இசை ஆய்வாளர் மு. ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’ என்ற இசைத் தமிழ் நூல் வெளிவந்து நூறு வருடம் ஆகிவிட்டது. இது முக்கியமான நூல். ஏனெனில் சங்க காலத்திலிருந்து 12ம் நூற்றாண்டு வரை மட்டுமே தமிழில் இசை பற்றிய நூல்கள் உள்ளன. அதற்கு அப்புறம் கிட்டத் தட்ட 700 ஆண்டுகள் அதாவது 19ம் நூற்றாண்டு வரை இசையைப் பற்றி எந்த நூலும் தமிழில் வரவில்லை, ” என்கிறார் இசை ஆய்வாளர் நா.மம்மது. “ஆபிரகாம் பண்டிதர் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள சாம்பவார் வடகரையில் 1859ல் பிறந்தார். அந்த ஊர் பக்கத்திலேயே உயர்நிலைப்பள்ளி வரை படித்து விட்டு அவரின் உறவினர் ஒருவரின் தொடக்கப் பள்ளியிலேயே இரண்டு ஆண்டுகள் பணி செய்தார். பின்னர் ஆசிரியப் பயிற்சிக்காக திண்டுக்கல் வருகிறார். அங்கே பணியாற்றிய காலத்தில் மூலிகை மருத்துவம் குறித்து நிறைய கற்றுக் கொண்டார். ஒருமுறை கம்பம் அருகேயுள்ள சுருளி மலைப் பகுதியில் புகழ் பெற்ற சித்த மருத்துவர் கருணானந்த சாமியைச் சந்திக்கச்சென்றார். அவரைச் சந்தித்தது பண்டிதர் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நாட்களில் காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களும் பாம்புக் கடியால் மக்கள் இறப்பதும் வெகு இயல்பான ஒன்றாக இருந்துள்ளது. பண்டிதர் கருணானந்தரிடம் முறையிட்டு அதற்கான மருத்துவச் செய்முறைகள் குறித்து கேட்டார். அவரும் பெருந்தன்மையோடு அனேக மூலிகைகளையும், மருந்துகள் செய்முறைகளையும் பண்டிதருக்குக் கற்றுத் தந்துள்ளார். இந்த முறைகளைப் பின்பற்றியே 1877 முதல் தஞ்சையில் மருந்துகள் தயாரித்தார்.
இதன் மூலமாக மருத்துவத்தில் இவருக்கு அதிகமான வருமானம் வந்தது. அதிகமான பொருள் ஈட்டிய பண்டிதர் 1900 வது ஆண்டு நிறைய பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் இவற்றுடன் தன்னுடைய ஆசான் கருணானந்த சாமிகளை இரண்டாவது முறையாகக் காணச் சென்றார். அத்துறவி, பண்டிதர் கொண்டு சென்ற எந்தப் பொருளையும் வாங்காமல் “நான் ஒரு துறவி எனக்கு எதற்கு இத்தனை பணம்? ஏன் இப்படி செய்கிறாய்?” என்று கனிவுடனே கேட்டார். பண்டிதர் தலையைக் குனிந்தவாறே அமைதியாக நின்றார். கருணானந்தர் பண்டிதரின் கையைப்பிடித்துக் கொண்டு “நான் ஒண்ணு சொன்னா நீ கேட்பாயா?” என தயக்கத்துடன் கேட்டார். உடனே பண்டிதர் “சொல்லுங்கள் சாமி செய்கிறேன்” என்றார் அவர் “உனக்கு இசை மீது ஆர்வம் இருக்கிறது. இசையையும் முறையாகக் கற்று இருக்கிறாய். அதனால் சீர் இழந்து இருக்கும் நமக்கான இசையை மீட்கவும் மக்கள் மத்தியில் அதைப் பரப்பவும் இந்தப் பொன்னையும் பொருளையும் நீ பயன்படுத்தவேண்டும்,” என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்வுதான் தமிழக இசை வரலாற்றில் 700 வருட இசைக்கான தவம் களையக் காரணமாக அமைந்தது.
ஆபிரகாம்பண்டிதர் புகழ்பெற்ற வயலின் மேதை சடையாண்டி பத்தரிடம் முறையாக இசையைக் கற்றவர். தஞ்சையிலும் ஆசிரியர் பணியில் இருந்தபோது இராமசாமி கோவில் நாகசுரக் கலைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி தனது இசை அறிவையும், பாடும் திறனையும் வளர்த்துக் கொண்டார். மேலும் இசைப் பாடகர்கள், இசைக் கருவியாளர்கள் பலருடன் உரையாடி தன்னை செம்மைப்படுத்திக்கொண்டார். வாய்ப்பாட்டு, வீணை, பிடில் முதலியவற்றிலும் தேர்ச்சியடைந்தார். இவ்வாறான அவருடைய இசை குறித்த செயல்பாடுகளே அவரை ஒர் இசை ஆய்வாளராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் உருவாக்கியுள்ளது.
1912 ஆம் ஆண்டு தஞ்சையில் இசை ஆய்வுக்காக சங்கீத வித்யா மகாசன சங்கத்தை பண்டிதர் தொடங்கினார். மேலும் தன்னுடைய நூல்களை அச்சிடுவதற்காகவே அங்கு சென்னை ஆளுநராகப் பணியாற்றிய சர்.ஆர்தர் லாலி என்பவரின் நினைவாக லாலி அச்சுக் கூடத்தை உருவாக்கினார். இது சங்கீத மகால் போன்ற அமைப்பில் இருந்தது. அங்கேதான் 1916 வரை ஏழு மாபெரும் இசை மாநாடுகளை தமது சொந்தச் செலவிலேயே நடத்தினார். 1916ல் பரோடாவில் நடந்த இசை மாநாட்டிற்கு பலரை அழைத்துச் சென்றார். 1917ல் தாம் ஆய்வு செய்து வந்த தமிழிசை பற்றிய ஆய்வு நூலை தமது ஆசான் கருணானந்த சாமிகள் நினைவாக கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் அச்சிட்டு (முதல் பதிப்பு) கொண்டு வந்தார். இந்நூல் லி பெருந்தாளில் 1346 பக்கங்களுடன் நான்கு பாகங்கள் அடங்கியது.
முதல் பாகத்தில் பண்டைத் தமிழகம் மற்றும் முத்தமிழ் இலக்கணம் பற்றி கூறுகிறார். மேலும் இசைப்புலவர்களின் பெயரகராதியும் அவர்களைப் பற்றி சில குறிப்புகளும் உள்ளன.
இரண்டாம் பாகத்தில் இசையின் ஒரு தானத்தில் (ஸ்தாயி) 22 சுருதி முறை பிழையானது, 24 சுருதிகளே வரும் என நிறுவுகிறார் பண்டிதர்.
மூன்றாம் பாகமே நூலில் சிறந்த பாகம். பெரும் பண்கள், திறப்பண்கள், பண் பெயர்ப்பு, ஆளத்தி, (ஆலாபனை) பல நூல்களில் கூறப்பட்ட பண்கள், இணை, கிளை, பகை, நட்பு என்ற பொருந்து சுரங்களைக் காணும் முறை முதலியவற்றை முதன் முதலில் விளக்குகிறார்.
நான்காம் பாகத்தில் கர்நாடக சங்கீதத்தில் பெயர் மாற்றம் பெற்று இசைத் தமிழில் வழங்கி வரும் சுருதிகளின் கணக்குகள் குறித்து பண்டிதர் மிக விரிவாக விளக்குகிறார்.
இந்நூலில், “இப்புத்தகம் கையெழுத்து பிரதியாகவும், அரைகுறையாகவும், அச்சாகி இருந்த நிலையில் அவைகளை வாசித்துப் பார்த்து, மிகுந்த சந்தோஷத்துடன் என்னை உற்சாகப்படுத்திய தமிழ் வித்வ சிரோமணி சோழவந்தான் அரசஞ்சண்முகம் பிள்ளை அவர்களுக்கும், பிரசிடென்ஸி காலேஜ் தமிழ் தலைமைப் பண்டிதர் உத்தமதானபுரம் மகா மகோபாத்தியாய ஸ்ரீ சாமிநாதையர் அவர்களுக்கும், அம்பாசமுத்திரம் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் மகா ஸ்ரீ அரிகர பாரதியார் அவர்களுக்கும் இவ்வாறு இன்னும் நிறைய வித்துவான்களுக்கும் என் மனப்பூர்வ வந்தனம் சொல்லுகிறேன்,” என்கிறார் பண்டிதர். குறிப்பாக சிலப்பதிகாரம், அதன் உரைகள், அதை வெளிக்கொணர்ந்த உ.வே.சாவை மிக உயர்வாகப் பாராட்டுகிறார். “பூர்வ தமிழ் முறைகளடங்கிய சிலப்பதிகாரத்தின் பேருதவியினாலேயே நான் எழுதக் கூடியவனானேன் என்று மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்கிறேன்,” எனவும் கூறுகிறார்.
ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் “இந்த கருணாமிருத சாகரம் கேரளத்தில் வந்திருந்தால் இதற்குள் இந்த நூலைப்பற்றி பத்து நூல்கள் வந்திருக்கும். கருணாமிர்தசாகரம் மூலநூலில் குறிப்பிடுக்கின்ற இசைச் செய்தி, கருணாமிர்த சுருக்க நூல், கருணாமிர்த சாகரத்திற்கு விளக்க நூல் இவ்வாறு பத்து நூல் கொண்டுவந்திருப்பார்கள்,” என்றார். உண்மைதான். ஆபிரகாம் பண்டிதர் வெளிநாட்டில் பிறந்திருந்தால் அவரைப்பற்றி பல ஆய்வு நூல்கள் வெளி வந்திருக்கும். நம் பல்கலைக்கழகங்கள் குறைந்தபட்சம் தம் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகவாவது இவற்றை சேர்க்க வேண்டும் . ஆனால் பல்கலைக்கழகங்கள் அதற்கு அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
இந்த நூலின் நூற்றாண்டிலாவது எதாவது நடக்குமா?,” கேட்கிறார் மம்மது.
சந்திப்பு: மா.கண்ணன்
டிசம்பர், 2017.