சிறப்புக்கட்டுரைகள்

நானும் ஏமாந்தேன்!

மரு.அகிலாண்டபாரதி

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதில் எனக்கு அனுபவம் இல்லாத காலம் அது. சுற்றி உள்ளவர்கள் நிறைய பேர் ஆன்லைனில் கடகடவென்று ஆர்டர் போட்டுப் பழகியிருக்க, நான் கற்றுக்குட்டியாக இருந்தேன். என் மகளுக்கு ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட டிசைன் கவரிங் வளையல் வேண்டும் என்று கடை கடையாக ஏறி இறங்கினோம். திடீரென்று தோன்ற, ஆன்லைனில் தேடினோம், அதே டிசைன் கிடைத்தது. டக்கென்று ஆர்டர் போட்டு வாங்கினோம். வந்த பொருளும் நன்றாக இருந்தது.

அடுத்து இன்னொரு நிகழ்ச்சிக்கு சிவப்புக்கல் வைத்த வளையல் ஒன்று தேவைப்பட்டது. அடுத்த மாதம் தேவைப்படும் என்று மகள் சொல்லி வைத்திருந்தாள். மகள் தன் வாயால் என் காதில் சொன்னது, எப்படியோ இணைய உலகிற்குக் கேட்டு முகநூல், கூகுள் குரோம் என்று எங்கு திறந்தாலும் ‘ஜுவல்ரி மேஜிக்’ என்ற ஒரு தளத்திலிருந்து விளம்பரங்கள் வந்து கொண்டே இருந்தன. அதிலும் கடையில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் போட்டிருந்த பொருளை 150 ரூபாய் 200 ரூபாய் மட்டுமே போட்டிருந்தார்கள். சரி நமக்கும் தேவைப்படுகிறது, விலையும் குறைவாக இருக்கிறது என்று ஆர்டர் போட்டோம் (பேராசை, பேராசை!). பொருள் இன்று வரும், நாளை வரும் என்று பார்த்தால் வரவே இல்லை. மெயிலில் வந்த அந்த இணைப்பைத் திறந்து பார்த்தால், ‘No such store' என்று வந்தது. ஆமாங்க ஆமாம்! அந்தக் கடை, கடல்லயே இல்லையாம். பின் அந்த வார்த்தைகளை இணையத்தில் அடித்துப் பார்த்தால் நிறைய பேர் என்னைப் போலவே ஏமாந்திருந்தது தெரிந்தது. சரி ஒரு மிகப்பெரிய பாடத்தின் விலை 350 ரூபாய் என்று மனதைத் தேற்றிக்கொண்டு அடுத்து நீண்ட நாட்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் போடவே இல்லை.

இந்தியாவின் முன்னணி கோச்சிங் சென்டர் அது. பள்ளிப் படிப்பு போக மீதி நேரத்தில் ஆன்லைனிலும் நேரிடையாகவும் மருத்துவம், பொறியியல் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்காக கோச்சிங் நடத்துவார்கள். அப்போது ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களைக் குறிவைத்து பள்ளிகளில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள் (இப்பொழுதெல்லாம் ஆறாம் வகுப்பில் இருந்தே பிள்ளைப் பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்). இப்படித்தான் மகளின் பள்ளியிலும் போய் 30 மார்க்குக்கு ஒரு தேர்வு வைத்து, ‘அதில் உங்கள் மகள் நன்றாக எழுதி விட்டாள்’ என்று முகவரியை விசாரித்துக் கொண்டு வீட்டுக்கே வந்து விட்டார் ஒரு ஏஜன்ட். தன் பேச்சுத் திறமையால் குடும்பத்தையே கரையோ கரை என்று கரைத்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆன்லைன் கோர்ஸில் சேர்வதற்கான சம்மதத்தைப் பெற்று விட்டார்.

‘சரி’ என்று நாங்கள் சொன்னதுதான் தாமதம், அடுத்த இரண்டு நாட்களும் தலைகீழாக நின்று ஒரு வழியாக முழுப் பணத்தையும் கட்ட வைத்து விட்டார். கட்டியபின் நாளைக்கே வகுப்பு தொடங்கும் என்றவர், வகுப்புக்கான இணைப்பை அனுப்பவே இல்லை. அவர் செய்த வேலையை நாங்கள் செய்தோம். மாறி மாறி தொலைபேசியில் அழைத்தோம், பல மெயில் ஐடிக்களைக் கொடுத்து grievance மெயில் அனுப்பச் சொன்னார். ‘டெக்னிக்கல் எரர்’ என்றார், ‘கம்யூனிகேஷன் கேப்’ என்றார். பேமெண்ட்டுடன் என் வேலை முடிந்து விட்டது, உங்களை அகாடமிக் செக்ஷனுக்கு மாற்றி விட்டேன் என்றார், இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், “தம்பி! நாங்க மும்பையில மாணிக் பாட்ஷாவா இருந்தவங்க. நாளப்பின்ன நீ தென் மாவட்டத்தில எந்த ஊருக்குள்ளேயும் வந்துக்கிட முடியாது” என்ற ரீதியில் நான் மிரட்டிய பின் ஆன்லைன் வகுப்பில் இணைவதற்கான இணைப்பு வந்து சேர்ந்தது.

அவ்வளவு தானே! ஏதோ தொழில்நுட்பக் கோளாறோ, கம்யூனிகேஷன் கேப்போ தானே இதில் என்ன சைபர் கிரைம் என்கிறீர்களா? சைபர் கிரைமாக இருந்திருக்குமோ என்ற சந்தேகம் அந்தப் பொருளாதார ஆண்டின் முடிவில் தான் வந்தது. வங்கிக் கணக்கின் ஸ்டேட்மெண்ட்டை ப்ரிண்ட் எடுத்து சரி பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த குறிப்பிட்ட தொகையை எதற்காக செலுத்தினோம் என்பது சுத்தமாக மறந்து போய்விட்டது. தலையைக் குழப்போ குழப்பு என்று குழப்பியும் நினைவுக்கு வராததால் அந்த அக்கவுண்ட் எண்ணை காப்பி பேஸ்ட் செய்து இணையத்தில் போட்டுத் தேடினோம்.

ஏதோ Seed farms, உத்தர்பிரதேஷ் என்பது அந்த கணக்கின் உரிமையாளர் என்று வந்தது. ‘அட, உத்தர பிரதேசத்தில் இருக்கிற விதைப்பண்ணைக்கு நாம ஏன் பணம் அனுப்பப் போறோம்’ என்று பார்த்தால் முழுக்க முழுக்க எழுபதுக்கும் மேற்பட்ட புகார்கள் அந்த எண்ணின் மேல் வந்திருந்தது. அதுவும் குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்தே வந்திருந்தது. எப்படி....நாமாக மாற்றாமல் இவ்வளவு பணம் போகாதே என்று நினைத்துக் கொண்டே திரும்பிய போது தான் அந்த கல்வி நிறுவனத்தின் புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. அட, இந்த கோச்சிங் சென்டருக்குத் தானே அனுப்பினோம் என்பது நினைவுக்கு வர, அன்றைய தேதியிட்ட மெயில், வாட்ஸ்அப் சேட் இவற்றைத் தேடிப் பார்த்தபோது அது கோச்சிங் சென்டருக்குக் கட்டிய பணம் தான் என்பது உறுதியானது.

இப்போது எங்களது ஆகப்பெரிய கேள்வி, கோச்சிங் சென்டருக்குத் தான் நாங்கள் கட்டிய பணம் போய் சேர்ந்ததா அல்லது அந்த இடைத்தரகர் தனக்கு வேண்டிய ஏதோ அக்கவுண்டுக்கு பணத்தை மாற்றிக் கொண்டாரா என்பது. அந்த சந்தேகம் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது. நல்ல வேளையாக அந்த கோர்ஸ் முடிந்து போய்விட்டது. கட்டிய பணத்துக்கு ஏற்ப பாடத்தைப் படித்தாயிற்று, நாம் ஏமாறவில்லை, ஏமாந்திருந்தால் கோச்சிங் சென்டர் நிர்வாகம் தான் ஏமாந்திருக்கும் என்ற முடிவிற்கு வந்தோம். ‘கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை’.

பெருந்தொகைக்கு ஆன்லைனை பயன்படுத்தக் கூடாது, சிரமம் பாராமல் நேரிலேயே போய் கட்டிவிட வேண்டும். என்று மற்றுமொரு பாடம் கிடைத்தது. அப்புறம் ஒரு பதட்டமான நேரத்தில் இந்தப் பாடமும் மறந்து போய்விட்டது.

நண்பர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நானும் அவரது மனைவியும் வெளியே காத்திருந்தோம். நண்பர் மாலை ரயிலில் செல்வதற்கு டிரெயின் டிக்கெட் எடுத்திருந்தார். ‘இன்னைக்கு டிக்கெட்டை கேன்சல் பண்ணிரலாமா, ஆயிரம் ரூபாய்க்கு மேல’ என்று யோசித்து, அவரது அலைபேசி கையில் இருக்கவே, முயற்சி செய்து பார்ப்போம் என்று உள்ளே நுழைந்தோம். டிக்கெட் புக் பண்ண முடிந்தது, கேன்சல் செய்யத் தெரியவில்லை. அதற்குள் நண்பரின் மனைவி, ‘ஹவ் டு கேன்சல் ரயில்வே டிக்கெட்’ என்று தனது அலைபேசியில் கூகிளைக் கேட்டார். தேடுபொறியில் முதல் எதிர்வினையாக, ஒரு அலைபேசி எண் வந்தது. இந்த எண்ணிற்கு அழையுங்கள் என்றது. யோசிக்காமல் அவரும் அந்த எண்ணிற்கு அழைத்து விட்டார். அங்கே ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் கடகடவென்று ஏதோ பேசவும், என்னிடம் அவர் ஃபோனைக் கொடுக்க, ‘உங்கள் எண்ணுக்கு ஒரு இணைப்பை அனுப்பியிருக்கிறேன், அதைச் சொடுக்குங்கள்’ என்றது எதிர்முனை. ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்டைப் போன்றே வடிவமைக்கப்பட்ட வெப்சைட் திரையில் தோன்றியது. ரயில் எண், பிஎன்ஆர் நம்பர் அனைத்தையும் கேட்டது. கடமையே கண்ணாக அவ்வளவையும் உள்ளீடு செய்தோம். இப்போது எந்த கடன் அட்டையில் இருந்து டிக்கெட் எடுத்தீர்களோ அந்த எண்ணை உள்ளீடு செய்யுங்கள் என்று கேட்டது. அதையும் செய்தோம்.

அப்போது பார்த்து அந்த அலைபேசிக்கு தெரியாத ஓர் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. மும்முரமாக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த அழைப்பைத் துண்டித்து விட்டோம். நாங்கள் இருந்த இணைய தளம் எங்கள் CVV எண்ணைக் கேட்டது. இதை யாருக்கும் கொடுக்கக் கூடாதே, இதை ஏன் கேட்கிறார்கள் என்று யோசிக்கையில் வங்கியில் இருந்து, ‘பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உங்கள் பரிவர்த்தனைக்கான ஓடிபி எண்….’ என்று ஒரு ஓடிபி வந்தது. லேசாக சந்தேகம் துளிர்த்தது எனக்கு. மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு. ட்ரூ காலரில் ஜங்க் கால் என்று காட்டியது. ‘என்னதான் வேணும் இவங்களுக்கு, நல்லா திட்டி விட்ருவோம்’ என்று அந்த அழைப்பை ஏற்க, “மேடம் நாங்கள் பேங்க்ல இருந்து பேசுறோம், ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு பரிவர்த்தனை ட்ரை பண்றீங்களா?” என்று கேட்டார்கள், “இல்லையே ரயில் டிக்கெட் கேன்சல் பண்ண தானே ட்ரை பண்றோம்” என்றதற்கு, நாங்க பேங்க்கோட சர்வேலன்ஸ் டீம். ஏதோ ஒரு மோசடி பரிவர்த்தனை மாதிரி நடக்குது. அதனால இந்த பரிவர்த்தனையையும் டெபிட் கார்டு நம்பரையும் ப்ளாக் பண்ணிட்டோம்” என்றார்கள்.

“ஆமாம் சிவிவி எண் கேட்டது, யோசித்துக் கொண்டிருந்தேன், ஆனா ஏன் உங்க நம்பர் ஸ்பேம்னு காட்டுது?’ என்றேன். “இந்த மாதிரி குற்றங்களைக் கண்காணிக்கவே எங்க பேங்க்ல ஒரு டீம் வச்சிருக்கோம். சந்தேகத்திற்கு இடமான ட்ரான்ஸாக்ஷன் வந்தா அக்கவுண்ட் ஹோல்டரை அலர்ட் பண்றோம். பேங்க்ல இருந்து அப்பப்ப பேங்க் லோன் வேணுமா அது இதுன்னு கேட்கிறதால நிறைய யூசர்ஸ் எங்க நம்பரை ஸ்பேம்ல போட்டு வச்சிடறாங்க” என்றார். அதன் பின் அந்த ஹிந்திக்காரன் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தால் ‘நாட் இன் யூஸ்’ என்று வந்தது. அவ்வளவு நேரம் தேடுபொறியில் முதல் ஆளாக வந்து தலையை நீட்டிய அந்த எண்ணை இப்போது அடித்துப் பார்த்தால் ஃபிராடு என்று காட்டியது. ஒரு டுபாக்கூர் எண்ணை வலியப் போய் அழைத்து வலையில் சிக்கப் பார்த்துவிட்டு, அலர்ட் பண்ண வந்த எண்ணை ஸ்பேம் என்று நினைத்த விந்தையை நொந்து கொண்ட, அதே சமயத்தில், நல்ல வேளையாக தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று நிம்மதியானோம்.

இப்படியாக ஒரு தடவை ஏமாந்து, அடுத்த தடவை ஏமாந்தோமா இல்லையா என்பதே தெரியாமல் போய், மூன்றாம் முறை சுதாரித்துத் தப்பித்துக்கொண்டேன் இந்த சைபர் அட்டாக்குகளில் இருந்து!

(தலைப்பை ‘கம்பன் ஏமாந்தான்’ ஸ்டைலில் படிக்கவும்!)

சுருட்டி விட்டான்

சைபர் கிரைமில் மாட்டிக் கொண்டவர்களில் நானும் ஒருவன். என் வயது 89. 19.10.2022 அன்று மாலை 4 மணிக்கு, நான் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, வங்கி மேலாளர் பேசுகிறார் என்று போனை எடுத்து, தூக்கக் கலக்கத்தில் ஓடிபி சொல்லியதன் விளைவு, என் கணக்கிலிருந்து 3,17,500 ரூபாய் மாயமாகிப்போனது. மறுநாளே வங்கிக்கு சென்று, விவரங்களை சொல்லி என் கணக்கை மூடிவிடும்படியும் திருடிய பணத்தை உடனடியாக மீட்கும்படியும் புகார் அளித்தேன். இதற்குள் திருடன் எல்லா பணத்தையும் சுருட்டி விட்டான்.

ஒருவாரம் கழித்து எனக்கு வங்கியிலிருந்து பதில் வந்தது. வங்கி மேல் தவறில்லை, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டார்கள். களவுபோன தினமே காவல் நிலையத்துக்கு சென்று புகார் எழுதிக் கொடுத்தேன். இந்த மாதிரியான புகார்கள் அவர்களுக்கு தினமும் வருவதால், பணம் திரும்பி வருவது கஷ்டம் என்றார்கள். தேசிய இணையவழி குற்றத்தடுப்பு பிரிவிலும் புகார் அளித்தேன். இரண்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பணம் போனது போனதுதான்!

பி.ஆர். ராஜாராம், சென்னை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram