விட்டல்ராவ் 
சிறப்புக்கட்டுரைகள்

மகா ஆச்சரியம்... புத்தகக் காட்சி அனுபவங்கள் தொகுப்பு

அருள்செல்வன்

மகா ஆச்சரியம்!

எழுத்தாளர் விட்டல் ராவ்

ஒரு படைப்பு உருவாவதில் எழுத்தாளர், பதிப்பாளர், வாசகர் என்கிற மூன்று பேர் வேண்டும்.இவர்கள் மூன்று பேரும் இணைந்தால் தான் ஒரு படைப்புக்கு மரியாதை. ஓர் எழுத்தாளர், தானே எழுதி வைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கு மதிப்பில்லை ,ஒரு பதிப்பாளர் பதிப்பிக்க வேண்டும். எழுதியது எதுவுமே இல்லாமல் ஒரு பதிப்பாளர் பதிப்பிக்க முடியாது .எழுதிப் பதிப்பித்தாலும் அதை ஒரு வாசகன் படிக்க வேண்டும்.இப்படி அந்த மூன்று புள்ளிகளும் இணைவது தான் ஒரு படைப்புக்குப் பயன் தரும்.இப்படி இந்த மூன்று புள்ளிகளும் இணையும் ஒரு வைபவமாக இருப்பது தான் புத்தகக் காட்சி.இலக்கியம் என்பது இந்த மூன்று தூண்கள் தாங்கி பிடிப்பதுதான் என்று சொல்வேன்.

சென்னை 49 வது  புத்தகக் காட்சி இப்போது நடைபெற்று வருகிறது .இதற்கு முன்பு மெட்ராஸ் புக் எக்ஸிபிஷன் என்று இருந்தது, பிறகு மெட்ராஸ் புக் ஃபேர் என்று ஆனது. அது ஆரம்பித்ததில் இருந்து அதாவது இதன் இரண்டாவது ஆண்டிலிருந்து நான் பார்த்து வருகிறேன்.அதன் வளர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நான் சென்னையில் இருந்த போது ஒவ்வோராண்டும் வருவேன்.
பெங்களூர் சென்ற பிறகு  இடையிடையே சில ஆண்டுகள் வரவில்லை, இப்போது வந்திருக்கிறேன்.
ஆரம்பித்த புதிதில் அப்போது சில புத்தகக் கடைகளே இருந்தன.புத்தகக் கடைகளில் புத்தகங்கள் இருக்கும்.தரையில் புழுதி மண் பறக்கும். வருபவர்கள் காலில் மணல் ஒட்டிக் கொள்ளும். இந்தப் புழுதி மண் கடையில் இருக்கும் புத்தகங்கள் மீது எல்லாம் பரவும்.
அதன் பிறகு எவ்வளவு மாற்றங்கள் எவ்வளவு வசதிகள் எவ்வளவு கடைகள் இப்போது பார்க்கும் போது கீழே பட்டுக் கம்பளம் விரித்தது போல் சிவப்புக் கம்பளம் வித்திருக்கிறார்கள். வரும் வாசகர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்பது போல் அவ்வளவு அழகாகத் தரை விரிப்புகள் உள்ளன.அடிப்படை வசதிகள் முதல் எத்தனை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். முதலில் இந்த ஏற்பாடுகள் செய்திருக்கும் நிர்வாகஅமைப்பைப் பாராட்டத்தான் வேண்டும்.

இங்குள்ள அரங்கங்களை பார்க்கிறேன். எல்லா அரங்கங்களிலும் ஏராளமாகப் புத்தகங்கள் உள்ளன. அந்த பதிப்பகத்தார் முதலில் செய்வது தாங்கள் ஒரு  10 அல்லது 20 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட்டிருந்தாலும் மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்கி தங்களது அரங்குகளில் நிறைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து முழுதும் நிரப்பும் அளவுக்கு புத்தகங்கள் போடும் போது அவர்களுடையதை மட்டுமே வைத்துக் கொள்வார்கள். இப்படிப் பல அரங்குகளை நான் பார்க்கிறேன்.
அரங்குகளில் உள்ளே  நுழைந்தால் எத்தனை எழுத்தாளர்கள், எத்தனை நாவல்கள், எத்தனை சிறுகதைகள், எத்தனை கட்டுரைத் தொகுப்புகள், எத்தனை கவிதைகள்என்று ஏராளமான புத்தகங்கள். அப்பப்பா எவ்வளவு பேர் எழுத்தாளர்கள் எழுத வருகிறார்கள்.விதவிதமான தலைப்புகள், கேள்விப்பட்டி ராத,புதுமையான,  யாரும் யோசிக்க முடியாத, அர்த்தம் புரியாத, விளங்க முடியாத புதுப்புது தலைப்புகளைப் பார்க்கும்போது ஆச்சரியம் நிச்சயம் ஏற்படத்தான் செய்யும். ஆண்களும் பெண்களும்  நிறைய பேர் எழுத வந்திருக்கிறார்கள்.இவ்வளவு பேர் எழுதுகிறார்களா என்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வாசகர்கள் உற்சாகமாக வருகிறார்கள். நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் நம்ப முடியாத பிரமிப்பாகவும் இருக்கிறது.
எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
கேரளாவில் மார்த்தாண்டவர்மா என்று ஒரு ராஜா இருந்தான்.திருவாங்கூர் கொச்சின் பகுதியைச் சேர்ந்தவன் அவன்.அவனுக்குப் பொழுது போகவில்லை என்றால் மற்றவர்களைக் கவிதை எழுதச் சொல்லிக் கேட்பான் .இப்படி கேட்டு வந்தவன்  மாதாமாதம் கவிதை எழுதச் சொல்லுவான். அதற்கு அவனே ஒரு தலைப்பும் தருவான். இப்படி அவன் சொல்லச் சொல்ல எழுதியவர்கள் பரிசு வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஒரு முறை  அவன் தனது மந்திரியிடம் கேட்டான் "எவனெவனோ கவிதை எழுதிப் பரிசை வாங்கிக் கொண்டு செல்கிறான் .நீயும் என்னிடம் முப்பதாண்டுகளாக குப்பை கொட்டுகிறாயே, நீ  என் கவிதை எழுதக் கூடாது? இந்த மாதம் நீயும் எழுது" என்றான்.  அப்போது அவன் கொடுத்த தலைப்பு 'தீப ஸ்தம்பம்'.தீப ஸ்தம்பம் என்றால் லைட் ஹவுஸ் அதாவது கலங்கரை விளக்கம் என்று பொருள்.
பக்கம் பக்கமாக அனைவரும் எழுதிக் கொண்டு வந்தார்கள் மந்திரியும் எழுதிக் கொண்டு வந்திருந்தான். அவனது கவிதையைப் படித்துப் பார்த்தான் மார்த்தாண்ட வர் மா.மற்றவர்கள் ஏராளமான வரிகள் எழுதி இருக்கும் போது மந்திரி கவிதையைப் படித்துப் பார்த்தார் இரண்டே வரிதான். மந்திரி இரண்டே வரியில் முடித்துக் கொண்டிருந்தான்.
 'தீப ஸ்தம்பம் மகா ஆச்சரியம் பணம் எனிக்கி கிட்டி'இவ்வளவுதான் அவன் எழுதிய கவிதை.
 தீப ஸ்தம்பம் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். எனக்குப் பணம் கிடைத்து விடும் என்று அவன் எழுதி இருந்தான்.
 அவனுக்கும் பரிசு கொடுத்தார் மன்னர் .இந்தக் கதை ஒரு கட்டுக்கதை தான். இருந்தாலும் அது இப்போது எனக்கு ஞாபகத்தில் வருகிறது.அவன் சொன்ன அந்த தீபஸ்தம்பத்தைப் போல இந்த புத்தகக் காட்சி எனக்கு மகா ஆச்சரியமாக இருக்கிறது.
நான் பெங்களூர் சென்ற பிறகு இங்கே வருவதைக் குறைத்துக் கொண்டேன். ஒரு முறை நண்பர் ஜி. குப்புசாமி எழுதிய 'மூன்றாவது கண்' என்கிற நூலை என்னை வைத்து வெளியிட வைத்தார். மொழிபெயர்ப்பு பற்றி அதில் எழுதி இருப்பார். அது நல்ல அருமையான புத்தகம்.
 எழுத்தாளனுக்கு பதிப்பாளர் முக்கியம். பதிப்பாளருக்கும் சிரமங்கள்  எவ்வளவோ உள்ளன . வங்கியில் கடன் வாங்கி நூல்களை அச்சிட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் குறைந்த அளவு நூல்களை  அச்சடிக்க முடியாது .இப்போது போன்ற வசதிகள் இல்லை. எனவே வங்கியில் கடன் வாங்கித் தான் அச்சிட வேண்டும். அது சில எழுத்தாளர்களுக்குத் தெரியாது .நான் எனது பதிப்பாளரைப் பற்றி யோசிப்பேன். மறைக்கக் கூடாது விற்பனையின் உண்மை நிலவரம் என்ன என்று கேட்பேன்.

ஒரு முறை  புத்தகக் கண்காட்சியில் மழை நீர் புகுந்து அவ்வளவு சேதாரம் ஆகிவிட்டது. தீ விபத்து கூட ஏற்பட்டிருக்கிறது. அப்படி சேதாரம் அடைந்தபோது ஒரு பதிப்பாளர் பற்றி ஒரு எழுத்தாளர் என்னிடம் சொன்னார் நம்மையெல்லாம் ஏமாற்றிய அந்த ஆளுக்கு இந்த நஷ்டம் தேவைதான் என்றார்.எனக்கு கோபம் வந்து அறைந்து விடலாம் போல இருந்தது .பதிப்பாளர்களுக்கும் அவ்வளவு சிரமங்கள் உள்ளன.பதிப்பாளரின் சிரமங்கள் எழுத்தாளருக்குத் தெரிய வேண்டும். சில முறை இருவருக்கும் பிரச்சினை வந்து எழுத்தாளர்களே சொந்தப் பதிப்பகம் ஆரம்பித்து விடுகிறார்கள்.சில எழுத்தாளர்கள் தங்கள் பேரில் யாரையாவது வைத்து பதிப்பகம் நடத்துகிறார்கள்.அதாவது இவர் எழுதுவார் அவர் முதலீடு செய்வார்.கோஸ்ட் ரைட்டர்ஸ் மாதிரி கோஸ்ட் பப்ளிஷர்ஸ் உண்டு.எப்படி இருந்தாலும் அந்தப் புத்தகங்கள் போய்ச் சேரும் கடைசி இடம் வாசகனிடம் தான். அந்த வாசகன் மிக முக்கியம். புத்தகங்கள் விற்பனையாக வேண்டும் ,அதை வாசகன் வாங்க வேண்டும் .வாங்கிக் கொண்டு போய் படிக்கிறானோ, இல்லை அடுக்கி வைத்திருக்கிறானோ புத்தக விற்பனை முக்கியம்.

இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. என்னுடைய ஒரு பலவீனம் என்பது நான் அதற்கு இன்னும் பழகாதது தான். நான் எப்போதும் கையால்தான் எழுதுவேன். எனக்கு பேப்பரும் பேனாவும் தான் வேண்டும் .என்னிடம் ஒருவரிடம் நான் முதலில் வைக்கும் நிபந்தனை நான் கையால் காகிதத்தில் எழுதித் தான் தருவேன் என்பதுதான். அதை தட்டச்சு செய்ய அவர்களுக்கு நேரம் பிடிக்கும். நான் இந்த நவீனத்துக்கு இன்னும் பழகாமல் இருக்கிறேன். இருந்தாலும் அந்த அசௌகரியத்தைத் தாங்கிக் கொண்டு தான் என்னிடம் புத்தகம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதனால் சற்று தாமதமாகும் .அவர்களுக்கு நான் சிரமம் தருவதாக நினைப்பேன். எனவே அதிகம் எழுதுவது எனக்கு முடியாததாக இருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன் புத்தகக் கண்காட்சியாக நான் இப்போது  பார்ப்பது மகா ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மாத்தளை சோமு


தலைமுறை கடந்தும் பயன் தரும் புத்தகங்கள்!
 எழுத்தாளர் மாத்தளை சோமு

வாசகர்களின்எழுத்துக் கோயிலாக இருப்பது புத்தகக் கண்காட்சி இது வாசகர்கள் ஒவ்வொரு பதிப்பகத்தையும் தேடிப் போய் தனக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவதற்கு அலைவதை விட இங்கே ஒரே இடத்தில் எல்லா பதிப்பகங்களையும் சந்தித்து தமக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.இது ஓர் அரிய வாய்ப்பு. அதே நேரத்தில் நீங்கள் ஏற்கெனவே தேடிக் கொண்டிருக்கும், பிற்காலத்தில் தேட விரும்பும் புத்தகங்கள் கூட இங்கே உங்கள் கண் முன்னே  கிடைக்கலாம். எனவே இந்தப் புத்தகக் கண்காட்சி என்பது வாசகர்களை மகிழ்விக்கக் கூடிய ஒன்று. மேலும் இந்தக் கண்காட்சி என்பது புத்தகங்களுடைய பொக்கிஷம் மட்டுமல்ல, அங்கு எழுத்தாளர்களைக் காணக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த வகையில் புத்தக கண்காட்சி அருமையான பணிகளை ஆண்டுதோறும் செய்து வருகிறது .இங்கே மக்கள் திரளாக வந்து புத்தகங்கள் வாங்குவது மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு நிகழ்வாகும்.இங்கே வருவதற்கு இம்முறை கட்டணம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஏற்பாடு. வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பாலமாய் இருப்பது புத்தகக் கண்காட்சிதான்.

பல எழுத்தாளர்களை நேரில் சந்திக்க முடியாதவர்கள் இங்கே அவரைச் சந்திக்க முடியும்; அவர்களுடைய உரைகளைக் கேட்க முடியும். அதே நேரத்தில் அவர்களுடைய நூல்களையும் கையெழுத்தோடு பெற முடியும். எனவே இந்தக் கண்காட்சி தமிழ் எழுத்துகளையும் தமிழ் இலக்கியத்தையும் மேலும் வளர்ப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருப்பது மிக முக்கியமானது .அந்த வகையில் இந்த புத்தக கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருவது மிக நல்ல நிகழ்வாக இருக்கிறது. இதை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .புத்தகங்களை படிக்க விரும்புவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்படி ஒரு நிகழ்வு இனி அடுத்த ஓராண்டுக்குப் பின்னால்தான் நடக்கும்.

 நான் முன்பே சொன்னது போல ஒரு நூலை வாங்குவதற்குப் பல பதிப்பகங்களைத் தேடிப் போவதைவிட இங்கே உங்களையே தேடிக் கொண்டிருக்கும் இந்த பதிப்பகங்களுடைய நிலையங்களுக்குச் சென்று நூல்களை வாங்கிப் படித்து மகிழலாம். இது போன்ற கண்காட்சிகள் மேலை நாடுகளிலும் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை இருமுறை என அவர்கள் நடத்துவார்கள். அங்கே அவர்கள் புத்தகங்களை எழுதி எழுத்தாளர்களுடைய சந்திப்புகளை நிகழ்த்துவார்கள். அது இன்னும் விசேடமாக இருக்கும் .அது போல இங்கும் அது போன்ற நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். எனவே இந்தப் புத்தக கண்காட்சி புத்தகங்களை போடும் பதிப்பகத்திற்கு மட்டுமல்ல அதனை வாங்கிப் படிக்கிற வாசகர்களுக்கு மட்டுமல்ல நூல்களை எழுதிக் கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் மூவருக்கும் ஒரு பாலமாக அதே நேரத்தில் மூவரையும் செயல்பட வைக்கின்ற  ஒன்றாக இந்தப் புத்தக கண்காட்சி இருக்கிறது.

சிலர் புத்தகங்களை ஏன் கண்காட்சியில் வாங்க வேண்டும் என்று கேள்வி கூட எழுப்புகிறார்கள். சமீபத்திலே நான் ஒரு மேலைநாட்டு தொலைக்காட்சியிலே ஒரு காட்சியைப் பார்த்தேன். ஒரு குடும்பத்தில் ஒரு புத்தகம் இரண்டு தலைமுறைக்கு முன்  வாங்கப்பட்ட புத்தகம் பழுது கொள்ளாமல் அந்த குடும்பம் அடுத்தடுத்த தலைமுறையும் பயன்படுத்தி வந்ததை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தவர்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த நூல்களை நாங்கள் கையளிப்போம், காரணம் அது அச்சிலே இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். இன்றைக்கு விஞ்ஞான வடிவத்தில் கைபேசியிலே எல்லாம் படிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். உங்களுடைய கைபேசி உங்களுடன் முடிந்து போய்விடும்.கைபேசிக்கு ஆயுள் மிகவும் குறைவு. நீங்கள் தேடி வைத்த செல்வங்கள் நீங்கள் படித்த புத்தகங்கள் எல்லாம் உங்களோடு முடிந்துவிடும். ஆனால் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள் உங்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய பிள்ளைகள் எல்லாம் படிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் புத்தகத்தை வாங்குகிற போது அதன் மூலமாக பதிப்பகத்தார் அச்சிடுவோர் அதில் பிற பணியாற்றுவோர் ஏன் எழுதும் எழுத்தாளர்கள் என்று பலருக்கும் அதனால் வாழ்க்கை கிடைக்கும். இப்படிப் பல கோணங்களில் நீங்கள் பார்க்கும் பொழுது பல பேருக்கான வருமானம் அங்கே அவர்களுடைய வாழ்வியலைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கைபேசியில் பயன்படுத்தும் போது அதன் வருமானப்பலன்கள் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே சென்று சேரும்.அதற்காக கைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை .ஆனால் புத்தகங்களை எல்லாம் தயவு செய்து எல்லாம் கைபேசியில் இருக்கிறது என்று சொல்லி விடாதீர்கள். கைபேசியில் இருக்கலாம். ஆனால் புத்தகங்களில் இருப்பது அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க கூடிய ஒன்று. நீங்கள் ஒரு வீட்டை வாங்குகிறீர்கள் உங்களுக்குப் பிறகு அந்த வீடு உங்கள் பிள்ளைகளுக்குச் சொந்தமானது. அதேபோல புத்தகங்கள் வாங்கினால் அந்த புத்தகங்களும் பிள்ளைகளுக்கு அவர்களின் பிள்ளைகளுக்கு என்று சொந்தமாகும். ஆனால் உங்கள் கைபேசி உங்களுக்குப் பிறகு உங்களின் பெயரிலே இருக்காது .எனவே இதைப் புரிந்து கொண்டு அச்சு வடிவான புத்தகங்களை வாங்கி நாம் சிந்திக்க கூடியவர்கள்,சமூகத்தில்  பொறுப்புள்ளவர்கள் என்பதைக் காட்டுவோம்.

கவிஞர் கயல்



அசைந்து வருகிற யானையின் கம்பீரமாக புத்தகத் திருவிழா!
கவிஞர் கயல்

வேலூர் போன்ற ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த எனக்குப் புத்தகக் கண்காட்சி என்பதோ புத்தக சந்தை என்பதோ சரியான சொற் பிரயோகமாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது புத்தகத் திருவிழா. 
என்னுடைய கவிதையொன்றில் நான் எழுதியது போல 'என் தகப்பன் தோளமர்ந்து நான் பாராத (இன்னுமொரு) திருவிழா' . மூன்றரை மணி நேரத் தொலைவு தான் என்றாலும்  நினைத்தவுடன் சட்டென்று சென்னைக்குச் சென்றுவிடமுடியாத பணிச் சூழல்தான் என் பெற்றோருக்கும், அதன் பிறகு எனக்கும். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவேண்டும் என்கின்ற கனவு பல காலம் மனதில் இருந்து கொண்டே இருந்தாலும் அது முதன் முதலில் நிறைவேறியபோது அளப்பரிய மகிழ்ச்சி எனக்கு. 
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 2019 ஆம் வருட புத்தகக் கண்காட்சியில் என்னுடைய மூன்றாவது கவிதை நூலான 'ஆரண்யம்', டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு சிறு குழந்தையின் துள்ளலுடன்,  கடல் பார்த்தறியாத மலைவாழ் சிறுமியாக, அதே நேரம் புக்கர் பரிசு வென்ற பெரும் எழுத்தாளர் போன்ற ஒரு தோரணையில் நான் அந்த அரங்குக்கு வெளியே அமர்ந்து என்னைத் தெரிந்து அங்கு வந்த ஃபேஸ்புக் நண்பர்களிடம் எல்லாம் பேசியபடியே ஆரண்யம் நூலில் கையெழுத்துப் போட்டது மறக்கவே முடியாதது. எழுத்தாளர்  கே.என். செந்திலை "எவ்வளவு உயரமாக இருக்கிறீர்கள்! இந்த நாற்காலியில் உட்காருங்கள் அப்போதுதான் என்னுடைய உயரத்திற்கு சரியாக இருக்கும்" என்று கிண்டல் அடித்தபடியே, அவர் கேட்காமலேயே "இருங்கள். என் நூலில் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன்" என்று கூறியபடி, "என்ன பார்க்கறீங்க? ஃபோட்டோ எடுங்க"  என்று அந்தக் கடையின் சொந்தக்காரரான திரு வேடியப்பனையே மிரட்டிப் புகைப்படம் எடுத்துக்கொண்டது அந்தப் புத்தகக் கண்காட்சியில்தான். என் மனங் கவர்ந்த, நான் சந்திக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்த, 'ஆரண்யம்' நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிஞர் கல்யாண்ஜியைச் சந்தித்தது, எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்ணன், எஸ்.ராம கிருஷ்ணன் , ஆத்மார்த்தி, மொழிபெயர்ப்பாளர்கள் கார்த்திகைப்  பாண்டியன், லதா அருணாசலம், கவிஞர்கள் க.மோகனரங்கன், தென்றல், பிருந்தா சாரதி, பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ் நாடன், நக்கீரன் கோபால், ஜீரோ டிகிரி பதிப்பாளரான காயத்ரி,  எதிர் பதிப்பக அனுஷ்..... இன்னும் ஏராளமானோரைச் சந்திக்க வாய்ப்பளித்தது இந்தப் புத்தகத் திருவிழாதான்.
சில எழுத்தாளர்களைப் பார்த்தாலும் பேசலாமா வேண்டாமா என்று முதல் புத்தகத் திருவிழாவில் இருந்த தயக்கம் அடுத்தடுத்து செல்லும்போது மறைந்து போயிற்று. 

எங்கெங்கு காணினும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள் என இந்தக் காட்சியே எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாக முதலில் இருந்தது. பிறகு பழகிப் போனாலும்கூட அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சி என்று வரும்போது அது அப் பருவத்தின் முதல்  மழையாக, வசந்தத்தின் புதிய துளிராக, எவ்வளவு பார்த்தாலும் சலிக்காததாக அசைந்து அசைந்து வருகிற யானையின் கம்பீரமாக..... இப்படியாகத்தான் எனக்கு புத்தகத் திருவிழா இப்போதும் இருந்து வருகிறது. 

நிறைய தலைப்புகளில் வெவ்வேறான வகைமைகளில் நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதும், படைப்பாளிகளைச் சந்திக்கலாம் என்பதும் பொதுவான விஷயங்கள். ஆனால் என்னைப்  பொறுத்தவரை கல்லூரிப் பணி, இடையே நிறைய ரெக்கார்ட்ஸ் மெய்ண்டெய்ன் செய்வது, தகவல்கள் சேகரிப்பது ஆகியவற்றுக்கு இடையே இன்றைக்கும் என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பது படைப்பு சார்ந்த என் செயல்பாடுதான். அதில் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பக்கம் கவிதை எனில் இன்னொரு பக்கம் மொழிபெயர்ப்பு. இரண்டு வருடங்கள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்ட போதும்கூட ஃபேஸ்புக் நண்பர்கள் வாயிலாக அவர்கள் தினந்தோறும் இட்ட பதிவுகள் புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கிறபோது அது தருகிற ஊக்கமேகூட படைப்பு மனத்தை இன்னும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் இல்லை என்றால், மாறிக்கொண்டிருக்கும் மாணவர்களின் மனப் பாங்கைச் சமாளித்து, தினம் technology, syllabus updation செய்து, வீட்டையும்  பணியையும் பேலன்ஸ் செய்கிற ஒரு நடமாடும் suffocation ஆக மாறிப் போயிருப்போமோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. 
இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் அதாவது திருவிழாவில் நுழைவுக் கட்டணம் இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. தினமும் வந்து போகிற ஆர்வமுள்ள நிறைய பேருக்கு இது நிச்சயமாக உதவும். அதேபோல இதுவும் ஒரு சிந்தனை தான். எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதெல்லாம் எனக்கு மிகத் துல்லியமாக சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் எதுவும் சாத்தியம்தான் என்று நினைத்து இதைச் சொல்கிறேன்.
 பெங்களூருவில் புக் பிரம்மா ஏற்பாட்டில் மூன்று நாட்கள் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பேசிய சிறப்புப் பேச்சாளர்கள் தங்குவதற்கு என இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுபோல ஒரு தங்குமிடத்தை,  குறைந்த கட்டணத்துடன் அரசு பெரிய அளவில் யோசித்து ஏற்பாடு செய்யுமானால் வெளியூரிலிருந்து வந்து செல்கிற என்னைப் போன்ற எத்தனையோ பெண்களுக்கு அது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு ஏற்பாடாக இருக்கும். 
"கடல் என்பது அசையும் போதி" என்று என்னுடைய கவிதையில் ஒரு வரி எழுதி இருப்பேன். அதுவேதான் புத்தகத் திருவிழாவும்.

சந்தியா பதிப்பகத்தில் மந்திரமூர்த்தி அழகு


அனுபவங்கள் பலவிதம்!

மந்திரமூர்த்தி அழகு (அட்மின் : வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்)

புத்தகக்காட்சி என்பது மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

புத்தகக் காட்சிகளில் கண்ணில் பார்த்துப் பிடித்த புத்தகங்களை வாங்குபவர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எழுதிய  புகழ் பெற்ற நூல்களையோ அல்லது அவர்களது புதிய  நூல்களையோ சிலர் வாங்குகிறார்கள். இன்றையத் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பிரிண்ட் ஆன் டிமாண்ட் மூலமாக நூல்களைக் கொண்டு வருவதும் எளிதாகிவிட்டது. அந்த வகையில் ஏராளமான மக்கள் தங்கள் நண்பர்களினுடைய நூல்களை வாங்குவதற்காகவும் புத்தகக் காட்சிக்கு வருகிறார்கள். புத்தகக் காட்சி உள்ளபடியே ஒரு திருவிழாக் கொண்டாட்டமாக மாறிவிட்டது. வாங்கும் புத்தகங்களை வாசிப்பார்களா என்பது அடுத்த கேள்வி. எப்படி இருந்தாலும் முதலில் புத்தகங்களைக் கொண்டு வருகின்ற பதிப்பகங்களுக்கு நல்லதுதானே! புத்தகக் காட்சியிலே சிலர் தங்களது குழந்தைகளையும் அழைத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதனைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தகங்களை வாங்க வேண்டும், குழந்தைகளை புத்தகக் காட்சிக்கு அழைத்து வருவது வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் குழந்தைகளுக்கு தோற்றுவிக்கும் அல்லவா!  

ஆன்லைனில் வாங்குகின்ற வசதி இருந்தாலும் தேர்வு செய்கின்ற புத்தகங்கள் அனைத்தும் கிடைப்பதில்லை. எனக்குத் தேவையான அரிதான புத்தகங்களை இங்கேதான் வாங்க முடிகிறது. முதலில் முக்கியப் புத்தகங்களைச்  சுடச்சுட வாங்க முடிகிறது.  என்ன ஒன்று! சரியான திட்டமிடல் வேண்டும் ; உரிய நேரம் அதற்காக  அதற்காக ஒதுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கண்ணெதிரே பார்க்கும் போது எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாரதி கூறுவதைப் போல சொல்லத் தோன்றுகிறது. ஒரே இடத்தில் நம் முன் பல்லாயிரம் நூல்களைக் காணுகின்ற மகிழ்ச்சியைப் புத்தகக் காட்சியைத் தவிர  வேறு எங்கு பெற முடியும்? இங்கே தான் எனக்கு அது கிடைக்கிறது .  

பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்கிற வசதி அச்சு உலகிலே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நவீன இன்டர்நெட் உலகில் பதிப்பகங்கள் தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, பிரிண்ட் ஆன்  டிமாண்ட் வசதி உள்ள காரணத்தினால் ஆண்டு தோறும் புதிய, புதிய பதிப்பகங்கள் உருவாகி வருவதையும் பார்க்க முடிகிறது. குறைந்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் 800 பதிப்பகங்கள் இருக்கும் என்றால் பங்குபெறாத பதிப்பகங்கள் இரண்டாயிரத்திற்கும் மேலாகக் கூட இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் விற்பனை பல கோடி ரூபாய் கூடுவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த உற்சாகம் இன்னொரு வகையில் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலமாகப் புத்தக விற்பனைக்கும் துணை செய்யும். 

புத்தகக் காட்சி யின் முக்கியத்துவமாக இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும். நான் ஏன் புத்தகக் காட்சிக்குச் செல்கிறேன் என்பதற்கான விடையும் அதில் உண்டு. முதலாவதாக பிடித்த எழுத்தாளர்களை இங்கு நேரில் சந்திக்க முடிகிறது. நட்பைப் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது . இரண்டாவதாக வருடம் ஒருமுறையாவது நண்பர்களைப் புத்தகக் காட்சியிலே சந்திக்க முடிகிறது ; ஒரு காபி சேர்ந்து  குடிக்க முடிகிறது ;உரக்கச் சிரிக்க முடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தக வெளியீட்டு விழா அறிமுகங்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன. புத்தகங்களின் எண்ணிக்கையும்  பெருகிக்கொண்டே செல்கின்றன. ஆனால் ஒன்று, வாசகர்களின் பாராட்டுப் பெறுகின்ற புத்தகங்கள் மட்டுமே காலத்தால் வாழும். 
இன்று வாசிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து நாங்கள் நட்பாக ஒரு குழுவினை உருவாக்கிச்  செயல்படுகிறோம். அதுதான் 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்' என்ற வாசிப்புக் குழு. 2018 - இல் இதனை ஏற்படுத்தினோம். அரசியலுக்கு முழுமையாக அப்பாற்பட்டு ஒரு வாசிப்புக் குழுவை நடத்த வேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்த குழு இது. எழுத்தாளர் நண்பர் சத்யா,  திருநெல்வேலி கவிஞர் சுப்ரா  ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்போடு ஆரம்பித்த குழு இது. கடந்த 8 ஆண்டுகளாக ஆக்கபூர்வமாக இயங்குகிறது. இன்று சுமார் 24 ஆயிரம் நண்பர்களைக் கொண்டதாக இருக்கிறது.  தமிழினுடைய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் குழுவில் பயணிக்கின்றார்கள். எழுத்தாளர் ஜெயமோகன்,  மாலன்,  வாஸந்தி, இரா முருகன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் குழுவினைப் பாராட்டியிருக்கிறார்கள். அந்த அளவிலே வாசிப்பிலே இன்று இந்தக் குழுவுக்கும் சிறிய பங்கு இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.