1984இலிருந்து 1987வரை திருச்சியில் படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாண்டுகளில் நான் அதிகமாகச் சென்ற இடம் NCBH புத்தகக் கடையும், ‘நவீனம்’ புத்தகக் கடையும்தான். மார்க்சியம் தொடர்பான நூல்களும் ரஷ்ய இலக்கியங்களும் விலை மலிவாக இருந்ததால் அதிகமாக வாங்க முடிந்தது. அதிகமாகப் படிக்க முடிந்தது. NCBH வெறும் புத்தகக் கடையாக, விற்பனையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இடமாக இருக்கவில்லை. ‘இதெப் படிங்க தோழர், இதெப் படிங்க தோழர்’ என்று சொல்கிற இடமாகவும், சம்பந்தப்பட்ட புத்தகத்தின் மதிப்பை அறிமுகப்படுத்துகிற இடமாகவும் இருந்தது. எல்லோரையும் படிக்கவைத்துவிட வேண்டும் என்ற பெருங்கனவு கொண்ட இடமாகவும் இருந்தது. NCBH படிக்கத் தூண்டிய ஓர் இடம். பள்ளிக்கூடம் மாதிரி. பலரைப் படிக்கவும் வைத்தது. முன்பு NCBH இருந்த இடம் இப்போது எப்படி இருக்கும்? தெரியவில்லை. NCBH மூலமாக எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். அதில் ஒருவர் கோ. கேசவன். ரஷ்ய இலக்கியங்களை அப்போது அதிகமாக மொழிபெயர்த்தவர் மணவை முஸ்தபா, யுனெஸ்கோ இதழின் ஆசிரியராகவும் அவர்தான் இருந்தார்.
ஜோசப் கல்லூரிக்கு எதிரில் இருந்தது, ‘நவீனம்’ புத்தகக் கடை. விஜயகுமார் என்பவர் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது தமிழ்நாட்டில் வந்துகொண்டிருந்த எல்லா சிறுபத்திரிகைகளும் கிடைக்கக்கூடிய இடமாக ‘நவீனம்’ இருந்தது. நவீன எழுத்தாளர்கள் என்று சொல்லக்கூடிய அத்தனை எழுத்தாளர்களின் நூல்களும் கிடைக்கும். திருச்சி வாசகர் வட்டம் நண்பர்கள் சந்திக்கக்கூடிய இடமாகவும் அது இருந்தது. ‘நவீனம்’ புத்தகக் கடை எனக்கு ‘நவீன எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்திப் படிக்கவைத்தது. ஏராளமான நண்பர்களைத் தந்தது. அவர்களில், க. பூரணச்சந்திரன், எஸ். ஆல்பர்ட், எம்.டி. முத்துக்குமாரசாமி, ராஜன் குறை, எஸ். அற்புதராஜ், பேரா. அரங்க மல்லிகா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சிக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தபோது புத்தகம் வாங்குவதற்காக ‘நவீனம்’ புத்தகக் கடைக்குப் போனேன். ‘பாட்டா ஷூ மார்ட்’ என்ற போர்டு இருந்தது. புத்தகங்கள் இருந்த இடத்தில் செருப்புகள் அடுக்கப்பட்டிருந்தைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இல்லை. வருத்தமாக இருந்தது. என் மனதில், என் நினைவில், என் எழுத்தில் ‘அந்த இடம்’ என்றும் நவீனம் புத்தகக் கடையாகத்தான் இருக்கும். காரணம் நான் படிப்பைத் தேடிச்சென்ற இடம். பள்ளிக்கூடம் —மாணவர்கள் எல்லோருக்கும் அவர்கள் படித்த பள்ளிக்கூடம் எப்படி மறந்துபோகும்? பழைய பள்ளிக்கூடக் கட்டடம் அப்படியே இருக்காதுதானே?
திருச்சி தொடர்புகள் முற்றிலுமாக அழிந்துபோய் 1989க்குப் பிறகு சென்னையில் தொடர்புகள் ஏற்பட்டன. சென்னையில் நான் விரும்பிப்போன இடங்கள் ‘க்ரியா பதிப்பகம்’, ‘கீழைக்காற்று பதிப்பகம்’.
1989இல் ராயப்பேட்டையில் க்ரியா இருந்தது. அப்போது இருந்த பைலட் தியேட்டருக்கு அடுத்த கட்டடம். க்ரியாவுக்குப் போகிற ஒவ்வொரு முறையும் பைலட் தியேட்டர் என்றுதான் சொல்வேன். இப்போது பைலட் தியேட்டர் இல்லை. கல்யாண மண்டபம் இருக்கிறது. 2000 வரை புகழ்பெற்ற தியேட்டர்கள் இருந்த இடங்களெல்லாம் இப்போது கல்யாண மண்டபங்களாக மாறிவிட்டன. இந்த மாற்றம் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்திருக்கிறது.
மொழிபெயர்ப்பு நூல்கள், நாடக நூல்கள் என்று க்ரியா என்னைப் படிக்கவைத்தது. க்ரியாவின் வழியாகத்தான் ந. முத்துசாமி எழுதிய ‘நாற்காலிக்காரர்’, கன்னடத்திலிருந்து ஜெயா (க்ரியா நிறுவனத்தைத் தொடங்கியவர்) மொழிபெயர்த்த ‘துக்ளக்’, சார்த்ரின் ‘மீள முடியுமா?’, ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’ என்று பல நூல்களைப் படித்தேன். 1989இலிருந்து 1991வரை நான் க்ரியாவுக்கு எத்தனையோ முறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது க்ரியாதான் பிற்காலத்தில் என் எல்லா நூல்களையும் வெளியிடப்போகிறது என்பது. 1991இல் ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் பிரதியைக் கொடுக்கும் நாள்வரை நான் க்ரியா ராமகிருஷ்ணனைப் பார்த்ததில்லை. க்ரியாவின் தொடர்பால் ‘கூத்துப்பட்டறை’ அறிமுகம் கிடைத்தது. கூத்துப்பட்டறையின் சார்பில் ந. முத்துசாமியும் மற்றவர்களும் இயக்கிய பல நாடகங்களைப் பார்த்தேன். ‘கடோத்கஜன்’ என்ற நாடகத்தை தீவுத்திடலில் பார்த்தேன். என்னுடைய ‘கடிதம்’, ‘அம்மா’ ஆகிய இரண்டு கதைகளை முத்துசாமி இயக்கினார். வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்த பல அரிய பிரெஞ்சு நூல்களை நான் க்ரியா வழியாகத்தான் படித்தேன்.
க்ரியாவுக்கு அடுத்ததாக நான் சென்ற இடம், எல்லீஸ் ரோட்டில் ஜாஃபர்கான் சந்தில் இருந்த ‘கீழைக்காற்று’ பதிப்பகம். நான் தங்குகிற லாட்ஜுக்கும் கீழைக்காற்றுக்கும் 500 மீட்டர் தூரம்கூட இருக்காது. கீழைக்காற்று பதிப்பகத்தில் வாங்கிப் படித்த நூல்கள் ஏராளம். தமிழ்நாட்டில் வரக்கூடிய எல்லா சிறுபத்திரிகைகளும் கிடைக்கக்கூடிய இடமாக இருந்தது. புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் பத்திரிகைகளை நடத்தக்கூடிய அரசியல் பின்புலத்தோடு இயங்கியது. எல்லா விதமான இலக்கிய நூல்களும், சமூக அக்கறை கொண்டு எழுதப்பட்ட நூல்களும் கிடைக்கக்கூடிய இடமாகக் கீழைக்காற்று பதிப்பகம் இருந்தது. அலெக்ஸ் ஹேலி எழுதிய ‘ஏழு தலைமுறைகள்’ நாவலை, அங்குதான் வாங்கிப் படித்தேன். அந்த நாவலை 50 பிரதிகளுக்கும் மேல் வாங்கி என் நண்பர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். சண்முகம் எப்போது என்னைப் பார்த்தாலும் ‘இதெப் படிச்சிப்பாருங்க தோழர்’ என்று பல நூல்களை என்னிடம் காட்டுவார். அவர் சொன்ன நூல்களை நான் வாங்கிப் படிக்காமல் இருந்ததில்லை. சண்முகம் மோசமான நூல்களை ஒருபோதும் எனக்குப் பரிந்துரைத்ததில்லை. மோசமான நூல்களைக் கீழைக்காற்று விற்றதில்லை. சண்முகம் ஒரு தேர்ந்த வாசகராக இருந்தார். சண்முகத்தின் வழியாகத்தான் ‘வினவு’ மின்னிதழ் அறிமுகமாயிற்று.
இப்போது கீழைக்காற்று பதிப்பகம் இல்லை. எல்லீஸ் ரோட்டின் வழியாக இப்போது நான் அதிகமாகப் பயணிக்கிறேன். அப்படிப் போகிறபோதெல்லாம் கீழைக்காற்று பதிப்பகம் என் நினைவில் வராமல் இருந்ததே இல்லை. என்னைப் படிக்கவைத்த, படிக்கத் தூண்டிய, படிப்பதற்குத் தரமான நூல்களை வழங்கிய எனக்கான பள்ளிக்கூடங்களில் ஒன்றாக இருந்த கீழைக்காற்று பதிப்பகம் இப்போது இல்லை. என் நினைவில் மட்டுமே வாழ்கிறது. பலருடைய நினைவுகளிலும் வாழலாம். எல்லாருக்கும் நல்ல பள்ளிக்கூடங்களும் நல்ல ஆசிரியர்களும் அமைந்துவிடுவதில்லைதானே? பழைய வார்த்தைதான். பெரும்பாலானவர்களால் பயன்படுத்துகிற வார்த்தைதான். அந்த வார்த்தையைத்தான் இங்கே பயன்படுத்துகிறேன். ‘அது ஒரு காலம். பழைய காலம். நினைவில் வாழும் காலம்.’ இப்போது நமக்கு எது வேண்டுமென்றாலும் கூகுளில் தேடுகிற காலத்துக்கு வந்துவிட்டோம். பொற்காலம் என்று எதுவுமில்லை.
NCBH, நவீனம், க்ரியா, கீழைக்காற்று போன்ற பதிப்பகங்களை, புத்தகக் கடைகளை நடத்தியவர்கள் அவர்களுக்குச் சரி என்று பட்ட, கொள்கைக்காக, லட்சியத்துக்காக நடத்தினார்கள். அன்னம் பதிப்பகம், கி.ரா. உட்பட பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டது மட்டுமல்ல, பல எழுத்தாளர்கள் உருவாவதற்கும் ஊக்கம் பெறுவதற்கும் காரணமாக இருந்தது. கோயம்புத்தூரில் செயல்பட்ட ‘விடியல்’ பதிப்பகம்தான் மராட்டிய மொழியில் எழுதப்பட்ட பல தன்வரலாற்றுக் கதைகளை வெளியிட்டது. அந்தப் பதிப்பகம் மட்டும் இல்லையென்றால் மராட்டியத்திலிருந்து தலித் தன்வரலாற்றுக் கதைகளும், நாடோடிப் பழங்குடியினரின் தன்வரலாற்றுக் கதைகளும் தமிழில் வந்திருக்காது. தமிழில் தலித் இலக்கியம் குறித்த உரையாடலுக்கு அடித்தளமிட்டது, மராட்டியத்தில் எழுதப்பட்ட தன்வரலாற்றுக் கதைகள்தான். மேட்டூரிலிருந்து ‘மணல் வீடு’ பத்திரிகையை 15 ஆண்டுகளாக மு. ஹரிகிருஷ்ணன் நடத்திக்கொண்டிருக்கிறார், லட்சியக் கனவோடு நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் இன்றுவரை செழுமையாகவும் வளமையாகவும் இருப்பதற்குத் தனிமனித முயற்சிகளும் குறுங்குழுவினரின் முயற்சிகளுமே காரணம்.
முன்பு இருந்த பதிப்பாளர்களின் எண்ணிக்கையைவிட, புத்தகக் கடைகளின் எண்ணிக்கையைவிட, இன்று அதிகம் இருக்கின்றன. ஆனால், பழைய பதிப்பாளர்களிடம், மனதுக்குள் ‘ஏதோ ஒன்று’ இருந்தது. இப்போது இருக்கிற பதிப்பாளர்களிடம் அந்த ‘ஏதோ ஒன்று’ இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது. திருநங்கைகள் ஒரு பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ‘நிப்பானம்’ என்ற தன்வரலாற்றுக் கதை நூலை அந்தப் பதிப்பகத்திலிருந்துதான் நான் வாங்கிப் படித்தேன்.
விளக்கில் எந்த இடத்தில் வெளிச்சம் இருக்கிறது, எந்த இடத்தில் இருள் இருக்கிறது. எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.