உலகிலேயே முதன்முறையாக என்று சொல்லி மரபணு ரீதியாக திருத்தம்(Genome Edited) செய்த இரண்டு நெல்ரகங்களை மே 4, 2025 அன்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் அறிமுகம் செய்தது. “டிஆர்ஆர் தன் 100” (கமலா) , “பூசா அரிசி டிஎஸ்டி 1” என பெயரிட்ட இரண்டு நெல் ரகங்களை அறிமுகம் செய்தார் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.
“இந்திய வேளாண் துறைக்கு இது மிகவும் முக்கியமான நாள். விரைவில் விவசாயிகளிடம் இந்த நெல் ரகங்கள் வந்து சேரும். இந்த இரு நெல் ரகங்களும் பருவநிலை மாற்றத்தை தாக்குப்பிடித்து வளர்வதுடன் 20 முதல் 30 சதவீதம் வரை விளைச்சல் அதிகமாக கொடுக்கும். குறைந்த நாள்களில் அறுவடை செய்வதால் பயிர் சுழற்சி அதிகரிக்கும்.’ எனக் குறிப்பிட்டார் அவர்.
மரபணு மாற்றம் (Genetically modified) செய்த ரகங்களுக்கும் மரபணு திருத்தம்(Genome edited) செய்யப்பட்ட ரகங்களுக்கும் என்ன வித்தியாசம்?
“ மரபணு மாற்றம் செய்த ரகங்கள் என்றால் அவற்றில் குறிப்பிட்ட பண்பை அதிகரிப்பதற்காக வெளியிலிருந்து பேக்டீரியா அல்லது அந்நிய தாவரங்கள் போன்றவற்றின் மரபணுக்கள் சேர்க்கப்பட்டு அந்த ரகம் உருவாகப்படும். மரபணு திருத்தம் செய்த ரகங்கள் என்றால் அவற்றில் உள்ள சொந்த மரபணுவிலேயே திருத்தங்கள் மட்டும் செய்து குறிப்பிட்ட பண்பினை அதிகரித்து விதைகளை உருவாக்குவார்கள். வறட்சியைத் தாங்கி வளருவது, அதிகமாக நெல்மணிகளைத் தருவது போன்ற பண்புகளை மட்டும் குறிவைத்து மரபணுக்களில் திருத்தம் செய்திருப்பார்கள். தற்போதைய நெல் ரகங்கள் இப்படிச் செய்து அறிமுகம் செய்யப்பட்டிருப்பவை” என்று விளக்கம் தருகிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் பொ.பாலசுப்ரமணியன்.
இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி கத்தரி ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர் இவர். மதுரை கத்தரி, பொள்ளாச்சி கத்தரி, பாலூர் கத்தரி, கிள்ளிக்குளம் கத்தரி ஆகிய நான்கு கததரி ரகங்களிலும் பிடி கத்தரி ரகங்களை உருவாக்கி இருக்கிறது இவரது தலைமையிலான குழு. ஆனால் அரசு இந்த ரகங்களை வெளியிடவில்லை. இதன் விதைகள் இப்போது ஆய்வகத்தில் நான்கு டிகிரி வெப்பநிலையில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. நமது நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றிய கொள்கை முடிவுகள் இதற்குக் காரணம்.
ஆனால் நமது கோவை பல்கலைக்கழகத்துக்கு வந்து இந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு சென்றனர் வங்க தேச விஞ்ஞானிகள். அவர்கள் போய் தங்கள் நாட்டில் உருவாக்கிய பிடி கத்தரிக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்தது. வங்க தேசத்தில் அவை உற்பத்தி ஆகின்றன. அங்கிருந்து விதைகளை வாங்கிவந்து, இங்குள்ள ரகங்களுடன் கிராஸ் செய்து விவசாயிகள் கத்தரி உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றது. இப்போது கடைகளில் கிடைக்கும் கத்தரிக்காய்களில் புழுக்கள் இருக்காது காரணம் அவை பிடி கத்தரி ரகங்கள்தான் என்பது யாரும் சொல்லாத ரகசியம் என்று ஒரு கருத்து விவசாய விஞ்ஞானிகள் மத்தியில் உலவுகிறது.
அட... இந்த கட்டுரை பிடி கத்தரிகள் பற்றியது அல்ல. மரபணு திருத்தம் செய்யப்பட்ட நெல்ரகங்களைப் பற்றியது.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இரு ரகங்களுக்கு என்ன சிறப்புத்தன்மை?
டிஆர்ஆர் தன் 100 ரகம் அதிகமான நெல்மணிகளைக் கொடுக்கும். பூசா அரிசி டிஎஸ்டி 1, உவர் தன்மையையும் வறட்சியையும் தாங்கக்கூடியது.
