே இந்தச் சொல்லில் எதுவும் மிகை இல்லை என்பதை நிரூபிக்கிறது, அவரின் இந்தப் புத்தகம்.

தமிழர் திருவிழாக்களை எழுதுவோர் பெரும்பாலும் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளையே வைத்து எழுதிவிடுகிறார்கள் எனக் குறைபட்டுக்கொள்ளும் பேராசிரியர் இராமநாதன், இந்தப் புத்தகத்தில் இலக்கியச் சான்றுகளுடன் மக்களின் நாட்டார் வழக்காறுகளையும் முக்கியமாகக் கருத்தில் கொண்டுள்ளார்.

நேரடியாகச் சங்க இலக்கியத்தில் கார்த்திகை எனக் களத்தில் குதித்துவிடாமல், தமிழர்கள் கொண்டாடிய பண்டைய விழாக்கள் எனப் பலவற்றை விவரித்துச் சொல்கிறார். பின்னர் அதில் ஒன்றான கார்த்திகைத் திருவிழாவைப் பற்றி அலசி ஆராய்கிறார்.

தொல்தமிழர் விழாக்கள்

கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கி.மு.3ஆம் நூற்றாண்டும் அதற்கு முன்னருமான காலம்வரை பின்னால் போகும் காலகட்டத்தில் தமிழர்கள் கொண்டாடிய விழாக்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களைக் கொண்டு அறியமுடிகிறது என்பதைச் சொல்லும் அவர், பெருமங்கலம் (பிறந்தநாள் விழா), புனலாட்டு விழா, பூத்தொடை விழா, உள்ளி விழா, ஓண விழா, இந்திர விழா, கார்த்திகை விழா, காமன் விழா, வெறியாட்டு விழா என அவை ஒவ்வொன்றைப் பற்றியும் எடுத்துக்கூறியுள்ளார்.

கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் கார்த்திகை நட்சத்திரமும் நிலவும் இணையும் நாளில் இவ்விழா கொண்டாடப்படுவதில் இருக்கும் தமிழர்களின் வானியல் அறிவும் இதில் முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறது.

சங்க இலக்கியச் சான்றுகள்

அகநானூறு, நற்றிணை எனச் சங்க இலக்கியங்களிலும் கார்நாற்பது, களவழிநாற்பது எனப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் கார்த்திகைத் திருவிழா இடம்பெற்றிருப்பது சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது.

தேவாரத்தில் சம்பந்தர்

பக்தி இலக்கியமான தேவாரத்தில் ஞானசம்பந்தர் சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் கார்த்திகை கொண்டாடியதைப் பற்றிச் சொல்லும் பாடலும் இந்நூல் தரும் குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.

கல்வெட்டு ஆதாரங்கள்

இப்போது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்தியில் கி.பி. 1011-43 காலத்தில் இராசேந்திரச் சோழத் தேவர் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடத் தங்கம் அளித்த செய்தி கல்வெட்டில் உள்ளது. வடதமிழ்நாட்டின் தேவிகாபுரத்திலும் விஜயநகர அரசன் கிருஷ்ணதேவ மகாராயர் கார்த்திகை விளக்கேற்ற நெய் வழங்கிய கல்வெட்டும் உள்ளது.

17 மாவட்டங்கள், 51 ஊர்களின் ஆய்வுத் தரவுகள்

முன்னரே கூறியபடி, இந்த நூலில் நாட்டுப்புற மக்களின் கொண்டாட்டம் எப்படி இருந்துவருகிறது என்பதை அறிய, தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 51 ஊர்களில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

விளக்கீடு, சூந்து, சொக்கப்பனை

கார்த்திகை விளக்கிடும் முறைகள், வீடு, தோட்டம், நீர்நிலை என எங்கெங்கே விளக்குகளை வைக்கிறார்கள், மாவலி எனப்படும் சுளுந்து/ சூந்து தயாரிப்பது முதல் அதைச் சுற்றுவதுவரை என்னென்ன விசயங்கள் செய்கிறார்கள், சூந்து (என்றே பேராசிரியர் குறிப்பிடுகிறார்) சுற்றும்போது பாடப்படும் பாடல்கள், அதில்கூட வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு வகைகளில் பாடல்கள், நிகழ்ச்சியின் உச்சமாகச் சொக்கப்பனை கொளுத்துதல் என மொத்தக் கார்த்திகைத் திருவிழா பற்றிய தமிழ்நாட்டுச் சுற்றுலாவை நம் கண்முன்னால் கொண்டுவந்து காட்டுகிறார், நூலாசிரியர்.

உடலுறவு பற்றிய பாடல்கள்

இந்தப் பாடல்களில் உடலுறவு, பாலுறுப்புகளைப் பற்றிய குறிப்பீடும் உண்டு என அந்தந்தப் பகுதிகளின் பாடல்களையும் தணிக்கைசெய்து பதிவுசெய்துள்ளார். இதன் பின்னணியைப் பற்றிப் பின்னால் விவரிக்கிறார்.

சமயங்களின் சேர்க்கை

நெடிய வரலாற்றைக் கொண்ட கார்த்திகைக்கு, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பக்தி இலக்கியங்களில்தாம் குறிப்புகள் தொடங்குகின்றன. அதன்பிறகு நீண்ட காலம் கழித்து சைவ, வைணவ, புத்த சமயங்களின் வழிபாட்டு முறைகள் கெட்டிப்பட்டதற்குப் பின்னர்தான், அந்தந்தச் சமயங்கள் தங்களுக்கு ஏற்றபடி கார்த்திகைத் திருவிழாவைப் புனைந்து தமதாக்கிக்கொண்டன என்பது இந்தப் புத்தகத்தின் நிறுவல்.

ஆதிமுதல் இன்றுவரை

உலக அளவில் விழாக்களின் தன்மை இடம், காலகட்டங்களுக்கு ஏற்பத் தன்மைகள் மாறும் என்பது கார்த்திகைத் திருவிழாவுக்கும் பொருந்தும் என்றாலும், இப்போதுவரை இதில் நீடிக்கும் பொதுவான தன்மை விளக்குத் தீ, சுளுந்துத் தீ, சொக்கப்பனைத் தீ என நெருப்பின் இருப்பு மட்டும் நிலையாக இருந்துவருகிறது.

இதில், இயற்கையைக் கண்டு அஞ்சிய மனித இனத்தின் மிகத் தொன்மையான காலத்தில், குறிப்பாக வேட்டையாடி உண்டுவாழ்ந்ததற்கு அடுத்து ஆங்காங்கே தங்கிப் பயிர்செய்யும் விவசாய வாழ்க்கைக்கு மாறிய கட்டத்தில், மழைக்கும் நெருப்புக்கும் அஞ்சிச் சடங்குகளைச் செய்த வரலாறு உலகம் முழுக்க இருக்கிறது. இப்படி, தமிழ்நாட்டில் ஐப்பசி அடைமழை, அதைத் தொடர்ந்த மழையும் குளிருமான கார்த்திகை மாதத்தில் பயிர்செய்கையைப் பாதிக்கும் மழையை விரட்டக்கூடிய நெருப்புச் சடங்காகவே கார்த்திகைத் திருவிழா கொண்டாடத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது நூலாசிரியர் முன்வைக்கும் கருதுகோள். இதற்கு, எகிப்து நாட்டின் ஒளி விழாவின் மையத்தை ஒப்பிட்டு வாதம் புரிகிறார். அது தர்க்கப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதாவது, நெருப்புச் சடங்கு மந்திரத்தின் மூலம் மழையைக் கட்டுப்படுத்துவது என்பதற்கு உலக முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

இன்னொரு தன்மை, அறிவியல் தன்மை கொண்டதாக ஆய்வாளர்கள் பலராலும் சொல்லப்படுவதுதான்: தொல் காலத்தில் கார்த்திகை மாதத்தில் பால்பிடிக்கும் பயிர்களுக்குப் பூச்சிகளால் சேதாரம் வராமல் தடுப்பதற்காகப் பெரிய அளவில் நெருப்பை வளர்ப்பது என்பதையே ஒரு விழாவாக எடுத்திருக்க முடியும் என்பது! இதையொட்டி இன்னும்கூட ஐயா ஆறு.இராமநாதன் விவரிக்கிறார்.

தக்க சான்றுகளாகச் சங்க இலக்கியங்கள் முதல் சமகால நூல்கள்வரை இணைப்புகளாகவும் கொடுத்திருக்கிறார். நல்லதோர் ஆய்வு முன்வைப்பு!