குலதெய்வம் கோயில் அனுபவம் !
கவிஞர் ரவி சுப்பிரமணியன்
ஒவ்வோராண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வருவது என்பதே ஆண்டுக்கொரு முறை குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபட்டுத் திரும்புவதுதான்.
என்ன, எங்கள் குல தெய்வ கோயில் சின்னது. அதனால் ஒரே நாளில் போய்விட்டுத் திரும்பி விடுவோம். இதன் பிரகாரத்தை முறையாகச் சுற்றி வரவே நான்கு நாட்கள் ஆகும் அப்படித்தான் உணர்கிறேன்.
இப்படிப் புத்தகக் காட்சிக்கு செல்லும் வழக்கம் எனக்கு 90களில் தொடங்கியது. சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் இருந்த காலத்திலிருந்து
போகத் தொடங்கினேன். பல்வேறு புத்தகங்களின் சுகந்தங்களை ஒரு திருவிழாவில் உறவினர்களிடம் முகமன் சொல்லி அளவளாவது போல நண்பர்களின் எழுத்தாளர்களின் கலைஞர்களின் வாசகர்களின் சந்திப்பை நல்குவது இது போன்ற புத்தக கண்காட்சிகள்தான்.
ஒரு சமூகத்தின் நல் அளவீடு முதலில் வாசிப்பு பழக்கம். தலைவர்களின் அழகு ஒரு சமூகத்தை முறையாக வாசிக்க வைப்பது. முறையான வாசிப்பு பழக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை அரசு கணக்குக்காக விளம்பர அலகுகளுக்காக மட்டுமல்லாமல் ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும். நாமும் நமது ஒவ்வொரு வீட்டிலும் இதைத் தொடங்க வேண்டும். நாமே முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும். இவ்வுலகின் எல்லா மாற்றங்களும் வந்தது காலகாலமாக நடந்த வாசிப்பால் அல்லவா? அதைக் கடமையாக இல்லாமல் காதலாக ரசனையோடு வாசிக்க நாம் நமது வருங்காலத் தலைமுறைக்கு உணர்த்த வேண்டும். ரசனை தாண்டி பலர் தகவல் தரவுக்கென டிஜிட்டலிலும் வாசிக்கிறார்கள். தவறில்லை. அதுவும் அவசியம்தான். ஆனால், அதுவே அறிவல்ல. அதை வைத்து உங்கள் சிந்தனை மூலம் எதைக் கண்டடைந்து நீங்கள் என்னவாகிறீர்கள் என்பதே வாசிப்பு செய்யும் உண்மையான மாயம்.
முதலில் சாட்டிலைட், போன் சாத்தான்களிடமிருந்து கொஞ்ச நேரம் நம் பிள்ளைகளை விடுவித்து இது போன்ற கண்காட்சிகளுக்கு வேடிக்கை போல பராக்கு பார்க்கக் கூட்டிச் செல்வது போன்றாவது அழைத்து சென்று புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம். பிறகு வாசிப்பின் பயன்பாட்டை, அதன் ருசியை நம் பிள்ளைகளுக்கு உணர்த்திவிட்டால் உண்மையாய்த் தேடல் உள்ள பிள்ளைகள் தானே கண்டடைவார்கள். அப்போதுதான் புத்தகக்கண்காட்சிகளின் பரவல்கள் அர்த்தம் பெறும். வாசிப்புப் பழகத்தை அதிகப்படுத்த ஆயிரம் யோசனைகள் உள்ளன. ஆனால், அதைக் கேட்கிற காதுகளுக்கல்லவா இங்கு பஞ்சம். விளம்பர வித்தார பேச்சுக்கும் வர்ண வார்த்தைகளாலான ஸ்லோகங்கள் உதிர்க்கவும் மட்டுமல்லவா இங்கு வாய்கள் உள்ளன.
அறிவுக்கு ஆயிரம் உணவுகள்!
ஆஸ்டின் சௌந்தர், அமெரிக்கா
அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து இப்போது சென்னை புத்தகக் காட்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதற்கு முன்பு இந்தியாவில் நான் டில்லியில் 90 களின் ஆரம்பத்தில் புத்தகக் காட்சி பார்த்திருக்கிறேன்.
நான் புத்தகத் திருவிழாவை எனக்கு அணுக்கமான எழுத்தாளர்களைப் பார்க்கும் பெரும் வாய்ப்பாகப் பார்க்கிறேன். அவர்கள் எழுதிய நூலை வாங்கி அவர்களிடம் உரையாடி கையெழுத்து வாங்குவது பேரனுபவம். வாசகனாக சக வாசகனைச் சந்திக்க வாய்ப்பு. இணை மனங்கள் ஒன்றுகூடி , பிடித்த புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு. புத்தகத்தின் பின் அட்டையில் பார்க்கும் பதிப்பகங்கள் இங்கு முழு உருவம் எடுத்து நிற்கிறது. பதிப்பக உரிமையாளரையும் , அங்கு வேலை பார்ப்பவர்களையும் நேரில் சந்திக்கமுடிகிறது. வாசகர்களுக்கு அவர்கள் விரும்பிய புத்தகத்தை எடுத்து பேக் செய்து அவர்கள் கொடுப்பதை ஆர்வமுடன் பார்த்தேன். வளரும் எழுத்தாளர்களுக்கு இந்தக் கூட்டமும், வாங்கும் நூல்களும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். தேடித் தேடிக் கிடைக்காத புத்தகங்களும் கைக்கெட்டிய தூரத்தில் கிடைக்கின்றன. பிடித்தவர்களுக்கு ஒரு முத்தத்தோடு நிறுத்த முடியாது என்பது போல , புத்தகப் பிரியர்கள் வாங்க நினைத்ததைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு நூல்களை வாங்கும் சாத்தியத்தை வழங்குகிறது புத்தகத்திருவிழா.இங்கேதான் சாரு நிவேதிதாவை முதல் முறை பார்த்தேன். காளிப்ரசாத்தும் பெருந்தேவியையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. வம்சியில் புத்தகம் வாங்கிக்கொண்டிருந்த சுரேஷ் பிரதீப்பிடம் புதிதாக வந்துள்ள கட்டுரைத் தொகுப்பைக் குறித்து உரையாட முடிந்தது.யாவரும் பதிப்பகத்தின் ஜீவகரிகாலனைப் பார்த்து கைகுலுக்கி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். காலச்சுவடு கண்ணனைக் காண்பித்து, இவர்தான் சு.ரா-வின் மகன் என்று என் மகனிடம் சொன்னேன்.
அமெரிக்காவில் வருடம் முழுக்க புத்தகக் கண்காட்சிகள் இருக்கும். வருடத்திற்கு நான்கு முறையாவது செல்வோம். நான் புத்தகங்களை தொடர்ந்து வாங்குபவன் என்பதால், கண்காட்சியில் குறைவாகவே வாங்குவேன். இங்கிருந்து எனக்கு அமெரிக்கா எடுத்துச் செல்ல எடைக் கட்டுப்பாடுகள் வரையறைகள் இருப்பதால் அதிகம் வாங்கவில்லை.
அறிவுக்கு ஆயிரம் வகை உணவுகள் இருக்கும் இடத்தில் - அதாவது இத்தனை புத்தகங்கள் உள்ள இடத்தில் என்னால் எல்லாம் சாப்பிடமுடியாது. சாப்பாட்டுக் கடைகள் குறைவாக இருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.
அறிவு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்!
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா
சென்னையில் நடைபெறும் 49வது ஆண்டு புத்தகக் காட்சிக்கு என்னால் உடல் சுகவீனம் காரணமாகச் செல்ல முடியவில்லை .ஆனாலும் நண்பர்கள் வாயிலாக நான் ஒரு பட்டியல் போட்டு இந்தந்த புத்தகங்கள் எல்லாம் தேவை என்று ஒரு பட்டியல் தயாரித்து நான் அனுப்பி வைத்தேன். அதன்படி நண்பர்கள் அந்தப் புத்தகங்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து கொண்டுவந்து என்னிடம் சேர்த்துள்ளார்கள். இந்தப் புத்தகத் திருவிழா என்பது நம்முடைய தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய ஒரு அறிவு மறுமலர்ச்சிக்கான, ஒரு சமூக மாற்றத்திற்கான ஒரு செயல் செயல்பாடு என்று கூறலாம். சென்னை புத்தகக்காட்சி என்பது வெறுமனே ஒரு காட்சியல்ல அது ஓர் அறிவுத்திருவிழா என்கிற அளவுக்கு நடைபெற்று வருகிறது. 49 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதாவது, அரை நூற்றாண்டைக் கடக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வேறு வேறு கலாச்சாரச் சீரழிவில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது புத்தகத் திருவிழா ,புத்தகப் பயணம், புத்தகங்களை வாசிப்பது அதன் மூலமாக நான் கற்றுக்கொள்வது என்பது ஒரு பெரிய பண்பாட்டு மறுமலர்ச்சி என்பதை நாம் உணர்கிறோம். இதற்கு அடித்தளமிட்டுத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் சென்னை புத்தகக்
திருவிழா நடைபெற்று வருவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய, மிகவும் பாராட்டுவதற்குரிய ஒரு செயல்பாடுதான்.
என்னைப் பொறுத்தவரை நான் 49 ஆண்டுகளில் ஒரு 15 ஆண்டுகளாவது கண்டிப்பாக நான் இந்தப் புத்தகத் திருவிழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.பல விழாக்களில் என்னுடைய புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன. வாசகர்கள் புத்தகங்களைப் பெற்றவர்கள் என்னிடம் கையெழுத்து வாங்கிச் செல்வது ஓர் எழுத்தாளராக எனக்கு மகிழ்ச்சிகரமான அனுபவம். இந்தப் புத்தகங்களைக் காணும் போதும்,அரங்குகளில் புத்தகங்களை அடுக்கி வைத்து அதை வாசகர்கள் பெருமளவில் பார்த்து வியந்து வாசித்து வாங்கி பயன்படுத்துவது என்பது ஒரு பெரிய ஒரு கலாச்சாரத்தின் உடைய, கலாச்சார மேம்பாட்டுக்குரிய , பண்பாட்டு மறுமலர்ச்சிக்குரிய ,அறிவு மாற்றத்திற்கான ஒரு விஷயமாக நான் கருதுகிறேன். இது தொடரும். இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும். இதன் வாயிலாக தமிழ்ச் சூழல் பெரிய அறிவு மாற்றத்திற்கான உயர் இடத்துக்கு நகரும் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு .
புத்தகம் ஒரு கையடக்க போதிமரம்!
இயக்குநர் பிருந்தா சாரதி
புத்தகம் வாசிக்கும் பழக்கம்தான் புதிய உலகோடு நம்மைக் கைகுலுக்க வைக்கும் கருவி. மாறிவரும் உலகின் மதிப்பீடுகளை அறிந்துகொள்ளும் தொலைநோக்குப் பார்வையை அதுவே வழங்குகிறது.
எதையும் எதிர் கொள்ளும் துணிச்சலை அறிவின் மூலமே பெற முடியும். அதற்கான ஆதாரம் புத்தகங்களே. அது இல்லாதவர்கள் அறியாமையின் இருளில் பல காலம் கிடக்க நேரிடும்.
நாள்தோறும் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வளர்ச்சியை அறியாமல் எந்தத் துறையிலும் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது. அதை மறுத்தால் தேங்கிப் போய் இருக்கும் இடத்தையும் இழக்கவேண்டி வரும்.
எழுத்துத் துறை மட்டுமல்ல... அரசியல் துறை... திரைத்துறை... மற்றும் உள்ள எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தப் பழக்கம் அவசியம்.
'புத்தகம் ஒரு கையடக்க போதிமரம்' என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். புத்தகத்தின் மூலம் பெற்ற அறிவைக் கொண்டு சுய சிந்தனையின் மூலம் புதிய உயரங்களைத் தொட முயலவேண்டும்.
புத்தகம் ஒரு வாசல்தான்.அந்த வாசலுக்குள் நுழைந்து விட்டால் அது அழைத்துச் செல்லும் உலகம் விரிந்து கொண்டே செல்லும்.
துறை சார்ந்த அறிவைக் கல்விக்கூடங்களில் கற்கலாம். உலக அறிவை நூலகங்களில்,புத்தகக் கண்காட்சிகளில் , இணையத்தில் தேடி அடைய வேண்டும்.
அந்த ஆர்வத்தை பள்ளிப்பருவத்திலேயே உருவாக்க வேண்டும் . ஆனால் பள்ளிக்கூடங்கள் அதைச் செய்கின்றனவா என்பதுதான் கேள்விக்குறி.
கல்வி நிறுவனங்கள் மதிப்பெண்ணைத் தாண்டி மாணவர்களுக்கு
வாழ்வின் விழுமியங்களைக் கற்றுத் தரவேண்டும். இலக்கியம் அதற்குப் பேரளவில் துணை புரியும். மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்றால் ஆசிரியர்கள் முதலில் வாசிப்பாளர்களாக இருப்பது அவசியம்.
புத்தகக் கண்காட்சிகளில் நுழையும் போது ஒரு பெரிய வியப்பு ஏற்படும். எவ்வளவு புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன?
நம்முடைய ரசனைக்கும் தேவைக்கும் ஏற்ப நேரில் பார்த்து புத்தகங்களைத் தேர்வு செய்வது ஒரு சுகமான அனுபவம்.
எழுத்தாளர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களோடு உரையாடும் போது கிடைக்கிற உத்வேகம் மேலும் எழுதத் துண்டுகிறது.
இளைஞர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பெருமளவு புத்தகக் கண்காட்சிகளில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழும் தலைமுறை வளரும் தலைமுறைக்கு வழி காட்ட வேண்டும்.
புதிய புத்தகத்தின் வாசம் என்பது பூ வாசம் போல ஒரு புது வாசம். வாங்கி வரும் புத்தகங்களை விசிறி போல் விசிறி அதன் மணத்தை நுகர்ந்த பின்தான் சிறுவயதில் படிக்கவே தொடங்குவேன்.
இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு என்னுடைய புத்தகம் 'தொட்டனைத்தூறும் மணற்கேணி' கவிதை நூலை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிடுகிறது .
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் ஏஐ திரைப்படம் உருவாக்குவது சம்பந்தமான நூல்களும், புதிதாக வந்துள்ள சில கவிதைத் தொகுதிகளும் , கட்டுரைகள் மற்றும் சூழலியல் சார்ந்த சில நூல்களும் வாங்குவேன்.
இது ஒரு திரிவேணி சங்கமம்!
ஓவியர் ஸ்யாம்
லட்சக்கணக்கான புத்தகங்கள், எழுதிய எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள்
ஒரே இடத்தில் சங்கமிப்பது இந்த புத்தகக் காட்சிகளில் மட்டும்தான். அந்த வகையில் கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சேர்வது போல இதுவும் ஒரு திரிவேணி சங்கமம்தான்.
நான் கண் காட்சி அரங்குகளில் நுழையும் போது எழுத்தாளர்களுடைய கற்பனை மற்றும் சிந்தனைகளுக்குள் உதித்த அந்த எழுத்துகளுக்குள் ஊடுருவி நாம் கடந்து செல்வதை அந்த அரங்கினுள் சென்றதும் நான் எப்போதும்
உணர்கிறேன் .
எண்ணங்கள் எனும் மாமலைக்குவியலில், அதிலிருந்து தனக்குப் பிடித்த எழுத்துகளை எடுத்து எழுதி தனது எழுத்தாய் அதை நிரூபித்து அதை ஒரு படைப்பாக மக்களுக்குப் புத்தகமாக விற்பனை செய்கிறார்கள்.அந்த எழுத்தால் ஈர்க்கப்பட்ட வாசகர்கள் அந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தனியானது.
இது ஒரு சிந்தனை, கற்பனை, விற்பனை என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தும் . அறிவை வளர்க்கும் அரங்கமாய்
வருடா வருடம் நடப்பது இது.ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடந்தாலும் இன்னும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா...? இப்படித் தோன்றும் எனக்கு.
எழுத்துகளை அச்சில் பார்க்கும் கடைசித் தலைமுறையாகக் கூட நாம் இருக்கக்கூடும். தினசரிகளோ. வார இதழ்களோ, மாத இதழ்களோ விற்பனையில் சரிவை சந்தித்துள்ள இந்தக் காலகட்டங்களில் புத்தக விற்பனை அமோகமாக இருப்பது மிகப்பெரிய ஆறுதலை அளிக்கிறது.
காகிதங்களால் செய்யப்பட்ட தேன் நிறைந்த பூவாய் புத்தகங்கள் இருக்க இந்த பூக்களுக்கும் மணம் உண்டு என்பதை புத்தகக் கண்காட்சி நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தேனை பருகும் வண்டாய் மாறும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் எப்போதும் எனக்கு.
புத்தகங்கள் சந்திப்புகள் அனுபவங்கள்!
கவிஞர் கலாப்ரியா
புத்தகக் கண்காட்சி என்பது பத்து நாள்கள் நடக்கும் ஒரு காணும் பொங்கல் மாதிரி என்றுதான் சொல்ல வேண்டும். ஏராளமான புத்தகங்களைப் பார்ப்பது பெரிய அனுபவம். எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர்களைக் காணும் ஒரு திருவிழா. கூடிக்களிக்கும் ஒரு திருவிழா.புத்தக வியாபார விற்பனையைப் பொறுத்த அளவில் தமிழ் நாட்டில் இப்போது ஓரளவுக்கு நூலக ஆணைகள் கிடைப்பதற்குப் புது மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருத்தாலும் , பொதுவாக விற்பனை என்ற அளவில் சென்னை புத்தகக் கண்காட்சியில் தான் அதிகமான விற்பனையைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பதிப்பாளருக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அதுதான் தேவை. ஒவ்வொரு தடவை போய்விட்டு வரும்போதும் ஏதோ ஒரு 'கடா வெட்டு'க்குப் போய்விட்டு வந்த மாதிரிதான் ஒரு பெரிய அனுபவமாக இருக்கிறது .ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் என்று தொடர்ந்து சென்று வந்தாலும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியின் அனுபவம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.அப்படிச் செல்லும்போது ஒரு பெரிய அனுபவம் கிடைக்கத்தான் செய்கிறது. அதன் மூலம் பெரிய சக்தி கிடைத்த உணர்வு ஏற்படுகிறது.இத்தனை பேர் இருக்கிறார்கள் இத்தனை பேர் எழுதுகிறார்கள் இத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்கும் போது பெரிய ஊக்க சக்தி கிடைக்கக்தான் செய்கிறது.
நானும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.எனக்கு நினைவு தெரிந்து காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் போதிலிருந்து போய்க்கொண்டு தான் இருக்கிறேன்.முன்பு சில ஆண்டுகள் இடையில் விடுபட்டிருக்கலாம். ஆனால் நான் இப்போது தொடர்ந்து பத்து ஆண்டுகளாகப் போய்க் கொண்டு தான் இருக்கிறேன்.பொங்கல் கழித்து மறுநாள் எப்போது வரும் என்று காத்திருப்போம்.பொங்கல் கொண்டாடிவிட்டு அடுத்த அடுத்த நாட்களில் செல்வது ஒரு வழக்கம்.அங்கே நடக்கும் புத்தக வெளியீடுகள் நிறைய பேருக்கு பெரிய உத்வேகம் கொடுப்பவை.நான் அங்கே செல்லும்போது குறைந்தது இரண்டு மூன்று பேராவது புத்தகங்களைக் கொடுத்து வெளியிடச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.அதேபோல கவியரங்கங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். இவை முக்கியமான அம்சங்கள்.எல்லாவற்றையும் விட நண்பர்களைச் சந்திப்பது என்பது முக்கியமாக எனக்குப்படுகிறது. இந்தப் புத்தகக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகும் பெரிய வாய்ப்பு அது என்றே கூற வேண்டும்.
ஆசைகளும் நிராசைகளும்!