டிஆர்ஆர் தன் ரகம் எந்த ரகத்தில் இருந்து மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்டதோ அதைவிட 19% அதிகமாக விளைச்சல் தரக்கூடியது. அதைப்போல் பூசா அரிசி டிஎஸ்டி ரகம் தாய்ப்பயிரை விட கூடுதல் விளைச்சலை உவர் நிலத்திலும் வறட்சியிலும் தரக்கூடியது.
இந்த இரண்டு புது ரகங்களும் தங்கள் தாய் ரகங்களைவிட 15-20 நாட்கள் முன்கூட்டியே அறுவடைக்குத் தயார் ஆகக் கூடியவை.
புதிய கொள்கை
மத்திய அரசு நெல் சாகுபடியில் இதைத் தொடர்ந்து புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. நெல்சாகுபடி செய்யும் நிலப்பரப்பில் 50 லட்சம் ஹெக்டேரைக் குறைப்பது, மீதி பயிரிடப்படும் நிலப்பரப்பில் நெல் உற்பத்தியை 1 கோடி டன்கள் அளவுக்கு அதிகரிப்பது என்பதே அது. மைனஸ் 5, ப்ளஸ் 10. இப்படி நெல் பயிரிடப்படும் நிலத்தைக் குறைத்து அந்த இடங்களில் பருப்புவகைகளையும் எண்ணெய் வித்துக்களையும் பயிரிடச்செய்யவேண்டும் என்பது திட்டம். இந்த இரு பொருட்களைப் பொருத்தவரையில் நம் நாடு இறக்குமதியைச் சார்ந்து உள்ளது. உலகில் அதிகமாக உணவுக்காக எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். பருப்புவகைகளை அதிகம் உற்பத்தி செய்யும் அதே சமயம் அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா இருந்தாலும் அவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் தான் உள்ளது.
இந்நிலையை மாற்றவேண்டும் என்பதே நோக்கம்.
கேட்க நன்றாகத்தான் உள்ளது. நெல் விவசாயி அதை விட்டுவிட்டு பருப்பு, எண்ணெய்வித்துகளை பயிரிட முன்வருவாரா? நெல்லுக்காவது குறைந்தபட்ச ஆதார விலை என்ற ஒன்றை நிர்ணயித்து அரசாங்கமே கொள்முதல் செய்கிறது. பொதுவாக 40% அளவுக்கு உற்பத்தியாகும் நெல்லை அரசு கொள்முதல் செய்துவிடுகிறது.
பருப்பு, எண்ணெய் வித்துகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை இருந்தாலும் கூட அவற்றை அரசு சரிவர கொள்முதல் செய்வது இல்லை. பல இடங்களில் இந்த விலைக்கும் குறைவாகவே விவசாயிகள் விற்க நேரிடுகிறது. இந்நிலையில் நெல்லை கைவிட்டு இவற்றைப் பயிரிட முன்வருவார்களா?
உதாரணத்துக்கு பச்சைப்பயிறை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் இதன் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது கொள்முதல் அளவோ மிகக்குறைவு.
”தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் ஹெக்டேரில் பச்சைப்பயறு சாகுபடி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 1.20 லட்சம் டன் பச்சைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதில் 1440 டன் அளவுக்கு மட்டுமே அரசு கொள்முதல் செய்வது எந்த வகையில் நியாயம்?” இது பாமக தலைவர் அன்புமணி சமீபத்தில் எழுப்பிய கேள்வி.
“ஒன்றிய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்குஅதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசே பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்று சொல்கிறார் அவர்.
சீனாவின் நெல் உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு நான்கு டன். இந்தியாவில் அது 2.8 டன்களாக உள்ளது. நிச்சயம் நமது உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு இந்த மரபணு திருத்தப்பட்ட ரகங்கள் உதவி செய்தால் நல்லதுதான்.
இந்த இரண்டு ரகங்கள் மட்டுமல்ல. மேலும் பல நெல் ரகங்களும் இந்த முறையில் வர இருக்கின்றன. தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகமும் இந்த ரகங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வட இந்தியாவில் நோய்களால் பாதிக்கப்பட்டு பருத்தி விளைச்சல் சுத்தமாகப் படுத்துவிட்டது. அதனால் ஏற்றுமதி செய்துகொண்டிருந்த நாம் இப்போது பருத்தி இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி பருத்தி ரகங்கள் எங்கும் பயன்பாட்டில் இருந்தாலும் அவற்றில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. இந்த மரபணுத் திருத்த முறைக்கு அரசின் அனுமதி இருப்பதால் இம்முறையில் மேம்படுத்தப்பட்ட பருத்தி ரகங்கள் வெளியாகும் என வேளாண் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
மரபணு மாற்றமோ மரபணு திருத்தமோ… உற்பத்தியை அதிகரிப்பதுபோல் இருந்தால் சந்தையின் தேவைக்கு ஏற்ப அனுமதியுடனோ அனுமதி இல்லாமலோ விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வந்தே சேரும். பிடி கத்தரியில் நடந்திருப்பது போல. என்ன சரிதானே?
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp