நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உடன் 
சிறப்புக்கட்டுரைகள்

எட்டு ஆண்டுகளும், எட்ட வேண்டிய இலக்குகளும்

மரு.சங்கர சரவணன்

எட்டு ஆண்டுகளுக்கு முன், பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் அவர்களை முதன்முறையாக அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சந்தித்தேன். கல்வி முறைமைகளை மாற்றுவதற்காக அவர் மேற்கொண்ட நுட்பமான முயற்சிகள், என் ஆசிரியப் பணிப்பாதையில் ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது. நான் அயற் பணியில் கால்நடைத்துறையில் இருந்து கல்வித்துறைக்கு வந்தேன். தமிழ் மாணவர்களின் கல்விப் பாதையை மேம்படுத்த அவர் எடுத்த முயற்சிகளில், சிறிதளவு பங்களிப்பை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நான் பணியாற்றி வழங்க முடிந்தது. அந்த சந்திப்பின் போது ஆரம்பித்த உறவு, ஆண்டுகள் செல்லச் செல்ல வளர்ந்தது, பல்வேறு பரிணாமங்களைக் கண்டது.

கடந்த எட்டு ஆண்டுகளில் அலுவல் நிமித்தம் பலமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். ஆனால் சமீபத்திய சந்திப்பு எட்டு ஆண்டுகளுக்குப் பின் அதே ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பு, என் கல்வித்துறைப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் எளிமையாக, இனிமையாக உரையாடினார். தற்போது தமிழ்நாட்டின் நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் அவர் சந்திப்பின் போது என்னிடம் ‘தமிழர் நிதி நிர்வாகம்' நூலை வழங்கினார். புத்தகத்தின் முன்னுரையில் தமிழ் நாட்டு வரலாறு, இலக்கியம் மற்றும் நிதி நிர்வாகம் ஆகியவற்றின் இடையிலான தொடர்ச்சியை நுட்பமாக பதிவு செய்திருந்தார். ‘இலக்கியங்களின் ஒளியில் நிதி நிர்வாகத்தின் அடையாளங்களை வாசிக்கும் முயற்சி இது’ என்று குறிப்பிட்டிருந்தார். திருக்குறளில் நிதி நிர்வாகக் கோட்பாடுகளைக் கண்டறிந்து, சங்க இலக்கியங்களிலிருந்து வரி வணிகம் போன்றவற்றிற்கு சான்றுகள் தந்து, நவீன அரசாணைகள் வரை நிதி நெறிமுறைகள் எப்படி மேம்பட்டன என்பதைக் காட்டும் தனிச்சிறப்புடைய நூலாக இது அமைந்திருந்தது. இந்த நூலைத் தரமாக அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக வழங்கியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகளிலும் பன்னாட்டு புத்தகத் திருவிழாக்களிலும் நான் அளித்து வரும் பங்களிப்பை முன்னிறுத்தி, அவர் ‘உலகம் சுற்றும் வாலிபத் தமிழருக்கு’ என அன்புடன் எழுதி கையொப்பமிட்டு அளித்தார். அந்த எளிய வார்த்தைகளின் பின்னால் அவரின் அன்பும், நம்பிக்கையும் தெரிந்தது. அந்த நொடியில், கடந்த எட்டு ஆண்டுகளின் பயணம் ஒரு கணத்தில் மனதுள் விரிந்தது.

உரையாடலின் போது, நாங்கள் பழைய நினைவுகளை மீட்டோமோ இல்லையோ, புதிய முயற்சிகளை பற்றியும் எதிர்காலத்தில் எட்ட வேண்டிய இலக்குகள் குறித்தும் பகிர்ந்தோம். குறிப்பாக, அவர் தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்தபோது தொடங்கிய முக்கிய திட்டங்களைப் பற்றிய உரையாடல் தனி நெருக்கத்தை வழங்கியது. ‘நான் முதல்வன்' திட்டம் தமிழக இளைஞர்களின் திறமைகளை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன்ஆதாரமாகவும், தொழில்முறை பயிற்சிகளை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும், இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் (UPSC) தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 57 பேரில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாளிகள். இது எதிர்காலத்தில் இன்னும் வளர்ந்து விருட்சமாகும். இலவசப் பயிற்சி மையங்கள், மாத உதவித்தொகை, நேர்முகத் தேர்வுக்கான ஊக்கத் தொகை ஆகியவை மாணவர்களின் கனவுகளை விரைவில் நனவாக்க உதவின.

1980களிலேயே ஐஏஎஸ் தேர்வை முழுமையாக தமிழில் எழுதி வெற்றி பெற்ற ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் வெற்றியை நினைவு கூரும் வகையில் அவ்வாறு வெற்றி பெற்றவர்களை ‘பாலா பரம்பரை' என்று நாங்கள் குறிப்பிடுவோம். மேனாள் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மேனாள் நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத், தற்போதைய விருதுநகர் ஆட்சியரும் என் மாணவர்களில் ஒருவருமான ஜெயசீலன் உட்பட்ட பலர் பாலா பரம்பரையில் அடங்குவர். இந்த ஆண்டு அந்தச் சாதனையை நிகழ்த்திய தம்பிகள் சிஎம் ஃபெல்லோவாக இருக்கும் காமராஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளர் பணியில் இருப்பவரும் மதுரையைச் சேர்ந்த தையல் கலைஞர்களின் மகனும் நான் முதல்வன் திட்டத்தின் பயனாளிகளில் ஒருவருமான சங்கர பாண்டியராஜ். இவர்களோடு தமிழை விருப்பப் பாடமாக எடுத்து அகில இந்திய அளவில் 25 வது இடம் பிடித்த எனது மாணவியும் சென்னையைச் சேர்ந்த மின் தொழில்நுட்பரின் மகளுமான ஜிஜியின் வெற்றி குறித்தும் பேசி மகிழ்ந்தோம்.

தமிழ்நாட்டின் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையேயும் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வென்ற மாணவர்கள் 559 பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது குறித்தும் இந்த ஆண்டு முதல் இந்திய குடிமைப் பணி ஆளுமைத் தேர்வுக்கு செல்வோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது குறித்தும் அவை தமிழ்நாட்டு இளைஞர்களை எவ்வாறு உற்சாகப்படுத்தும் என்பது குறித்தும் உரையாடலின் ஒரு பகுதி இருந்தது.

அதே போல், ‘CM Fellowship' திட்டம் தொடங்கப்பட்டதும், இளைஞர்களுக்கு நேரடியாக நிர்வாக அனுபவம் பெறும் வாய்ப்பைத் திறந்தது. மூத்த அதிகாரிகளின் கீழ் பணியாற்றி, திட்டங்களை நிர்வகித்து, அரசுத் திட்டங்களில் நேரடி அனுபவம் பெறும் இந்த வாய்ப்பு, மாநில நிர்வாகம் எதிர்காலத்தில் திறமையான தலைமுறையை உருவாக்கும் நம்பிக்கையின் விளக்காக இருக்கிறது. மேலும், இந்த ஃபெல்லோஷிப் மாணவர்களுக்குப் பின்னாளில் உயர் கல்வியில் செல்லும் வாய்ப்புகளையும் பரந்திருக்கச் செய்தது.

இந்த சந்திப்பின் இறுதியில், எட்டு ஆண்டுகளாக அவர் வழங்கிய ஊக்கத்தையும், மனதில் பதிந்த ஒவ்வொரு வார்த்தையையும் நன்றியோடு நினைத்தேன். அவர் தனது பிறந்த மாதமான மே மாதத்தில், அவரது வழிகாட்டலால் தமிழ் இளைஞர்களின் கனவுகளும் இலக்குகளும் வளர்ந்து பெருக, எப்போதும் அவர் பாதையில் வெற்றியும் மகிழ்ச்சியும் மலர வாழ்த்துகிறேன்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram