சென்னை எண்ணூர் அனல் மின்நிலையத்தை விரிவாக்கும் திட்டம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று எர்ணாவூரில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. திட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க.வினர் அதிகமான அளவில் முன்கூட்டியே வந்து அதிகமான இருக்கைகளை ஆக்கிரமித்ததால் செய்தியாளர்கள்கூட உள்ளே போகமுடியாத நிலைமை உண்டானது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமானவர்கள் வந்ததால் அரங்கம் நிறைந்துவிட்டது எனக் கூறி அவர்களைக் காவல்துறையினர் தடுத்து அனுப்பினர்.
கூட்டம் தொடங்கியதும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், காப்பாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினர். அப்படி மற்றவர்கள் சூழல் பாதுகாப்பைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மாடியில் அமர்ந்திருந்த ஒரு கும்பல் சத்தமிட்டபடியே இருந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாட்டாளர்கள் கருத்துக்கூறுவதில் சிரமப்பட்டனர்.
தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்தவர் பேசுகையில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர், ஒலிவாங்கியைப் பறித்து இப்போது பகுதிச்செயலாளர் பேசுவார் என்று கூற, சூழல் காப்பாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் சங்கர், “ திருவொற்றியூர் மண்ணின் மைந்தர்களைத் தவிர வேறு யாரும் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.” என கட்டளை பிறப்பிப்பதைப் போலக் கூற, அருகிலிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கு மாநில அளவில் யாரும் வந்து கருத்துக்கூறுவது வழக்கம் எனும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அதுவும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே இப்படிப் பேசலாமா என எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும் அதே பகுதியைச் சேர்ந்தவருமான மேகா, தானும் அதே பகுதியைச் சேர்ந்தவரே என்றும் ஈரோட்டிலிருந்து வந்த பெரியார்தான் தமிழ்நாடு முழுவதற்கும் பேசினார் என்றும் பதிலடி கொடுத்தார்.
ஆனாலும், தி.மு.க.வினரும் சட்டப்பேரவை உறுப்பினரும் அசராமல் அவர்கள் போக்கிலேயே தொடர்ந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுவதற்குமுன் அக்கட்சியினர் பேசும்போதும் அவர்கள் இடையூறு செய்தபடி இருந்தனர். பின்னர் வந்த சீமான் பேசியபோது, அனல் மின்நிலையத்துக்கு மாற்றாக சூரிய, கடல் அலை மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்பதால் அனல் மின்சாரத் திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தினார். அதை வேண்டும் என்பவர்கள் அனல் மின்நிலையம் வெளியேற்றும் சாம்பல் அருகில் வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று சாடினார்.