திடீர் மாற்றமாக, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துவந்த பா.ஜ.க. மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
அடுத்து எடுக்கப்படவுள்ள அகில இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து மேற்கொள்ளப்படும் என்பது மத்திய அரசின் அறிவிப்பு.
கடந்த மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாகிவிட்டது. அமைச்சரவையின் முடிவைப் பற்றி ஊடகங்களிடம் பேசிய மைய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனையாக விவரித்ததைவிட, காங்கிரசின் முன்னைய ஆட்சிக்காலங்களைக் கடுமையாகச் சாடுவதிலேயே கூடுதல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, மன்மோகனின் ஆட்சியில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்காக பல தரப்பினரும் குரல்கொடுத்தும் அவர் பொருட்படுத்தவில்லை என்பது அஸ்வினியின் ஒரு வரிச் சாடலாக இருந்தது.
ஆனால், எதிர்ப்புறமோ, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் இராகுல் காந்தி, தங்களுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் நரேந்திர மோடி இப்படியொரு முடிவுக்கு வந்தார் என்பதாகக் கருத்து கூறியிருந்தார்.
அவர் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியின் முக்கிய உறுப்புக் கட்சியான தி.மு.க.வும் அதே தொனியில் கருத்துரைத்தது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினாவது கேள்வியாக அடுக்கினார். வி.சி.க. தலைவர் திருமாவளவனும் பகிரங்கமாகவே இது பீகார் தேர்தலுக்காக பா.ஜ.க. செய்த அறிவிப்புதான் என்றார்.
இடதுசாரி கட்சிகள் இரண்டும் இதே கருத்தை அழுத்தமாகக் கூறி, விமர்சிக்கவும் செய்தன.
இதனால் சமூகத்துக்கு என்ன ஆகும் என்பதுதான் உருப்படியான கேள்வி.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் அரசியல் கணக்குகளுக்கு அப்பால், சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் உழன்றுவருகிறது.
மறைந்த வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வந்த காலம் முதல், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான குரல் சமூக உரிமைத் தளத்தில் தூக்கலாக ஒலிக்கத் தொடங்கியது.
ஆனால், பிரிட்டன் ஆதிக்கத்தின்போதே தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய அப்போதைய சென்னை மாகாணத்தில், நீதிக்கட்சி சாதியப் பின்னடைவு அடிப்படையில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியது. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நேரு தலைமையில் அமைந்த அரசு நாடு முழுவதும் புதிய முறை கொண்டுவரப்பட்டது.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினருக்கு அரசமைப்புச் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதையொட்டி பட்டியல் சமூகத்தினரின் கணக்கெடுப்பு இப்போதுவரை நடத்தப்படுகிறது.
ஆனால் 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பிறகு, இப்போதுதான் அது அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடப்பு 2025-26ஆம் நிதியாண்டில் எடுக்கவேண்டும் என்றால், அதற்கென தனி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். அப்படி எதுவும் ஒதுக்கப்படாத நிலையில், அரசின் அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது.
ஒருவேளை அடுத்த ஆண்டில் இந்தக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டால், அது முடிவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளும் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள்கூட ஆகலாம். ஏனென்றால், கடைசியாக நடத்தப்பட்ட 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2010இல் தொடங்கி 2013இல்தான் இறுதியாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இதைச் சுட்டிக்காட்டும் பா.ம.க. தலைவர் அன்புமணி, 2008ஆம் ஆண்டு புள்ளிவிவர சேகரிப்புச் சட்டத்தின்படி, மாநில அரசாங்கமே சாதிவாரி சர்வே எடுக்கமுடியும்; அதைச் செய்தால் இட ஒதுக்கீடு பெறக்கூடிய அனைத்து சமூகங்களின் நடப்பு நிலவரத்தைச் சரியாக அறியமுடியும்; இதன்மூலம் இன்னும் இட ஒதுக்கீட்டுப் பலன் போய்ச்சேராத பின்தங்கிய மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முடியும் என்கிறார். ஆனால், அந்தக் கட்சி ஆதரிக்கின்ற பா.ஜ.க. மத்திய அரசே மாநில அரசுகள் எடுக்கும் கணக்கெடுப்பு சரியாக இருக்காது; குழப்பம் விளையும் என்று மறுதலித்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சாதியை வைத்து அரசியல் செய்தார்கள்; இப்போதும் அதை வைத்து மக்களிடம் பிளவுகளை அதிகப்படுத்தவே வழிசெய்யும் என்றும் சில முன்னேறிய சாதியத் தரப்பினர் எதிரான கருத்துகளையும் முன்வைக்கின்றனர்.
“ இதெல்லாம் அரதப் பழசான கருத்து. காலங்காலமாக சாதியத்தை ஆதரிக்கிறவர்கள், அதனால் பலன் அடைகிறவர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஞாயப்படுத்துவதற்குச் சொல்லும் காரணம்தான் இது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு முன்னர், பின்தங்கியவர்கள், ஒடுக்குதலுக்கு உள்ளானோர் என்றெல்லாம் இல்லாமல், சமூகம் அப்படியே ஒற்றுமையாக, ஒட்டிப்போய்க் கிடந்ததா என்ன? 90 சதவீதம் அக மண முறைதான் நடக்கிறது என சாதியத்துக்கான அடிப்படையைப் பற்றி அம்பேத்கர் எவ்வளவோ எடுத்துச்சொல்லியிருக்கிறார். பெரியாரும் சொன்னதுதான், சாதி இருக்கும்வரை சாதிகளுக்கு இடையே பாகுபாடு ஒழிந்து சமத்துவம் மலரும்வரை இட ஒதுக்கீட்டைக் கொடு என்பதுதான்.” என சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான முகாந்திரத்தை எடுத்துவைக்கிறார், சமூகநீதி எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான வாலாசா வல்லவன்.