இளையராஜா  
சிறப்புக்கட்டுரைகள்

ராஜவோடு நடந்த நாள்கள்

அன்னக்கிளி வெளியாகி 50ஆண்டுகள் நினைவில்

இரா.பிரபாகர்

1976ஆம் ஆண்டு. அப்போது எனக்கு பன்னிரெண்டு வயது. ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். விருதுநகருக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் மல்லாங்கிணறு ஒரு பெரிய கிராமம். அல்லது சின்னஞ்சிறு நகரம்.

ஒரு நாள் மதிய உணவருந்திவிட்டு மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான ஆயத்தம். பள்ளிக்கு நடந்து செல்லும்போது வாயில் எதையாவது அரைத்துக்கொண்டோ, கல்கோனா முட்டாய் போன்ற ஒன்றை அதக்கிக்கொண்டோ செல்வது வாடிக்கை. அன்று சிக்கியது பொரிகடலை. கால் சட்டைப் பையிலிருக்கும் பொரிகடலையை தின்று கொண்டே வீட்டை விட்டு வீதியை அடைந்த நேரத்தில் அந்த டெய்லர் கடையின் குட்டி டிரான்சிஸ்ட்டரிலிருந்து ஒரு பெண்குரல் ஒலிக்கத் தொடங்கியது. ‘லலிலலிலலோ….. லலிலலிலலோ’ என்ற முன்னுரையில் என் கால்கள் வேகத்தை இழந்து ‘மச்சானப் பாத்தீங்களா.. மலை வாழைத் தோப்புக்குள்ள’ என்று தாளத்திற்குள் நுழைந்தபோது மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன் போல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டேன். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகள் கடந்தபின்னரும் அந்த டெய்லர் கடையும் அந்த ரேடியோ பெட்டியும் நான் நின்ற கோலமும் அழியாத சித்திரமாய் மனதில் அப்படியே உறைந்து கிடக்கிறது. அப்போது இந்தப் பாடலை இளையராஜா என்றொருவர் உருவாக்கியிருக்கிறார் என்ற விசயம் மட்டுமல்ல, இளையராஜா என்ற பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்போது நான் வசித்த மல்லாங்கிணற்றில் இயங்கிக்கொண்டிருந்த திரையரங்கில் புதிய படங்களைத் திரையிடும் வழக்கம் இல்லாததால் ராஜா இசையமைத்த படங்கள் எதையும் பார்க்கவும் வாய்த்ததில்லை.

1970களில் கோயில் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்களில்தான் பெரும்பாலும் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் பாடல்களைக் கேட்க முடியும். டிரான்சிஸ்டர் என்பதே பெரும் ஆடம்பரமாக இருந்தது. என் தந்தையார் ஆசிரியப் பணியில் ஓய்வு பெற்ற பணப்பலன்களிலிருந்து ஒரு பிலிப்ஸ் டிரான்சிஸ்டரை வாங்கிவந்தார். அது வீட்டுக்கு வந்த நாளும் அப்படியே நினைவில் இருக்கிறது. அது என்று அஃறிணையில் சொல்வதற்குக்கூட மனசு ஒப்பவில்லை. இரவு கடைசி பேருந்தில் அருப்புக்கோட்டையிலிருந்து அந்த குட்டி இளவரசியை வீட்டின் நடுவில் நிறுத்திய நாள் ஒரு திருநாள். அந்த வானொலிப்பெட்டிக்கு முரட்டு தோலினாலான ஒரு பாதுகாப்பு உறையும் கூடுதலாக தோளில் தொங்கவிட்டுக்கொள்வதற்கான நீண்ட தோள்பட்டையும் இருந்தது. அந்தக் காலங்களில் நரிக்குறவர்கள் இத்தகைய வானொலிப்பெட்டிகளை தோளில் தொங்கவிட்டபடியே செல்வது வழக்கம். ஒருவேளை அவர்களுக்காகவே இத்தகைய தோள்பட்டைகள் இணைக்கப்பட்டனவோ என்று தோன்றும். வானொலி வாங்கவேண்டுமென்ற நீண்ட நாள் குடும்பக் கனவு நிறைவேறிவிட்டதுதான். ஆனால் கொடுமை என்னவென்றால் சென்னை, திருச்சி இரண்டு வானொலி நிலையங்களிலிருந்தும் வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் அதுவும் அரை மணிநேரம் மிஞ்சினால் 45 நிமிடங்களுக்கு மட்டுமே போனால் போகிறதென்ற கணக்கில் திரைப்பாடல்கள் ஒலிபரப்பப்படும். மற்ற நேரங்களிலெல்லாம் கரகரப்பிரியாவில் யாராவது கரகரத்துக்கொண்டிருப்பார்கள். அந்த அரைமணி நேரங்களில் என்ன பாடல்கள் ஒலிபரப்பக்கூடும் என்ற எதிர்பார்ப்போடு வானொலிப்பெட்டியின் முன் காத்திருந்து பாடல்களைக் கேட்ட

நாள்களும் இலங்கை வானொலியின் ஓயாத இசைச் சாரல்களுக்கிடையே அப்துல் ஹமீது, கே.எஸ்.ராஜாக்களின் அழகிய தமிழைக் கேட்ட நாள்களும்தான் எத்தனை இனிமையானவை.

இரவில் பயணப்படும்போது நம்கூடவே நகர்ந்துவரும் நிலாவைப்போல் இளையராஜாவின் பாடல்கள் பதின்பருவ காலத்திலிருந்து தொடர்ந்தபடியே இருந்தன. 70களின் பிற்பகுதியில் விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் +2 படிப்பிற்காக தினமும் பேருந்தில் செல்லவேண்டியிருந்தது. விருதுநகர் பஸ்நிறுத்தத்தில் இறங்கி, பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் இடதுபக்கமாக திரும்பும் முதல் திருப்பத்துக்கு எதிரிலிருந்த தேநீர் கடையிலிருந்து ஒரு நாள் கிதாரின் முகவுரையுடன் ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ என்ற பாடல் ஒலித்த நாளையும் நான் மறந்ததில்லை. அப்போது இவ்வாறு தேநீர் நிலையங்களில் உயர்தரமான ஒலித்தரத்துடனான இசைத்தட்டுகளை ஒலிபரப்பும் வழக்கம் தொடங்கியிருந்தது. அப்போது 'ஸ்டீரியோ’ தொழில்நுட்பம் இணைந்துகொண்டிருந்ததால் ‘ப்ரியா, இளமை ஊஞ்சலாடுகிறது, மணிப்பூர் மாமியார், புதுக்கவிதை’ போன்ற படப்பாடல்களால் தமிழ் இசை ரசிகர்கள் குடிநோயாளிகளைப் போல, இசை நோயாளிகளாக மாறத் தொடங்கியிருந்தார்கள் என்று சொல்லலாம். பள்ளி முடிந்ததும் அந்த தேநீர்க் கடையில் தேநீர் குடிப்பதற்காக 15 பைசாவை காப்பாற்றி வைப்பதும், பலமுறை பாடல்களைக் கேட்டும் தீராத மனக்குறையோடு பேருந்தைப் பிடிப்பதும் வாடிக்கையாக இருந்தது.

1980. கல்லூரிப் படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லுரியில் சேர்ந்தாகிவிட்டது. ராஜாவின் பொற்காலமான 80களில், எந்தக் கவலையுமில்லாமல் பெற்றோர் செலவில், கோயில்கள் சூழ்ந்த, மன்னிக்கவும் திரையரங்குகள் சூழ்ந்த கூடல் மாநகரில், கேட்பார் யாரும் இல்லாமல் வாழ்வது அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடியது. முதலாண்டின் டிசம்பர் குளிரில் நாட்டு நலப் பணித்திட்டத்தின் 10 நாள்கள் முகாமிற்காக கொடைக்கானல் பயணிக்கவேண்டிய நாள். கல்லூரி வளாகத்திலிருந்து பொழுது புலருமுன்னமே கிளம்பவேண்டி மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொண்டிருந்த இடைவெளியில் ஒரு தேநீர் அருந்திவரலாமேவென்று கோரிப்பாளையத்தில் திறந்திருந்த ஒரு கடையில் தேநீரை வாங்கி ஒரு மிடறு அருந்தவும் ‘ச..ரி..க..ம..ப’ என்று தொடங்கி ‘தன்னன்னனாதினம் தன்னன்னனா’ என குழந்தைகளின் குரலில் கோரஸ் தொடரவும், கடவுளே என்ன பாடல் இது என்று மூச்சடக்கி நிற்கையில் ‘ஏரியிலே எலந்தமரம் தங்கச்சி வச்ச மரம்’ என்ற பாடல் ஒலிக்கவும் அந்த புதுமையான ஹார்மனிக் கலவையில் மெய்மறந்து நின்று கொண்டிருந்தேன். டீக்கடைக்காரருக்கும் அது எந்தத் திரைப்பாடல் என்று தெரிந்திருக்கவில்லை. கொடைக்கானலில் முகாமிட்டு மரங்கள் நட்டுக்கொண்டிருந்த அந்த 10 நாள்களும் அந்தப்பாடல் விடாமல் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. பேரிஜம் அப்போது சுற்றுலாப் பயணிகள் வந்துபோகிற இடமாக இல்லை. மின்சார இணைப்பு இல்லை. அங்கிருந்த வனத்துறைக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்தோம். வானொலி கேட்பதற்கான வழியுமில்லை. பகல் 11 மணிக்கு வருகிற ஒரு பேருந்தில்தான் செய்தித்தாள் வந்து சேரும். அந்த ஏகாந்தத்தில் ஒரு முறை கேட்ட அந்தப்பாடல் மீண்டும் மீண்டும் மனசுக்குள் சுழன்றுகொண்டே இருந்தது. பேரிஜம் ஏரியைச் சுற்றி இப்போதிருக்கும் ஓக்கி உயர்ந்த மரங்களில் சில ‘ஏரியிலே எலந்தமரம்’ என்று நான் முணுமுணுத்துக்கொண்டே நட்டவை.

‘ப’ வடிவத்தில் அமைந்திருக்கும் எங்கள் கல்லூரி விடுதியில் குறிப்பிட்ட நேரங்களில் ராஜா கசிந்தபடியே இருப்பார். 80களில் வெளிவந்த பெரும்பாலான மொக்கைப் படங்களைக்கூட பார்க்கவேண்டிய படங்களாக்கிக் கொண்டிருந்தார் ராஜா. எல்லாப் பாடல்களிலும் எதையாவது பொத்தி வைத்திருந்தார். விடுதி நண்பர்கள் புடைசூழ கோயிலுக்கு செல்வதுபோல் வாரத்துக்கு இரண்டு மூன்று படங்களைப் பார்த்துத் தீர்த்துக்கொண்டிருந்தோம். அப்படி ஒரு சனிக்கிழமை காட்சியின் இடைவேளை. அப்போதுதான் மதுரை திரையரங்குகளில் முட்டை போண்டா என்றொரு அபூர்வ சமாச்சாரத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அவித்த முழு முட்டையின் வழவழப்பில் வழுக்கிவிடாமல் கடலைமாவால் சுற்றப்பட்டு பொரித்தெடுக்கப்பட்ட போண்டாவுக்காகவே படம்பார்க்கப் போனவர்களும் இருந்தார்கள். முட்டை போண்டா சாப்பிடும் உத்தேசத்தில் நான் எழுந்த சமயத்தில் வரப்போகும் புதிய படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) திரையில் ஓடத்தொடங்கியது. காலடிச் சத்தத்தில் தொடங்கி வர்ணஜாலங்கள் நிகழத்தொடங்குகிற பாடல். சிம்பொனிக் கூறுகள் நிறைந்திருக்கும் அந்தப்பாடலின் தொடக்க மற்றும் இடையிசைக்கு இணையான பாணியை இந்திய திரையிசையில் எந்த இசையமைப்பாளரிடமும் அன்றும் இன்றும் கண்டதில்லை. பொதுவாகவே இளையராஜாவின் 90% பாடல்கள் படுமோசமாகப் படமாக்கப்பட்டவை என்பது அனைவரும் அறிந்ததே. ராஜாவின் பாடல்கள் எனும் பெரும் பாறைக்குள் ஒளிந்திருக்கும் காட்சிப் படிமங்களை வெளிக்கொண்டுவரும் உளி, விரல் விட்டு எண்ணக்கூடிய சில இயக்குநர்களிடம் மட்டுமே இருந்தது. அவர்களில் மகேந்திரனும் ஒருவர். அசோக்குமாரின் ஒளிப்பதிவில் பெங்களூரின் பனிமூட்டமான சாலைகளில் மோகனும் சுகாசினியும் ஓடிவருவதும், மெழுகுவர்த்தி ஒளியில் உணவு மேசையில் இருவரும் அமர்ந்திருக்கும் காட்சிகள் இதுவரை பார்த்திராத காட்சி அனுபவமாக இருந்தது. ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்று எஸ்.பி.பி.யும் ஜானகியும் கொஞ்சம் ரகசியம் கலந்து பாடும் அந்தப் பாடல் இப்போதும் புத்தம் புதிதாகவே இருக்கிறது.

பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ வெளியான வாரத்தில், வழக்கமான ஒரு சனிக்கிழமைக் காட்சிக்குச் சென்றதும், நீண்டவரிசையில் பதற்றத்துடன் காத்திருந்ததும் நினைவுக்கு வருகிறது.ஏனென்றால் டிக்கெட் கவுண்டர் திறந்தவுடன் நம் தோள்மேல் நடந்து சில சமர்த்தர்கள் நுழைவுச்சீட்டைக் கைப்பற்றி நன்மை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளிவிடும் சம்பவங்கள் மதுரையில் சகஜம். ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து’ எனத்தொடங்கி ராஜாவின் குரலில் ‘தகதோம் தகதோம்…’ என்று நீட்டும்போது பின் தொடரும் சிந்தசைசர் வேறொரு உலகத்திற்குள் நம்மை இழுத்துச் செல்லும். சிந்தசைசர் எனும் எலக்ட்ரானிக் கீ போர்டின் சாத்தியங்களை இளையராஜா அளவுக்கு யாரும் பயன்படுத்தியதில்லை என்றே சொல்லவேண்டும். படத்தின் இசைத்தட்டு ‘எல்.பி.’ அகலத்தட்டாக வந்தபோது பாரதிராஜாவால் புறக்கணிக்கப்பட்ட ‘புத்தம்புது காலை’ ஒரு கூடுதல் விருந்தாக இருந்தது. தேர்வுக்குக் கூட அதிகாலையில் எழுந்து பழகாத நான் ‘புத்தம் புது காலை’ பாடலைக் கேட்பதற்காகவே கோரிப்பாளையம் மல்லிகை காபி கடைக்கு சென்றதும், புலராத காலையில் வெறிச்சோடிக்கிடக்கும் சாலையில், அதிகாலையின் மணமும் நிசப்தமும் நிரம்பிய அந்த நேரத்தில் ஒற்றை ஆளாய் ‘புத்தம் புது காலையில்’ நனைந்தது ஒரு ஆன்மீக அனுபவம்.

உல்லாசப்பறவைகள் என்றொரு படம். பச்சைப் பசும் வயல்வெளியிலிருந்து ஓடி வரும் கிராமத்துப் பெண்ணொருத்தி, பின்னனியில் ஜென்சியின் குரலில் ‘ஓ… ஏ… தெய்வீகராகம்’ பாடலை என்னவென்று சொல்வது. அந்த ஹம்மிங் ஒலிக்கத் தொடங்கியவுடனே என்னையறியாமல் கண்கள் மூடிக்கொள்ளும். கண்கள் ததும்பிவிடும். அதே 80களில் வந்த ஜானி. தேவி ‘நோ..நோ..நோ.. என்று சொல்லி, என் வானிலே…’ என்று ஆரம்பிக்கும் பாடல். எத்தனையெத்தனை பாடல்கள். அப்போது இளையராஜா இல்லாத ஒரு நாள்கூட எங்கள் வாழ்க்கையில் இருந்திருக்கவில்லை. ஒவ்வொரு நாளையும் அவர் இசையால் புத்தம் புதிதாக மாற்றினார்.

ராஜாவின் இசையை என்னவென்று சொல்வது? யாரோடு ஒப்பிடுவது? எந்த இடத்தில் நிறுத்துவது என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. இரண்டாண்டுகளுக்கு முன் இத்தாலியின் ப்ளாரன்ஸ் மற்றும் ரோம் நகருக்கும் பாரீசின் லூவர் அருங்காட்சியகத்திற்கும் சென்றிருந்தேன்.

அங்கிருந்த அருங்காட்சியகங்களிலும் கலைக்கூடங்களிலும் கண்ட மறுமலர்ச்சிக்கால நூற்றுக்கணக்கான சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்த்துப் பேச்சற்று நின்றபோது ‘இந்த சிற்பிகளும் ஓவியர்களும் இந்த கற்பனைக்கெட்டாத இந்த கலைப் பொக்கிசங்களை எதற்காகச் செய்தார்கள். மைக்கேல் ஆஞ்சலோ நான்காண்டுகள் படுத்துக்கொண்டே ஆலையங்களின் மேற்கூரைகளில் மகத்தான ஓவியங்களை எதற்காகத் தீட்டியிருப்பார்? பொருள், புகழுக்காக மட்டும் இந்தக் கலைஞர்கள் இத்தகைய வாழ்நாள் தியாகங்களைச் செய்திருப்பார்களா? சிற்பக்கலையின் உச்சமாகக் கருதப்படும் ‘டேவிட்’ சிற்பத்தைவிடவும் நுட்பமான சிற்பங்கள் அங்கே சிற்பிகளின் பெயரற்று நிற்கின்றன. இந்தக் கலைஞர்களைச் செலுத்தியது எது? எனக்குக்கிடைத்த விடை இதுதான். இந்தக்கலைஞர்கள் தங்கள் கலையின் உச்சத்தை, படைப்பாற்றலின் பரிபூரண இலக்கை எட்ட முயற்சித்திருக்கிறார்கள். மரண தண்டனைக்கும் அஞ்சாமல் டாவின்சி பிணங்களை அறுத்து மனித உடற்கூறியலைக் கற்றிருக்கிறார் தன் ஓவியங்களில் வெளிப்படும் மனித உடல்களின் முழுமையான கலைவெளிப்பாட்டிற்காக.

மைக்கேல் ஆஞ்சலோ போப்பாண்டவர்களின் உத்தரவுகளால் அலைக்கழிக்கப்பட்டு, ஆலயங்களின் சுவர்களில் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு படைப்பிலும் அதன் உச்சத்தை அடைந்திருக்கிறார்.

இளையராஜாவிற்குக் கிடைத்த வெகுசன சினிமா எனும் திரைச்சீலைகளில் அன்றாடம் வண்ணமயமான ஸ்வரக் கோவைகளை வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார். அந்தப் படைப்புகள் பணம், புகழுக்காகவோ, அந்தக் கதைகளுக்காகவோ, நாயகர்களுக்காகவோ, இயக்குநர்களுக்காகவோ என்றில்லாமல் தன் படைப்பாற்றலின் உச்சத்தை நோக்கியே அன்றாடம்

பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

(இன்னும் இருக்கிறது)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram