‘நீ மட்டும் ஒழுங்கா படிக்கல… நாலு மாடு வாங்கி விட்ருவேன் பாத்துக்கோ…’ இப்படியொரு கண்டிப்பை நாம் எல்லோரும் எதிர்கொண்டிருப்போம் இல்லையா…!
‘படித்துவிட்டு, நல்லவேளைக்கு போ...’ என்ற உயர்ந்த நோக்கத்துக்காக சொன்னாலும், ஆடு மாடு மேய்ப்பது இழிவாகவும், எருமை மேய்ப்பது அதைவிட மோசமாகவும் பார்க்கும் பழக்கம் நம் சமூகத்திடம் உள்ளது.
மனித சமூகம் நெடுநீண்டகாலமாக மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், மேய்ச்சல் தொழிலையும் அது சார்ந்த மக்களையும் பொருட்படுத்தாமல்தான் இந்த சமூகமும், அரசும் உள்ளது.
மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுவரும் கிடைக்காரர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், நெருக்கடிகள் கண்டு கொள்ளப்படாமலே உள்ளன.
இவர்களின் நலன் காக்க தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் ராசீவ் காந்தியிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் பல்வேறு சமூக மக்கள் பாரம்பரியமாக மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். தென்மாவட்டத்தில் கோனார்களும், கொங்கு பகுதியில் குறும்ப கவுண்டர்களும், ஊட்டி - நீலகிரியில் தோடர்களும், பர்கூரில் லிங்காயத்துகளும் என பல்வேறு சமூகத்தினரும் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
நிலமற்ற கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக மேய்ச்சல் தொழில் உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீதாரிகள் விழுப்புரம் வரையும், கோவை, திண்டுக்கல், பழனி பக்கம் உள்ள குறும்ப கவுண்டர்கள், பாலக்காடு வரை செல்கிறார்கள். இவர்களைதான் கிடைக்காரர்கள் என்பார்கள். உள்ளூரிலேயே பொது இடங்களைச் சார்ந்து கால்நடைகளை வளர்ப்பவர்கள் உள்ளூர் மேய்ச்சல்கார்கள் என்பார்கள்.” என்றவரிடம் தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்றோம்.
“மேய்ச்சல் தொழிலில் பல்வேறு சமூகத்தினர் ஈடுபடுவதால், அவர்கள் ஓர் அமைப்பாகத் திரளவில்லை. ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் கிடை ஆடு போடும் கீதாரிகளுக்குச் சங்கங்கள் இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பாகவே உள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களோடு அந்த அமைப்பின் வேலை நின்றுவிடுகிறது.
மேய்ச்சல் தொழிலின் அடிப்படையிலான பிரச்னைகளை, கோரிக்கைகளை பொதுச்சமூகத்திடம் கொண்டு போகும் அளவுக்கு அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக இல்லை.
நான் மேய்ச்சல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், சிவகங்கை, காளையார் கோயில் பகுதியில் உள்ள மேய்ச்சல் சமூகத்தினரை ஒருங்கிணைக்கத் தொடங்கினேன். இவர்களின் பிரச்னைகளை ஜனநாயக ரீதியாக போராடக் கூடிய இயக்கங்களிடம் கொண்டு சென்றோம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அமைப்பை உருவாக்கினோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதை பதிவு செய்தோம். இப்படியொரு ஒருங்கிணைப்பு இதுவரை தமிழ்நாட்டில் நடக்கவில்லை.” என்றவர், மேய்ச்சல் ஏன் முக்கியமான தொழில் என்பதை விளக்க ஆரம்பித்தார்.
“கிடை போடுதல் வேளாண்மையில் ஒரு அங்கம். வேதி உரங்கள் வருவதற்கு முன்னால், டெல்டாவின் விவசாயத்தை செழிக்க வைத்தது கிடை போடுதல் தான். ராமநாதபுரம், சிவகங்கையிலிருந்து இடம்பெயர்ந்து போன கீதாரிகள், டெல்டாவில் கிடை போட்டார்கள். மண்ணை வளப்படுத்த கிடை போடுவதுதான் சிறந்த வழி.
இப்போது, இயற்கை விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து கிடை போடுவது எந்தளவுக்கு முக்கியம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேய்ச்சல் சமூகத்தைப் பற்றிய புரிதல், அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் அரசிடம் இல்லை. இது தொடர்பாக கால்நடை துறையோடு சேர்ந்து எல்லா மாவட்டத்திலும் பரப்புரையும் கணக்கெடுப்பும் செய்துள்ளோம். இதெல்லாம் தொடக்க நிலையில்தான் உள்ளது.” என்கிற ராசீவ் காந்தி கச்சக்கட்டி ஆடுகள் என்கிற ஒருவகை செம்மறியாடுகள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
“மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அருகே உள்ள கிராமம்தான் கச்சக்கட்டி. இந்த கிராமத்தைச் சுற்றி நிறையக் குன்றுகள், மலைகள் உள்ளன. இதில் ஏறி மேய்வதற்கான உடல் அமைப்பும், கால் அமைப்பும் கொண்ட ஆடுகளை இந்த ஊரின் பெயரோடு சேர்த்து அழைக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகக் குன்றுகள், மலைகள் மீது ஏறி மேய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கச்சைக்கட்டி ஆடுகள் ‘கால் கானை நோயால்’ பாதிக்கப்பட்டு இறந்துபோகின்றன. இந்த ஆடுகள் அழியும் தருவாயில் உள்ளன. இப்போது ஐந்நூறு ஆடுகள்தான் உள்ளன. கச்சக்கட்டி ஆடுகளை பாதுகாக்க அரசு ஏதாவது சிறப்பு திட்டங்களை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். மேலும், ராமநாதபுரம் வெள்ளை செம்மறிஆடுகள் இனங்களை பெருக்குவதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
ஆடு, மாடு மேய்ப்பவர்கள் படிக்காதவர்கள், கிராமத்தவர்கள் என்ற புரிதல்தான் உள்ளது. மண்வளத்தை பெருக்குவதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில், உள்நாட்டு கால்நடைகள் முக்கிய பங்களிப்பு செய்கின்றன என்பதை யாரும் கருத்தளவில் கூட கொண்டு செல்லவில்லை. மேய்ச்சல் தொழிலில் மட்டும்தான் ஜீரோ கார்பன் என்பது உள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் கூட நடக்கவில்லை என்றாலும் 2026 -ஆம் ஆண்டை‘மேய்ச்சல் நிலங்கள் மற்றும் கால்நடை மேய்ப்பர்களின் சா்வதேச ஆண்டாக’ ஐ.நா. சபை அறிவித்துள்ளதால், இது தொடர்பான விவாதம் மேலெழுந்துள்ளது.
மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் மக்களை ஒன்று திரட்டி, வட்டார அளவில் அவர்களுக்கு சங்கத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தருவதுதான் முதன்மை நோக்கம். அதேபோல், இது லாபகரமான தொழில் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கிடை போடுபவர்களின் பொருள்களை விற்பனை செய்ய காளையார் கோயிலில் கிடை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறோம். இதை மற்ற பகுதிகளிலும் தொடங்க உள்ளோம்.” என்றவரிடம் மேய்ச்சல் காரர்கள் எதிர்கொள்ளும் சவால் குறித்துக் கேட்டோம்.
“தமிழ்நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வன மேய்ச்சலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், மாநிலம் முழுக்க 75 ஆயிரம் ஹெக்டர் (ஏறக்குறைய ஒன்றரை லட்சம் ஏக்கர்) நிலங்களில் தைல மரங்களை நட்டுள்ளது. இதில், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஆகும். இந்த பகுதிகளை மீண்டும் வனங்களாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளோம். இதற்காக தைல மர எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி உள்ளோம்.
வலசை பாதைகளில் சாலைகள், வீடுகள் வந்துவிட்டன. மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதால், கிடை போடுபவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். இயற்கைப் பேரிடர்களால் மாடுகள் இறந்தால் 37 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். ஆனால், இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. கிராம நிர்வாக அலுவலர்களும் அலைக்கழிக்கிறார்கள். நாங்கள் தலையிட்ட பிறகு, இந்த வருடம் மட்டும் 50 பேருக்கு இழப்பீடு வாங்கிக் கொடுத்திருக்கிறோம். மின்சாரம் தாக்கி உயிரிழந்தாலும் இழப்பீடு உண்டு.” என்று நிதானமாகப் பேசும் ராசீவ் காந்தி கடந்த மே 17, 18 இல் ‘வலசைப் பயணம்’ என்ற நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார். இதில் பல சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு கீதாரிகளுடன் பயணம் மேற்கொண்டனர்.
இந்த வலசைப் பயணத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் ஜெகதீசனிடம் பேசினோம், “தமிழ்நாட்டில் பெரும்பாலும் நாட்டின மாடுகளை வளர்ப்பவர்கள் கிடை போடுபவர்கள்தான். காங்கேயம் நாட்டினத்தை தவிர புலிக்குளம், பர்கூர், உம்பளச்சேரி ஆகிய நாட்டினங்கள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன.
இந்த வலசைப் பயணத்தில் சில மேய்ச்சல்காரர்கள், கீதாரிகளிடம் பேசினேன். மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதாகவும், காடுகளில் மேய்ச்சலுக்கு அனுமதி மறுப்பதாகவும், சமவெளி, புறம்போக்கு நிலங்கள் தொழிற்சாலை, சிப்காட் அமைக்க எடுத்துக் கொள்ளப்படுவதாக ஆதங்கப்பட்டனர். மேய்ப்பதற்கு இடம் கொடுத்தால் போதும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
சாலை விபத்திலும், இடி விழுவதாலும் உயிரிழக்கும் மாடுகளுக்கு நிவாரணத்தொகை கிடைப்பதில் நிறைய நடைமுறை சிக்கல் இருப்பதை தெரிந்து கொண்டோம். குறிப்பாக, ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இடி விழுந்து மாடு இறந்துவிட்டால், அதற்கான இழப்பீட்டை எப்படிப் பெறுவது என்ற புரிதலும், யாரிடம் முறையிடுவது என்ற தெளிவின்மையும் இல்லாமல் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேய்ச்சல் சமூக மக்கள் இருக்கின்றனர். மேய்ச்சல் தொழிலைப் பெரும்பாலானவர்கள் கலாசார பண்பாகவும் சிலர் குலத்தொழிலாகவும் பார்க்கின்றனர்.
அடுத்த தலைமுறையினருக்கு இத்தொழிலின் மீது ஆர்வம் இருந்தாலும், நடைமுறை சூழல் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை. அதனால் வெவ்வேறு தொழிலை நோக்கிச் செல்கின்றனர்.
மேய்ச்சலுக்கு கண்போன போக்கில் போக முடியாது. அவர்களுக்குள்ள பாரம்பரிய அறிவுப்படி, மேய்ச்சலுக்கு எப்படிப் போக வேண்டும், எங்குத் தண்ணீர் கிடைக்கும், எங்கு தங்கலாம் என்ற தகவலை அவர்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு சாணம் தான் பெரிய வருமானமே. யாரோ ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் கிடைபோட சொல்கிறார்கள் என்றால், அவர் ஒரு மாட்டுக்கு இவ்வளவு ரூபாய் (ஒரு மாட்டுக்குத் தலா 5 அல்லது 10 ரூபாய்) என கணக்கு பண்ணி ஒரு தொகை தருவார்.
2006 ஆம் ஆண்டு வனச்சட்டம், பாரம்பரியமான மேய்ச்சல் சமூகத்துக்கு வனங்களில் மேய்ப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தாலும், தமிழ்நாட்டில் அது நடைமுறையில் இல்லை.” என்கிறார் அவர்.
வலசைப் பயணம் நடத்துவதுக்கான நோக்கத்தை ராசீவ் காந்தியிடம் கேட்டதுக்கு, “மேய்ச்சல் தொழிலைப் பத்தி பொதுச் சமூகத்துக்கும் கால்நடைத் துறைக்கும் தெரியாது என்பதால், மாதத்துக்கு ஒரு முறை வலசை பயணம் நடத்துகிறோம். தொல்லியல் நடை, பசுமை நடை போன்று மேய்ச்சல் சமூக மக்களின் பாரம்பரியத்தை, அறிவை எல்லோரும் தெரிந்து கொள்வதற்காக நடத்துகிறோம். இதுவரை நான்கு இடத்தில் நடத்தியுள்ளோம். கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, மதுரை ஆகிய ஊர்களில் நடத்தியுள்ளோம். பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், நாட்டு மாடுகளின் ஆர்வலர்களை அழைத்துக் கலந்து கொள்ள வைக்கிறோம். ஆன்மீக சுற்றுலா போன்று கால்நடை வளர்ப்பு சுற்றுலாவும் எதிர்காலத்தில் கொண்டுவருவதுதான் எங்களின் திட்டம்.” என்கிறார் ராசீவ் காந்தி.
“இன்று புலிக்குளம் மாடு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். காட்டு மாடாக இருந்ததை நாட்டு மாடாக மாற்றியது என்னுடைய முன்னோர்கள்தான்,’’ என்கிறார் புலிக்குளம் கிருஷ்ணன். இவர் ஒரு மூத்த கீதாரி. “ அப்போதெல்லாம் மலை பாஸ் இருந்தது. இதை பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ரத்து செய்துவிட்டார்கள். அதை நீக்க நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய முயற்சியால் புலிக்குளம் மாட்டையும் ஒரு தனி இனமாக சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்கீகரித்துள்ளனர்.
எங்கள் ஊரில் 20 கிடைகள் இருந்தன. ஒவ்வொரு கிடைக்கும் 500 மாடுகள் இருக்கும். இப்போது மேய்ச்சலுக்கு இடம் இல்லாமல் போனதால் 3 கிடைதான் உள்ளது. அதில் முப்பது, நாற்பது மாடுகள்தான் உள்ளன. என்னுடைய பிள்ளைகள் எல்லாம் மாட்டை விற்றுவிடலாம் என்கிறார்கள். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டேன். என்னுடைய காலம் இருக்கும் வரை இருக்கட்டும் என்று சொல்லிவிட்டேன்.
மாடுகளைப் பார்த்தால் கையெடுத்து தொட்டுக் கும்பிடுபவர்கள் இருந்தாலும், முன்பைவிட இப்போது மேய்ச்சல்காரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். நாங்கள் ஏதோ பொழுதுபோக்குக்காக ஆடு, மாடுகளை வளர்ப்பதாகப் பார்க்கிறார்கள். மேய்ச்சல்காரர்களுக்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.” என கோரிக்கை வைக்கிறார் இவர்.