கவிஞர் பழநிபாரதியின் மகள் லாவண்யாவின் திருமணம் இன்று காலை சென்னை புரசைவாக்கம் ஒய் எம் சிஏ அரங்கில் நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்திவைத்தார். கவிஞர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, பாரதிகிருஷ்ணகுமார் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். அனைவரின் உரைகளுமே ரத்தினச் சுருக்கமாக உணர்ச்சிகரமாக அமைந்தன. கண்ணதாசனுக்குப் பின் காதலை மிகச் சிறப்பாக பாடிய பழநிபாரதியின் சொற்களையே அவரது மகளை வாழ்த்தக் கொண்டுவந்திருக்கிறேன் என்று பாரதி கிருஷ்ணகுமார் வாழ்த்தினார்.
‘எனக்கும் பழநிபாரதிக்குமான நட்பு வாரிசு அரசியல் போல் வாரிசு நட்பு… என் தந்தையாரும் பழநிபாரதியின் தந்தை பழனியப்பனும் காரைக்குடியில் இருந்து 15 கிமீதூரத்தில் இருக்கும் புதுவயல் என்ற இடத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உரையைக் கேட்கச் சென்றிருக்கிறார்கள். உரை முடிந்தபின்னர்தான் காரைக்குடிக்குச் செல்லும் கடைசிப் பேருந்து சென்றுவிட்டது என அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே இருவரும் வேர்க்கடலை, பட்டாணிக்கடலைகளை கையில் வைத்துக்கொண்டு 15 கிமீ தூரம் பாரதிதாசனின் உரை பற்றிப் பேசிக்கொண்டு நடந்தே ஊர் திரும்பினர். இதை என் தந்தை கூறி உள்ளார். ஆகவே ஒரு பெரியப்பாவாகவே இந்த திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துகிறேன்’ என்றார் சுபவீ.
கவிஞர் அறிவுமதி, டிராட்ஸ்கி மருது ஆகிய இருவரும் பழநிபாரதியுடன் கொண்டிருக்கும் நட்பு மிக நீண்டகாலமாகத் தொடர்வது என்பதால் அவர்கள் உரையில் எக்கச்சக்க அன்பின் ஈரம்!
இந்த விழாவில் கடைசியாக நன்றியுரை வழங்க லாவண்யாவை அழைக்கிறேன் என்று அறிவித்தார் தொகுத்து வழங்கிய தேவநேயன். மணப்பெண் லாவண்யா மைக்கைப் பிடித்து ஆற்றிய உரை உண்மையில் அரங்கில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது. என்னதான் சுயமரியாதைத் திருமணம் என்றாலும் ஒரு மணப்பெண் இவ்வளவு உணர்வுபூர்வமாகப் பேசி யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்.
”நன்றி என்றதும் நான் முதலில் நன்றி சொல்லவேண்டியது என்னுடன் பத்தாண்டுகள் நண்பராகப் பழகி எனக்கு காதலராகி என்னைக் கைத்தலம் பற்றி இருக்கும் நான் அபு என்று அழைக்கும் ஆபிரஹாம்தான். நிறைய பேரைப் பார்க்கிறோம், சின்னப் பிரச்னைகளுக்கும் பிரிந்துவிடுகிறார்கள் அப்படி இல்லாமல் என்னுடன் மணப் பந்தத்தில் இணைந்ததற்கு நன்றி. எதையும் எதிர்பார்க்காமல் என் தவறுகளையெல்லாம் மன்னித்து என்னை எக்காலத்தில் என் தாய் தந்தையர் பிரியாமல் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்களே.. அதுபோன்று நாங்களும் அவர்களையும் அபுவின் தாயார் விமலா அவர்களையும் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக்கொள்வோம். நான் பிஎச்டி முடித்துள்ளேன். இதுவரை என் தந்தைக்கும் எதுவுமே செய்தது இல்லை. இனி அவருக்கு முடிந்ததை எல்லாம் செய்யவேண்டும்( மணமகள் கண்கலங்க, தந்தை பழநிபாரதி கீழே இருந்து பார்த்துக்கொண்டவர் நெகிழ்ந்துபோய் உடைந்துவிடுவதைப் போல் காணப்பட்டார்).’ இதுதான் மணமகள் பேச்சின் சுருக்கம். மணவிழா விருந்தினர்கள் உறைந்துபோய் பார்த்துக்கொண்டிருக்க, நல்லா பேசினேம்மா…என்று சொல்லிக்கொண்டே இருந்தார் சுபவீ. சிறு வயதிலேயே -
ஒரு கரண்டி மாவில்
ஊருக்கெல்லாம் தோசை
நிலா- என்று கவிதை எழுதிய மகள் அல்லவா இந்த லாவண்யா…
முந்தைய நாள் நடந்த திருமண வரவேற்பில் ஏராளமான கலைத்துறையினர் கலந்துகொண்டிருந்தனர். மணநிகழ்விலும் பிரபலங்களுக்குக் குறைவில்லை. இசையமைப்பாளர் சிற்பி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பாக்யராஜ், லிங்குசாமி, சிங்கம்புலி, ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கரன், பொன் சுதா, பாடகி சுஜாதா மோகன், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழ்மணவாளன், சக்திஜோதி, ராசி அழகப்பன், ஜீவபாரதி, இசாக், காசி முத்துமாணிக்கம், நிமிர் பாபு சசிதரன், பத்திரிகையாளர்கள் குணசேகரன், லெனின், சுந்தரபுத்தன், மானா பாஸ்கரன், பரிசல் கிருஷ்ணா, தேனி கண்ணன், முரளிகிருஷ்ணன், பதிப்பாளர்கள் கவிதா சொக்கலிங்கம், அகிலன் கண்ணன், தமிழ்வெளி கலாபன், கற்பகம் நல்லதம்பி, லோகநாதன், பரிதி, மாணவர் நகலகத்தின் சௌரிராஜன், ஓவியர் புகழேந்தி, உட்பட்ட ஏராளமானபேர் கலந்துகொண்டனர்.