நந்தினி 
சிறப்புக்கட்டுரைகள்

BIGGBOSS9TAMIL: எலிமினேஷனுக்கு முன்பே எவிக்‌ஷன்…நந்தினியை டார்ச்சர் செய்த ஹவுஸ்மேட்ஸ்?!

ச. ஆனந்தப்பிரியா

பிக்பாஸ் தமிழின் ஒன்பதாவது சீசனில் வீட்டின் முதல் எலிமினேஷன் யார் என எதிர்பார்த்திருக்கும் இந்த வேளையில் எதிர்பாராத எவிக்‌ஷன் ஒன்று நடந்திருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஐந்தாம் நாளான நேற்று என்ன நடந்தது?

முதல் வாரத்தின் வீக்லி டாஸ்க்காக கதை நேரத்தை அறிவித்திருந்தார் பிக்பாஸ். அதாவது, போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை சகபோட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் டாஸ்க்தான் அது. இந்த டாஸ்க்கில் முதல் நபராக பங்கேற்றவர் நந்தினி. சிறுவயதிலேயே தன் தாய், தந்தையை இழந்தவரான நந்தினி தன் தம்பிக்காக கஷ்டப்பட்டு படித்து வளர்ந்திருக்கிறார். தன் தம்பியையும் நன்றாக வளர்த்து ஆளாக்கி இருக்கிறார். சிறுவயதில் இருந்தே உண்மையான அன்புக்காக ஏங்கி இருப்பவர் அதில் பல அவமானங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்திருக்கிறார். இந்த விஷயங்களை மிகவும் உருக்கமாக பகிர்ந்திருந்தார் நந்தினி.

இங்கிருந்துதான் பிரச்சினை தொடங்கி இருக்கிறது. அதாவது, நந்தினியின் அழுகையையும் அவரது பிரச்சினைகளையும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கேலி செய்யும் விதமாக புறணி பேசியிருக்க அதில் மனம் புண்பட்டிருக்கிறார் நந்தினி. இதற்காக அவர் நேற்று முன்தினமே கதறி அழுதார். இருந்தாலும் அவர் கண்டெண்ட்டிற்காக இதெல்லாம் செய்கிறார் என மறைமுகமாக ஹவுஸ்மேட்ஸ் சீண்ட ஆரம்பிக்க, நேற்று கோபத்தின் உச்சிக்கே சென்ற நந்தினி தன் மைக்கை கழற்றி எறிந்து விட்டு ஒவ்வொருவரையும் திட்ட ஆரம்பித்தார். “என் அன்பு உண்மை, உங்களிடமும் அதுதான் எதிர்பார்த்தேன். ஆனால், கண்டெண்ட்டிற்காக எல்லாரும் ரியாலிட்டி தொலைத்துவிட்டீர்கள். என் கஷ்டம் கூட உங்களுக்கு கேலியாக போய்விட்டது” என்று சொல்லி ஹைடெசிபலில் கத்த ஆரம்பித்தார்.

தன் பெயரின் முன்னால் பிக்பாஸ் என்ற அடையாளம் வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அது கிடைத்துவிட்டதால் இனிமேல் இந்த ரியாலிட்டி இல்லாத வீட்டில் தொடர முடியாது என்ற காரணத்தை சொல்லிவிட்டு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார் நந்தினி. கலையரசன், திவாகர், பிரவீன் காந்தி, வியன்னா உள்ளிட்டோர் முதல் வார நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் யாரேனும் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே நந்தினி வெளியேறி இருப்பதால் நாமினேஷனில் குறைந்த மக்கள் ஓட்டுகள் வாங்கியவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவாரா அல்லது காப்பாற்றப்படுவாரா என்பது இன்று நடக்கும் வீக் எண்ட் எபிசோட் ஷூட்டில் தெரிந்துவிடும். தற்போதைய நிலவரப்படி, குறைந்த ஓட்டுகள் வாங்கி பிரவீன் காந்தி பின்தங்கி இருக்கிறார் என செய்தி கசிந்துள்ளன.