நடிகர் பொன்வண்ணன்
மனிதர்களுடைய படைப்பில் ஒரு தேடல் இயற்கையாகவே இருந்து கொண்டிருக்கிறது. அது பல்வேறு துறை சார்ந்ததாக இருக்கும். அரசியல், விளையாட்டு, ஓவியம், இசை, பாடல் ,எழுத்து என்று இப்படியாக குறைந்தபட்சம் ஒரு 50 முதல் 60 துறைகள் மனிதர்களுடைய தேடல்களில் மிக முக்கியமாக இருக்கின்றன. அதில் வாழ்க்கையினுடைய ஓட்டத்தில் பொருளாதாரம், குடும்பம், உறவுகள் என்று வரும்போது 20 வயதுக்குப் பிறகு தன் ரசனையையும் தன் தேடலையும் வைத்துக்கொண்டே பொருளாதாரத்தை மீட்டு எடுப்பது அல்லது குடும்பத்தை நிர்வகிப்பது என்பது இரண்டு குதிரைச் சவாரி போன்றது. அது சிலருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் வாழ்க்கைக்கான ஓட்டத்தில் தான் சார்ந்த தேடல்களை விட்டுக் கொடுத்து விட்டுப் பொருளாதாரத்திற்கும் இயற்கையான குடும்ப போராட்டத்துக்கும் இடையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் அமைந்துவிடுகிறது. அப்படி இருக்கும்போது அவர்கள் ஒரு வாசகனாகவும் தான் விட்ட தன் தேடலை நிறுத்திக் கொண்ட போது ஓர் ஆதங்கம் அவர் மனதிற்குள் எப்போதுமே இருக்கும்.இதை நாம் செய்ய முடியவில்லையே, இதில் என்னை விட்டு இருந்தால் சாதித்திருப்பேன்,இதற்குள் போயிருந்தால் நன்றாக இருந்திருப்பேன் என்றெல்லாம் ஒரு ஏக்கம் இருக்கும்.அவ்வப்போது அந்தக் குறை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.அப்படிப்பட்ட பல கலைஞர்களை நான் பார்த்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை நான் என்ன ஆசைப்பட்டேனோ அதே துறைக்குள் நான் இருக்கிறது என்பதையே நான் மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஆதங்கத்தில் இருப்பவர்கள் விடுபட்டு வாழ்க்கையினுடைய போராட்டத்தில் தான் நினைத்ததைச் செய்ய முடியாதவர்கள் பல பேரும் அந்த ஆசையை நிவர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அந்த இடத்தில் போய் நிற்கும் போது அவர்களுக்கு அந்த ஆசை நிவர்த்தி அடைவது மாதிரியான உணர்வைப் பெறுவார்கள்.
உதாரணமாக இசையின் மேல் ஆர்வம் உள்ளவர்கள், இசை பாடல் ஆசிரியராகவோ அல்லது பாடக்கூடியவர்களாகவோ விரும்பியவர்கள் , இசைக் கச்சேரிகளில் அமர்ந்து கொண்டு பிறர் பாடுவதை ரசித்து மகிழ்ந்து தங்கள் உள் மனதின் ஆசையை நிவர்த்தி செய்து கொள்வார்கள்.அப்படித்தான் புத்தகத் திருவிழா அல்லது புத்தகத்தினுடைய கூடல் , பல மனிதர்கள் படைப்பாளிகளாக இல்லாவிட்டாலும் கூட படைப்பை ரசிப்பவனாக படிப்பவனாக இருப்பவர்கள் அனைவருமே கூடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் என்று கூறலாம்.
முதலில் வாசிப்பவர்கள், புத்தகம் வாங்குபவர்கள், வாங்காதவர்கள் என்பதை எல்லாம் தாண்டி அந்த இடத்தில் வந்து நிற்கும் போது அவர்களுடைய, இயற்கையாக அந்த மனிதப் படைப்பினுடைய அந்த ஆன்மா திருப்தி அடைகிறது.அந்தத் திருப்திக்கான இடத்தை இப்படிப்பட்ட கண்காட்சி அளிக்கிறது.இதை முக்கியமான ஒரு அம்சமாக நினைக்கிறேன்.
அதைத் தாண்டி படைப்புகள் என்பது மனிதர்கள் பேசுகிற விஷயங்கள் என்று இருக்கின்றன.பலருக்குப் பேச வாய்ப்பில்லாத போது புத்தகங்கள் வழியாகப் பேசுகிறார்கள். எண்ணங்களை வெளிப்படுத்தத் தெரியாதவர்கள் புத்தகத்தில் வரும் எண்ணங்களோடு பொருத்தி மகிழ்கிறார்கள்.எல்லோரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பாக புத்தகங்கள் உள்ளன.எவ்வளவு ஊடகங்கள் வந்தாலும் புத்தகத்தில் பதிவாவது ஓர் ஆவணம் ,அழிக்க முடியாத ஒன்றாக நிலைத்து நிற்கும்.காகிதத்தில் அச்சிடப்படுவது தான் காலத்தைக் கடந்து ஆவணமாக நிற்கும்.இப்படிப்பட்ட எவ்வளவு ஆவணங்களை சுமந்து கொண்டு இந்தப் புத்தகக் கண்காட்சி இருக்கிறது.மனிதர்களுடைய அறிவை, வரலாற்றை, அரசியலை, ஆன்மிகத்தை என்று எல்லாமும் சுமந்து கொண்டு நிற்கிறது.1984 ஆம் ஆண்டு புத்தகத்திரு விழாவிற்கு நான் சென்று இருக்கிறேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த போது இருந்ததை இன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒரு குழந்தைப் பருவம் போன்றது.அப்போது ஒரு சிறிய அளவில் தான் அது இருந்தது.பத்துப் பதினைந்து அரங்கங்கள் தான் இருக்கும்.இன்று வளர்ந்து வளர்ந்து நூற்றுக்கணக்கான அரங்கங்கள் என்று பெருகி உள்ளது.அரங்கங்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் விதம், பெருகியிருக்கும் வசதிகள், வந்து சேரும் படைப்பாளிகள்,வாசகர்கள், அவர்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள் எல்லாம் மிக விஸ்தாரமாக வளர்ந்துள்ளது.இந்த புத்தகக் கூடுகையில் அந்த உணர்வில் நானும் இத்தனை ஆண்டு காலமாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியான ஒன்று.
அங்கே நடைபெறும் நிகழ்வுகளில் பல படைப்பாளிகள் உடைய எண்ணங்கள், ஓட்டங்கள் எல்லாம் நான் தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டு வருவதை வைத்து இதைக்கூறுகிறேன்.அந்தக் கண்காட்சிகளில் எல்லாம் வாங்கிய புத்தகங்கள், வாங்கிவற்றில் படித்தவை, படிக்காதவை, மறந்து விடுபட்டவை ,படிக்க நினைத்து மறந்தவை, தேடிப் பிடித்துப் படித்தவை என்று ஏராளமான அனுபவங்கள்.பல பேரும் புத்தகம் வாங்க முடியவில்லை என்றாலும் இந்த அரங்கத்தில் போய் நின்று பார்த்து அந்த உணர்வைப் பெறுகிறார்கள்.அங்கே தனது ரசனை ஒத்த வாசகர்களையும் எழுத்தாளர்களையும் பார்ப்பதில் அவர்கள் ஆத்மா திருப்தி அடைகிறது.இப்படி பலதரப்பட்ட உணர்வுகளை அந்த புத்தகக் கண்காட்சி கொண்டிருக்கிறது.
இன்றைக்கு எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சிகள் வந்தாலும் படிப்பு என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது .அது மூளையில் ஒரு சுரப்பியைத் தூண்டுவது போன்றது . இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளத்தில் எவ்வளவு புத்தகங்கள் படித்தாலும் அச்சிடப்பட்டுக் காகிதத்தில் படிக்கும் சுகமான அனுபவத்துக்கு நிகராகாது.அதற்குள் மனம் செய்யும் பயணம் தனியான அனுபவம்.இன்று புத்தக வடிவமைப்பு, அச்சிடல் போன்றவை பெரிய உச்சத்திற்குச் சென்றுள்ளன. எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி, பல்வேறு காட்சி ஊடகங்கள் என வளர்ந்தாலும் பெருகினாலும் புத்தகத்திற்கான மதிப்பு என்றும் இருந்து கொண்டிருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.அந்த நம்பிக்கை இருக்கும் வரை புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பழைய புத்தகக் கடைகளுக்கும் இடம் தரலாம்!
புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில்
நான் எனது 17 வயதிலிருந்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று வருகிறேன்.அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு 17 ரூபாய் 50 காசு டிக்கெட். கையில் 40 ரூபாய் வைத்துக்கொண்டு புறப்பட்டு சென்னை வந்து
எந்த புத்தகத்தையும் வாங்காமல் திரும்புவேன். ஏனென்றால் அப்போது என் கையில் காசு இருக்காது. அப்புறம் ஏன் இங்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சியை பார்க்கும் போது மனதில் ஏற்படுத்தும் பிரமிப்பு புத்துணர்ச்சி ஊக்கம் தனியானது. ஏராளமான புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பார்ப்பது நமக்குள் ஏதோ பெரிய பேட்டரி சார்ஜ் செய்தது போல் சக்தி ஏறிக் கொண்டிருக்கும்.
நான் பிறகு வரும்போதெல்லாம்
புத்தகக் கண்காட்சிக்கு அருகில் விற்கப்படும்
பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று பழைய புத்தகங்களை வாங்கிச் செல்வேன். என்னை கேட்டால் எங்கும் கிடைக்காத பொக்கிஷங்கள் கூட அங்கு கிடைக்கும். ஒருமுறை நானும் என் நண்பரும் அப்படிப் பழைய புத்தக கடையில் தேடிய போது கி.ரா அவர்களின் கையொப்பமிட்ட ஒரு புத்தகம் கிடைத்தது. அதைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் புத்தகம் என்னுடன் வந்த நண்பருக்கு கி.ரா கையொப்பமிட்டுக் கொடுத்தது. அந்த நண்பர் யாருக்கோ கொடுத்து பழைய புத்தகக் கடைக்கு வந்து இருக்கிறது. அதை நான் வாங்கினேன் .எனக்கு இது ஒரு ஆச்சரியமான அனுபவம். எங்கிருந்தோ சுற்றிவிட்டு என் கை வழியே என் நண்பனுக்குச் சென்ற அந்தப் புத்தகம் மீண்டும் என் கைக்கு வருகிறது என்றால் அதனை என்னவென்று சொல்வது?
நான் இத்தனை ஆண்டு காலமாகப் புத்தகக் கண்காட்சி சென்று வருகிறேன். அது வளர்ந்து வளர்ந்து இப்போது விஸ்வரூபம் எடுத்து இவ்வளவு பெரிய அளவில் நிற்கும் போது நிற்கிறது என்பதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. அந்த வாசிப்பு உலகம் படைப்பாளிகள் உலகம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும், நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும், அவர்களைக் கொண்டாட வேண்டும்.
எழுத்தாளர்களுக்கு உரிய சன்மானம் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் படைப்புக்கேற்ற மதிப்பு பெறுமதி வழங்கப்படுவதில்லை.ஆனால் மரியாதையாவது கொடுக்க வேண்டும். அவர்களை வாழ்த்தி மகிழ்ந்து கொண்டாட வேண்டும், போற்ற வேண்டும். ஏனென்றால் ஓர் எழுத்தாளன் அவனுக்காக எழுதுவதில்லை; பணத்துக்காக எழுதுவதில்லை; யாருக்காகவும் எழுதுவதில்லை; பொருள் எதற்காகவும் எழுதுவதில்லை; வரலாற்றை, காலத்தை பதிவு செய்துவிட்டு செல்கிறான்.
ஓர் எழுத்தாளர் என்பவர் தனது எழுத்துக்களில் காலத்தை உறைய வைக்கிறார். தனது சமூகக் கடமையாக அதைச் செய்து கொண்டு விட்டு மறைந்து விடுகிறார். ஆனால் அவர் இருக்கும் போது எந்த மகிழ்ச்சியும் அடைவதில்லை. எனவேதான் நான் எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறேன். அந்த வகையில் நான் எழுத்தாளர்களை நிறைய பேரை புகைப்படப் பதிவாக எடுத்து ஆவணப்படுத்தி வருகிறேன். இதில் எனக்கு ஒரு சிறிய திருத்தி இருக்கிறது.எழுத்தாளர்கள் வாழ்க்கையை ஆவணப்படமாக பதிவு செய்து வருகிறேன் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் சுகுமாரன் ஆகியோரை இப்படிச் செய்திருக்கிறேன். இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.என்னைப்போல இந்தப் பணியை யாராவது இப்படிச் செய்யலாம். செய்வார்கள், செய்ய வேண்டும்.
சுந்தர ராமசாமி அவர்களுடைய படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட வரிகளுடன் எனது புகைப்படங்கள் இணைந்து ஒரு புத்தகம் வெளியானது. அது 2002ல் புத்தகக் கண்காட்சியை ஒட்டி அது வெளியானது .
2021 இல் கி.ரா அப்பா அவர்களின் மிச்சக் கதைகள் என்று பதிப்பித்தேன். அது அவர்கள் எழுதி பிரசரிக்கப்படாத கதைகளைத் தொகுத்து வெளியானது.அதன் பதிப்பு உரிமையை எனக்கு அப்பா வழங்கியிருந்தார்.
மிச்சக் கதைகள் என்ற பெயரில் அதை நான் நூலாக வெளியிட்டேன். அப்போது அப்பா கி.ரா அவர்கள் நலமுடன் இருந்தார்கள் .அது எனக்கு எனக்கு மறக்க முடியாத ஆண்டாகும் .அதனால் அந்த புத்தகக் காட்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாததாக மாறியது.
அதன் பிறகு இந்த ஆண்டு கல்யாண்ஜி அவர்கள் அவர்களின் கவிதைகளுடன் எனது புகைப்படங்களும் இணைந்து 'ஒளியில் மிதக்கும் சொற்கள்' என்கிற புத்தகம் வெளிவந்து இருக்கிறது. புத்தகம் தயாராகிவிட்டதும் அதைப் பார்த்த கல்யாண்ஜி எனக்கு தொலைபேசியில் 'எனக்கு என் கை நீள முடியும் என்றால் இங்கிருந்தே உனது கன்னத்தைத் தடவுவேன்' என்றார் .அது எனக்கு ஒரு சிறந்த பரிசாக இருந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு புத்தகக் காட்சி எனக்கு சிறப்பான ஒன்று.
நான் ஒவ்வொரு முறை வரும்போதும் புத்தகக் காட்சிக்கு ஒரு வாசகனாக மட்டுமே வருகிறேன்.
புகைப்படக்காரனாக நான் வருவதும் இல்லை வந்து எதையும் பார்ப்பதுமில்லை. அப்படி இருந்தால் அந்த புத்தகங்களை நான் ரசிக்க முடியாது. நான் ட்ரெடில் மிஷினில் அச்சடித்த காலம் முதல் ஆப்செட்டாக மாறிய காலம் கடந்து இப்போது டிஜிட்டல் முறையில் புத்தகங்கள் வரும் காலம் வரை அதன் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன்.அப்பப்பா எத்தனை அசுர வளர்ச்சி. ஓவியங்கள் ,படங்கள் எல்லாம் எவ்வளவு தத்ரூபமாக துல்லியமாக இப்போது அச்சாகின்றன.காலம் மாற்றத்தை எண்ணி தொழில்நுட்ப வளர்ச்சியை நினைத்து மகிழ்ச்சியாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது.
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் விற்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் புத்தகம் வாங்க விருப்பப்பட்டு வாங்குவதற்கு வசதியில்லாத பலரும் புதிய புத்தகங்களை வாங்கத் தயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பழைய புத்தகக் கடைகளையும் ஊக்குவிக்க வேண்டும். புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளேயே பழைய புத்தகக் கடைகள் வைக்க தனியே இடம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும். ஆனால் அதை உதாசீனம் செய்வதும் அருகில் இருந்தால் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. பழைய புத்தகக் கடைகளுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கிட வேண்டும் என்று நான் வாசிப்பார்வம் இருந்தும் வசதி இல்லாதவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
உயிர்ப்புள்ள புத்தகக் காடுகளுக்குள் செல்லும் அனுபவம்!
வாசகர் அ. ஜெயவேல்
கொரோனா முதல் அலை முடிந்த கையோடு மத்தியப் பிரதேசம் பயணம் சென்றேன். ஒரே நாளில் 200 கிலோமீட்டர்கள் வரை மத்தியப் பிரதேச காடுகள், மற்றும் கிராமங்கள் வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது காலை முதல் மாலை வரை காரின் உள்ளேயே இருக்க வேண்டிய நிலை. ஆனால் எந்த இடத்திலும் எனக்கு சோர்வே ஏற்படவில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும் என்று பின்னர் வந்து யோசித்த போது, காடுகள் ,கிராமங்களில் இருந்த விதவிதமான மரங்கள், செடிகள் என்னை உற்சாகமாக வைத்து அதன் உயிர்த் தன்மையை எனக்குக் கொடுத்ததை யோசித்து அறிய முடிந்தது. மேலும் பழகிய மன அமைப்பில் இருந்து விடுபட்டதும் மற்றொரு காரணம். மாறாக அந்தப் பயணத்தின் இறுதியில் குஜராத் மாநில நெடுஞ்சாலைகளில் எங்களின் கார் சென்று கொண்டு இருந்தபோது ஒரே மாதிரியான அமைப்பிலான கட்டிடங்களைக் கவனிக்க முடியாமல் சோர்வடைந்து உடனே தூங்கியும் போனேன். நிற்க.
புத்தகங்களோடு இருப்பது உயிர் உள்ள காட்டில் பயணம் செய்வதைப் போன்றதுதான். ஆனால் திட்டமிட்டுச் சொல்ல இயலாத ஏதோ ஒன்றை ஒவ்வொரு புத்தகமும் வாசிக்கும் போது நமக்கு கொடுத்து விட்டுத் தான் அவை செல்கின்றன. நான்
வாசிக்க ஆரம்பித்துச் சில வருடங்கள் கழித்தே புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். நான் வாசிக்கக் காரணமாக இருந்தவர் ஆசிரியர் தங்கமணி. அவர், 2010 வாக்கில் சென்னை புத்தக கண்காட்சி சென்று திரும்பும் தை மாதக்குளிரில் விடியற்காலையில் மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய போது அவரை மறித்து சரிபாதி புத்தகங்களை வலுக்கட்டயமாகவும் அவர் விருப்பத்தோடும் வாங்கிச் சென்று இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பல்வேறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வருகிறேன். மிக முக்கியமாக சென்னை புத்தக கண்காட்சிக்கு . நூல் அரங்குகளில் நுழைந்த உடனே புத்தகங்களைப் பார்த்தவுடன் சூழலை மறப்பது ஆரம்பகால பழக்கங்களில் ஒன்றாக ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது .என் மனைவி, நெருங்கிய நண்பர்கள் உட்பட எவரும் இதனாலேயே என்னோடு புத்தக அரங்கிற்குள் வரமாட்டார்கள்.அந்த உலகத்தின் நுழைந்து விட்டால் அருகில் இருப்பவர்களை மறந்து விடுவேன். ஒரு வகையான பரவசநிலை அல்லாமல் நான் புத்தகங்களை வெறுமனே என்றும் கண்காட்சியில் நான் தொட்டதில்லை.
மேலும் ஒரு புத்தகத்தைத் தொட்டுப் பார்த்து ஆரம்ப சில வரிகளைப் படிப்பேன். அப்புறம் புரட்டி ஏதோ ஒரு பக்கத்தில் உள்ள பத்தியினைப் படிப்பேன். இப்படியாகச் சில முறை செய்து புதிய புத்தகங்களை வாங்கி இருக்கிறேன்.
அப்புறம் என் நண்பர்கள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லத் தேவை இல்லை . வீட்டில் இருந்தே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்வதைப் பார்த்து நான் பெரும்பாலும் சிரித்துக் கொள்வேன்.
இணைய வழியில் ஆன்லைனில் இப்போது நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் எல்லா புத்தகங்களும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் ஒரே இடமாக இருப்பது தான் இந்தப் புத்தகக் கண்காட்சி.அது மட்டுமல்லாமல்
புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என்பது புத்தகம் வாங்குவதற்கு அல்ல. பல மணி நேரங்கள் செலவழித்துப் புதிய புத்தகங்கள் பற்றியான நினைவுகளை உருவாக்குவது. சில புத்தகங்களைச் சில வருடங்கள் பார்த்து அப்புறமாக அதைப் பற்றியான ஒரு கவனம் நமக்குள் உருவாகி அப்புறம் வாங்கிப் படிக்க நம்மை தூண்டக் கூடியவை. மேலும் பிரதி கிடைக்காத பல புத்தகங்களை எங்காவது ஒளிந்து இருப்பதைக் கண்டறிந்து அதை நாம் வாங்கலாம். மேலும் நாம், மதிக்கக் கூடிய, எழுத்தாளர்கள், தீவிரமாக வாசிக்கக் கூடிய வாசகர்களின் அறிமுகம் புத்தககண்காட்சியில் நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களின் சிபாரிசுகளைக் கேட்டும் புத்தகங்கள் வாங்கலாம். குறைந்த பட்சம் நான்கைந்து நாட்களாவது புத்தகங்கள் தேடச் செலவிடும் போதுதான். நம் ரசனை, தேடல் என்ன என்பதை நம்மால் அறிய முடியும்.இது எல்லாம் தாண்டி, புத்தகம் படிப்பது என்பது முழுக்க முழுக்க வேறொரு உலகத்தில் வாழ்வது அதை வாழப் பழகிய ஒருவன் வாழ்நாள் முழுவதும் அந்தப் போதையை விட மாட்டான்.