எட்டுப் பேர் 
சிறப்புக்கட்டுரைகள்

நாயகிகளைக் கொண்டாடிய நாயகிகள்!

பரிசல் கிருஷ்ணா

ஜனவரி புத்தகக் காட்சி முடிந்தவுடன் கமலா விருத்தாசலம் பற்றிக் கேள்விப்படுகிறார் ஒருவர். இப்படி ஒரு பெண் எழுத்தாளரா என்று ஆச்சர்யமாக அவரைத்தேட, அவர் வேறு யாருமல்ல, புதுமைப்பித்தனின் மனைவி என்றறிகிறார். இப்படி, எழுத்தாளர் என்ற அடையாளம் காணப்படாமலே எத்தனை பெண்டிர் இருக்கின்றனர் என்று நண்பர்களுடன் கலந்துரையாடுகிறார்.

விதை விழுகிறது. நண்பர்கள் நீரூற்ற, வளர்கிறது செடி. அதுதான், மார்ச் 22-ல் ‘நாயகி’ எனும் தலைப்பில் கவிக்கோ அரங்கில் முழுநாள் நிகழ்வாய் நடந்தது.

பனிரெண்டு எழுத்தாளுமைகளை கொண்டாடினர் எட்டு பேர். எழுத்திலோ, கொண்டாடும் நபர்களிலோ பால்பேதங்கள் தேவையில்லைதான். ஆனால் அடக்கியும் ஒடுக்கியும் வைக்கப்பட்டால், அவ்வப்போது கூக்குரலிட்டு அடையாளங் காணச்சொல்வதியல்புதானே... அதனால் குறிப்பிடுகிறேன். அந்த பன்னிரெண்டு எழுத்தாளர்களும் பெண்கள். கொண்டாடிய எட்டு பேரும் பெண்கள்!

எழுத்தாளர்கள் ஆர். சூடாமணி, சித்தி ஜூனைதா பேகம், வை.மு.கோதைநாயகி அம்மாள், கி.சாவித்ரி அம்மாள், அழகிய நாயகி அம்மாள், சரஸ்வதி ராம்நாத், குமுதினி, ஹெப்சிபா ஜேசுதாசன், அநுத்தமா, கமலா விருத்தாச்சலம், இராஜம் கிருஷ்ணன், கிருத்திகா ஆகிய பன்னிரு எழுத்தாளுமைகள் குறித்து பதினெட்டு பேச்சாளர்கள் பேசினர்.

நிகழ்ச்சி காலை பத்து மணிக்கு, அ.வெண்ணிலா தொடக்க உரையில் ஆரம்பித்தது. பதினெட்டு பேச்சாளா்கள் ஒவ்வொருவராக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் குறித்து சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு எழுத்தாளர்கள் குறித்த ஒருநிமிடக் காணொளியும் திரையிடப்பட்டது. அவ்வெழுத்தாளர்களின் அரிய புகைப்படங்களோடு உருவாக்கப்பட்ட அக்காணொளியே, பார்வையாளர்களை உற்சாகமடையவும் நெகிழவும் வைத்தது.

இந்தக் கதாசிரியர்கள் பின்னால்தான், எத்தனை எத்தனை உண்மைகள்! ஒருவர் குடும்பத்துக்குத் தெரியாமல் கதை எழுதிவந்திருக்கிறார். ஒருவரின் முதல் நாவலில் காதல் என்ற தலைப்பு இருந்ததற்காக ஊரே திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒருவர் தொடர்ந்து எழுதி, வேறொரு பத்திரிகை ஆரம்பித்து அதிலும் எழுத, ‘அந்தம்மா எழுதினதெல்லாம் நான் எழுதிக்கொடுத்தது’ என்று ஒருவரால் பரப்பப்பட்டு ‘எப்படி எழுதிடற பாத்துடறேன்’ என்ற சவால் விடப்படுகிறது. இப்படி பனிரெண்டு எழுத்தாளர்களும் சந்தித்த சவால்களும் தடைகளும் ஏராளம். இவர்களில் பலரின் எழுத்துகள் இன்று எந்த வடிவிலும் கிடைப்பதில்லை. அதையும் தாண்டி இந்நிகழ்வை ஒருங்கிணத்த குழுவினர் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை பேசவிருக்கும் பேச்சாளர்களுக்கு தேடிக்கொடுத்து வாசிக்க வைத்து நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

மாலையில் மையம் குழுவினரின் பறை நிகழ்ச்சிக்குப் பிறகு சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்புரையில் வாணவேடிக்கை நிகழ்த்தினார். ரமேஷ் வைத்யாவின் உரைக்கு பார்வையாளர்களின் சிரிப்பொலி அடங்க வெகுநேரமாயிற்று.

ஜா.தீபா, தமிழ் பொன்னி, ஆர்.காயத்ரி, பாலைவன லாந்தர், சவிதா, ரேவா, ஜெயஶ்ரீ, அகிலா ஆகிய எட்டுபேர்தான் இந்நிகழ்வை பல மாதங்களாகத் திட்டமிட்டு, வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள். ‘இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும்’ என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram