இளையராஜா- ஜாக்சன்  
சிறப்புக்கட்டுரைகள்

மைக்கேல் ஜாக்சனும் இளையராஜாவும்... மைக்கேல் (2026) படத்தை முன் வைத்து...

பேரா. பொ. பாலசுப்ரமணியன்

அண்டாயின் ப்யூகுவா இயக்கத்தில், மைக்கேல் ஜாக்சனின் சொந்த அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன், நடித்திருக்கும் படம் மைக்கேல். 2026 ஏப்ரல் 24 அன்று உலகெங்கும் தியேட்டரில் வெளியானது. மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கைப் படம் இது.

கதை: 1960-களில் குழுவில் சின்ன பையனாக பாடஆரம்பித்து, 1980-களில் Bad World Tour வரை மைக்கேல் ஜாக்சன் எப்படி King of Pop ஆனார் என்பதுதான் படம். பிற்கால சர்ச்சைகள் எதுவும் படத்தில் இல்லை, புகழ் உச்சிக்கு செல்வது மட்டும்தான்.

ஜாபர் ஜாக்சன் நடிப்பு: அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன்மாதிரியே ஆட்டம், முகபாவம், குரல். எல்லா reviewer-களும் இதைத்தான் முதலில் பாராட்டுகிறார்கள். "Jaafar தன் சித்தப்பாவை கண்ணில் வைத்து நடித்திருக்கிறார்", "concert பார்த்த மாதிரி இருந்தது" என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

Thriller, Beat It, Billie Jean, Bad, Human Nature போன்ற புகழ்பெற்ற ஆல்பங்களை எல்லாம் IMAX-இல் பெரிய அளவில் எடுத்திருக்கிறார்கள். "Avengers Endgame-க்கு பிறகு best theatre experience" என்று ஒரு விமர்சகர் சொன்னார்.

அப்பா வேடம்: ஜோ ஜாக்சனாக Colman Domingo நடிப்பு மிரட்டல். கண்டிப்பான அப்பா, மகனை பெரிய ஆளாக்க முன்னோக்கித் தள்ளுவது நன்றாக வந்திருக்கிறது

கதையில் அடக்கி வாசிக்கிறார்கள். விமர்சகர்கள் கோபப்படுவது இதற்குத்தான். Rotten Tomatoes-இல் 27% தான் கொடுத்திருக்கிறார்கள். "ஆழமான pool இல்லை, shallow pool மாதிரி" என்று சொல்கிறார்கள்

ஜாக்சனின் தனிப்பட்ட கஷ்டங்கள், தனிமை, சகோதரர்களுடன் உறவு எல்லாம் மேலோட்டமாகத்தான் போகிறது. பாட்டு, ஆட்டம், concert என்று மட்டும் திரும்பத் திரும்ப வருவது போல இருக்கிறது.

சில இடங்ளில் வேகமே இல்லை. படம் படுத்துவிடுகிறது. கிராபிக்ஸும் பல் இளிப்பது தெரிகிறது!

விமர்சகர்கள் திட்டினாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் $960 மில்லியன் வசூல், Oppenheimer படத்தை தாண்டி எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த biopic ஆகிவிட்டது.

இன்ஸ்டாகிராமில் பெரும்பாலான ரசிகர்கள் "ஒரு முறை கண்டிப்பா திரையரங்கில் பாருங்கள்", "Oscar worthy" என்று பாராட்டுகிறார்கள், தெலுங்கு vlogger-களும் "dance, expression அசத்தல்" என்கிறார்கள்.

இது ஒரு ஆவணப்படம் மாதிரி எதிர்பார்த்தால் அப்படி ஆழமாக படம் இல்லை. மைக்கேல் ஜாக்சன் பாட்டு பிடிக்கும், அவருடைய ஆட்டம் பிடிக்கும் என்றால், பெரிய திரையில் இசைநிகழ்ச்சி பார்த்த மாதிரி ஜாலியாக இருக்கும். கதை, உணர்ச்சிகரமான காட்சிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றம் வரலாம்.

Rating: விமர்சகர்கள் 5/10, ரசிகர்கள் 7.5 - 8/10. ஒரு முறை பார்க்கலாம், குடும்பத்தோடு பார்க்க தாராளமாக ஏற்ற படம்.

மைக்கேல்: தோற்றப் பொருத்தம் எப்படி?

நீங்கள் மைக்கேல் ஜாக்சன் பாட்டுகள் கேட்டு வளர்ந்தவரா? Thriller / Billie Jean காலத்து ரசிகரா? அப்படியென்றால் உங்களுக்கு நிச்சயம் பழைய நினைவுகளைக் கிளறிவிடும்.

மைக்கேல் ஜாக்சனுக்கு எதிரான MTVயின் கருப்பினப் பாகுபாடு போல நம் இசைஞானியின் இசை வாழ்க்கையும் இனரீதியான எதிர்ப்புகளைச் சந்தித்ததுதானே? அதனால் இருவரது கலைப் பயணங்களை ஒப்பிட்டால் என்ன?

1983-இல் Billie Jean வீடியோவை MTV ஒளிபரப்ப மறுத்தது. காரணமாக “நாங்க rock music சேனல், கருப்பின இசை எங்க பார்மெட்டுக்கு செட் ஆகாது” என்று சொன்னார்கள். அப்போது சிபிஎஸ் ரெக்கார்டு நிறுவனத் தலைவர் வாலர் யெத்னிகோப் கோபப்பட்டு, “கருப்பின கலைஞரை ஒளிபரப்ப மாட்டேன்னா எங்க நிறுவனத்தின் எல்லா வீடியோவையும் திரும்ப எடுத்துடுவேன். இதை பொதுவெளியில் சொல்லுவேன்” என்று மிரட்டினார். MTV மார்ச் 10, 1983-ல் நம் மைக்கேல் ஜாக்சனின் Billie Jean ஐ ஒளிபரப்பியது. அதுதான் heavy rotation-ல் வந்த முதல் கருப்பின கலைஞரின் வீடியோ. அதுக்கப்புறம் Thriller கூடுதலாக 1 கோடி பிரதிகள் விற்றது. Prince, Whitney Houston போன்றோருக்கெல்லாம் கதவு திறந்தது. இது இனவெறிக்கு எதிரான தொழில் ரீதியான வெற்றி.

இளையராஜா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, பின்னர் இந்து மதத்துக்கு மாறினார். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, பத்ம பூஷன் வாங்கி, ராஜ்யசபா உறுப்பினர் ஆன பிறகும் 2024 டிசம்பரில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறைக்குள் போக அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் “பாரம்பரியம், பூசாரிகள் மட்டும் போகலாம்” என்றது. ஆனால் “அவர் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால்தான்” என்று விமர்சனம் எழுந்தது. 2022-ல் அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு அவர் முன்னுரை எழுதியபோது, “அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோருக்காக போராடியவர், இந்த ஒப்பீடு அவமரியாதை” என்று தலித் செயற்பாட்டாளர்கள் கண்டித்தனர். எம்.பி. ஆனபோது கூட பல ஊடகங்கள் அவரை “Dalit from Tamil Nadu” என்று அடையாளப்படுத்தின. அதாவது இசை மேதை என்ற அடையாளத்தைத் தாண்டி சாதி அடையாளம் அவரை விடாமல் துரத்தியது.

இளையராஜா சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி, அவரோட அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையில் "பாவலர் பிரதர்ஸ்" என்ற பயண இசைக்குழுவில் 14 வயசுல இருந்தே பாடிக்கிட்டு இருந்தார்.

அந்தக் காலத்துல தமிழ்நாடு முழுக்க ஊர் ஊரா போய் கச்சேரி பண்ணும்போது, கிராமத்து மக்கள் பாடுற தாலாட்டு, ஒப்பாரி, ஏற்றப்பாட்டு, நாட்டுப்புற கும்மி பாடல்களை பாவலர் வரதராஜன் கேட்டு கேட்டு குறிப்பெடுத்து வச்சிருந்தார். இளையராஜாவும் அந்த பாடல்களை கேட்டு வளர்ந்தார். இதுதான் பின்னாடி 16 வயதினிலே, அன்னக்கிளி மாதிரி படங்கள்ல "மண்வாசனை" இசை வர காரணமாச்சு.

ஒரு கிளைக்கதை: பாவலர் வரதராஜன் ஊர் ஊரா சுத்தி சேகரிச்ச நூற்றுக்கணக்கான கிராமியப் பாடல்களின் கையெழுத்து நோட்டுகள், ஒலிநாடாக்கள் எல்லாம் இளையராஜா கிட்ட இருந்துச்சு. இது அவரோட இசை பொக்கிஷம். 80களில் ஒரு காலகட்டத்துல, இளையராஜா சென்னைக்கு குடிபெயரும் போது, இந்த பழைய கிராமியப் பாடல் சேகரிப்புகள் அடங்கிய பெட்டி காணாம போயிடுச்சு. பல வருஷம் கழிச்சு தான் தெரியவந்ததாம் - அந்த பெட்டியை சியாமளா பாலகிருஷ்ணன்கிறவர் எடுத்து வச்சிருந்தாங்கன்னு.

இளையராஜா இதைக் கேள்விப்பட்டு ரொம்ப அப்செட் ஆகிட்டாராம். "என் அண்ணன் உயிரைக் கொடுத்து சேகரிச்சது, அது என் இசையோட வேர்"னு கோபப்பட்டதா சொல்வாங்க. அப்புறம் சமாதானம் பேசி அந்த தொகுப்புகள்ல ஒரு பகுதி திரும்ப கிடைச்சதாகவும் ஒரு பகுதி கிடைக்கவே இல்லையான்னும் சொல்றாங்க. முக்கியமான விஷயம்

இந்த சம்பவத்தை இளையராஜாவோ, சியாமளா மன்னியோ பப்ளிக்கா எங்கும் உறுதிப்படுத்தல. பத்திரிக்கையாளர் "பிஸ்மி" போன்ற சினிமா வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் பேட்டிகள்ல, புத்தகங்கள்ல இதை ஒரு "சினிமா folklore" மாதிரி சொல்லியிருக்காங்க.

மைக்கேல் ஜாக்சன் மற்றும் நம் ராஜா கலைப் பயணங்கள் இரண்டையும் ஒப்பிட்டால் என்ன தெரிகிறது?

ஜாக்சனின் பிரச்சனை அமெரிக்க பாப் இண்டஸ்ட்ரியில் இருந்த நிறவெறி. ஒரு தனியார் டிவி சேனல் கருப்பின கலைஞரை ஒதுக்கியது. ஆனால் பணம், விற்பனை, நிறுவன அழுத்தம் அந்த சுவரை ஒரு மாதத்தில் உடைத்தது. Billie Jean ஹிட் ஆனதும் எம்டிவி கொள்கையையே மாற்றியது. ஒரு தனிமனித வெற்றி முழு துறையையும் மாற்றியது.

இளையராஜாவின் பிரச்சனை இந்திய சமூகத்தில் ஆயிரம் ஆண்டுகளாக ஊடுருவி இருக்கும் சாதி. இது மதம், பண்பாடு, கோவில் நிர்வாகம் என எல்லாவற்றிலும் இருக்கிறது. அவர் இசைஞானி ஆகி, பத்ம பூஷன் வாங்கி, எம்பி ஆன பிறகும் 2024-ல் கருவறை மறுக்கப்படுகிறது. அதாவது தனிமனித சாதனை அமைப்பை முழுக்க மாற்றவில்லை. அவர் தன் இசையால் கோடிக்கணக்கான மக்கள் மனதில் சாதியைக் கடந்தார். ஆனால் சமூக அமைப்பு இன்னும் அவரை சாதிக்குள் அடைக்கப் பார்க்கிறது.

இரண்டு பேருமே தங்கள் கலையால் “நீங்க ஒதுக்கிய அதே இடத்தில் நான் ராஜாவாக நிற்பேன்” என்று நிரூபித்தவர்கள். ஒருவர் எம்டிவி-யை வளைத்தார், இன்னொருவர் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் குடியேறி சாதியை கடந்தார் – ஆனால் சமூகம் இன்னும் கடக்கவில்லை.

அதுசரி… நம்ம ஊர்லயும் ராஜாவுக்கு ஒரு சுயசரிதைப் படம் எடுக்கறதா சொன்னாங்க? அது எப்ப வரும்?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram