சென்னைப் புத்தகக் காட்சி அனுபவம் பற்றி எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையாவிடம் கேட்டபோது, அவர் கூறியவை.
"புத்தகம் வாசிப்பது பற்றிய விழிப்புணர்வு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.அதற்கு வெளிப்படையான சாட்சியம் போல் இந்த புத்தகக்காட்சியின் பிரம்மாண்டமும் அதற்குக் கூடும் கூட்டமும் அமைந்திருக்கிறது என்று கூறலாம்.நான் சென்னை புத்தகக் காட்சியில் இரண்டு நாட்கள் கலந்து கொண்டேன்.
நான் பொதுவெளியில் சந்திக்கக்கூடிய சில பிரமுகர்கள் சில நண்பர்கள் மட்டையடியாக ஒரு கருத்து சொல்வார்கள் ."இப்போ தெல்லாம் வாசிக்கிற பழக்கம் குறைந்துவிட்டது சார்" என்று.நான் அவரிடம் கேட்பேன் இவ்வளவு புத்தகக் காட்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறுகின்றன. இவ்வளவு பதிப்பாளர்கள் புதிது புதிதாக வருகிறார்கள். பதிப்புத்துறை என்கிற துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லோரும் என்ன நினைத்தார்கள் என்றால், இணையத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எல்லாம் எழுதத் தொடங்கிய பிறகு புத்தக வாசிப்பு குறைந்துவிடும் என்று கருதினார்கள். அப்படி அல்ல. மாறாக, இணையத்தில் அவர்கள் எழுத்துகளை வாசிப்பவர்கள் அவருடைய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற விருப்பம் தூண்டப்பட்டு பதிப்பகங்களிலோ அமேசான் போன்றவை மூலமாகவோ புத்தகங்களை ஆண்டு முழுவதும் வாங்கிப் படிக்கிறார்கள். எனவே புத்தகத் திருவிழா இப்போது இப்படி வெளியில் முறைப்படுத்தப்படாத புத்தகத் திருவிழாவாக இணைய விற்பனையில் வளர்ந்தோங்கி வருகிறது என்பதையும் சொல்ல வேண்டும் .அதேபோல இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் நல்ல பரந்து விரிந்த தளங்கள், வெவ்வேறு விதமான நூல்கள் என காண்போரை வியப்பிலாழ்த்தின.ஒரு நாளைக்குப் புத்தகக் கண்காட்சிக்குப் போகிறவர்கள் குறைந்தது நான்கு நாட்களாவது போனால்தான் ஓரளவுக்கு நூல்களைப் பார்க்க முடியும், நூல்களைத் தேர்வு செய்து வாங்க முடியும் என்கிற அளவுக்கு நல்ல விதத்தில் நடைபெற்றது மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசும் வாசிப்பை ஊக்குவிப்பதற்கு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள், அதற்கு நிதி நல்கைகள் என்று பல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. இவை ஒரு புறம் இருக்க புத்தக கட்டமைப்பு ரொம்ப நவீனமாக , மிகவும் அழகாக நேர்த்தியாக, புதுமையாக இப்பொழுது வரத் தொடங்கிவிட்டன. இப்போது கூட புத்தகத்தினுடைய விலைகள் எல்லாம் கூடிவிட்டன என்று சொல்லுகிறார்கள். நான் கூட இந்த முறை தமிழினி பதிப்பகத்தில் இரண்டு முக்கியமான நாவல்கள் வாங்கினேன் .ஒவ்வொன்றும் 900 ரூபாய் விலை உடையது. தமிழ்நாட்டில் எல்லாவற்றிற்கும் விலை ஏறினால் ஏற்றுக் கொள்கிறார்கள்;புத்தகங்களுக்கு விலை ஏற்றினால் மட்டும் ஏன் புகார் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கும் செலவுகள் இருக்கின்றன. கட்டமைப்பு செலவுகள், வடிவமைப்புச் செலவுகள், ஒளியச்சுச் செலவுகள் ,ஓவியச் செலவுகள், அச்சிடும் காகிதச் செலவுகள்,எழுத்தாளருக்கு தரவேண்டிய காப்புரிமைத் தொகை இப்படி ஏராளமான செலவுகள் ஒரு புத்தகத்தில் இருக்கின்றன. புத்தகம் என்பது அறிவினுடைய மூலம் Source of knowledge. அதற்கு பணம் செலவிட ஒருவர் தயங்கக் கூடாது. அத்தகைய ஒரு மனநிலை வாசகர்கள் மத்தியில் வளர வேண்டும். ஒரு புத்தகத்தை பிடி எஃப் வடிவத்தில் புலனக் குழுவில் பகிர்ந்து இருந்தார்கள். நான் அதைக் கண்டித்துக் கூறினேன்.அது யாரோ ஒரு நல்ல எழுத்தாளர் உடைய புத்தகம். பெயர் இப்போது மறந்து விட்டது. உடனே ஒரு வாசகர் எதிர்வினை ஆற்றி இருந்தார். அப்படியாவது புத்தகம் போய்ச் சேருகிறது என்று நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டியதுதானே? என்றார். நான் சொன்னேன் ஓர் எழுத்தாளருடைய புத்தகத்தை வாசிப்பது நீங்கள் அது அவருக்குச் செய்கிற உதவியாக நினைக்கிறீர்கள்.அது தவறு. அது, உங்களுக்கே செய்து கொள்ளும் உதவிதான் வாசிப்பு.
நான் சொன்னேன் நீங்கள் வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தை எழுத்தாளர் படைத்திருக்கிறார் என்ற நன்றி உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டுமே தவிர அப்படியாவது வாசிக்கிறோமே என்று நீங்கள் ஏதோ இரக்கத் தொனியில் பேசுவது முறை அல்ல என்று சொல்லி இருந்தேன்.
இன்று படைப்பு நிலையிலே நல்ல தீவிரமான எழுத்துகள் உருவாகி வருகின்றன. சொல்லப்போனால் நவீன படைப்புத் தளத்தில் உச்ச இலக்கியங்கள் உருவாகி வரக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
பொருட்படுத்தப்பட வேண்டிய எழுத்துகள் தமிழிலே புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன என்பது மிகவும் நம்பிக்கை தருகிற ஒன்று.எனவே இது முக்கியமான காலகட்டம். ஒவ்வொருவருக்கும் நீங்கள் வந்து ஒரு ஆறு கோடி, எட்டு கோடி பேரை மனதில் வைத்துக்கொண்டு பதிப்புத் துறையை கணக்கிடக்கூடாது; மதிப்பிடக்கூடாது.
பார்வையாளர்கள் வாசகர்களின் இலக்கு என்பது வேறு. அந்த இலக்குக்கு உட்பட்ட வரையறை என்று ஒன்று உண்டு. ஒரு புத்தகம் இரண்டாயிரத்தில் இருந்து பத்தாயிரம் படிகள் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் விற்பனையானால் பெரிய சாதனைதான். எனவே பதிப்புத்துறை அதனுடைய எல்லைக்குள் விரிவடைந்து இருக்கிறது, வளர்ந்து இருக்கிறது ,புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது .
வாசகர்கள் புத்தகங்களை நினைவு கூர்கிற விதம் எல்லாமே வியப்புக்குரியதாக இருக்கிறது. நான் ஒரு முறை நெய்வேலியில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன் .அங்கு ஒரு புகழ்பெற்ற ஆலயம் இருக்கிறது, அங்கே அமைப்பாளர்கள் என்னை அழைத்துக் கொண்டு போனார்கள். மாலை நேரம் தீபாராதனை காட்டி விட்டு வெளியே வந்த அந்த சிவாச்சாரியார் என்னைப் பார்த்ததும் விபூதி கொடுத்துக் கொண்டே 'நீலக்கருங்குயில் பாட்டின் ஒலி நேர்படக் கேட்கும் வேளையில்' வந்திருக்கிறீர்கள் என்றார்.எனக்கு வியப்பாக இருந்தது.
ஏனென்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நான் இணையத்தில் எழுதிய கவிதையில் இருந்தவை அந்த வரிகள்.
அவர் அதை எங்கேயோ படித்திருக்கிறார். என்னைப் பார்த்ததும் அந்த வரிகள் அவருக்கு நினைவுக்கு வருகின்றன என்றால் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் வாசிப்பு வசப்படுத்தி இருக்கிறது .அது ஆக்கபூர்வமான பொழுதை ஒரு மனிதனுக்குப் பரிசாக தருகிறது. அவன் புலன்களைப் புதுப்பிக்கிறது என்பதையெல்லாம் தமிழகம் மீண்டும் உணரத் தலைப்பட்டிருக்கிறது என்று நான் நம்பிக்கையோடு நினைக்கிறேன்'' என்றார்.