நிபா வைரஸ் 
சிறப்புக்கட்டுரைகள்

7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிபா வைரஸ்- எண்டே கேரளத்துக்கு என்ன ஆச்சு?

Staff Writer

வளஞ்சேரி எனும் ஊரில் 42 வயதுப் பெண் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

கேரள மாநிலத்தில் ஏழாவது முறையாகவும் குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் மூன்றாவதாகவும் இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   

கோழிக்கோடு அரசு மருத்துவ ஆய்வகத்தில் முன்னதாக தொற்று இல்லையெனக் கூறப்பட்ட நிலையில், மேல் சோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தேசிய தொற்றுநோயியியல் நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு நிபா தொற்று உள்ளதை உறுதிப்படுத்தியது. 

தற்போதைய நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. செயற்கைச் சுவாசத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அந்தப் பெண்ணை மருத்துவர் குழு உன்னிப்பாக கவனித்துவருகிறது.  

முன்னதாக, கடந்த ஒன்றாம் தேதியன்று மோசமான உடல்நிலையோடு பெரிந்தல்மனை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

அவரின் பாதிப்பை அறிந்த சுகாதாரத் துறை, அவரோடு அண்மையில் தொடர்பில் இருந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் தொற்று பாதிப்புக்காக தேடுதல் சோதனை செய்தது.

அவர்களில் அப்பெண்ணுடன் அன்றாடம் வீட்டில், வெளியில் அருகிலேயே இருந்துவரும் ஏழு பேருக்கு பாதிப்பு இல்லையெனத் தெரியவந்தது. ஆனாலும் அவர்கள் 21 நாள்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இருவர் அண்மையில்தான் தொடர் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மீண்டனர். அவர்கள் வளர்த்துவந்த நாய் உயிரிழந்ததை அறிந்த தகவல் கிடைத்தையடுத்து, கால்நடை மருத்துவத் துறையினர் அந்த நாயின் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.  

மலப்புரம் மாவட்ட நிர்வாகம் வளஞ்சேரி நகராட்சியின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்துள்ளது. அதன் அருகிலுள்ள மரக்கரை, எடையூர், அதவநாடு ஆகிய ஊராட்சிகளிலும் நோய்க்கட்டுப்பாட்டு எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டமாகச் செல்லவும் நோயாளிகளைச் சென்றுபார்க்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அணில்கள் உட்பட்ட விலங்குகள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடிகள், மதரசாக்கள் அனைத்தையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிபா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, கேரளத்தில் எப்படி இந்தத் தொற்று பரவியது என மருத்துவத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக, வௌவால் கடித்த பழங்களை உட்கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண் அப்படி எதையும் உண்ணவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

நிபா தொற்று வைரசை மேலும் பரவாதபடி தடுக்கும் நடவடிக்கையில் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.