ஆசியாவில் அதிவிரைவாக வளர்ந்து வரும் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா இது. ஆம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட வருடாந்திர நிகழ்வான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) அப்படித்தான் மதிப்பிடப்படுகிறது.
“தமிழை உலகுக்கு – உலகைத் தமிழுக்கு” என்ற உயர்ந்த நோக்குடன் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முன்னெடுத்து வரும் பல்வேறு மொழிபெயர்ப்பு திட்டங்களின் தொடர்ச்சியாக இந்தத் திருவிழா தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை வாயிலாக நடத்தப்படுகிறது.
2023ஆம் ஆண்டு 24 நாடுகள்,
2024ஆம் ஆண்டு 40 நாடுகள்,
2025 ஆம் ஆண்டு 64 நாடுகள் என பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,
2026 ஆம் ஆண்டு 102 நாடுகள் பங்கேற்றுள்ளன.
“நாகரிகங்களுக்கு இடையேயான உரையாடல்” என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு இது நடத்தப்பட்டது.
ஜனவரி 16, 17, 18 ஆகிய தினங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் கர்நாடக பள்ளிக் கல்வி அமைச்சர் பங்கேற்றார். நிறைவுவிழாவில் புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் பங்கேற்று, பெரியார் எழுத்துக்கள் தனக்கு எவ்வாறு தூண்டுகோலாக இருந்தன என்பதை எடுத்துரைத்தார்.
கேலிச்சித்திரம், செயற்கை நுண்ணறிவு, பெண்ணியம், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு சவால்கள், உண்மை நிகழ்வுகள் கதையாக உருவெடுக்கும் விதம் உட்பட்ட பல்வேறு பொருண்மைகளின் கீழ் 19 விவாதங்கள் நடைபெற்றன.
மூத்த எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒருசேர நிகழ்வுகளில் பார்க்க முடிந்தது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பலரும் சங்கமித்திருந்தனர். அம்பை, வைரமுத்து, இமையம், சலபதி, கனிமொழி கருணாநிதி, மனுஷ்ய புத்திரன், ஆயிஷா நடராஜன், ஆர். பாலகிருஷ்ணன், பேராசிரியர் அரசேந்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், குட்டி ரேவதி, நிவேதிதா லூயிஸ் என எழுத்தாளர்கள் பலர் எழுந்தருளியிருந்தனர்.
மினி கிருஷ்ணன், கண்ணையன் தட்சிணாமூர்த்தி, வெங்கடாசலம், ஜி. குப்புசாமி போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் அமெரிக்கரான தாமஸ் ஹிட்டோசி, பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூலை பிரெஞ்சில் மொழிபெயர்த்த லெட்டிஸியா இபனேஸ், தமிழ் இலக்கிய நூல்களை ஜெர்மன் மொழியில் வெளியிடும் திரௌபதி வெர்லாக் பதிப்பக உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் முதலிய பலரும் தங்கள் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா அனுபவங்களை தமிழ் ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் நவீனத் தமிழ் இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியையும் மொழிபெயர்ப்பாளருமான லெட்டிஸியா இபனேஸ் அந்திமழை இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியைப் அடுத்த பக்கம் காண்க.
வேறு எந்த மாநிலமும் நடத்தாத அளவுக்கு தமிழ்நாடு இப்படி ஒரு புத்தகத் திருவிழாவை நடத்துவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் குறிப்பிட, இந்த ஆண்டு நிகழ்வின் பொருண்மைக்கு ஏற்ப புத்தகத் திருவிழா நாகரிகங்களுக்கு இடையேயான உரையாடலாக அமைந்ததாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் தெரிவித்தார்.
இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மொத்தம் 2500க்கும் அதிகமான விருப்ப வெளிப்பாடுகள் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு மானியம் வாயிலாக பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் பல்வேறு பன்னாட்டு பதிப்பகங்களுடன் இணைந்து கொண்டு வந்துள்ள 44 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
நிறைவுவிழாவில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர், சாகித்ய அகாடமி விருதுகளில் ஒன்றிய அரசின் தலையீடு என்பது கருத்துரிமைக்கு எதிரானது எனக் குறிப்பிட்டதுடன், இனி ஆண்டுதோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, மராத்தி, பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் சிறந்த இலக்கியங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்ட ‘தமிழ்ச்செம்மொழி விருது’ வழங்கப்படும் என அறிவித்தார். எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லாமல் இலக்கிய ஆளுமைகள் கொண்ட குழுவின் மூலம் விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்ற அறிவிப்பாக அமைந்தது.
உலகிலேயே பழமையான பன்னாட்டு புத்தகக் கண்காட்சியான ‘ப்ராங்பெர்ட் புத்தக கண்காட்சி' இந்த ஆண்டு மதிப்புறு விருந்தினராக பங்கேற்றது. அந்தக் கண்காட்சிக்கான ஆசிய இயக்குநர் கிளாடியா கெய்சர் தமிழ் நூல்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து வரவேற்பு பெற்றுவருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp
அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram